ப. பரிமளா

இந்த சகோதரியை வீடியோ எடுத்து அதனை பொது வெளியில் பதிவு செய்த அடிப்படை நாகரீகமே இல்லாத அயோக்கியன்தான் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவன். மாறாக இந்த சகோதரி அல்ல.
இந்த சகோதரி மீது நடவடிக்கை எடுத்த காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறேன். உடனே இவர் மீது எடுத்த நடவடிக்கையை திரும்ப பெற்று இவரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்.
சீருடையில் இருக்கும் போது தவறு செய்து விட்டார் என இந்த வீடியோவை பதிவு செய்து அறிவுரை வழங்கும் யோக்கிய சிகாமணிகளின் பதிவுகள் எரிச்சலூட்டுகின்றன.
ஒருவரின் தனிப்பட்ட அந்தரங்க வீடியோவை அவர் அனுமதி இல்லாமல் பொதுவில் பதிவு செய்ய யார் இவர்களுக்கு அனுமதி கொடுத்தார்கள்?
பதிவு செய்து வெளியிட்டவன் அயோக்கியன் என்றால் இதனை பகிர்பவர்கள் அவன் அயோக்கியத்தனத்திற்கு துணை போகிறார்கள் என்று அர்த்தம்.
காவல்துறை சீருடை அணிந்து மது அருந்தலாமா என்பதெல்லாம் இவர்களுக்கு பிரச்சனை இல்லை. ஒரு பெண் மது அருந்தலாமா என்கிற ஆணாதிக்க வெறிதான் இப்படி பதிவுகளாக வருகிறது.
மது அருந்துதல் இருபாலருக்கும் உடல் நலக்கேட்டையும்,குடிநோய் உடல்நல,மனநல பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
சீருடை அணிந்து கொண்டு மது அருந்தும் ஆண் காவலர்களின் வீடியோக்கள் இப்படி வைரலாக பரவவில்லை. அப்படி பதிவான வீடியோக்களில் இருந்த மது அருந்தும் ஆண் காவலர்கள் எத்தனை பேர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்?
சீருடை அணிந்த காவலர்கள் கீழ்கண்ட சட்ட விரோத செயல்களை செய்வது வீடியோக்களாக பரவியதே? அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது காவல்துறை?
1) சீருடை அணிந்து கொண்டு லஞ்சம் வாங்குவது.
2) சீருடை அணிந்து கொண்டு பெண்களை அடித்து நொறுக்குவது
3) சீருடை அணிந்து கொண்டு
பெண் காவலர்கள் மீது பாலியல் வன்கொடுமை செய்வது….
சீருடை அணிந்து கொண்டு இன்னும் எண்ணற்ற சட்டவிரோத செயல்களை செய்யும் காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
முதலில் இப்படியான வீடியோக்களை பகிர்வதை நிறுத்துங்கள்.
அடிப்படை நாகரீகம் என்றால் என்ன என்பதை கற்றுக் கொள்ளுங்கள். மற்ற விசயங்களை பிறகு கற்றுக் கொள்ளலாம்.
ப. பரிமளா, சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.