காவிரிக்காக #IndiaBetraysTamilnadu டிவிட்டர் பரப்புரையின் மகத்தான வெற்றி.

ஆழி செந்தில்நாதன்

senthilnathan
ஆழி செந்தில்நாதன்

#IndiaBetraysTamilnadu டிவிட்டர் பரப்புரையில் 70,000 ட்வீட்களுக்கும் மேல் கடந்த 24 மணி நேரத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழர்கள் மிகுந்த ஈடுபாட்டோடு அதில் பங்கெடுத்திருக்கிறார்கள். சிங்கப்பூர், வளைகுடா நாடுகள், பிரிட்டன் என முக்கியமான பகுதிகளில் வாழும் தமிழர்கள் பரப்புரையில் கலந்துகொண்டார்கள். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட எல்லா நகரங்களிலிருந்தும் இந்தப் பரப்புரையில் பங்களித்திருக்கிறார்கள்.

இந்த பரப்புரையின் உச்சத்தில் சென்னை, இந்திய அளவிலான டிவிட்டர் டிரெண்டிங்கில் முதல் இடங்களிலிலிருந்த இந்த ஹேஷ்டேகை அதிலிருந்து நீக்கியிருக்கிறது டிவிட்டர். இந்திய அரசின் கரசேவை இதில் வெளிச்சமாகத் தெரிகிறது. பரிதாபத்துக்குரியவர்கள்! மக்களின் குரலைக் காதுகொடுத்து கேட்க மறுத்து, இணைய உலக ஜனநாயகத்தையும் மறுக்கும் இந்திய ஆட்சியாளர்களும் அதற்கு துணைபோகும் டிவிட்டர் நிறுவனமும் பரிதாபத்துக்குரியவர்களே.

தமிழர் உரிமை தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட டிவிட்டர் பரப்புரையில் இதுதான் மிகப்பெரியது என நண்பர்கள் கூறுகிறார்கள். 24 மணிநேரத்தில் 70,000 ட்வீட்கள் என்பது சாதாரணமான எண்ணிக்கை அல்ல. தமிழர்களின் ஒற்றுமையால் மட்டுமே இது சாத்தியமாகியிருக்கிறது. வெறிகொண்ட உற்சாகத்தோடு நமது இளம்தலைமுறை இந்தியாவின் கண்களில் விரலைவிட்டு ஆட்டியிருக்கிறது. இந்த டிவிட்டர் பரப்புரைக்கு முன்முயற்சி எடுத்த அணியின் சார்பாக, அதைத் தொடங்கிய அணியில் இருந்த தோழர்கள் பெ.பழநி, பா.ச.பாலாசிங், வே.தாண்டவமூர்த்தி, கவிதா உள்ளிட்ட அனைவரின் சார்பாக கலந்துகொண்ட உங்கள் அனைவருக்கும் எங்களுடைய வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். நீங்கள் வரலாறு படைத்திருக்கிறீர்கள்.

மார்ச் 30, 2018 வெள்ளிக்கிழமை மாலையில்தான், நாங்கள் கூடி இதற்கான முதல் பணிகளைத் தொடங்கினோம். அடுத்த 36 மணி நேரத்தில் காட்டுத் தீ போல பரவிய இந்த டிவிட்டர் பரப்புரையின் முதல் மணி நேரங்கள் மிகவும் சாதாரணமானவை. பழநியும் பாலாசிங்கும் தாண்டவமூர்த்தியும் மெல்ல மெல்ல பங்கேற்பாளர் அணிகளை உருவாக்கினார்கள், நான் முழக்கங்களை உருவாக்குவதிலும் ஆதரவுத்தளங்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தினேன். ஞாயிறு காலை 9 மணிக்கு துல்லியமாக இந்த தாக்குதலைத் தொடுக்கவேண்டும் என பலரிடம் பேசி ஆயத்தமானோம். ஆனால் தாக்குதல் சற்று முன்னதாகவே தொடங்கிவிட்டது. கட்சி வித்தியாசமின்றி, அமைப்பு வித்தியாசமின்றி உற்சாகத்தோடு நமது நண்பர்கள் இதில் கலந்துகொள்ள, சில மணி நேரங்களில் பொதுமக்களையும் அது சென்றடைந்தது.

நியூஸ் 18, தினகரன், ஒன் இந்தியா போன்றவற்றில் செய்தி வந்ததற்குப் பிறகும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய ட்வீட்டில் இந்த ஹேஷ்டேகைப் பயன்படுத்திய பிறகும் பரவலாக சென்றடைந்தது. பல மூத்தத் தோழர்கள் – அவர்களுடைய நேரடி இணைய அனுபவம் குறைவு என்பதால் – இதைப் பார்த்து வியப்படைந்து தங்கள் ஆதரவை வழங்கினார்கள்.

தமிழ் சமூக ஊடக உலகம் விஸ்வரூபமெடுத்தது. ஒரு குறிப்பிட்ட சமயத்தில், ஒரு நிமிடத்துக்கு 290 ட்வீட்கள்வரை போடப்பட்டிருக்கிறது என்றால் எவ்வளவு வேகமாக நமது மக்கள் பங்கெடுத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

டிவிட்டர் டிரெண்ட் தொடர்பான பகுப்பாய்வு கருவிகளைப் பயன்படுத்தி, எவ்வளவு ட்வீட்கள், எங்கேயிருந்தெல்லாம் போடுகிறார்கள் என்பதையெல்லாம் பார்த்தபோது, மகத்தான வெற்றியை அடைந்திருக்கிறோம் என்பது மட்டும் புரிந்தது. பங்களிப்புகள் குறித்த விவரங்களை டிவிட்டர்மேப்ஸிலிருந்து எடுத்து இத்தோடு இணைத்திருக்கிறேன் பாருங்கள். பரப்புரை நடந்த நாடுகள், பகுதிகள், தமிழ்நாட்டில் எவ்வளவு பரவலாக இது நடந்தது உள்ளிட்ட விவரங்களை இதில் காணலாம்.

சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசியபோது, தமிழ்நாடு பெட்ரோல் ஏரி போல இருக்கிறது. யார் தீ உரசினாலும் அது பற்றிக்கொள்ளும் என்று கூறியிருந்தேன். நேற்று அதை கண்கூடாகப் பார்த்தோம்.

நேற்று, திரு வேல்முருகன் அவர்கள் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்திய டோல் பிளாசாக்கள் மீதான தாக்குதல்கள் “தேசிய” நெடுஞ்சாலைகளில் தமிழர்களின் சீற்றத்தைக் காட்டின. மற்றொரு புறம், நாம் முன்னெடுத்த #IndiaBetraysTamilnadu பரப்புரை “சைபர்” நெடுஞ்சாலையில் தமிழர்களின் கோபத்தைக் காட்டியது.

தன்னாட்சித் தமிழகம் முன்னெடுத்த இந்தப் பரப்புரையில் கலந்துகொண்ட அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை மாபெரும் நன்றி. இணைத்துக்கொண்ட பல்வேறு அமைப்பினருக்கும் கட்சிகளுக்கும் ஆதரவளித்த ஊடகங்களுக்கும் முன்னெடுத்து இரண்டு நாள் தூங்காமல் வேலைசெய்த தன்னாட்சித் தமிழகத் தோழர்களுக்கும் நன்றி.

நமது போராட்டங்கள் தொடரும் – மெய் உலகிலும் மெய் நிகர் உலகிலும்.

ஆழி செந்தில்நாதன், ‘தன்னாட்சித் தமிழகம்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.