அன்புள்ள முதல்வருக்கு,
வணக்கம்,
ஏனோ இன்று “இலை” மறை காயகப் பேசும் லாவகம் கைகூடவில்லை. எனவே நேரடியாகவே பேசிவிடுகிறேன். நீங்கள் முதல்வராக வரவேண்டும் என்று நாங்கள் வாக்களிக்கவில்லை. ஆனால் உங்களை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தோம். துரதிர்ஷ்ட வசமாக சூழல் உங்களுக்கு அந்த நாற்காலியை வழங்கிவிட்டது. அதைத் தக்கவைத்துக் கொள்வதற்கான போராட்டத்திற்கே நேரம் போதவில்லை. அதைப்பற்றிச் சிந்தித்தே அயர்ச்சியடைந்துவிடுகிறீர்கள்.
இது உங்களுக்குக் கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பாகவும். இதன் ஆயுள் எவ்வளவு என்பது தெரியாத பதற்றமும். முடிந்தவரை பொருள் ஈட்டிக்கொள்ளப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய சூழலும். இந்த நிலத்தைப் பற்றியோ இதன் மக்களைப் பற்றியோ நிலத்தின் வளம் பற்றியோ மக்களின் வாழ்நிலை பற்றியோ அறவே சிந்திக்க முடியாத நிலைக்கு உங்களைத் தள்ளி இருக்கிறது.
மேற்சொன்ன யாவும் உங்களுக்கும் உங்களது அமைச்சர்களுக்கும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும். இப்படி நீங்கள் அனைவரும் பணம்,பதவி, பா ஜ க விற்கு பயம் என்று முடங்கிப்போயுள்ளதால், அண்டை மாநிலத்தில் ஒரு இளைஞனும் ஒரு யுவதியும் புருவத்தின் அசைவில் நடனம் நிகழ்த்தி காதலைப் பகிரும் வீடியோ வைரலாகி முடிந்த காலத்தில், நாங்கள் நீட் போராட்டம் முடிந்து #IndiaBetraysTamilnadu என்ற ஹேஸ்டேக்கை வைரலாக்கிக் கொண்டிருக்கின்றோம்.
ஏழாம் வகுப்புப் படிக்கின்ற பதின்மூன்று வயது அருண் தன் கழுத்து நரம்பு புடைக்க அடிவயிற்றிலிருந்து “காப்பர் உனக்கு கேன்சர் எங்களுக்கா” என்று முழங்கிக் கொண்டிருக்கின்றான் தூத்துக்குடியில். அவன் கண்களில் பயமில்லை அவன் உணர்வில் கபடமில்லை. இப்படிக் கத்திக்கொண்டு அக்கினி வெய்யிலில் நோவதற்கு என்ன அவசியம்? அரசு நல்லதாக இருந்தால்.
ஆனால் நீங்கள் நல்லவர்கள் இல்லை. நல்லவர்களாக இருந்தால் தமிழகத்தின் மீது தொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் காவிரிப் பிரச்சனை, நியூட்ரினோ பிரச்சனை, ஸ்டெர்லைட் விரிவாக்கப் பிரச்சனை, மீத்தேன் ஹைட்ரோ கார்பன் பிரச்சனை, நீட் பிரச்சனை, ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் கடன் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, மீனவர்கள் பிரச்சனை, நிர்வாக மந்தநிலை, இத்தனைக்கும் பொறுப்பேற்று பதவி துறந்திருப்பீர்கள். தாமரை அரசின் காரியதர்சிகளாக இருந்து இந்த நிலத்தை மக்களை இப்படி அவமானகரமான நிலைக்கு ஆளாக்கி இருக்கமாட்டீர்கள்தானே.
நீங்கள் ராஜினாமா செய்துவிட்டால் மக்கள் ஒரு புதிய அரசைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த அரசு குறைந்தபட்சம் முதுகெலும்போடு செயல்படும். மத்திய காவி அரசும் கொஞ்சம் மாநிலப் பிரச்சனைக்கு செவிசாய்க்கும். ஒரு இருநூறு பேரின் இலாபத்திற்காக ஏழு கோடி மக்களை நிம்மதியற்று போராட்டக் களத்திற்கு நகர்த்துவது என்ன நியாயம்?
இன்று ஒரு சிறிய கட்சி டோல்கேட்டை உடைத்ததை மக்கள் கொண்டாடுகிறார்கள். எனில் எத்தனை அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள் மக்கள் என்பதை நீங்களும் உங்கள் சகாக்களும் உணரவில்லையா? இல்லை உளவுத்துறை உங்களுக்கு உணர்த்தவில்லையா?
நாளை இப்படி அடித்து உடைக்கும் நிலைப்பாட்டை ஒரு பெரிய கட்சி மேற்கொண்டால் சட்டம் ஒழுங்கு என்னவாகும். உங்கள் மேலிடத்திற்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? அந்த இக்கட்டான அவமானகரமான நிகழ்வுகள் நடக்கும் வரை நீங்கள் ஆட்சியிலிருக்கத்தான் வேண்டுமா?
இங்கே என்னென்னவோ திட்டங்களை மத்திய அரசு திணிக்கிறது அதனை உங்களால் வேடிக்கைதான் பார்க்க முடிகிறது. நீங்களும் உங்கள் சந்ததிகளும் இந்த நிலத்தில் தானே வாழ்கிறீர்கள் எங்களுக்கு இருக்கும் அக்கறை ஏன் உங்களுக்கு இல்லை. போபால் விஷ வாயுக் கசிவில் ஒரே இரவில் 20000 பேர் இறந்துபோனார்கள் என்கிறது அரசு. அதற்கு காரணம் ஒரு ஊழியரின் அஜாக்கிரதை என்கிறது வழக்கு முடிவு. அப்படியான ஒரு அஜாக்கிறதை கூடன்குளத்திலோ கல்பாக்கத்திலோ ஸ்டெர்லைட்டிலோ ஆபத்தான மற்ற ஆலைகளிலோ ஏற்பட்டால் என்ன செய்வது?
நம்மிடம் என்ன கட்டமைப்பு இருக்கிறது. என்ன தொழில் நுட்பம் இருக்கிறது. வெள்ளத்தின்போது ஓடி ஓளிந்துகொண்டோமே அந்தப் புலிகேசி தந்திரம் போதுமா? கடலில் மிதந்த எண்ணைப் படலத்தை குளிக்கப் பயன்படுத்தும் வாளியும் கப்பும் வைத்து அள்ளிக் கொண்டிருந்தோமே அந்த தொழில்நுட்பம் போதுமா? ஒக்கிப் புயலில் சிக்கியவர்கள் செத்துக் கரை ஒதுங்கும் வரை காத்திருந்து இறுதிச் சடங்குகளுக்கு ஏற்பாடு செய்தோமே அந்த தொழில்நுட்பம் போதுமா? குரங்கணியில் காட்டுத்தீப்பற்றி எரிந்தபோதுவிடிய விடிய ஹெலிகாப்டர்களைத் துடைத்து விடிந்ததும் பளபளப்பாக வந்து கருகிய பிணங்களைத் தூக்கிப் பறந்தோமே அந்தத் தொழில்நுட்பம் போதுமா?
மணல் கொள்ளையில் ஆறுகள் அழிந்து, கிரானைட் கொள்ளையில் மலைகள் அழிந்து, வனக்கொள்ளையில் மழை இழந்து, பூமிக்கடியில் எரிபொருள் ரசாயனம் நிலக்கரி எனத் தோண்டித்தோண்டி நில வளமழித்து, அபாயகரமான ஆலைகளுக்கு அனுமதி அளித்து மெல்ல மெல்ல தமிழகத்தை ஆப்பிரிக்காவாக மாற்றும் வேலையின் கடைசி சுற்றில் இருக்கிறீர்கள் நீங்கள். அவற்றை எதிர்க்கும் முதல் சுற்றில்தான் இருக்கிறோம் நாங்கள்.
நாற்பத்தைந்தாயிரம் ரூபாய் கடனோடுதான் இங்கே ஒவ்வொரு குழந்தையும் பிறக்கிறது. ஒரு ரூபாய் வரியில் அறுபது காசை மத்திய அரசு பிடிங்கிக் கொள்கிறது. நியாயம் கேட்டால் சிறை குண்டர் சட்டம் பாய்கிறது. ஆனால் உச்சநீதி மன்ற சட்டத்தை அமல்படுத்தாத கர்நாடக அரசை ஒரு சட்டமும் ஒன்றும் செய்யாது. அதை கேள்வி கேட்க உங்களாலும் முடியாது.
ஊடகங்களை நசுக்குவது. போராட்டக் களத்தில் மைக் வைக்கக்கூடாது. பந்தல் போடக்கூடாது என மிரட்டுவது. சமூக வலைத்தளங்களில் கருத்துச்சொன்னால் கைது செய்வது. மத்திய அரசை எச்சரித்தால் சொந்தக்கட்சி எம்பியையே வெளியேற்றுவது. எந்த மாநிலத்திலாவது இப்படியொரு நிலை உண்டா?
சல்லிக்கட்டுப்போராட்டம் போல் காவிரிக்குப் போராட வேண்டும் என்று மக்களிடம் ஒரு பாராளுமன்ற துணை சபாநாயகர் கோரிக்கை வைக்கிறார். ஒரு மந்திரியோ போராடினால் கடும் நடவடிக்கை என்கிறார். இருவரும் ஒரே கட்சி. ஒரு மாநில ஆட்சி மத்தியில் 37 எம் பிக்கள் ஆனால் மக்கள் தான் போராட வேண்டும். ராஜினாமா செய்யமுடியாது தற்கொலை மிரட்டல் விட முடியும். ஏன் என்று கேட்டால் தெருத்தெருவாக அழைந்து வெற்றி பெற்றது ராஜினாமா செய்வதற்கா என்று மைண்ட் வாய்சை மைக்கில் விழும்படி சொல்வது.
அம்மா ஆட்சி அம்மா ஆட்சி என்கிறீர்களே அந்த அம்மையாரின் தைரியம் இருக்கிறதா உங்களுக்கு? எம் ஜி ஆரின் கருணை இருக்கிறதா உங்களுக்கு? அண்ணாவின் கொள்கை இருக்கிறதா உங்களுக்கு? பெரியாருக்கு மாலை அணிவிக்கும் பொதுத்தன்மை இருக்கிறதா உங்களுக்கு? எந்த அடிப்படையில் அம்மா ஆட்சி இது? அடாவடிக் கைது செய்வதில் மட்டும்தானா?
இப்படி எங்களால் உங்கள் பதவிக்காலம் வரை நொந்து சாகவும் அவமானப்படவும், புள்ளைப்பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைப்பதை பார்த்துக்கொண்டும். புலம்பியும் போராடியும் வாழ முடியாது. கொத்துக் கொத்தாக எங்கள் உறவுகளை ஈழத்தில் காவு கொடுத்ததைப்போல, இங்கேயும் தாமரை மலராத பட்சத்தில் அவர்கள் தொடுக்க இருக்கும் அதிகாரப்போரில் எம் மக்களை காவு கொடுக்க முடியாது.
அற வழியில் போராடுவோம். கடைசி வாய்ப்பாக காவிரிக்காக அறம்பாட முடிவு செய்வோம். அறம்பாடுதல் என்பது புலவனுக்கு மட்டும்தான் பொருந்துமா என்ன? மக்கள் தங்களின் கையறு நிலையில் கடைசியாக நம்பிக்கை இழந்து , அரசைச் சபித்து மனக்குமுறல்களை வெளிப்படுத்தி, எல்லாம் அழிந்து நிர்மூலமாக இயற்கையிடம் முறையிடலாம்தானே. அப்படியொரு அறம்பாட வைத்துவிடாதீர்கள் காவிரி உட்பட அனைத்துப் பிரச்சனைகளுக்கான தீர்வை எட்டுங்கள் அல்லது கம்பீரமாக பதவி விலகி தேர்தலைச் சந்தியுங்கள் முதல்வரே!
ஆன்மன்
02.04.2018
அதிகாலை 02:30
மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!
சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது. வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!
குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..