கே. ஏ. பத்மஜா
ஏப்ரல் 2 உலக ஆட்டிச தினம். உலகம் முழுவதும் ஆட்டிசம் குறைபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலக ஆட்டிசம் நாளாய் கடைபிடிக்கப் படுகிறது. ஆட்டிசம் ஒரு நோய் அல்ல அது ஒரு குறைபாடே. இந்த குறைபாட்டிற்கு என்று மருந்து மாத்திரை எதுவும் கிடையாது, பயிற்சிகள் மூலம் மட்டுமே நிச்சம் நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்தியாவில் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு மேல் ஆட்டிசம் இருப்பதாய் ஒரு புள்ளி விபரம் குறிப்பிடுகிறது. மேலும் இது வருட வருடம் அதிகரித்து வருகிறது என்பது அதிர்ச்சி தரும் விஷயம்.
ஆட்டிசம் என்றால் என்ன?
ஆட்டிசம் என்பது இதுவரை குழந்தையின் முளையில் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் ஒரு வித குறைபாடு என்ற அளவில் மட்டுமே கண்டுபிடிக்க பட்டுள்ளது. மேலும் இது குழந்தை கருவில் இருக்கும் போதே ஏற்படும் மரபணு மாற்றங்களின் காரணமாய் இருக்கலாம் என்றும் கண்டறிய பட்டுள்ளது. ஆட்டிசம் பாதிக்க குழந்தைகள் மொழித்திறன், பேச்சுத்திறன், சமூகத்தோடு பொருத்தி கொள்ளுவது போன்றவற்றில் சிரமம் உடையவர்களாய் இருப்பர்.
ஆட்டிசம்: கண்டறிவது எப்படி?
ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை பிறந்ததில் இருந்து ஆறு மாதம் முதல் ஒரு வயதிற்குள் எளிதில் கண்டுபிடித்திட முடியும். இந்த குழந்தைகள் நாம் பேசும் போது நம் முகத்தை நேராய்ப் பார்க்க மாட்டார்கள். அவர்கள் கவனம் வேறு திசையில் இருக்கும். பேசுவதில் குறைபாடு இருக்கும் இந்த குழந்தைகளுக்கு நல்ல சிந்திக்கும் திறன் இருந்தும் தங்கள் சிந்தனைகளை வெளிப்படுத்த மாட்டார்கள். மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாட மாட்டார்கள். ஒலி எழுப்பினால் அந்த ஒலி கேட்டாலும் அந்த திசையை நோக்கி திரும்பிப் பார்க்காமல் இருப்பர். தங்களுக்கு என ஒரு தனி உலகத்தில், தங்களுக்குள் சிந்தித்து கொண்டு இருப்பர். காற்றில் கைகளை அசைத்து கொண்டே இருப்பது, தானாகவே பேசிக்கொண்டே இருப்பது போன்றவை ஆட்டிசத்தின் அறிகுறிகள்.
ஆட்டிசத்தை குணப்படுத்த முடியுமா ?
முதலில் ஆட்டிசம் ஒரு நோய் அல்ல. எனவே ஆட்டிசம் பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கு ஒரு வயதிற்கு முன்பே பயிற்சிகள் தொடங்கும் போது அவர்களிடம் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆட்டிசம் பாதிப்பு மிக கம்மியான அளவில் இருக்கும் குழந்தைளுக்கு தொடர் பயிற்சிகள் முழுமையான குணமும் பெற வாய்ப்புகளும் உண்டு. இவர்களுக்கு ஒருங்கிணைப்பு திறன் பயிற்சி, பேச்சு திறன் பயிற்சி போன்றவை மிகவும் அவசியம். பொதுவாய் ஆட்டிசம் பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கு இருக்கும் தனித் திறமையை கண்டறிந்து அதை ஊக்குவித்து வளர்த்து விடுவதன் மூலம் இவர்கள் தங்களுக்கு என ஒரு அடையாளத்தை உருவாக்க முடியும். இவ்வகை குழந்தைகள் ஓவியம், நடனம், நினைவு திறன் சார்ந்த விளையாட்டு போன்றவற்றில் சிறந்து விளங்குவர்.
பெற்றோர் மற்றும் சமூகத்தின் பங்கு :
ஆட்டிசம் பாதிக்க பட்ட குழந்தைகள் ஒதுக்கி வைக்கவோ அல்லது அடைத்து வைக்க வேண்டிய அவசியமோ இல்லை. இந்த குறைபாடு இருக்கும் குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். விருந்து, விசேஷம், பூங்கா என்று அனைத்து இடங்களுக்கும் அழைத்து செல்லலாம். இவர்களுக்கு என்று சிறப்பு பயிற்சிகள் உண்டு அதை பெற்றோர்கள் வீட்டில் தொடர்ந்து கற்று தருவதன் மூலம் இவர்கள் குளித்தல், பல் துலக்குதல், சாப்பிடுதல் போன்ற அன்றாட வேலைகளை தாங்களே செய்துகொள்ளும் அளவிற்கு முன்னேறுவர்.
மொத்தத்தில் ஆட்டிசம் குழந்தைகளை சமூகமோ, பெற்றோரோ கை கொடுத்து, அன்பு செலுத்தி, அரவணைத்து, போதிய பயிற்சிகள் வழங்கினாலே போதும் என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் தினம் இந்த ஏப்ரல் 2. இந்த தினத்தில் நீல நிற உடை அணிந்தும், பலர் ஆட்டிசம் குறித்த பாட்ஜ் அணிந்தும், விழிப்புணர்வு செய்திகள் அடங்கிய நோட்டீஸ் கொடுத்தும் ஆட்டிசம் குறித்த அறிவை பொது மக்களுக்குஇந்த நாளில் ஏற்படுத்துகின்றனர்.
கே. ஏ. பத்மஜா, உளவியலில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றவர். மழலையர் பள்ளி நிர்வாகத்தில் 10 ஆண்டுகால அனுபவம் உள்ளவர். குழந்தை வளர்ப்பு ஆலோசகர்.
மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!
சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது. வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!
குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..