பீட்டர் துரைராஜ்

கேரள மாநிலம், கொல்லத்தில் பிறந்து திருடனாக வாழ்ந்த கள்ளன் மணியனின் தன் வரலாறுதான் ‘திருடன் மணியன் பிள்ளை’.இவர் சொல்லுவதை மலையாள மனோரமா இதழின் பத்திரிக்கையாளர் ஜி.ஆர். இந்துகோபன் எழுதியுள்ளார். முதலில் மலையாளத்தில் வெளிவந்தது.
குளச்சல் முகமது யூசுப் இதனை மொழி பெயர்த்துள்ளார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது (2013); இதுவரை நான்கு பதிப்புகள் வந்துள்ளன. தன் வரலாறுதான் என்றாலும் கதைக்கு உரிய கட்டுக்கோப்பும், விவரணைகளும் சுவாரசியமாக உள்ளன.
நாயர் குடும்பத்தில் பிறந்த மணியன் அறியா வயதில் தன் உறவுக்காரப்பெண் சொல்லி ஒரு குழந்தையின் செயினை திருடுகிறான்; பின்னர் சீட்டு ஆடுவதற்காக கோவில் உண்டியலை மற்ற நண்பர்களோடு சேர்ந்து திருட முயற்சிக்கிறான்; இதனால் திருடனாக்கப்பட்டு சிறை செல்கிறான். அதிலிருந்து தனது 45 ம் வயது வரை திருட்டே தொழிலாகி விடுகிறது. அவரது அனுபவங்களின் ஒட்டுமொத்த திரட்டே இந்த நூல். இதன் அடுத்த பாகமும் மலையாளத்தில் தற்போது வெளிவந்துள்ளது. இதுதான் இந்த நூலின் வெற்றி.
” திருடியது தொடர்பாக சுவையான சம்பவங்கள் நீங்கள் எதையாவது கேள்விப்பட்டிருந்தால் அதெல்லாம் போலீசார் சொல்லி பத்திரிக்கைகளில் வந்ததுதான். திருடன்கள் சொல்கிற சிறு உண்மைகளைப் பற்றி பிடித்துக் கொண்டு போலீசின் சாகசங்களும் கற்பனைகளும் கலந்த அரை உண்மையாகவே அது இருக்கும் ” என்று சொல்லும் மணியன் பிள்ளை இந்த சுயசரிதை மூலம் ஒரு இலக்கியவாதியாக பரிணமித்துள்ளார். இந்த நூலில் அறவியலை நாம் காண முடியும். மணியன் பிள்ளை பிடிபடும்போது வாசகர் கவலை கொள்வதும், அவனது சொத்துகள் பறிமுதல் செய்யபட்டு ஏலம் இடப்படும்போது வாசகன் மிக்க வருத்தம் கொள்வதுமே இதன் வெற்றி. திருட்டுக் கொடுத்தவர் தரப்பு கஷ்டங்கள் நூலில் ஓரிரு இடங்களைத் தவிர வேறெங்கும் பேசப்படவில்லை.
திருடன் மணியன் பிள்ளை யாரோடு கூட்டு சேர்ந்தும் திருடுவது கிடையாது; எல்லா ஆபரேஷனும் தனியாகத்தான். சக பயணியாக அவன் வாழ்க்கையில் குற்றவாளி, கைதி, காவலர்கள், நீதிபதி, வழக்கறிஞர்கள் என பலர் வருகிறார்கள். எல்லா சம்பவங்களையும் கிட்டத்தட்ட அந்தரங்கசுத்தியோடு எழுதுகிறார். வாசகர்கள் ரசிக்கலாம்; மனம்விட்டு சிரிக்கலாம். அடிக்கோடிட்டு ரசிக்கக் கூடிய பல வாக்கியங்கள் நூல் முழுதும் தென்படுகின்றன. “இவனுக்கான குணாம்சத்தை கடவுள் படைத்த போது கடவுளுக்கு சில கைப் பிழைகள் தேர்ந்துவிட்டன. வக்கிரமும், வஞ்சக புத்தியும் தலா ஒரு ஸ்பூன் தூக்கலாகி விட்டன ” என்ற விவரிப்போடு ஒருகாலத்தில் ஏர்போர்ஸ் அதிகாரியாக இருந்து பின்னர் திருடனாகும் – மயக்கு சுகு, கட்டிலின் கீழ் புகுந்து முதலிரவன்று நகைகளைத் திருடும் – மணவறைத் திருடன், டாக்டர் திருடன் என பல திருடர்கள் வருகிறார்கள். அவர்களின் குணாதிசயங்கள் விளக்கப்படுகின்றன. “திருடப்போன இடங்களில் வெற்றி பெற்றேனா, சண்டைகளில் வெற்றி பெற்றேனா என்பதல்ல பிரச்சினை. மனம் ஒருபோதும் தோற்றது கிடையாது” என்பதுதான் மணியனின் கொள்கை.
நம்முடைய குற்றவியல் நடைமுறை எவ்வளவு செல்லரித்துப்போயுள்ளது என்பதற்கான ஆவணம் இந்த நூல். சமூகம் ஒருவனை எப்படி குற்றவாளியாக்குகிறது என்பதையும் இந்தநூல் மூலம் நாம் விளங்கிக் கொள்ள முடியும். இந்த சமூகம் என்ற வரையறையில் உறவினர், அண்டைவீட்டுக்காரர், போலீஸ், வழக்கறிஞர், நீதிபதி, சிறை அதிகாரிகள் என அனைவரையும் நாம் உள்ளடக்கலாம்.
போலீசால் பிடிபட்டவுடன் வழக்கறிஞர் இல்லாமல் வழக்குகளை தானே நீதிமன்றத்தில் எதிர் கொள்வதுதான் மணியன் பாணி. இதில் இவன் குறுக்கு விசாரணை செய்வதைப் பார்த்து பல வழக்கறிஞர்கள் தொழில் கற்றுக் கொள்கிறார்கள். இவன் மனைவியிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்த வழக்கறிஞர் மீது புகார் கொடுக்கிறான். தன் அம்மாவை உதைக்க நினைத்த உதவி ஆய்வாளருக்கு திருட்டுப் பட்டம் கட்டி விருப்ப ஓய்வில் செல்ல வைக்கிறான். நீதிமன்றத்தில் தன் கண்ணியத்தை சீண்டும் நீதிபதிக்கு எதிராக குரல் எழுப்புகிறான்; தண்டனை பெறுகிறான். ஒரு சமுதாயம் தன்னைத்தானே பார்த்துக் கொள்வதற்கான கண்ணாடியாக இந்த நூல் விளங்குகிறது. நன்றாக இருக்கும் அதிகாரிகள் , நீதிபதிகள் பற்றி ‘சார்’ விகுதி போட்டு பதிவு செய்கிறான்.
திருட்டுத்தொழிலில் இருந்து விலகி மைசூருக்கு சலீம் பாய் என்ற பெயரில் தன் மனைவியோடு சேர்ந்து பாயசக்கடை வைத்து, பின்பு ஓட்டல் நடத்தி, புகையிலை பயிர் செய்து, மூன்று ஆண்டுகளில் கோடீசுவரன் ஆகிறார். ஒரு கட்டத்தில் ஜனதா கட்சி ஆதரவோடு சட்டமன்ற வேட்பாளர் ஆகிறார்; அதன் தொடர்ச்சியாக ஒருவேளை அமைச்சராகலாம். முதலமைச்சர் குண்டுராவோடு ஹெலிகாப்டரில் பயணிக்கிறார். வேட்புமனுத் தாக்கலுக்கு முதல் நாள் கேரள போலீசால் பிடிபட்டு தனது லட்சக்கணக்கான ரூபாய்களை பறிகொடுக்கும் போது நாமும் வருந்துகிறோம். (இச் சம்பவங்கள் குதிரை வேகத்தில் நகரும்; படிப்பதற்கு சுய முன்னேற்ற நூல் போல இருக்கும்)
சிறை அனுபவங்களை விவரிக்கையில் அங்கு நடைபெறும் ஊழல், கஞ்சா விற்பனை, பாலியல் பிறழ்வுகள், தாதாக்கள், அதிகார மமதை, சக கைதிகளின் குணாம்சங்கள், ரேஷன், குழுத் தலைவன் போன்றவை அனைத்தும் இரத்தமும் சதையுமாக பேசப்படுகின்றன.
தன் வாழ்க்கை முழுவதையுமே இவர் பதிவு செய்துள்ளார். தான் சந்தித்த பெண்கள், சேச்சி, டீச்சர், மடத்துப் பெண்கள், திருமணம் செய்து இருக்க வேண்டிய மனைவி, வரதட்சனைக்காக திருமணம் செய்து கொண்ட இரண்டாவது மனைவி, போன்ற சம்பவங்கள் அவ்வளவு சுவாரசியமாக செல்கின்றன. இவைகள் ‘சாகசங்கள்தான்’.
மணியன் இறுதியில் கலங்குவது தன்னோடு பயணித்த தன் மனைவி மெகருனிசாவிற்காகத்தான். மைசூரில் தான் சேமித்த இலட்சக்கணக்கான ரூபாய்களை பறி கொடுத்து , அரபு தேசத்திற்கு வேலையாளாகச் சென்று , அரபு முதலாளியால் உதைபட்டு இளம் வயதில் இறந்த மெகருனிசா நம் மனதை வியாபிக்கிறாள்.
இவர் முதலில் திருமணம் செய்து கொள்வதாக இருந்த மாலதியின் அம்மாவும், மணியனும் கம்யூனிஸ்டு கட்சியின் ஒரே கிளையில் உறுப்பினர்கள்; மணியன் கம்யூனிஸ்டா என்று வாய் பிளக்க வேண்டாம். இவர் பின்னாளில் பெந்தகோஸ்தே சபையின் போதகராகவும் வாய்ப்பு உள்ளது. இந்த நூலை கதையென்றுதான் வகைப் படுத்த வேண்டும்.
நல்ல குடும்பத்தில் பிறந்து சொத்திற்காக நான்கு சகோதரிகள், அம்மாவோடு புறக்கணிக்கப்பட்ட மணியன்; அறச் சீற்றம் கொண்ட மணியன், தொழிலாளர்களை கண்ணியமாக நடத்தும் மணியன், தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ஒரே டம்ளரில் எதிர்ப்பை மீறி பாயசம் வழங்கும் மணியன், சுயசரிதை எழுதியதால் பொய்வழக்கிற்கு ஆளான மணியன் , வைக்கம் முகமது பஷீர் நாவல்களை படித்துவிட்டு அவர் வீட்டிற்கு திருடப் போன மணியன், கையறு நிலையில் தன் மகனின் நிழலில் கடைசி காலத்தை கழிக்கும் மணியன் என பல மணியன்கள் இந்நூலில் வருகிறார்கள். 88 அத்தியாயங்களில் இவர் வாழ்க்கை சொல்லப்பட்டிருக்கிறது. கதை சொன்ன மணியனை பாராட்டுவதா? பொருத்தமான தலைப்புகளில், எளிய வார்த்தைகளில் வடிவம் கொடுத்த ஜி.ஆர். பந்துகோபனை பாராட்டுவதா ?
மீண்டும், மீண்டும் படிக்கத் தூண்டும் நூல் இது.
-பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.