ப. ஜெயசீலன்
நம்மில் சிலர் கூட சில சதியாலோசனை கோட்பாடுகளை நம்ப கூடியவர்களாக இருப்போம். அல்லது ஒரு வேளை அது உண்மையாகோ இருக்குமோ என்கின்ற அளவிலாவது சிலவற்றை நம்புவோம். சதியாலோசனை கோட்பாடுகளை நாம் நம்ப விரும்புவதிற்கு/நம்ப தொடங்குவதற்கு நமக்கென்று சில தர்க்கங்கள் இருக்கும். கடற்புலிகள், வான் புலிகள், கரும்புலிகள் என்று ஒரு ராணுவத்தை கட்டி 20 ஆண்டு காலத்துக்குமேல் சிம்மசொப்பனமாக இருந்த புலிகளின் தலைமை மிக சாதாரணமாக ஒரு நேரடி சண்டையில் சுட்டு கொல்லப்பட்டார் என்ற தகவல் புலிகளின் ஆதரவாளர்களால் ஜீரணிக்க முடியாத தகவல். அப்பொழுது நக்கீரனில் வந்த ஒரு சிறுபிள்ளைத்தனமான கட்டுரையை நானும்கூட நம்பினேன் அல்லது நம்ப விரும்பினேன். ஏன் என்றால் தர்க்கரீதியாக அவ்வளவு சாதுர்யமான, புத்திசாலித்தனமான, வலிமையான, அனுபவமிக்க ஒரு போராளி இயக்கத்தின் தலைவர் 2 ஆண்டுகளுக்கு மேல் நடந்த சண்டையின் முடிவில் தப்பி செல்லவோ அல்லது குறைந்தபட்சம் தனது சடலம் கிடைக்காத வகையிலோ கூட செயல்படமுடியாமல் போனார் என்னும் நிகழ்வை என்னால் அப்பொழுது தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இது போல நாம் சதியாலோசனை கோட்பாடுகளை நம்பத்தொடங்குவதற்கு பின்னணியில் சில தர்க்கங்கள் இயங்குகின்றன. அந்த தர்க்கங்கள் எல்லா நேரங்களிலும் உண்மைகளை அடிப்படையாக கொண்டவை அல்ல. சில நேரங்களில் நமது தர்க்கங்கள் நமது உணர்வுகளால் உந்தப்படுபவை. மனோதத்துவ நிபுணர்கள் அதை மூன்று முக்கிய வகைமைகளாக பிரிக்கிறார்கள்.
1) விகிதசமன் சாய்வு (proportionality bias)
2) உறுதியூட்டு சாய்வு (confirmation bias)
3) முன்னிறுத்து சாய்வு (projection bias)
ஒரு கிளாசிக் example…
உலகத்தின் சக்தி வாய்ந்த நாடு அமெரிக்கா. உலகத்தின் சக்தி வாய்ந்த மனிதர் அமெரிக்க ஜனாதிபதி. உலகத்தின் சக்தி வாய்ந்த ராணுவம் அமெரிக்க ராணுவம். உலகத்தின் சக்திவாய்ந்த உளவு அமைப்பு அமெரிக்க உளவு நிறுவனம். அமெரிக்க ராணுவமும் உளவு அமைப்பும் தங்களது ஜனதிபதிக்கென்று பிரத்யேக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன. உலகிலேயே மிகவும் பாதுகாக்கப்பட்ட மனிதர் அமெரிக்க ஜனாதிபதிதான். இப்படி பட்ட அமெரிக்க ஐனாதிபதி தனது மனைவியோடு தெருவில் காரில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் 6வது மாடியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் நகரும் காரில் சென்று கொண்டிருந்த கென்னடியை சரியாக இரண்டே தோட்டாக்களில் சுட்டு வீழ்த்தினார் என்பது proportionate ஆக இல்லை இல்லையா? அதாவது ஒரு நம்பமுடியாத ஆச்சர்யமான அதிர்ச்சியான சம்பவத்திற்கு காரணம் மிக மிக எளிமையான ஒன்றாக இருக்க முடியாது என்பது நமது மனதின் சாய்வு(bias). இந்நிலையில் இந்த சதி செயலின் பின்னணியில் KGP, CIA எல்லாம் சம்மந்தப்பட்டிருக்கிறது என்னும் ரீதியில் உலவும் சதியாலோசனை கோட்பாடுகளில் ஒரு தர்க்கம் இருப்பதாய் நாம் உணரத்தொடங்குகிறோம். இதுதான் proportionate bias.
இரண்டாவது நமக்கு பரிச்சயமான ஒன்று. நாம் தினம் தினம் கடைபிடிக்கும் ஒன்று. திருமாவளவன் பாட்டாளி மக்கள் கட்சியை விமர்சித்து ஒரு மேடையில் பேசுகிறார். அவருடைய ஆதரவாளர்கள் அண்ணன் weight காமிச்சுட்டாரு என்னும் ரீதியில் மகிழ்ச்சி அடைவார்கள். அதற்க்கு பதில் சொல்லும் விதமாக ராமதாஸ் ஒரு மேடையில் பேசுகிறார். உடனே அவருடைய ஆதரவாளர்கள் பார்த்தில்ல…ஐயா ஐயாதான் என்பார்கள். அதவாது இரண்டு தரப்பு ஆதரவாளர்களுமே அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் நம்பிக்கையை/ஆசையை/ சார்பை மேலும் பற்றிக்கொள்கிறார்கள். இதுதான் confirmation bias. தலைவர் பிரபாகரன் மரணச்செய்தியை தினமலர் மனமகிழ்வோடு சந்தேகத்துக்கு இடமின்றி நம்பி முதல் பக்க செய்தியாக்கியபோது அதன் ஆதரவாளர்கள் அதை முழுவதுமாக நம்பி ஏற்று கொண்டார்கள். ஏனென்றால் அவர்கள் அது நிகழ வேண்டும் என்று பல வருடங்களாக காத்திருந்தவர்கள். ஆனால் நாம் அவர் தப்பி முக்கிய தளபதிகளோடு வேறு நாட்டில் நலமாக இருக்கிறார் என்பதையொத்த conspiracy theoryகளை நம்ப தொடங்கும் நிலையிலிருந்தோம். ஏனென்றால் அவர் தப்பித்திருக்க வேண்டும் என்று விரும்பினோம். பெரியாரின் கொள்கைகளால் மண்டை காய்ந்து போய் உள்ளவர்கள் பெரியார் இலுமினாட்டி என்னும் சதியாலோசனை கோட்பாடுகளை இயல்பாக நம்புவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஏற்கனவே பெரியாருக்கு எதிரான சாய்வு இருக்கிறது. அறிவியல் முறைகளை அறிந்திருக்காதவர்கள், அறிந்துகொள்ளும் திறனோ/வாய்ப்போ இல்லாதவர்கள் தடுப்பூசி தேவையில்லை என்பதை நம்புவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஏற்கனவே அறிவியலுக்கு எதிரான ஒரு சாய்வு இருக்கிறது. அந்த சாய்வை ஊக்கப்படுத்தும்/உறுதிப்படுத்தும் எல்லா தகவல்களும் அவர்களுக்கு உண்மையாக தெறியும். பெரியார் தமிழர் விரோதி என்னும் உண்மையை சீமான் உற்று பார்த்து கண்டுபிடிப்பது இந்த பின்னணியில்தான்.
இறுதியாக projection bias. நாம் நினைப்பதைத்தான் எல்லோரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள் அல்லது நான் நம்புவதைத்தான் எல்லோரும் நம்புகிறார்கள் அல்லது நான் செய்வதைத்தான் எல்லாரும் செய்கிறார்கள் என்று இருக்கும் ஒரு சாய்வு நிலை. ஒருவர் வதந்திகளை பரப்புவராக/நம்புவராக, கிசுகிசுக்களை நம்புவராக/பரப்புபவராக, புரணி பேசுபவராக/கேட்பவராக இருக்கும் பட்சத்தில் மற்றவரும் தங்களை போன்றே இயல்புள்ளர்கள் என்று நம்ப/கருத தோன்றும். இதன் காரணமாக அவர்களுக்கு தாங்கள் நம்பும் சதியாலோசனை கோட்பாடுகளை மொத்த உலகமும் நம்புவதாக, மொத்த உலகமும் அதன் மேல் ஆர்வம் கொண்டுள்ளதாக, மொத்த உலகமும் அதனை பற்றி விவாதித்து கொண்டுள்ளதுதாக நினைத்துக்கொள்வார்கள். இதன் விளைவாக அவர்கள் நம்பும் சதியாலோசனை கோட்பாடுகளை அவர்கள் தீர்க்கமாக நம்புவார்கள்.
எளிமையாக சொன்னால் conspiracy theories are for losers என்று மனோதத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். தேர்தலில் தோற்கும் எல்லா கட்சியினரும் எல்லா நேரத்திலும் ஒரு சதியாலோசனை கோட்பாட்டை முன்வைக்கிறார்கள். வென்றவர்கள் ஜனநாயகம் வென்றது என்கிறார்கள். விளையாட்டில் எந்த நாடு தோற்கிறதோ அந்த நாட்டின் ரசிகர்கள் மேட்ச் பிக்சிங் என்று சந்தேகிக்கிறார்கள். வென்ற நாட்டின் ரசிகர்கள் சூப்பரப்பு என்கிறார்கள். நாம் எப்பொழுது பலவீனமாக, தனிமையாக, குழப்பமாக, விரக்தியாக, தோல்வியுற்று நிற்கிறோமே அப்பொழுது தான் நாம் ஒரு சதியாலோசனை கோட்பாடை பற்றி கொள்கிறோம்.
14-காம் நூற்றாண்டை சேர்ந்த தத்துவ அறிஞர் வில்லியம் முன்வைத்த கோட்பாட்டின் பெயர் Occam’s razor principle. இந்த கோட்பாட்டின் படி எல்லா சிக்கலான கேள்விகளுக்கும் பெரும்பாலான சமயங்களில் மிக மிக எளிமையான பதிலே சரியான விடையாகிருக்கும் என்பதே. உதாரணத்திற்கு மிக மிக பாதுகாக்கப்பட்ட அமெரிக்க ஜனதிபதியை சுட்டு கொன்றவன் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவன் என்ற மிக சாதாரணமான சுவாரஸ்யமற்ற பதிலே சரியாக இருக்க வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புவர்களால் இதைத்தான் ஏற்றுக்கொள்ள முடிவதேயில்லை.
பொதுவாக பல்வேறு சோதனைகளின் மூலம் அடிப்படையான கணிதம், தர்க்கம், அறிவியல் கோட்பாடுகள் போன்றவற்றில் இளம்பிராயத்திலேயே பயிற்றுவிக்கப்பட்டர்வர்கள் சதியாலோசனை கோட்பாடுகளை பெரும்பாலும் நம்புவதில்லை என்று மனோதத்துவ ஆய்வுகள் நிறுவுகின்றன. அதே நேரத்தில் மெத்த படித்த மேதாவிகள் பலரும் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களாவும் இருக்கிறார்கள். ஆனாலும் கல்வியறிவு பெற்றவர்கள் சதவிகித அடிப்படையில் சதியாலோசனை கோட்பாடுகளை குறைவாகவே நம்புகிறார்கள். குழந்தை பருவத்தில் ஏற்படும் மனரீதியான பாதிப்புக்குள்ளானவர்கள், புறக்கணிப்புக்குள்ளானவர்கள், தனித்து விடப்பட்டவர்கள் மத்தியிலும் சதியாலோசனை கோட்பாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. மேல்சொன்னவைகள் எல்லாம் ஏன் சிலருக்கு அல்லது நமக்கு சில நேரங்களில் நாம் ஏன் சில சதியாலோசனை கோட்பாடுகளில் ஒரு தர்க்கம் இருப்பதாய் உணர்கிறோம் என்பதை புரிந்து கொள்ள உதவியிருக்கும்.
எல்லா சதியாலோசனை கோட்பாடுகளும் பொய் என்று ஒதுக்குவது சரியா?
பாரிசாலனுக்கு ஏன் எளிமையான உண்மைகள் கூட புரிவதில்லை?
எப்பொழுதும் எல்லா பேட்டிகளிலும் பாரிசாலன் சொல்வதே சரி என்பது போன்ற தோற்றம் ஏன் ஏற்படுகின்றது?
பாரிசாலன் போன்ற கண்மணிகளை நாம் எப்படி கையாள வேண்டும்?
அடுத்த கட்டுரையில் முடியும்…
ப. ஜெயசீலன், சமூக – அரசியல் விமர்சகர்.