அன்புசெல்வம்

சந்தையூர் சுவர் குறித்தான பிரச்சனையின் முழு விசயத்தையும் தொடக்கத்திலிருந்து கவனித்து வருகின்றோம். இதில் “பறையர் – அருந்ததியர்” என்கிற சொற்களைத் தாண்டி, தலித் ஒற்றுமை என்பதை போராடும் சில குழுக்கள் முன்னெடுக்காததால் உடனுக்குடன் தலையிடாமல் அமைதி காத்து வந்தோம் என்பதை இதன் மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறோம். சமூக மாற்றத்தை விரும்பும் பல குழுக்கள் இப்பிரச்சனையை அணுகி வந்த போதிலும், அனைவராலும் பெரிதும் எதிர் பார்க்கப்படுகிற, விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்காமல் இருப்பதையும் கவனத்தில் கொள்கிறோம். தொல். திருமாவளவன் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவித்து, வேறு ஏதேனும் இன்னொரு அரசியலை நோக்கி இப்பிரச்சனை திசை திரும்பி விடக்கூடாது என்பதாலேயே அவர் அமைதி காக்கிறார் என்பதையும் புரிந்து கொள்கிறோம்.
அருந்ததியர் அமைப்புகளும் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகளும் அருந்ததியர் கோரிக்கைகளில் நியாயம் இருப்பதாகவே அழுத்தமாக, ஒற்றைச் சார்புக் கருத்து தெரிவிக்கின்றன. அதனையொட்டி கொளத்தூர் மணி, கு. இராமகிருஷ்ணன், மீ.தா. பாண்டியன் ஆகியோரை உள்ளடக்கி “சந்தையூர் தீண்டாமைச் சுவர் இடிப்புப் போராட்டக்குழு” என்பதையும் உருவாக்கி இருக்கிறார்கள் என்பதையும் அறிவோம். எனினும் இப்பிரச்சனையில் அருந்ததியர் அமைப்புகளோடு இணைந்து களப்பணியாற்றி வரும் ‘தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ தங்களின் முழுமையான நிலைப்பாடு இது தான் என்பதை இதுவரையிலும் அறிவிக்கவில்லை என்றே கருதுகிறோம்.
அதே சமயம் நாளுக்கு நாள் இப்பிரச்சனை புது வடிவம் எடுத்து வருவதையும் உணர்கிறோம். சந்தையூர் சுவர் குறித்தும், அங்கு சிறுபாண்மையாக இருக்கிற பறையர் தரப்பில் இங்கொன்றும், அங்கொன்றுமாக பேசப்படும் கருத்துக்களை கவனத்தில் நிறுத்த மறுப்பதையும் கவனிக்கிறோம். அதையும் தாண்டி கருத்துக் கூறுபவர்களை “பறையர் பாசிஸ்ட், பார்ப்பன பறையர்கள்” என அவர்களை இழிவுபடுத்தும் அநாகரிகத்தையும், அதை தீவிரமாக முன்னெடுக்கும் அருந்ததியர் அமைப்புகளின் நடவடிக்கைகளையும் உற்று நோக்கி வருகிறோம். இத்தகைய போக்கு புதிதல்ல என்றாலும், அருந்ததியர் அமைப்புகளோடு களத்தில் நிற்கும் பிற்படுத்தப்பட்ட சக்திகள் கூட பறையர்களை அவ்வாறு அவதூறு படுத்துவதில்லை என்பதையும் கவனத்தில் வைக்கிறோம்.
இச்சிக்கலான தருணத்தில், தீர்வை நோக்கி சில விசயங்களை முன் வைக்கிறோம்.
- சந்தையூரில் பறையர் தரப்பு எழுப்பியுள்ள கோவில் சுற்றுச் சுவர் எவ்வகையிலும் தீண்டாமைச் சுவர் அல்ல என்பதை உறுதிபடக் கூறுகிறோம். (விரிவான அறிக்கையை விரைவில் வெளியிடுகிறோம்). உயர்நீதி மன்றத்தில் சட்ட ரீதியாக சமர்ப்பிக்கப்பட்ட பிரமாணப்பத்திர ஆவணங்களில் அருந்ததியர் தரப்பு அதை தீண்டாமைச் சுவர் என எங்கேயும் குறிப்பிடவில்லை. வழக்காடக்கூடிய வழக்கறிஞர்களும், தீர்ப்பு சொன்ன நீதிபதிகளும் அதனை தீண்டாமைச் சுவர் என எங்கேயும் குறிப்பிடவில்லை. அதே சமயம் அச்சுவரை இடிக்க வேண்டும் என தீர்ப்பில் எங்கேயும் கூறவில்லை. மாவட்ட நிர்வாகமும் இதனை சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்றே அறிவுறுத்துகின்றது. (இது முற்றிலும் சட்டப்பிரச்சனை சார்ந்தது – Civil Dispute).
-
சந்தையூர் சுவர் பிரச்சனையை மீண்டும் சட்ட ரீதியாக அணுகுவதும் சரியல்ல என்றே கருதுகிறோம். அதனை நாங்களும் விரும்பவில்லை. ஆனாலும் இப்பிரச்சனை தலித் அறிவுத்துறையினரையும், செயல்பாட்டாளர்களையும் மிகுந்த நெருக்கடிக்கும், கவலைக்கும் உள்ளாக்கி இருக்கிறது. தமிழகம் தாண்டி இப்பிரச்சனை வேறு வடிவம் எடுப்பதையும் விரும்பவில்லை.
-
சந்தையூரில் சிறுபான்மையாக இருக்கும் பறையர்கள் இப்பிரச்சனையில் பெருந்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும், பிரச்சனையைப் பெருந்தன்மையோடு அணுக வேண்டும் என எதிர் பார்க்கிறோம். பறையர்கள் அங்கு சிறுபான்மையாக இருக்கிறார்கள் என்பதற்காக “அறமற்ற கோரிக்கைகளுக்குக் கட்டுப்பட வேண்டும்” என்றில்லாமல், வரலாற்று அறத்தோடும், தலித் அரசியலின் வரலாற்றுப் பொறுப்போடும், பெருந்தன்மையோடும் நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறோம். அந்த சுவரின் பகுதிகளில் சில மாற்றங்கள் செய்வதற்குரிய கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
-
சந்தையூர் சுவர் பிரச்சனையில் தொடக்கத்திலிருந்து அக்கறைக் காட்டி வரும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உடனடியாக ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்படுத்த வேண்டும் என கோருகின்றோம். இச்சந்திப்பின் மூலமாக “சந்தையூர் கோவில் சுவர், தீண்டாமைச் சுவர் இல்லை, அது ஆக்கிரமிப்புச் சுவர்” என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவித்தால் சந்தையூர் பறையர்கள் தங்கள் நிலையிலிருந்து இறங்கி வருவதற்கு வாய்ப்பு உருவாகும். இதன் மூலம் சந்தையூர் பறையர் தரப்பும், பிரச்சனையைத் தீர்க்க முயற்சிக்கும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இந்த கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் எனக் கோறுகின்றோம்.
சந்தையூரை முன்னிட்டு நடந்த / நடக்கும் விவாதங்கள் சுயசாதி பெருமை பேசுவதாகவும், பிறசாதி மீது அபாண்டமானக் குற்றச்சாட்டுக்களையும், அவதூறுகளையும், பொய்யையையும், புனைவுகளையும் திட்டமிட்டு பரப்புவதாக இருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. இது சாதி ஒழிப்பில் நம்பிக்கை கொண்டுள்ள தலித் அரசியலுக்கு முரணாக இருப்பதாகக் கருதுகிறோம். ஆகையால் இக்கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சற்று இறங்கி வந்தால், இப்பிரச்சனையை தீர்வுக்குக் கொண்டுவர ஒரு நல்லெண்ணக்குழுவை உருவாக்க முன் வருகிறோம். சாதி ஒழிப்புக்கான, தலித் விடுதலைக்கான அரசியலில் நம்பிக்கை கொண்டுள்ள அமைப்புகள், தோழமை சக்திகள், இக்கோரிக்கையை பரிசீலிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பு : 1. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியை அணுகுவதற்கு காரணம் இப்பிரச்சனையின் முழுவடிவத்தையும் புரிந்திருக்கிறார்கள் என அவதானிக்கிறோம். அவர்களின் வார்த்தை மற்றும் செயல்பாடுகளில் தலித் விடுதலைக்கான நல்லெதிர் நோக்கு இருப்பதாகக் கருதுகிறோம். இது வரையிலும் இப்பிரச்சனையை முன் வைத்து சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் வார்த்தைகளையும், செயல்பாடுகளையும் வெளிப்படுத்தவில்லை என உணருகின்றோம்.
அன்புசெல்வம், எழுத்தாளர்; செயல்பாட்டாளர். தொடர்புக்கு : 9629775008