பாரிசாலன் இலுமினாட்டிகளை எப்படி கண்டுபிடிக்கிறார்? பகுதி-2

ப. ஜெயசீலன்

110010001111

இந்த எண்களில் உங்களால் ஒரு pattern இருப்பதை கவனிக்கமுடிகிறதா? கவனித்து வையுங்கள்..

அமெரிக்க மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ஏதாவது ஒரு சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களாக இருக்கிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் சொல்லுகின்றன. 1890 முதல் 2010 வரை New York times மற்றும் Chicago tribune பத்திரிகைகளுக்கு வந்த 100,000க்கு மேற்பட்ட கடிதங்களை ஆய்வுக்கு உட்படுத்தியபொழுது ஒன்று அல்லது அதற்கு மேலான சதி ஆலோசனை கோட்பாடுகளை வலியுறுத்திய கடிதங்களின் சதவிகிதம் மிகவும் consistent ஆக எல்லா காலங்களிலும் இருந்திருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது எல்லா காலங்களிலும் சதியாலோசனை கோட்பாடுகளில் மனிதர்களின் மனங்கள் ஈர்ப்பு கொண்டே இருந்திருக்கிறது. சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களை வடிகட்டிய முட்டாள்கள், கோமாளிகள் என்று அறிவியலாளர்கள் ஏளனம் செய்து ஒதுக்கிவிட்டு கடந்து சென்ற காலம் முடிவுக்கு வந்திருக்கிறது.

தகவல் தொழில்நுட்பம் நினைத்து பார்க்கமுடியாத வளர்ச்சியை அடைந்திருக்கும் இந்த காலத்தில் நல்லவையோ, கெட்டவையோ, உண்மையோ, பொய்யோ தகவல் நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் பரவுகிறது. இது சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களுக்கும், பரப்புவர்களுக்கும் முன்னெப்போதும் இல்லாத வலிமையை அளித்திருக்கிறது. அதாவது தடுப்பூசிகள் உண்மையில் நோயை தடுக்க போடப் படுபவை அல்ல மாறாக அவை நோயை பரப்பவே போடப்படுகின்றன என்கின்ற சதியாலோசனை கோட்பாளர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தகவலை அவர்களிடம் இருக்கும் குதர்க்கமான கோமாளித்தனமான தரவுகளை வைத்து விளக்கி, ஊடகங்களில் பரப்பி ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுவதை தடுத்து பின்னாட்களில் அந்த குழந்தைகளை நோயில் தள்ளி வெற்றிகரமாக சாகடிக்கமுடியும்.

இதன் பின்னணியில்தான் மனோதத்துவ நிபுணர்களும், மூளை நிபுணர்களும் இந்த சதி ஆலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களை குறித்தும், அதை பரப்புகிறவர்கள் குறித்தும் தீவிரமான ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்கள். சதி ஆலோசனை கோட்பாடுகள் எதனால் உருவாகின்றன? அல்லது சதியாலோசனை கோட்பாடுகளை ஏன் உருவாக்குகிறார்கள்? மனிதர்களுக்கு சில இயல்பான psychological தேவையும், அவசியமும் உள்ளன. அவற்றில் சில முக்கியமான தேவைகளாக கீழ் உள்ளவைகளை மனோதத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

1) எல்லாவற்றையும் புரிந்துகொள்ளவும், தீர்க்கமான விடையை அடையவும் ஏற்படும் முனைப்பு (desire for understanding and certainty)

2) எல்லாவற்றையும் கட்டுக்குள் வைக்கவும், பாதுகாப்பாக உணரவும் ஏற்படும் முனைப்பு (desire to control and security)

3) சமூகத்தில் சிறப்பு அந்தஸ்தை கோரும்/பெறும் முனைப்பு (desire to maintain a self image)

இந்தத் தேவையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் அடைய முயற்சிக்கிறார்கள். அறிவியல் சார்பு, இறையியல் சார்பு, மதம் சார்பு, சாதி சார்பு, தத்துவ நிலைப்பாடுகள் சார்பு, கலைகள் சார்பு என்று பலவகையான சார்புகளை கொண்டு நாம் நமது மனதின் அடிப்படை தேவைகளை அணுகுகிறோம். அதில் ஒரு சார்புதான் சதியாலோசனை கோட்பாடுகள் மீதான நம்பிக்கை சார்ந்த சார்பு.

உலகில் நடக்கின்ற எல்லா நிகழ்வுகளையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. உதாரணத்திற்கு நீங்கள் ஒவ்வொரு முறை பிரியாணி செய்யும் போதும் அடிபிடித்து விடுகிறது. தொடர்ந்து 10 முறை இதுவே நடக்கிறது. உடனே உங்கள் மனம் அதற்கான காரணத்தை கண்டுபிடிக்கத் துடிக்கும் இல்லையா? நீங்கள் தர்க்கபூர்வமானவர் என்றால் இனிமேல் இந்த பாத்திரத்தில் இனி பிரியாணியே செய்யக் கூடாது. இதில் செய்தாலே அடிபிடிக்கிறது என்று ஒரு காரணத்தை கண்டுபிடித்தவுடன் உங்கள் மனம் அமைதி அடையும். நீங்கள் மத நம்பிக்கையுள்ளவர் என்றால் கோவிலுக்கு போய் மாசக்கணக்கில் ஆகிறது. மொதல்ல வெள்ளிக்கிழமை கோவிலுக்கு போகணும். மனசே சரியில்ல. எப்ப பிரியாணி செஞ்சாலும் அடிபிடிக்கிறது என்று ஒரு விடையை அடைவீர்கள். சீமானின் தம்பி என்றால் நம்ம பெரும்பாட்டனும் பெரும்பாட்டியும் நல்லா கருப்படிச்ச மண்பானையில் பிரியாணி செஞ்சு சாப்டாங்க. பிரியாணி அடிபிடிக்காம வந்துச்சு. உடம்பும் நல்லா இருந்துச்சு. எப்போ தமிழன் திராவிடத்திடம் மண்டியிட்டானோ அப்பவே அலுமினியம் டபரா வெள்ளையா இருக்குனு மண்சட்டிய கைவிட்டுட்டான். இப்போ பிரியாணி முரட்டுத்தனமா அடிபிடிக்குது என்று ஒரு விடையை கண்டுபிடிப்பார்கள். இதுவே பாரிசாலன் வீட்டில் பிரியாணி கருகியிருந்தால் அலுமினியம் டபராவை இரண்டாம் உலகப்போரில் sausage வேக வைக்க ஜெர்மனிய சிப்பாய்கள் பயன்படுத்தியதைப் பார்த்த இலுமினாட்டிகள் இப்படியே போனால் எவர் சில்வர் வியாபாரம் படுத்துவிடும் என்று பிளான் பண்ணி நல்லவர் ஹிட்லரை வீழ்த்தி அலுமினியம் டபரா தொழில்நுட்பத்தையும் திருடி உலகம் முழுவதும் விற்று லாபம் பார்த்தார்கள் என்றும் இதற்கு இலுமினாட்டி பெரியாரும் உடந்தை. அதற்கு சாட்சிதான் பெரியாருடைய அலுமினிய மூத்திர சட்டி என்று தனது வீட்டில் பிரியாணி கருகியதற்கான விடையை கண்டுபிடித்திருப்பார். உண்மையில் அந்த பிரியாணி கருகியதற்கு மேல் சொன்ன எந்த காரணமுமே இல்லாமல் வேறொரு காரணம் இருந்திருக்கலாம். அல்லது காரணமே இல்லாத ஒரு random occurrence ஆக இருந்திருக்கலாம். ஆனால் அதை நம் மனம் ஏற்காது. ஒரு நிகழ்வின்/சம்பவத்தின் காரண காரியத்தை புரிந்துகொள்வதின்/விடைகாண்பதின் மூலமே நமக்கு ஒரு நிலைத்தன்மை கிடைக்கிறது. அதனால் தான் நாம் அடுத்த பத்து ஆண்டுகளில் நாம் செய்ய வேண்டியதை திட்டமிட முடிகிறது. நமது புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒரு சம்பவம் நடக்கும்பொழுது உதாரணத்திற்கு மலேஷியா விமானம் காணாமல் போனதை போன்ற ஒரு சம்பவம் நடக்கையில், தங்களுக்கு அதற்கான விடை தெரியவில்லை அல்லது அது தங்களுது புரிதலுக்கு அப்பாற்பட்ட விஷயம் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளமுடியாதவர்கள், அந்த உண்மையை சந்திக்கும் தைரியம் இல்லாதவர்கள் பாரிசலானின் பிரியாணி டபரா தியரி போன்ற கோமாளித்தனமான கோட்பாடுகளை உருவாக்குகிறார்கள் அல்லது நம்பத் தொடங்கிக்கிறார்கள்.

நாம் எல்லாமும் நமது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்னும் நம்பிக்கையில்தான் ஒரு சமூக ஒழுங்கோடு வாழ்ந்துகொண்டிருக்கிறோம். செல்லூர் ராஜு தெர்மாகோல் அறிவியலை அடுத்த எலேக்‌ஷன் வரைதான் முன்னெடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளதால்தான் நம்மால் நிம்மதியாக தூங்க போகமுடிகிறது. ஏனென்றால் தேர்தல் ஓட்டு என்னும் கட்டுப்பாடு(control) நம்மிடம் உள்ளது. செல்லூர் ராஜு நிரந்தர மந்திரி. நம்மால் அவரை ஒன்றுமே செய்யமுடியாது என்ற நிலையில் நம் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சியையும், கையறு நிலையையும், பயத்தையும் யோசித்து பாருங்கள். அதாவது அதிகாரம்/கட்டுப்பாடு(control) நமக்கு தைரியத்தையும் நம்பிக்கையும் சமூக ஒழுங்கையும் அளிக்கிறது. control இல்லாத போது நாம் பயம்கொள்கிறோம். இந்த பயம் நம்மை பீடித்து கொள்ளும் போது நாம் ஒரு சதியாலோசனை கோட்பாடுகளை நம்ப தொடங்குகிறோம். உதாரணத்திற்கு ஒருவர் பிறப்பு தொட்டு சாதியை பயின்றுவருகிறார். தான் ஒரு மிகவும் கண்ணியமான, கம்பீரமான, கலாச்சாரமிக்க உயர் சாதி பார்ப்பன இந்து என்று தன்னை கருதி கொள்கிறார். திடீரென்று ஒரு பெரியவர் வந்து அவரை ஓத்தா ஒம்ம ஒய்யால என்று திட்டி அவரது நம்பிக்கையை கழட்டி தோரணம் கட்டுகிறார். அதுவரை அந்த உயர் சாதி இந்து தனது கட்டுப்பாட்டில் இருப்பதாய் நினைத்து கொண்டிருந்த அவரது நம்பிக்கைகள், வாழ்வுமுறை எல்லாவற்றையும் அடித்துநொறுக்கின்றார். இந்நிலையில் அந்த சாதி ஹிந்துவிடம் ஜி மேட்டர் தெரியுமா அந்த கிழவன் இலுமினாட்டி ஜி என்று ஒருவர் வந்து சொன்னால் அவர் உடனடியாக அதை நம்ப தொடங்குவதோடு தான் இழந்த கட்டுப்பாட்டை திரும்ப மீட்டுக்கொள்வார். அதாவது தனக்கு ஒரு சிக்கல் நேரும்போது, ஒரு குழப்பம் ஏற்படும்போது, பயம் தோன்றும்போது, வெற்றிடம் ஏற்படும்போது மனிதர்கள் சாதியாலோசனை கோட்பாடுகளுக்கு ஆளாகிறார்கள். For some people conspiracy theories act as a defensive mechanisms against their insecurities and limitations.

இறுதியாக, கிளு கிளுப்பு சம்மந்தப்பட்டது. பிறருக்கு தெரியாத விஷயம் எனக்கு தெரியும் என்பது ஒரு கிளுகிளுப்பான விஷயம். இதற்கு ஆட்படாத மனிதர்களே கிடையாது நான் உட்பட. இதன் அடிப்படையில்தான் கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஸ்டீபன் ஹூக்கிங்சின் பின்னணியே தெரியாமல் எனக்கு அவரை ரொம்ப நல்லா தெரியும் என்னும் தோரணையில் அவருக்கு இரங்கல் கவிதை எழுதினார். பாய்ஸ் படத்தில் செந்தில் பேசுவதாய் சுஜாதா ஒரு வசனம் எழுதி இருப்பார். “data is knowledge”. சாதியாலோசனை கோட்பாடுகளை பரப்புவர்களை கவனித்தால் பேசும்பொழுது “உங்களுக்கு இது தெரியுமா” என்று தொடர்ந்து கேட்டு ஒரு வரி தகவல்களாக சொல்லி கொண்டே இருப்பார்கள். அதன் பொருள் உனக்கு தெரியாத தகவல் எனக்கு தெரிந்திருக்கிறது அதனால் நான்தான் லபுக்குதாஸ் என்னும் தோரணை மற்றும் உனக்கு தெரியாததை நான் தெரிந்துவைத்திருக்கிறேன் எனவே தயவு செய்து என்னை மதித்து ஏற்று கொள்ளுங்கள் என்ற ஏக்கம், இவையிரண்டையும் நீங்கள் கவனிக்கலாம். சில மனோதத்துவ ஆய்வுகள் narcissism( a person who has an excessive interest in or admiration of themselves) என்னும் மன நோய்க்கும் சதியாலோசனை கோட்பாடுகளை பரப்புவர்களுக்கும், நம்புவர்களுக்கும் இருக்கும் தொடர்ப்பை குறித்து நிறுவுகின்றன. தங்களை மற்றவர்கள் கவனிக்க வேண்டும், தாங்கள் மற்றவர்களுக்கு தெரியாத தகவல்களை கண்டைந்து வைத்திருக்கிறோம், தாங்கள் அறிவிலிகளை வழிநடத்தும் பொறுப்பிலிருக்கிறோம், உலகில் நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் முழுவதுமாய் புரிந்து கொள்ளும் ஆற்றலோடு இருக்கிறோம், தான் தன்னை போன்றே சதியாலோசனை கோட்பாடுகளை நம்புவர்களோடு ஒரு குழுவாகிருக்கிறோம் என்கின்ற மிக ஆழமான விருப்பமும், ஏக்கமுமே அவர்களை சதியாலோசனை கோட்பாடுகளை நோக்கி தள்ளுகிறது.

மனித மனங்களுக்கு சதியாலோசனை கோட்பாடுகள் ஏன் தேவைப்படுகிறது என்பதை பற்றி நமக்கு இப்பொழுது ஒரு புரிதலிருக்கும். சதியாலோசனை கோட்பாடுகள் எப்படி தர்க்கரீதியான வலிமையை பெறுகிறது? சதியாலோசனை கோட்பாடுகளை நம்பவேண்டிய நிலை ஏன் நம்மில் சிலருக்கு ஏற்படுகிறது? என்பதை பற்றி அடுத்தக் கட்டுரையிலும், பாரிசலானையும் ஹீலர் பாஸ்கரையும் எப்படி டீல் செய்யவேண்டும் என்பதை அதற்கடுத்த கட்டுரையிலும் பார்க்கலாம்.

ப. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர்.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.