முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி
மையச் சரடு ஒன்றை, அதற்கான கதைக்களத்தோடு, பயனுறு சொற்களால் தைத்து, கட்டவிழ்த்துப், பின் எதிர்பாராத வகையில் முடிவுறச் செய்தலே கதை ஆகும். சகமனிதர்களின் மனச் சுருக்கங்களை நீவி விடுதலில் அலாதிச் சுகங்கண்டது நம் தமிழ்ச் சமூகம். அதன் நீட்சிதான் இன்றையச் சிறுகதைகள். பொதுவாக, நாம் கண்டுணர்ந்தவைகளை உணர்வில் கடத்தி கதைகளாகப் பரிமாறுவது ஒருவகையில் சமூகக் கடமையும் கூட. அதைத் தன் முதல் சிறுகதைத் தொகுப்பான கற்பனைக் கடவுளில் துவங்கியிருக்கிறார் எழுத்தாளர் நாச்சியாள் சுகந்தி.
வால்பாறை மலைப் பகுதியில் வசிக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வியல் சிக்கல்களை சித்திரித்திருக்கிறார். அப்பெண்களின் மென்மையான உணர்வு, ஏழ்மையான சூழலிலும் கல்வியில் மேம்பட்டு வாழத்துடிக்கும் அவர்களின் தன்முனைப்பு. மழையிலும் பனியிலும் மலைச்சரிவுகளைக் கடந்து , யானைகள், சிறுத்தைகள் போன்ற மிருகங்களுக்கு பயந்து அடிப்படைக் கல்விக்காக தினம் தினம் போராடும் வால்பாறைக் குழந்தைகளின் துயரத்தை பதிவு செய்திருக்கிறார். நம்பிக்கைத் துரோகம், நட்பு, மனித நேயம் எனக் கதைகளில் விரவிக்கிடக்கின்றன.
‘கொஞ்சம் ஜூஸும் ஒரு உடலும்’ கதையில், ஏசுமணியை நம்பிதான் அவள் பெற்றோரும் இரண்டு தங்கைகளும் வாழ்கின்றனர். ஏழ்மையின் பிடியால் பணக்கார மிஸ்ஸியம்மா வீட்டில், ஏசுமணி வீட்டு வேலைகள் செய்கிறாள். மிஸ்ஸியம்மாவின் வயதான தந்தையால் சிதைக்கப்படுகிறாள். தற்கொலைக்கு துணிகிறாள். மயக்கமருந்து கலந்த பழச்சாறுக்கு ஆசைப்பட்ட சூழலையும், தான் கர்ப்பமுற்று இருப்பதை புரியாத அவளின் அறியாமையும், பணக்காரர்களை எதிர்த்து நியாயம் கிடைக்கப்போவதில்லை. “நாம செத்துப் போயிட்டா அம்மா, அப்பாவுக்கு பங்களா வீட்லருந்து காசு எப்படித் தருவாங்க?” எனக் கதறுவதும், வாசிப்பவர்களுக்கு கண்ணீர் வரச் செய்கிறது. தற்கொலைக்காக கிணற்றை நோக்கி சந்தோசமாக ஓடிக்கொண்டிருக்கும் அதே வேளையில் ஏசுமணியின் அப்பா, சுட்டுக்கொல்லப்பட்ட இந்திராகாந்தி அம்மையாருக்காக காங்கிரஸ் கட்சியின் சார்பில், உருவபொம்மையை சுடுகாட்டில் புதைத்துவிட்டு மொட்டை அடித்துக் கொண்டிருந்தார் எனக் கதை முடிகிறது. அவர் சொல்லியிருப்பதைப் போல அந்த மொத்த எஸ்டேட்டும் எழவு வீடாகப் போயிருந்தது. இந்த ஒப்புமையில், குடும்ப அரசியலும், அரசியல் குடும்பத்தின் பொறுப்புத் துறப்பும் நன்றாக புலப்படுகிறது.
மலங்காட்டில் வசிக்கும் வள்ளியம்மாவிற்கு நான்கு குழந்தைகள். அவர்களின் வயிற்றுப் பசியை போக்க வழியில்லாமல் தவிக்கிறாள். ஐந்தாவதாக குழந்தை உண்டாகியிருக்கிறாள். வறுமை மற்றும் வெளியில் தெரிந்தால் அவமானம் என கருவை கலைக்க நினைக்கிறாள். கடுகு, நிலக்கரி, மண்ணெண்ணெய், கடுமையான வேலைகள் என ஏதேதோ முயற்சிக்கிறாள். ‘‘ஆம்பிளைக்கென்ன வலி, எனக்கென்னாச்சுன்னு போயிருறான். பொம்பள கிடந்து இப்படி மாய வேண்டியிருக்கு. என்ன எழவுக்கு இந்த பொம்பள சென்மத்த எடுத்தொமோ?அவள் கணவனுக்கு இதைப்பற்றிய எந்தக் கவலையும் இல்லை. மருத்துவச் செலவிற்கு பணம் இல்லாமலும் போதிய விழிப்புணர்வு இல்லாமலும் மருத்துவர் சொன்னதுபோல் குழந்தை ஊனமாகப் பிறக்குமோ என்கிற அச்சமும் பதற்றமும் ‘வயித்துப்பிள்ளை’ என்கிற கதை நெடுக வருகிறது. “ நாட்கள் மலையிலிருந்து வடியும் பனிஈரம் போல மெல்ல கரைந்து ஒழுகிக்கொண்டிருந்தது. கனிந்த பலாப்பழத்தை மடியில் கட்டிக்கொண்டு சுமக்கிறவள் போல மறைந்து மறைந்து திரிந்தாள் வள்ளியம்மாள்.” பலாவின் வாசம் போல அவள் கர்ப்பிணியாக இருக்கும் செய்தி மலங்காட்டில் மறைக்க முடியாத ஒன்றாக இருந்ததை உவமைப்படுத்தியிருக்கும் விதம் சிறப்பு.
கணவனின் துரோகத்தை சகிக்காமல் அவனை விட்டுப் பிரிந்து தன் சிறுவயது மகனோடு வாழ்ந்து கொண்டிருப்பவள் செல்லம்மா. “கழுத்தளவு சந்தோசத்துடன் அவளை வாழவைப்பது வயலும் காடும்தான்” அதையும் அந்த ஊரின் பணக்காரர்கள் மிரட்டி பறித்துக் கொள்ள நினைக்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், “ இங்க பாருங்க. நீங்க யாரு, என்னன்னு தெரியும். செட்டிக் குளத்துளத்துல வாக்கப்பட்டு, புருஷன விட்டுட்டு ஓடியாந்துட்டீங்க. வயசுப்பையன் இருக்கான். வீணா வம்பு வேண்டாம். சொன்ன பணத்தவிட நாலஞ்சு லட்சம் கூடத் தர்றேன். சீக்கிரம் எழுதித் தர வழியப் பாருங்க” என்பதுதான். ஒவ்வொருநாளும் மிரட்டிப் போகும் ஆண்களுக்கு எதிராக தன் வீட்டு அரிவாளால் தன்னை கொலை செய்யுமாறு அந்தப் பணக்காரனிடம் உறுதியாகக் கூறுகிறாள். ‘அறுத்துக்கட்டினவ’ கதையில் செல்லம்மாவின் இந்தத் துணிச்சல் மற்ற பெண்களுக்கு வழிகாட்டும் கலங்கரை ஒளியாகப் பாய்ச்சுகிறது.
அப்பாவின் உணர்வினை புரிந்து கொண்டு அவரின் காதலியை தன் அம்மாவாக ஏற்றுக்கொள்ளும் மலரின் உன்னத அன்பை கவித்துவக் கதையாக வடித்திருக்கிறார். பெரியம்மாவுடன் பேசும்போதெல்லாம் அண்ணன்கள் ஏன் தம்மை அடிக்கிறார்கள் என்கிற குழப்பமும், தன் அம்மாவிற்கும் பெரியம்மாவிற்குமான அழகானப் புரிதலும், அப்பாவைச் சுற்றி பிணைக்கப்பட்டிருக்கும் காதல், நம்பிக்கை, பெருந்தன்மை, விட்டுக்கொடுத்தல் எல்லாமும் எதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆணாதிக்க மனோபாவம். நமக்கு எழும் கேள்விகளை மலர் கேட்கிறாள். தன்னிலை விளக்கம் கொடுக்கிறாள். என்றாலும் கூட அப்பாவின் காதலி, குடும்பத்தில் உள்ள அனைவரையும் அன்புச் சங்கிலியால் இணைக்கிறாள் என்பதுதான் அழுத்தமான காரணம்.
கலைவாணிக்கும் ஓவியருக்குமான உண்மையான நேசம், சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒருவரின் மீது எழக்கூடிய இயல்பான நட்பை ‘கற்பனைக் கடவுள்’ முன் வைக்கிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனிதநேயத்தை தேடி பயணப்படுவதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார். கால்கள் முடங்கப்பட்ட தான், அந்த நண்பரின் மனதில் அவரின் ஓவியத்தில் எப்படி உயர்ந்து நிற்கிறோம் என்பதை வாசிப்பின் முடிவில் கலைவாணியாக நம்மால் வீறுகொண்டு நடைபோட முடியும்.
கடவுள் என்பது கற்பனையா? அல்லது கற்பனையில் வரித்த கடவுள், சமூக அக்கறை கொண்ட ஓவியரைப் போன்றவர்களா? எதுவாகினும் ‘கற்பனை கடவுள்’ மிக நேர்த்தியான தலைப்பு. கதைகளில் வரும் பெண் கதாபாத்திரங்கள், மரணமாக இருந்தாலும் நம்பிக்கை துரோகிகளிடமிருந்து பிரிவதாக இருந்தாலும் விடுபடுதலை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறார்கள்.
சமகால அரசியலை தைரியத்தோடு பேசக்கூடியவர், கவிஞர், சினிமா துறையில் இயங்கக்கூடிய உணர்வுப்பூர்வமான எழுத்தாளர். முதல் தொகுப்பு என்கிற பட்சத்தில், வெளியிட வேண்டும் என்கிற அவசர நொடிகள் சொற்களில் தென்படுகின்றன.. மனதில் நினைத்த சகலத்தையும் கொட்டித் தீர்க்க வேண்டும் என்கிற எண்ணத்தால், ஒரு சில கதைகளில் சொல்ல நினைத்த கருத்துகள் வாசிப்பிற்கு புலப்படாமல் போகின்றன. இதுபோன்ற இயல்பான சில விசயங்களைக் கடந்து, தான் வாழ்ந்த மண்ணை, நேசித்த மனிதர்களை, வறிய பெண்களின் அவசங்களை நல்ல கதைகளாக்க முடியும் என்று நிரூபித்த எழுத்தாளர் நாச்சியாள் சுகந்திக்கு அன்பும் பாராட்டுகளும். இதே துடிப்புடன் எழுத்துலகில் பயணிக்க வாழ்த்துகள். துலாக்கோல் போல் அறிமுக எழுத்தாளர்களை உற்சாக எடையினால் சமன் செய்துவரும் யாவரும் பதிப்பகத்தாருக்கு என்றென்றும் பாராட்டுகள்.
கற்பனை கடவுள் – நாச்சியாள் சுகந்தி
விலை: ரூ. 90
பதிப்பகம்: யாவரும் பப்ளிஷர்ஸ்