ப. ஜெயசீலன்
உங்களிடம் வந்து உலகம் உண்மையில் உருண்டையானது அல்ல. மாறாக அது தட்டையானது. இந்த உண்மையை உலகில் உள்ள எல்லா அரசாங்கங்களும் சேர்ந்து நம்மிடமிருந்து மறைக்கிறார்கள் என்று ஒருவர் மிக சீரியசாக சொன்னால் நீங்கள் அவர் சொல்லுவதை நம்புவீர்களா?. சரி இது பரவாயில்லை. இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஹிட்லர் உள்ளிட்ட முக்கிய நாஜி தலைவர்கள் தப்பி நிலவுக்கு சென்று விட்டார்கள். அவர்கள் இன்னமும் நிலவில் வசித்து வருகிறார்கள் என்று ஒருவர் உங்களிடம் வந்து சொன்னால் அவர் சொல்லுவதை நம்புவீர்களா? சரி வெளிநாடுகளை விடுங்கள். நேதாஜி விமானா விபத்தில் சாகவேயில்லை. அவர் ரஷ்யா சிறையில் அடைத்து வைக்கப்பட்டு அங்கேயே இறந்தார். நேரு உள்ளிட்ட இந்திய தலைவர்களுக்கு இது தெரியும் என்று ஒருவர் பல ஆதாரங்களை காட்டி சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?. சரி தமிழக அளவில் வருவோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கப்பட்ட நாட்களுக்கு முன்பே இறந்துவிட்டார். அவரது கால்கள் வெட்டி எடுக்கப்பட்ட நிலையில்தான் அவர் புதைக்கப்பட்டார் என்று ஒருவர் பல ஆதாரங்களோடு சொன்னால் அவர் சொல்லுவதை நம்புவீர்களா? சிலர் மேல் சொன்ன எல்லாவற்றையும் நம்புவார்கள். சிலர் ஒன்றிரண்டை, சிலர் எதையுமே நம்பமாட்டார்கள். மேல் சொன்னவை எல்லாம் சதி ஆலோசனை கோட்பாடுகள்(conspiracy theories) என்று சொல்லப்படும் மறைக்கப்பட்ட/திரிக்கப்பட்ட ரகசிய உண்மைகள் என்று பலராலும் நம்பப்படும்/பரப்பப்படும் கோட்பாடுகளுக்கான உதாரணங்கள். இவையில்லாமல் பல்லி வம்ச அரசாட்சி. வேற்றுகிரக வாசிகளின் வந்து போவது, ஸ்டான்லி குப்பிரிக் நிலவு கால்பதிப்பு என்று எண்ணற்ற அதிரி புதிரியான சதியாலோசனை கோட்பாடுகள் காற்றில் உலவுகின்றன.
மற்ற விலங்குகளை விட மனிதர்கள் பலவகையிலும் மேம்பட்ட அறிவுத்திறனை பெற்றிருக்கிறார்கள். இந்த மேம்பட்ட அறிவுத்திறனே நம்மை உணவு சங்கிலியில் உயரத்தில் வைத்து மற்ற எல்லா ஜீவராசிகளையும் கட்டுப்படுத்தும் ஆற்றலை தந்திருக்கிறது. மனிதர்களின் அறிவுத்திறன் பல்வேறு தளங்களில், பல்வேறு நிலைகளில் இயங்குகிறது. அதில் நமக்கிருக்கும் ஒரு முக்கியமான திறன் நமக்கு கிடைக்கும் எக்கச்சக்கமான தரவுகளை, தகவல்களை பெற்று, பகுத்து, சேமித்து பின்பு தேவையான நேரங்களில் அதை பயன்படுத்திக்கொள்ளும் சாமர்த்தியம். நாம் ஒவ்வொரு நாளும் ஏராளமான தரவுகளை, அனுபவங்களை, உணர்வுகளை சேமிக்கிறோம். இவையெல்லாவற்றையும் மூளை பெற்று, பகுத்து, சேமிக்க, பின்பு அதை விரைவாக தேவையான பொழுது எடுத்து பயன்படுத்த, நாம் பரிணாமத்தில் ஒரு திறனை(skill) வளர்த்து கொண்டிருக்கிறோம். கணினி எப்படி எல்லா தரவுகளையும் 0 மற்றும் 1 என்று சேமித்து வைத்து பயன்படுத்துகிறதோ அதே போல நமது மூளையும் எல்லா தகவல்களையும் பெற்று ஒரு படிவமமாக(pattern) சேமித்து வைத்துக்கொள்கிறது. நாம் எல்லா தகவல்களையும் படிமமாகவே பெறுகிறோம், படிவமாகவே சேமித்து வைக்கிறோம். ஒரு படிவமாக இருக்கும் எல்லாமும் நமக்கு இனிமையாக ரசனைக்குரியதாக இருக்கிறது. உதாரணத்திற்கு ஏராளமான மரங்களுக்கிடையில் நீங்கள் சம்மந்தமில்லாமல் எங்கோ நின்றுகொண்டிருக்கும் ஒரு புகைப்படமும், புகைப்படத்தின் ஒரு ஓரத்தில் நீங்கள் நிற்க உங்களுக்கு பின் வரிசையாக மரங்களிருக்கும் வகையில் படம்பிடிக்கப்பட்ட ஒரு புகைப்படமும் இருந்தால் உங்களுக்கு எது பிடிக்கும்? இரண்டாவதுதான் இல்லையா? ஏனென்றால் இரண்டாவதில் ஒரு pattern இருக்கிறது. இரண்டாவதை உங்கள் மூளை அணுகுவது எளிதாகவும், இனிமையாகவும் இருக்கிறது. அதனால் உங்களுக்கு அது பிடித்து போகிறது. நீங்கள் கிட்டார் எடுத்து வாசித்தால் உங்களுக்கே மூளை வெடித்து சிதறுவதை போல கொடூரமாக உள்ளது. ஆனால் கிட்டார் தெரிந்தவர் வாசித்தால் இனிமையாக இருக்கிறது. ஏனென்றால் அவரது மீட்டலில் ஒரு pattern இருக்கிறது. ஒருவகையில் எல்லா கலை வடிவங்களும் செயற்கையாக படிவங்களை உருவாக்குபவையே.
இந்நிலையில் நிஜவாழ்வில், நிஜ உலகில் நடப்பவை எல்லாம் நமது மூளையின் புரிதலுக்கு உட்பட்டேதான் நடக்குமா? நம்மால் எல்லா தரவுகளையும், தகவல்களையும் ஒரு படிவமாக்க முடியுமா? ஒரு படிவத்திற்குள் அடங்காத ஒரு தகவலை, ஒரு நிகழ்வை, ஒரு உணர்ச்சியை நமது மூளை எப்படி அணுகும்? தெரியாத விஷயங்களை அறிவியல் x என்று பெயரிட்டு தனக்கு தெரியாது என்று அறிவித்துவிடுகிறது. ஆனால் அதுபோன்ற இயல்பு நமது மூளைக்கு கிடையாது. வானில் அது பாட்டுக்கு போய் கொண்டிருக்கும் மேகங்களை பார்த்து ஆடு மாடுகளை வரைய கூடியது நமது மனம்/மூளை. அதாவது படிவமற்ற மேகங்களை நமக்கு தெரிந்த உருவங்கள் மூலமாக ஒரு படிவமாக்கி உள்வாங்கி கொள்ளும் திறன்/இயல்பு நமக்கிருக்கிறது. இதன் மூலமாகவே நாம் கருணையற்ற. சமரசமற்ற காலத்தின் போக்கை நாம் கொஞ்சமாவது தைரியத்தோடு அணுகுகிறோம். அதாவது எல்லாமும் எனது கட்டுப்பாட்டில், எனது புரிதலுக்குள் தான் இருக்கிறது என்னும் நம்பிக்கையில்.
இந்த நம்பிக்கை சவாலுக்கு உள்ளாகும்போது, இந்த நம்பிக்கை சோதனைக்கு உட்படும்போது என்னாகும்? நமது மூளை செயற்கையான படிவங்களை உருவாக்கி அந்த நம்பிக்கையை தற்காத்துக்கொள்ளும். சூரியகிரகணம் என்பது மலைபாம்பு சூரியனை விழுங்குவது என்னும் புரிதலை முன்வைத்து ஆதி கால மனிதர்கள் கிரகனத்தை குறித்து ஒரு படிவத்தை உருவாக்கியது இதன் அடிப்படையிலேயே. சதியாலோசனை கோட்பாடுகளை நம்புவர்களை இதன் பின்னணியிதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. தங்களது புரிதலுக்கு அப்பாற்பட்ட, தங்களது அறிவிற்கு அப்பாற்பட்ட, தங்களது நம்பிக்கைகளுக்கு எதிரான ஒரு தரவையோ, ஆதாரத்தையோ, சம்பவத்தையோ எதிர்கொள்ளும் போது அவர்களது மனம் தங்களுக்கு தெரிந்த தகவல்களை வைத்து ஒரு படிவத்தை உருவாக்கிக்கொள்கிறது. அதாவது மலைபாம்பு சந்திரனை விழுங்கிவிடுகிறது.
சரி. கழுதை மேய்க்கிற பையனுக்கு இவளோ அறிவா என்று பொறாமை படாமல் நாம் விலகி செல்லலாம் என்றால் அதில் ஒரு சிக்கலிருக்கிறது. அதாவது mgr தங்கம் பஸ்பம் சாப்பிடுவாப்ல. அவரு அதுலதான் எதோ கோளாறாகி செத்தாப்ல என்னும் ரீதியில் பேசும் சதியாலோசனை கோட்பாளர்களிடம் அப்படியா ஜி கேக்கவே அதிர்ச்சியா இருக்கு..டீக்கு காசு குடுத்துடுங்க கிளம்பலாம் என்று அவர்களை கையாளலாம். அவர்கள் குழந்தைகள். சுவாரஸ்யமானவர்கள். ஆனால் climate change என்பது பொய், நோய் தடுப்பூசி போடவேபடாது, actually பெரியாரே ஒரு இலுமினாட்டி guy என்னும் ரீதியில் conspiracy theoryஐ நம்பும், பரப்பும் ஆட்களிடம் நாம் கவனமாக இருக்கவேண்டும். ஏன் என்றால் அவர்களால் உயிரிழப்புகள் தொடங்கி சமூக குழப்பம் முதல் பல ஆபத்தான சிக்கல்கள் உருவாகும். இந்நிலையில்தான் நாம் அவர்களை புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும். சதி ஆலோசனை கோட்பாளர்களை பற்றி மனோதத்துவ நிபுணர்கள் உலகம் முழுவதும் தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். பாரி சாலன் என்பவர் தனி ஆள் கிடையாது. தோப்பு.
தொடரும்
ப. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர்.
மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!
சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது. வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!
குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..
பாரிசாலன் போன்றவன்தான் நானும். யாராவது எதாவது எங்காவது சொல்லி விட்டாலும் எமாறும் ஏமாளிதான். இந்தக் கட்டுரையில் எழுதப்பட்டவை எல்லாமே வேறு யாரும் சொல்லாத எழுதாத பேசாத உங்கள் சொந்த மூளையில் உருவான அசல் சரக்கா ? உலக சைக்கோ லொஜி எல்லாவற்றையும் குறிப்பிட்டு வாசகரை சைக்கோ ஆக்க முனையும் உங்கள் திறமை நிச்சயம் பாராட்டுக்கு உரியது. அரசியல் விமர்சனம் என்றால் இப்படித்தான் இருக்கும் போலும்.
LikeLike