உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை – ஆதவன் தீட்சண்யா

ஆதவன் தீட்சண்யா

ஆதவன் தீட்சண்யா

தலித்துகள் மற்றும் பழங்குடிகள் மீது வன்கொடுமைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றன. இவற்றில் பலவும் வெளியுலகத்தின் கவனத்திற்கு வருவதேயில்லை. நிகழும் வன்கொடுமைகளில் சிறுவீதமே வழக்காக பதிவு செய்யப்படுகின்றன. அவ்வாறு வழக்கு பதிவதற்கே பெரும் போராட்டங்களை  நடத்த வேண்டியுள்ளது.  அப்போதும் கூட காவல்துறை, புகார் செய்யும் பாதிக்கப்பட்டவர்களை பணிய வைப்பதற்காக அவர்கள் மீதும்  எதிர் வழக்குகளை  பொய்யாக புனைந்து புகார்களை திரும்பப் பெற வைத்து வன்கொடுமையருக்கு ஆதரவாகவே நடந்துகொள்கிறது. வெளிப்படையான சாதிய வன்கொடுமைகள் கூட எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுவதில்லை. களத்திலும் சட்டரீதியாகவும் போராடினால் மட்டுமே இந்தச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்படுகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டில் எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 15.4% அளவுக்கே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய குற்றப்பதிவு ஆவணகத்தின் வருடாந்திர அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பொதுவான பிற வழக்குகளில் 33.3% அளவுக்கு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆனால் எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 15.4% அளவுக்கே தண்டனை பெறுகின்றனர். சட்டத்தினால் விடுவிக்கப்பட்ட மற்ற அனைவரும் குற்றமற்றவர்களா?

எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகள் பெரும்பாலானவற்றில் குற்றவாளிகள் திட்டமிட்டே தப்புவிக்கப்படுகிறார்கள். சாதியர்கள்  சுண்டூரு, லஷ்மண்பூர் பாத, பதானிதோலா போன்ற இடங்களில் கூட்டுக்கொலைகளை நிகழ்த்தி தலித்துகளை அழித்தொழித்த வன்கொடுமை கண்டு மனித உணர்வுள்ள எவருமே அதிர்ச்சியுற்றனர். ஆனாலும் இவ்வழக்குகளில் குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். தலித்துகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், ஆனால் கொலையாளிகள் விடுவிக்கப்படுகிறார்கள். எனில் அவர்கள் கொலையுண்டதற்கு யார் பொறுப்பேற்பது என்பதில் நீதிமன்றம் கவனம் செலுத்தவில்லை.     இவற்றுக்கெல்லாம் முன் நடந்த வெண்மணி படுகொலையின் பிரதான குற்றவாளி, சொந்தமாக கார் வைத்திருப்பதால் அவர் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று கனம் கோர்ட்டாரால் விடுவிக்கப்பட்ட கேவலம், நீதித்துறைக்கு தீராத களங்கத்தைக் கொண்டு வந்து சேர்த்தது.

விசாரணையிலும் சட்ட அமலாக்கத்திலும் தொடர்புடையவர்களிடம் புரையோடியுள்ள சாதியப் பிடிமானம், எஸ்.சி/ எஸ்.டி.கள் மீதான வெறுப்பு, மெத்தனப்போக்கு, லஞ்சம், நியாயத்தை நிலைநிறுத்துவதில் அக்கறையின்மை உள்ளிட்ட காரணங்களால் வன்கொடுமையர்கள் தொடர்ந்து தப்பித்துவருகின்றனர். வெளிப்படையாக வன்கொடுமையை நிகழ்த்திவிட்டு காவல்துறை மற்றும் சட்டத்தின் துணையோடு வெளியே வரும் இவர்கள், நிரபராதிகளான – அப்பாவிகளான தாங்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தால் பழிவாங்கப்பட்டுவிட்டதாக பசப்புகின்றனர். அந்தச் சட்டமே நீக்கப்பட வேண்டும் என்று கோருமளவுக்கும் துணிகின்றனர். பொதுவான குற்ற வழக்குகளில் 66.7% வழக்குகளில் குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதாலேயே அந்த வழக்குகள் பொய்யானவை என்றாகிவிடுமா? அல்லது குற்றவியல் தண்டனைச் சட்டங்கள் அவசியமில்லை என்றாகிவிடுமா?

2006 ஆம் ஆண்டுக்கும் 2017 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட பத்தாண்டுகளில் இந்த வன்கொடுமைகள் 66% அதிகரித்திருக்கின்றன. சராசரியாக 18 நிமிடங்களுக்கு ஒரு வன்கொடுமை என்பது தற்போது 15 நிமிடங்களுக்கு ஒரு வன்கொடுமை என்றாகியுள்ளது. எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டம் அமலுக்கு வந்து கால்நூற்றாண்டு காலம் ஆன பிறகும்கூட, அச்சட்டத்தை அதன் மெய்ப்பொருளில் அமலாக்குவதில் உள்ள இடர்ப்பாடுகள் களையப்படாததால் தான் நிலைமை இவ்வளவு மோசமாகி வருகிறது என்று நாட்டின் நீதிபரிபாலன அமைப்புகள் உணரவில்லை. மாவட்ட அளவிலான தனி நீதிமன்றம், நிவாரணம் மற்றும் மறுவாழ்வை உறுதிப்படுத்தும் ஏற்பாடுகள் செய்யப்படாமல் இருப்பதற்காக எந்த நீதிமானும் துள்ளவில்லை துடிக்கவுமில்லை. மனித உரிமைக் களத்தில் தலித்துகளும் ஜனநாயக மனம் கொண்ட இதரர்களும் நடத்திய இடையறாதப் போராட்டத்தின் விளைவாக 2015ல் இச்சட்டத்திற்கு பல்வேறு திருத்தங்களைக் கொண்டுவர வேண்டிய நிலை உருவானது. வன்கொடுமைகளை வரையறுப்பது, புகார் பதிவது, விசாரணை முறை, குற்றச்சாட்டை நிரூபிக்கும் கடமையை நிறைவேற்றுவதில் காவல், நீதி மற்றும் தொடர்புடைய இதர அரசுத்துறைகளின் பொறுப்பு, தீர்ப்பின் அமலாக்கம், நிவாரணம், மறுவாழ்வு, தண்டனை மற்றும் அபராதம் ஆகிய அம்சங்களில் முந்தையச் சட்டத்தோடு ஒப்பிடுகையில் இந்த திருத்தச் சட்டம் முன்னேற்றகரமானது.

சட்டம் எவ்வளவு வலுவாக இருந்தாலும் அதன் செல்லுபடித்தன்மையானது அதை நடைமுறைப்படுத்துவதில் தான் அடங்கியிருக்கிறது. இவ்விசயத்தில் நீதிமன்றத்தின் தலையீடும் கண்காணிப்பும் அவசியமாகிறது. சாதிய வன்கொடுமையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதையும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு நீதிமன்றங்களுக்கு உண்டு. ஆனால் பல்வேறு விசயங்களில் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரிக்கும் நீதிமன்றங்கள், ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கும் ஒருமுறை தலித்துகள் மீது நடக்கும் சாதிய வன்கொடுமை தொடர்பாக எத்தனை வழக்குகளை தாமாக முன்வந்து பதிந்துள்ளன என்று தேடினால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. தாமாக முன்வராவிட்டாலும் பரவாயில்லை, பெரும் போராட்டத்திற்குப் பிறகு விசாரணைக்கு வரும் வன்கொடுமை வழக்குகளையாவது நீதியின் கண்ணால் பார்த்து தீர்ப்பு வழங்கப்படுமா என்றால் அதுவும் இல்லை.

வழக்குடன் தொடர்பில்லாத விசயங்களைப் பேசுவதும், அவ்வாறான அபத்தங்களை தீர்ப்புகளின் பகுதியாக்குவதும் கூட சிலநேரங்களில் நீதிமன்றங்களின் வரம்பற்ற அதிகாரத்தின் வன்முறையாகி வருகிறது. டாக்டர் சுபாஷ் காசிநாத் மகாஜன் எதிர் மகாராஷ்ட்ரா அரசு என்கிற வழக்கின் மேல் முறையீட்டு மனு (CRIMINAL APPEAL NO.416 OF 2018 (Arising out of Special Leave Petition (Crl.)No.5661 of 2017) மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இதற்கு பொருத்தமான உதாரணமாக இருக்கமுடியும்.

பாஸ்கர் கர்பாரி கெய்க்வாட் என்பவர், மகாராஷ்ட்ர மாநிலம் கராட் என்னுமிடத்தில் உள்ள அரசு பார்மஸி கல்லூரியின் ஸ்டோர் கீப்பர். இவர் தனது மேலதிகாரிகளான சதீஷ் பால்கிருஷ்ண பிஷே, கிஷோர் பாலகிருஷ்ண புராடே ஆகிய இருவரும் தனது பணிப்பதிவேட்டில் எதிர்மறைக் குறிப்புகளை பதிவு செய்திருப்பதாகவும் இதற்கு சாதிய பாரபட்சமே காரணம் என்றும் கராட் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச்சட்டம் (1989)ன் கீழ் புகார் ஒன்றை 2009ல் பதிவு செய்திருக்கிறார் (Cr. NO. 3122/09 u/s 3(1)9, 3(2)(7)6 of S.C. & S.T. (Preention of Atrocities) Act). புகாரை விசாரித்து குற்றச்சாட்டில் முகாந்திரங்கள் இருப்பதை கண்டறியும் காவல் துணை கண்காணிப்பாளர், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் முதல்நிலை அதிகாரிகளாக உள்ளபடியால் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவ்விருவரின் துறைக்கு பொறுப்பு இயக்குநரான சுபாஷ் காசிநாத் மகாஜன் என்பவரிடம் அனுமதி கோரி கடிதம் எழுதியிருக்கிறார். இவ்வாறான அனுமதியைக் கொடுக்கவோ மறுக்கவோ மகாஜனுக்கு அதிகாரம் இல்லை. அவ்வனுமதியை தரும் அதிகாரம் மும்பையிலுள்ள தலைமை அலுவலகத்திற்கே உண்டு. இவையெல்லாம் தெரிந்திருந்தும் இந்த மகாஜன் அனுமதியை மறுத்திருக்கிறார். தனது அதிகாரவரம்பை மீறி அனுமதியை மறுத்ததன் மூலம் மகாஜன் குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்றியதாக குற்றம்சாட்டி அவர் மீதும் பாஸ்கர் கர்பாரி கெய்க்வாட் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிகிறார். இவ்வழக்கு பல்வேறு நிலைகளைத் தாண்டி உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடாக வந்திருக்கிறது. இதன்மீதான தீர்ப்பினை நேற்று (20.3.2018) உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது

குறிப்பிட்ட இவ்வழக்கின் மீதான தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றமானது, எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோரும் புகார்களை எவ்வாறு அணுக வேண்டும், அவற்றின் உண்மைத்தன்மையை கண்டறிவதன் அவசியம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரசு/ தனியார் நிறுவன ஊழியர்கள் எனில் கைது செய்வதற்கு முன் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் மூலம் பழிவாங்கப்படுவதிலிருந்து அப்பாவிகளை (?) பாதுகாப்பது, அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை உயர்த்திப் பிடிப்பது என்று பலதையும் பேசியுள்ளது.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் புகார்களின் பேரில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன் அந்தப் புகார் நம்பகமானது தானா என்று தொடக்கநிலை விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அரசு / தனியார் ஊழியர்கள் கைது செய்யப்படுவதற்கு அவரவர் நிர்வாகத் தலைமையிடமிருந்து முன்னனுமதி பெற வேண்டும்.

இச்சட்டத்தின் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கப்படக்கூடாது என்கிற தற்போதைய நிலை கைவிடப்பட வேண்டும்.

இப்படியாக புதிய வழிகாட்டுதல் பலவற்றை அறிவித்த பின்னும் கூட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் மீதான ஆத்திரம் அடங்காமல், இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு அப்பாவிகள் பழிவாங்கப்படுவதாகவும் சமூகத்தை பிளவுபடுத்துவதாகவும் எஸ்.சி, எஸ்.டி.கள் மீது உச்ச நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. 2016 ஆம் ஆண்டில் இச்சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளில் 5347 வழக்குகள் பொய்யானவை என்று கண்டறியப்பட்ட விவரத்தை இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக அது முன்வைக்கிறது. ஆனால் அதே 2016ல் தலித்துகளுக்கு எதிராக 40801 குற்ற வழக்குகள் பதியப்பட்டிருப்பதை உச்ச நீதிமன்றம் வசதியாக மறந்துவிட்டிருக்கிறது. இந்த 5347 வழக்குகள் பொய்யானவை என்கிற நிலையை உருவாக்கிட வன்கொடுமையர்களும் காவல் துறையினரும் என்னென்ன தகிடுதத்தங்களை செய்திருப்பார்கள் என்பதை நாடறியும், பாவம் நமது நீதிமன்றங்கள் சமூக நடப்புகளை அறியாத பாமரத்தனத்தில் மூழ்கிக் கிடக்கின்றன போலும்.

தவறான தீர்ப்புகளை வழங்கியதற்காக இதுவரை எந்த நீதிமன்றமும் கலைக்கப்படாத போது, ஒரு சட்டத்தை சிலர் தவறாகப் பயன்படுத்துவதாலேயே அந்தச் சட்டத்தை ஏன் நீக்க வேண்டும் அல்லது நீர்த்துபோகச் செய்ய வேண்டும்? பல்வேறு ஆள்தூக்கிச் சட்டங்களின் பேரால் பிடித்துச் செல்லப்பட்டு முதல் தகவல் அறிக்கைகூட பதியப்படாமல், விசாரணை ஏதுமின்றி ஆண்டுக்கணக்கில் சட்டவிரோத காவலிலும் சிறைகளிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். என்கவுன்டர் என்கிற பெயரால் அப்பாவிகள் பலரும் அன்றாடம் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். அதுபற்றி விசாரிக்கப் புகும் நேர்மையான நீதிபதிகள் மர்மமாக சாகிறார்கள். ஆனாலும் நமது உச்ச நீதிமன்றத்தின் கவலை, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினால் எந்தவொரு அப்பாவியும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பது மட்டும் தான். இது   நீதியை பாதுகாப்பதற்கான தீர்ப்பு அல்ல, சாதியைக் காப்பதற்கான தீர்ப்பு, சாதிய ஒடுக்குமுறையை காப்பதற்கான தீர்ப்பு.

மட்டற்ற சுதந்திரத்தோடு சாதிய ஒடுக்குமுறைகளை நிகழ்த்துவதற்கு தடையாக இருக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்கவேண்டும் அல்லது அதன் கடுமையை குறைக்கும் படியாக திருத்தப்பட வேண்டும் என்கிற ஆதிக்கச்சாதியினரின் கோரிக்கையை இத்தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றம் நிறைவேற்றிக் கொடுத்துள்ளது. வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையும் தனித்தன்மையையும் அழித்தொழிக்கும் ஆதிக்கச்சாதியினரின் உட்கிடக்கையைத் தான் உச்ச நீதிமன்றம் சட்டமொழியில் வெளிப்படுத்தி இருக்கிறதோ என ஐயுற வேண்டியுள்ளது. தலித்துகளுக்கும் பழங்குடிகளுக்கும் உள்ள குறைந்தபட்ச சட்டப் பாதுகாப்பையும் அவர்கள் மீதே பழிதூற்றி பறிப்பது எவ்வகையில் நீதியாகும்? நீதிமன்றங்களை குடிமக்கள் அவமதிப்பது தவறென்றால், குடிமக்களை நீதிமன்றங்கள் அவமதிப்பது மட்டும் எப்படி சரியாகும்? நீதிமன்றங்களால் தீர்ப்பைத்தான் வழங்க முடியுமேயன்றி அவை ஒருபோதும் நீதியை வழங்கிவிடப் போவதில்லை என்கிற உண்மை இத்தீர்ப்பினால் மேலும் துலக்கமாகியுள்ளது. வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை அதன் மூலபலத்தோடு மீட்டெடுத்திட மத்திய அரசானது இத்தீர்ப்பின் மீது மறுசீராய்வினைக் கோர வேண்டும். ஆனால் அப்படியொரு மத்திய அரசு நமக்கு வாய்த்திருக்கிறதா என்பதுதான் கேள்வி.

ஆதவன் தீட்சண்யா, எழுத்தாளர். ‘புதுவிசை’ இதழின் ஆசிரியர்.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும் நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம். இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

2 thoughts on “உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை – ஆதவன் தீட்சண்யா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.