அருண் நெடுஞ்செழியன்

ராம் ராஜ்ய ரத யாத்திரையின் இலக்கு, மதஅடிப்படைவாதத்தின் பெயரிலான பொய் உணர்வை மக்களிடத்தில் மேற்கொள்வது. மக்கள் சமுதாயத்தில் இந்து தேசியம் குறித்தான ஒரு பொய் உணர்வை உருவாக்குவதற்கான இந்துத்துவ அடிப்படைவாதிகளில் பல்வேறு டாக்டிசில் இதுவும் ஒன்று.
பல்வேறு காலகாட்டங்களில் பல்வேறு வழி முறைகளில் நீண்ட கால தொடர்ச்சியுடன் இம்முயற்சியில் இவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். குடிமைச் சமுதாயத்தில், இப்பொய் உணர்வை உருவாக்கி விட்டால், அரசியல் அதிகாரம் என்பது தானாக கையில் விழுந்த வெண்ணையாகிவிடும்.
ஒட்டுமொத்த குடிமைச் சமுதாயத்தையும் இந்து தேசிய உணர்வு நிலைக்கு ஆட்படுத்தல் எனும் ஹெர்குலிஸ் டாஸ்க்கை தொண்ணூறு ஆண்டுகளுக்கு மேலாக செங்கல் செங்கலாக பரிசோதனை ரீதியாக நடைமுறைப் படுத்த முயன்று தோல்வியுற்று பின் மீண்டும் முயன்று வருவதுதான் ஆர் எஸ் எஸ் அமைப்பு.
உலகமய சூழலில், ராம ராஜ்ஜிய இந்து தேசியம் ஒரு குப்பைக் கோட்பாடாக தெரிந்தாலும் அதை தொண்ணூறு ஆண்டுகளாக நடைமுறையில் பரிசோதிக்கிற அமைப்பு ஆர். எஸ். எஸ்.
ஆர். எஸ். எஸ். இயக்கம் ஒரு நடைமுறை ஆபத்து.இந்த ஆபத்தை நாம் நடைமுறையில்தான் தீர்க்க முடியும்தீர்க்கப் படவேண்டும்.தனது அரசியல் முன்னணியான பாஜகவின் அரசியல் அதிகார வழி என்பது அதற்கு கூடுதல் அனுகூலம். நாடாளுமன்ற வரம்பிற்குள்ளும் வெளியும் தனது கருத்தியலை நடைமுறையாக்க முனைகிற அதன் அரசியலை, நடைமுறையால் மட்டுமே முறியடிக்க முடியும்.
அவ்வகையில் இந்துத்துவ அடிப்படைவாதிகளின்வெற்றிகர டாக்டீசான ரத யாத்திரைக்கு எதிராக எழுச்சிகர வகையில், நடைமுறையிலான எதிர்ப்பை/ சண்டையை நடத்திய தமிழக முன்னணி இயக்கங்களின் எதிர்ப்பரசியல், அவர்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று.
சமுதாயத்தில் பொய் உணர்வை விதைக்கிற இலக்கில் வந்தவர்கள், தமிழகத்தில் அறுத்தது என்னவோ அதற்கு நேர் மாறானது. அதாவது ராம் ராஜ்யத்தின் நோக்கமே ஜனநாயக விரோதமானது, சமூக நீதிக்கு எதிரானது என்ற உண்மை மிக வேகமாக அம்பலமானது. இந்துத்துவ அடிப்படைவாதிகளின் ரத யாத்திரை நிகழ்வானது தமிழகத்தின் கேலிக் குரிய வகையில் மாற்றப்பட்டு விட்டது.
ரத யாத்திரைக்கு எதிராக எதிர்வினையாற்றி இந்நிகழ்வை பிரபலப்படுத்திவிட்டதாக ஆளும்கட்சி முதலாக பல்வேறு சமூக ஜனநாயகவாதிகள் வரை விமர்சிக்கின்றனர்.
விஷயம் என்னவென்றால், இந்துத்துவ அடிப்படைவாத அமைப்புகளின் ஒவ்வொரு நடைமுறை முயற்சியையும் எவ்வாறு முறியடிப்பது என்பதை தெளிவாக்கிக் கொள்வதற்கு இவ்வாறான எதிர்ப்பரசியல் அனுபவத்தை வழங்குகிறது.
அவர்களும் இத்தோடு ஓயப்போவதில்லை. தொண்ணூறு ஆண்டுகளாக அமைப்பின் நடைமுறை அரசியலை ஒரே அடியில் வீழ்த்துகிற வலிமை நமக்கு ஒரே நாளில் வானத்தில் இருந்து இறங்கி வராது. ஒவ்வொரு நடைமுறைப் போராட்டமும் ஒவ்வொரு படிப்பனை!
காவி பயங்கரவாத எதிர்ப்பு கூட்டமைப்பின் திட்டமிடல் ஒருங்கிணைப்பிலான ரத யாத்திரை எதிர்ப்பு போராட்டத்தில், ஆளும்கட்சி மற்றும் பாஜக நீங்கலாக தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகளும் இயக்கங்களும் ரத யாத்திரைக்கு எதிராக திரண்ட அரசியல் நிகழ்வு, இந்துத்துவ அஜெண்டாவிற்கு மிகப் பெரும் அரசியல் தோல்வி.
இந்துத்துவ அடிப்படைவாதிகளின் டாக்டீசை, அதற்கெதிராகவே திருப்பியதுதான் நமது வெற்றி!
அருண் நெடுஞ்செழியன், எழுத்தாளர்; அரசியல் செயல்பாட்டாளர்.