ஆர். ராமமூர்த்தி
சுடானுக்கு இரங்கல் தெரிவிக்குமளவு நமக்கு தகுதி இருப்பதாய் தெரியவில்லை….
இந்த உலக காடுகள் தினத்தில் நாம் விட்டுவைத்த எஞ்சியிருந்த ஒரேயொரு ஒற்றை வெள்ளை காண்டாமிருகமும் தனது இணைகளான இரண்டு பெண் காண்டாமிருகங்களான நஜின், ஃபட்டு இருவரையும் கென்யாவில் விட்டுவிட்டு இந்த உலகிலிருந்து மீண்டது….
இந்தியாவில் அசாம் பகுதியில் இருப்பது இந்திய காண்டாமிருகம். இது தவிர சுமத்ரா காண்டா மிருகம், ஜாவா காண்டா மிருகம், கருப்பு காண்டா மிருகம் மற்றும் இந்த வெள்ளை காண்டாமிருகம் என ஐந்து வகைகள் உண்டு இவற்றில் நமது இந்தியக் காண்டா மிருகமும் கொம்புகளுக்காக வெகுவாக அழிக்கப்பட்டு விட்டன.வெள்ளை காண்டாமிருகத்தில் எஞ்சியிருந்த கடைசி ஆண் காண்டா மிருகம் இந்த சுடான் மட்டுமே.இது கூட கொள்ளையர்களுக்குப் பயந்து ஆயுதமேந்திய காவலர்களால் மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்பட்டு வந்தது. என்றால் உலகில் மனிதர்கள் இயற்கைக்கு எதிராக எப்படியெல்லாம் கொடுமையாக இருக்கிறார்கள் என யோசியுங்கள்…
இதன் இறப்புகூட நமது ஆணவத்திற்கு விடப்பட்டிருக்கும் இறுதி எச்சரிக்கை என்பதை புரிந்து நடந்து கொள்ளவில்லை என்றால் பாதிப்பென்னவோ முழுமையாக நமக்குத்தான்…
நமது பேராசையால் உலகிலுள்ள உயிரினங்களை ஒவ்வொன்றாக இழந்துவருவது பெருமைக்குரிய விசயமா ? சரியாகச் சொன்னால் இழக்கப்பட வில்லை அழிக்கப் பட்டு கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்…
இந்த பூமியும் பூமியில் உள்ள அனைத்தும் நமக்கே நமக்கு மட்டும்தான் சொந்தம் என்கிற நினைப்பை கொஞ்சம் கழற்றி வைத்துவிட்டு சிந்தித்தால்தான், எதிர்கால நமது சந்ததிகள் ஓரளவாவது நிம்மதியாக வாழ முடியும்….
சுடான்கள் மட்டுமல்ல நம்ம ஊரில் வேட்டையாடப்பட்டு, கள்ளச் சந்தையில் விற்கப்படும் ஒவ்வொரு உயிரினத்தின் அழிவிற்கும் நாம் சாட்சியாக இருப்பதுகூட நமது அழிவிற்கு நாமே குழிதோண்டும் செயல்தான்….
அனைவருக்கும் தெரிந்த வாசகம்தான் ஆனால் இன்றைக்கு ஏனோ நினைவுபடுத்த மனசு நினைக்கிறது…
“மனிதர்களற்ற பூமியில் மற்ற உயிரினங்கள் சுகமாக வாழ்ந்துவிடும்.ஆனால் மற்ற உயிரினங்களற்ற பூமியில் மனிதர்களால் ஒருநாள்கூட வாழ்ந்திட முடியாது”
-மற்ற உயிரினங்களில் ஒருவகையை இன்று கிட்டத்தட்ட முழுமையாக இழந்துவிட்டோமே!….
இன்று “உலக காடுகள்தினம்”-இதுமாதிரி நாட்களை மட்டுமல்ல தினம்தோறும் காடுகள் தினமாக பெயரளவில் அனுசரிக்காமல் மனதளவில் உணர்ந்து கடைபிடிக்கும் காலத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன்.
ஆர். ராமமூர்த்தி, சூழலியல் செயல்பாட்டாளர்.

சுதந்திர ஊடகத்துக்கு ஆதரவளியுங்கள்
த டைம்ஸ் தமிழ் சார்பற்று செயல்படும் சுதந்திர ஊடகம். நீங்கள் தரும் குறைந்தபட்ச நன்கொடை எங்களை நகர்த்தும்.
$1.00