பெரியார் சிலை உடைக்கப்பட்டால்…

ஆழி. செந்தில்நாதன்

ஆழி செந்தில்நாதன்

ஓரிடத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டால், உடனடியாக அதைச் செப்பனிட்டுவிடாதீர்கள். புதிதாக வண்ணம்பூசி மறுதிறப்புவிழா செய்துவிடாதீர்கள்.

உடைக்கப்பட்ட அந்த பெரியார் சிலை அருகே ஒரு பெரிய பேனர் வையுங்கள். பெரியார் சிலை யாரால், ஏன் உடைக்கப்பட்டது என்பதை டாப் 10 தகவல்கள் பாணியில் எழுதிவையுங்கள், அதைத் துண்டறிக்கையாக அடித்து அந்த ஊர் முழுக்க கொடுங்கள். குறிப்பாக பாஜக, இந்து முன்னணிக்காரர்கள் வீடுகளுக்கு மறக்காமல் கொடுங்கள். பல இடங்களில் 95 சதவீத சங்கிகள் பார்ப்பனரல்லாதோராகவே இருப்பார்கள். அவர்கள் வீடுகளுக்குச் சென்று எத்தகைய துரோகத்தை அவர்கள் செய்கிறார்கள் என்பதை விளக்குங்கள்.

ஒரு மாதத்துக்கு அந்த ஊரில் பெரியார் பற்றி பேசுங்கள். ஆனால் பெரியாரை கடவுளாக ஆக்கிப் பேசாதீர்கள். பெரியார் இல்லையென்றால் நீ மாடு மேய்த்திருப்பாய் என்கிற ரீதியில் பேசாமல், சமூக நீதி கோட்பாட்டை அறிமுகம் செய்யுங்கள். அந்தக் கோட்பாட்டை பெரும் ஆயுதமாக ஆக்கி தமிழர்களுக்கு பெரியார் எத்தகைய நன்மையைச் செய்தார் என்பதை விவரியுங்கள். பெரியார் உள்ளம் எதற்காக, யாருக்காக துடித்தது என்பதை நாடகம் போட்டு விளக்குங்கள். மீம்ஸ் போட்டு புரியவையுங்கள். வாட்ஸ்அப் குழு உருவாக்கிப் பரப்புங்கள்.

மக்களின் மத உணர்வுகளை கிண்டலடிப்பதைவிட்டுவிட்டு. மதம் எப்படி மனிதர்களின் தனிப்பட்ட விஷயம் என்பதைப் பற்றி பேசுங்கள், அதே சமயம் பெரியார் ஏன் பகுத்தறிவை பேச நேர்ந்தது என்பதைப் புரியவையுங்கள். அவர் ஏன் இந்துமத புராணங்களை விமர்சிக்கவேண்டியிருந்தது என்பதையெல்லாம் விளக்குங்கள்.

ஆரியம் ஏன் பெரியாரை எதிர்க்கிறது என்பதை, இட ஒதுக்கீடு, தமிழகப் பொருளாதார மேம்பாடு போன்றவை தொடர்பான புள்ளிவிவரங்களோடு அழகான கையேடுகளாக ஆக்கி பரப்புங்கள்.

சிலை உடைந்த நிலையிலேயே கொஞ்ச காலம் இருக்கட்டும். ஓரிரு மாதம் கழித்து ஊர்த்திருவிழாவாக ஒன்றுசேர்ந்து பெரியாரின் புதிய சிலையை பட்டப்பகலில் மீண்டும் நிறுவுங்கள்.

திருவிழாவுக்கு பெரிய பெரிய பெரியாரிஸ்ட்களைக் கூப்பிடாதீர்கள். உங்கள் ஊரில் ஏழ்மையான, ஒடுக்கப்பட்ட. பிற்படுத்தப்பட்ட குடும்பங்களிலிருந்து படித்து முன்னேறி பெரிய பொறுப்புகளுக்கு வந்திருக்கும் அதிகாரிகளை மருத்துவர்களை ஆசிரியர்களை வேறு துறை நிபுணர்களை அழைத்து அந்த சிலையை திறந்திடுங்கள். அனிதாக்களையும் கெளசல்யாக்களையும் அழைத்து விழா நடத்துங்கள்.

பெரியாரின் பக்தர்களாக நடந்துகொள்ளாதீர்கள். பெரியாரை எதிர்த்துக்கேள்விக்கேட்க முடியும், பெரியாரை விமர்சிக்கமுடியும் என்று மக்களிடம் சொல்லுங்கள். பெரியாரின் மீது, திராவிட இயக்கத்தின் மீது, திராவிடக் கட்சிகளின் மீது மக்கள் கேள்விகேட்டால், அப்படி கேள்விகேட்கும் சுதந்தரத்தை ஆமோதியுங்கள். அன்புடனும் கனிவுடனும் பதில் சொல்லுங்கள். ஒரு செருப்பை எடுத்து எறிந்தவனிடம் இன்னொரு செருப்பு எங்கே என்று கேட்ட பெரியாரைப் போல நடந்துகொள்ளுங்கள்.

பெரியார் சிலைகளை உடைப்பவர்களின் அரசியலை வெளிப்படுத்துங்கள். பார்ப்பன சூழ்ச்சியை, வடவர் ஏகாதிபத்தியத்தை, ஆரிய சிந்தனையை தமிழர்களாகிய நாம் ஏன் எதிர்க்கவேண்டும் என்பதை உதாரணங்களோடு மக்களிடம் எடுத்துச்செல்லுங்கள். நமது எதிரிகள் பெரியார் என்கிற பிம்பத்தை உடைக்க ஏன் இவ்வளவு துடிக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்துங்கள்.

இந்த மண் சமூக நீதிக்கும் தமிழ் அரசியலுக்குமான வேர்ப்பிடிப்புள்ள மண். அதனால்தான் இந்த மண்ணில் பெரியாரும் அண்ணாவும் வெற்றிபெறமுடிந்தது. அந்த மண் இன்னும் ஆரியத்துக்கு எதிரான தமிழ் மண்ணாகத்தான் இருக்கிறது. அதை உணர்ந்து செயல்படுங்கள்.

பெரியார் சிலைகள் உடைக்கப்பட்டால், ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பெரியாரின் கொள்கைகளை பரப்பும் வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

கடைசியாக ஒன்று – பெரியார் சிலையை உடைத்தவர்கள் மறந்துவிடமட்டும் செய்துவிடாதீர்கள். சட்டத்தின் துணைக்கொண்டு அல்லது நியாயத்தின் வழிநின்று, மீண்டும் அப்படி ஒரு செயலை செய்வதுகுறித்துச் சிந்தித்தால்கூட உடல் நடுங்கும் வண்ணம் பதிலடி கொடுங்கள். அவர்களை வெற்றிபெற விடவேமுடியாது. எவ்வளவு நாட்களானாலும் அவர்கள் தண்டனை பெற்றுத்தான் ஆகவேண்டும். சட்டத்தின் ஆட்சி செயல்படாவிட்டால் மக்களின் நீதி செயல்படும். செயல்பட்டே தீரும்.

இந்துத்துவர்கள் நம்மை வம்பிழுக்கின்றனர் என்றால் அதற்கு உடனடியாக பலியாகாதீர்கள். அவர்களது சீண்டலுக்கு சட்டென்று எதிர்வினையாற்றாதீர்கள். இப்போதும் அண்ணா வழி சரிதான் – கத்தியைத் தீட்டாதே, புத்தியைத் தீட்டு.

ஒருவேளை பெரியார் – அண்ணா வழி வேலைக்காகாமல் போனால்?

வரலாறு ஒரு தமிழரசனை / பிரபாகரனை நமக்கு அறிமுகப்படுத்தும். கூலாக இருங்கள்!

ஆழி. செந்தில்நாதன், பத்திரிகையாளர்; பதிப்பாளர். ஆழி. செந்தில்நாதன் தனது முகநூலில் எழுதிய பதிவு இது.

2 thoughts on “பெரியார் சிலை உடைக்கப்பட்டால்…

  1. ‘வரலாறு ஒரு தமிழரசனை / பிரபாகரனை நமக்கு அறிமுகப்படுத்தும். கூலாக இருங்கள்!’
    என்னே ஒரு ’நல்ல’ எண்ணம் :(. இவரைப் போன்றவர்கள் இருக்கும் போது வேறு எதிரிகளே தேவையில்லை.

    Like

  2. பெரியார் சிலையை உடைக்காமல், சிலைக்கு மாலைகள் போட்டு பெரியாரிசத்தை அழித்துவரும் பொறிக்கிகளுக்கு நல்ல பதில் கொடுத்துள்ளீர்கள்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.