அரசியலில் உதயநிதி; மூன்றாம் கலைஞரா? இரண்டாம் ஸ்டாலினா?

ஜி. கார்ல் மார்க்ஸ்

ஜி. கார்ல் மார்க்ஸ்

உதயதியின் அரசியல் பிரவேசம் திறந்து வைக்கப்பட்ட ரகசியமாக வெளியே தெரியத்தொடங்குகிறது. அல்லது திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலில் அடிப்படையில் அது அவ்வாறு நடக்க அனுமதிக்கப்படுகிறது. அரசியலை கூர்ந்து கவனிக்கும் யாருக்கும் இதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இருக்காது. அவரது சினிமா பிரவேசத்தின் போதே, “இது அவரை அரசியலுக்குக் கொண்டு வருவதன் முதல் கட்ட காய் நகர்த்தல்தான்” என்று கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டது.

திமுக அபிமானிகள் என்று பார்த்தால், அவர்கள் இதற்குப் பழகிவிட்டார்கள். அல்லது மிக விரைவாக பழகிக்கொள்வார்கள். இப்போதே கூட அவர்களுக்கு இங்கு சிக்கலாக இருப்பது, “அரசியல் தலைமைக்கு வாரிசுகள் வரலாமா…” என்பது போன்ற விழுமிய மற்றும் சித்தாந்த தயக்கங்கள் அல்ல. அவர்களால் முட்டுக் கொடுக்க முடியாத அளவுக்கு உதயநிதி அசடாக இருக்கிறார் என்பது மட்டுமே.

இரண்டு வார்த்தைகள் திராவிடம், கொஞ்சம் போராளி வேடம், சிறிய அளவிலான முற்போக்கு எத்தனம் என்று ஓரளவுக்கு உதயநிதி ஒப்பேற்றினால் கூட “டான்… டான்… பெத்தாபுரம் பெத்தன்னாவையே அண்ணன் கொன்னுட்டாரு…” என்று இந்நேரம் கண்மணிகள் அவரை அலேக்காகத் தூக்கியிருப்பார்கள். மேலும் இன்றைய பிரதான அரசியலில் இருப்பது ஓபிஎஸ், எடப்பாடி போன்ற போலிகள் என்பதால் கூடுதலாக உதயநிதியின் வரவு ஒன்றும் பொதுமக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கப் போவதில்லை. கட்சிக்குள்ளேயும் கூட, எல்லா மட்டங்களிலும் வாரிசுகள்தான் அரசியலை ஆக்கிரமித்திருக்கிறார்கள். இங்கு கட்சி என்பது திமுக மட்டுமல்ல. அதிமுகவிலும் இதுதான் நிலைமை. ஆக, உதயநிதியின் அரசியல் வருகை இங்கு என்ன விதமான சலனத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதில் நாம் கவனம் செலுத்தலாம்.

முதலாவது, அதிமுக பிரதிநிதிகள் தொடர்ந்து கோமாளிகளாகவே பொதுவெளியில் சித்தரிக்கப்படுவதால் மக்கள் முன்னால் அவர்களது மற்றும் அவர்களது வாரிசுகளின் கொடூர முகம் அம்பலமாவதில்லை. உதாரணத்துக்கு ஓபிஎஸ்ஸின் வாரிசுகள் யார், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தேடிப்பார்த்தால் உங்களுக்கு உண்மை ஓரளவு விளங்கும். ஒபிஎஸ்ஸை நாம் அடிமையாகவே பார்த்து பழகியிருப்பதால் அவரது ஊழல் முகம் அவ்வளவு வன்மையாக நமக்குப் பதிவதில்லை. ஆனால் திமுகவில் அதன் பிரதிநிதிகள் அறிவாளிகளாக தங்களைக் காட்டிக்கொள்வதால் – அது ஓரளவுக்கு உண்மையும் கூட – அதன் உப விளைவாக அவர்கள் கொடூரர்களாவும் வெளிப்பட நேர்ந்துவிடுகிறது.

இந்த அடிப்படை இடைவெளியைத்தான், அதாவது திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இருக்கும் அந்த பிரதான இடைவெளியைத்தான் உதயநிதியின் அரசியல் வருகை தகர்க்கப் போகிறது. திமுகவின் தலைமைக்கு வரும் முதல் அதிமுக ஆளாக அவர் இருப்பார். மேலும் அவரை அறிவாளியாக, அரசியலாளனாக முன்வைக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்து திமுக தன்னை வெளியேற்றிக்கொள்வதன் வழியாக கீழ் மட்ட அளவில் பெரிய ஆசுவாசத்தை தனது கட்சியினருக்கு வழங்கப் போகிறது. அந்த வகையில் அது அதிமுகவுக்கு மிகச் சரியான போட்டியாக களத்தில் நிற்கும். சம அளவிலான இரு சமரசவாத, ஊழல்வாதிகளின் தரப்பாக தமிழக அரசியல் தளம் சுருங்கும் நிலையை நோக்கி இது நகரும்.

இதன் அடுத்த கட்டமாக, அரசியல் நீக்கத்தின் வழி உதிரிகளை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக திராவிட அரசுகள் சீரழியும். தமிழகம் இதுவரை முன்னெடுத்துச் சென்ற எல்லா மாண்புகளையும் வெகு வேகமாக இழக்கும். இந்த கண்ணோட்டத்தில், இப்போது நடக்கும் எடப்பாடி அரசாங்கம் இதற்கு மிகச் சரியான உதாரணம்.

வரலாறு நெடுக, மாநிலங்களை ஒடுக்குகிற நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்குகிற போதெல்லாம் அதற்கு எதிரான உறுதியான குரலை தமிழகம் வெளிப்படுத்தி வந்திருக்கிறது. மட்டுமல்லாது, மற்ற மாநிலங்களின் நட்பு சக்திகளை விரைந்து ஒருங்கிணைத்து அதை அழுத்தமாகப் பிரயேகித்து மத்திய அரசை சமரசத்தை நோக்கி நகர்த்தியிருக்கிறது. இப்போதும் கூட இந்த வலதுசாரி அரசின் மூர்க்கத்துக்கு எதிராக சில மாநிலங்கள் வெளிப்படையாக எதிர்ப்பைத் தெரிவிக்கின்றன என்றால் அதற்குப் பின்னால் திமுக உருவாக்கி நிலைநிறுத்திய விழுமியங்களுக்கும் மாநில சுயாட்சி குறித்து அது சாத்தியப்படுத்திய கருத்துருவாக்கத்திற்கும் பங்கிருக்கிறது. கலைஞரின் பங்களிப்பு ஒரு உதாரணமாக அரசியல் வரலாற்றில் நிலைக்குமெனில் அது இதற்காகவே இருக்கும்.

ஆனால் இன்று என்ன நிலைமை? எல்லாவற்றையும் கொண்டு போய், மத்திய அரசின் காலடியில் வைக்கும் ஒரு லும்பன் அரசு நம்மை ஆள்கிறது. எந்த மாநிலங்கள் நமது முன்னெடுப்புகளை பிரமிப்புடன் பார்த்தனவோ, சிக்கலான நேரங்களில் நம்முடன் பெருமையாகக் கைகோர்த்தனவோ அவை நம்மை கேலி செய்கின்றன.

“தமிழ் நாட்டில் நடத்துவதைப் போன்ற ஒரு அரசியலை பிஜேபி ஆந்திராவில் நடத்த முடியாது” என்று மத்திய அரசிடம் சொல்வதன் மூலம் சந்திரபாபு நாயுடு தமிழக அரசை நோக்கிக் காறி உமிழ்கிறார். அது குறித்த எந்த வெட்கமும் இல்லாமல் மீதி இருக்கும் சொச்ச காலத்தில் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்று தலையைக் குனிந்தபடி நடக்கிறார்கள் இங்கிருக்கும் அரசியல் பொறுக்கிகள்.

விஹெச்பியின் ஊர்வலத்துக்கு ஊரடங்கு உத்தரவு போட்டு சிவப்புக் கம்பளம் விரிக்கிறார் எடப்பாடி. ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துவிட்டு ஒரு அடையாளப் போராட்டத்தை நடத்திவிட்டு அமைதியாகிறார் ஸ்டாலின்.

இப்படி ஒரு சீரழிந்த அரசியல் நிலைமைக்கு நாம் எங்ஙனம் வந்தடைந்தோம்? அங்குதான் எம்ஜியாரின் அரசியல் இருக்கிறது. ஜெயலலிதாவின் அரசியல் இருக்கிறது. இவர்கள் இருவரின் “அரசியலில் இருந்து அரசியலை நீக்குகிற அரசியலின் பெறுமதி” இருக்கிறது. அதற்கு நிகராக கருணாநிதியின் வாரிசு அரசியல் இருக்கிறது. அந்த வாரிசு அரசியல் தனது இறுதி இலக்காக அரசியலில் இருந்து அரசியலை நீக்கும் பண்பாகத் திரிந்து சமரசத்தையும் ஆட்சியில் நிலைப்பதையும் மட்டுமே இறுதி இலக்காகக் கொள்ளும் உதிரிகளின் அமைப்பாக மாற்றமடைகிறது. உதயநிதியின் அரசியல் வருகை அறிவிப்பது இந்த அபத்தத்தின் உச்சத்தைத்தான்.

சமகால இந்திய அரசியல் வலதுசாரி அடிப்படையிலான திரட்சியை நோக்கி நகர்கிறபோது அதை எதிர்கொள்கிற, சமத்துவத்தையும் சமூக நீதியையும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துகிற தன்னெழுச்சியாக உருவாகி வருகிற அரசியல் தலைமைதான் இங்கு தேவையே தவிர, எப்போதும் நிழலில் இளைப்பாறுகிற குரோட்டன்ஸ் தலைமைகள் அல்ல. சிறிய அழுத்தத்துக்கே பணிந்துவிடும் அரசியல் தலைமைகளாக அத்தகையவை மாறும் என்பதைத்தான் நாம் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

கருணாநிதி இல்லாத அரசியல் வெற்றிடம் அப்பட்டமாகத் தெரிகிறது. இதை நான் ஸ்டாலினின் தோல்வியாக உருவகிக்கவில்லை. இது அவரது தோல்வியே அல்ல. ஏனெனில் “உருவாக்கப்பட்ட அரசியல்வாதிகளின்” எல்லை என்பது ஒரு குறிப்பிட்ட அளவோடு முடிந்துவிடக்கூடியது. இப்போது நிகழ்வது அதுதான். ஸ்டாலின் வெளிப்படுத்திக்கொண்டிருப்பது தனது திறன்களின் போதாமையை. அவரால் அவ்வளவுதான் முடியும். இந்த வெளிச்சத்தில் வைத்து உதயநிதியைக் காண்கையில் கண்ணீர் வருகிறது.

அப்படியெனில் திமுகவுக்கு வேறு என்ன மாற்று வழி இருக்கிறது என்று கேட்கலாம். இருக்கிறது. அது ஸ்டாலின் தன்னை ஆட்சியதிகாரத்தில் இருந்து வெளியே வைத்துக்கொள்ள முன்வருவதுதான்.மேலும் திராவிடக் கருத்தியலை, அது உருவாக்கிய விழுமியங்களை, அது செயல்படுத்திக் காட்டிய சமூக நீதிக் கோட்பாடுகளை அதன் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டுமெனில், அதன் அவசியம் முன்னெப்போதையும் விட இப்போது அதிகமாக இருக்கும் சூழலில், இதைச் செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை. இதன் பொருள் அவர் அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என்பதல்ல. திமுகவை வழி நடத்தும் திறனுள்ள தலைமையை கட்சியின் உள்ளேயிருந்து விரைவாகக் கண்டேடுப்பதே இன்றைய தேவை. அவர்களை வழி நடத்துபவராக ஸ்டாலின் தனது அரசியலைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும்.

இது ஏன் அவசியம் என்றால், கருணாநிதி போன்றதொரு தீவிர செயல்திறனுள்ள அரசியல்வாதி தனது மகனை வாரிசாக நிலைநிறுத்த எடுத்துக்கொண்ட காலம் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு. கருணாநிதிகள் வரலாற்றில் அபூர்வமாகத்தான் உருவாவார்கள். அவரால் கூட ஒரு திறன்மிகு வாரிசை உருவாக்கமுடியாதபோது ஸ்டாலினால் எங்ஙனம் அது இயலும். இது திமுகவின் கவலை மாத்திரம் அல்ல. தமிழகத்தின் கவலை. அதுவே அந்த இயக்கத்தின் பெருமை. இவ்வாறு செய்வதன் வழியாக கருணாநிதி செய்த பெரும்பிழையைச் சீரமைக்கும் செயலைச் செய்தவராகக் கூட ஸ்டாலின் வரலாற்றில் அறியப்படும் சாத்தியங்கள் உருவாகும்.

இறுதியாக, அத்தகைய திறனுள்ள மாற்றுத் தலைவர்கள் திமுகவில் யார் இருக்கிறார்கள் என்று கேட்கலாம். இந்த கேள்வி என்னிடம் கேட்கப்பட்டால், நான் எந்தத் தயக்கமும் இல்லாமல் ஆ. ராசாவின் பெயரைச் சொல்வேன். திமுகவின் தலைமைக்கு ஒரு தலித் வருவதை விட பெரும்பேறு என்ன இருக்கமுடியும். பெரியாரின் சிலைகளில் இருந்து அதன் தலை அப்புறப்படுத்தப்படும் ஒரு காலத்தில் அது விடுப்பது மகத்தான செய்தியாக இருக்க முடியும்.

இந்த திசைவழியில் சிந்திப்பதற்கு ஒரு சமூகமாக, கட்சி அபிமானிகளாக, முதலில் நாம் நமது தயக்கங்களில் இருந்து வெளியேறவேண்டும். புதிய உரையாடல்களைத் துவக்கவேண்டும். அத்தகைய உரையாடல்களில் ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல்கள் ஒரு கூறாக இருக்கலாம். ஆனால், அது மட்டும் தான் உங்களது தயக்கத்துக் காரணமா என்று நீங்கள் மனசாட்சியுடன் பரிசீலிக்கும்போது நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடும். வரலாறு என்பது பிழைகளுடன் கூடியதுதான். பிழைகள் மாத்திரமே அல்ல!

ஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர். வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்)சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) , ஆகிய இரண்டும் இவர் எழுதிய நூல்கள். 
360° ( கட்டுரைகள்)
தற்போது வெளியாகியுள்ள நூல். 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.