பெண்ணுக்கு ஃபேஸ்புக் ஒரு போராட்டக் களமே!

மலையாளத்தில்: அருந்ததி. பி.
தமிழில்: ஸ்ரீபதி பத்மநாபா

புரட்சி என்பது வரலாறு அசைபோடுவதற்கான ஒரு சொல் மட்டுமே என்ற என் பதினேழு வருட எண்ணத்தை திருத்தியபடி வந்து சேர்ந்தது அரபு வசந்தம் (arab spring). துப்பாக்கிக் குழல் வழியாக அல்லாமல் சோஷியல் மீடியா வழியாகத் துவங்கியது முல்லைப் பூ புரட்சி. (Jasmine Revolution).
தலைவர்களோ தொண்டர்களோ இல்லாத, ஒருவரையொருவர் அறியாத ஆட்களின் குழு
ஒரே அரசியல் நம்பிக்கைக்காக வீதியில் இறங்கிப் போராடும் காலம் வந்துசேரும் என்றும், நானும் ஒரு புரட்சிக்காரி ஆக மாறுவேன் என்றும் தோன்றிய உறுதியான நம்பிக்கையில்தான் ரான்னியில் உள்ள (ரான்னி – சபரிமலை செல்லும் வழியில் உள்ள ஒரு சிறு நகரம்) நெட்கேஃபில் ஃபேஸ்புக் கணக்கைத் துவங்கினேன். நான் நடித்த திரைப்படம் (சினேஹ வீடு) வெளிவந்ததும் பிரவாகமாய் வந்த எண்ணிலடங்கா நட்பு அழைப்புகள். எல்லா புரட்சியாளர்களையும் உத்வேகத்துடன் accept பட்டனை அழுத்தி வரவேற்றேன். ஆனால் அவர்கள் எல்லோரும் தேடி வந்தது நடிகையின் வெடியைத்தான் என்கிற புரிதல் என் புரட்சிக்கனவுகளை தோற்கடித்துவிட்டது.

ஆண்களின் சைபர் தாக்குதலில் செத்துப்போன என் ஃபேஸ்புக் ப்ரொஃபைலுக்கு மீண்டும் உயிர் கொடுத்ததும் அவர்கள்தான். முத்தப் போராட்டத்தின் படங்களுக்கு கமெண்ட் செய்ய போட்டி போட்டுக்கொண்டு. மூன்று வருடங்களுக்குப் பிறகும், எண்ணிக்கை கூடியதே தவிர சுபாவத்தில் மாற்றமேதுமில்லை. முன்னர் இன் பாக்ஸில் ரகசியமாக எழுதியதை இந்த முறை வெளிப்படையாக எழுதினார்கள் என்பதைத் தவிர. பொது உணர்வுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பெரும்பான்மைக்கு பதில் சொல்வதற்கு என் அரசியலை ஆதரிக்கிற ஒரு சிறுபான்மை கூட்டம் முன் வந்தது.
அவர்கள் உறவினர்களோ கூடப் படித்த நண்பர்களோ அல்ல. முன் ஒருபோதும் பார்த்திராத சில முகங்கள். ஃபேஸ்புக் எனக்குமான இடம்தான் என்ற தன்னம்பிக்கையை அளித்தது அந்த மனிதர்கள்தான். பிறகு இதுநாள்வரை இந்த இடத்தின் அரசியல் சாத்தியங்களை தேடிக் கண்டுகொண்டேயிருக்கிறேன் நான்.

பெண் தான், நீ பெண் தான், நீ பெண் மட்டுமே தான் என்று தொடர்ச்சியாக நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது ஃபேஸ்புக் வாழ்க்கை. தந்தையோ சகோதரரோ ஆசிரியர்களோ நிசப்தமாக்கிய என் சொற்களெல்லாம் தடை தகர்த்து வெளிவரும்போது திகைத்துப் போய்விடுகிறார்கள் இந்த ஆண்கள். ஆண் மட்டுமே அரசியல் பேசுகிற, ஆண் மட்டுமே சரீரத்தைக் கொண்டாடுகிற, ஆண் மட்டுமே போதையைப் பற்றி எழுதுகிற ஒரு ’ஆண் வெளி’ யாக ஃபேஸ்புக்கையும் நிலைநிறுத்திட உழைத்துக்கொண்டேயிருக்கிறார்கள் பல பேர். இவர்களுக்கிடையில் சப்தம் எழுப்புகிற பெண்ணுக்கு ஒவ்வொரு தினமும் போர்க்களம்தான். கெட்ட வார்த்தை அர்ச்சனைகளாகவும் பாலியல் வேண்டுகோள்களாகவும் ஒரு நாளைக்கு 50 மெசேஜ்களாவது வருகிறது. முத்தப் போராட்டத்தின் சூடு தணிந்துவிடும் என்றும் புதிய இரையைத் தேடி இவர்கள் நகர்ந்துவிடுவார்கள் என்றும் பொறுமையோடு காத்திருந்தேன்.

காமம் அல்ல, குரல் எழுப்புகின்ற எந்தப் பெண்ணையும் தன்மானம் என்கிற ஆயுதத்தைப் பிரயோகித்து இல்லாமல் செய்துவிடும் முயற்சிகளே அந்த மெசேஜ்கள் என்று பிறகுதான் புரிந்துகொண்டேன்.
ஆணின் கெட்ட வார்த்தைகளில் இருக்கிற அதிகார அரசியல்! கடைசியில் மாதக்கணக்கில் தொடர்ந்து தொந்தரவு தந்துகொண்டிருந்த சில பேருடைய மெசேஜ்களை ப்ரொஃபைலோடு வெளியிட வேண்டிவந்தது. அதில் ஹிம்சை இருக்கிறது என்று தெரியாமலில்லை. ஆனால் எல்லா ஹிம்சைகளும் தவறு என்று நான் எண்ணவில்லை. சைபர் போலிசிடம் கொடுக்கும் ஒரு புகாரில் அடங்கிப்போவதுமில்லை, இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட ஆண்கள் வந்துபோன இன்பாக்ஸ்.
அன்று இரவு என் ப்ரொஃபைலிலிருந்து ஓடிப்போன இந்த வீரர்கள் இதுவரை திரும்பி வரவில்லை.
எனக்கு குடும்பம் இருக்கிறது, குழந்தை இருக்கிறது, நான் எழுதியதையெல்லாம் வெளியே சொல்லிவிடாதே என்று கெஞ்சினார்கள் சிலர். அதற்கு முன்னமே நிறைய இளம்பெண்கள் அவர்களின் இன்பாக்ஸில் வந்துசேர்ந்த ஆபாச மலத்தை திறந்து வைத்தார்கள்.

முத்தத்தை ஒரு அரசியல் உபகரணமாக உபயோகித்தபோதுதான் இவர்களுக்கு அது பெரிய ஆபாசம் என்று புரிந்திருக்கிறது. நம் ஆசிரியர்கள் ‘டோட்டோ சான்’ வாசித்தவர்கள் அல்ல.
சிறுவர்களையும் சிறுமிகளையும் நீச்சல் குளத்தில் ஒன்றாய் நிறுத்தி நிர்வாணமாக்கி, ‘இதோ, உடல் என்பது இவ்வளவுதான்’ என்று கற்றுக்கொடுக்க கொபாயாஷி போன்ற ஆசிரியர்களில்லை.
‘என் உடல், என் உரிமை’ (My body, my right) என்கிற கோஷம் அவர்களுக்குத் தெரியாது.
ஃபேஸ்புக்கில் பொதுவாக சரீரத்தின் கொண்டாட்டம் என்பது ப்ரொஃபைல் படங்களில் மட்டுமே.
பெண் ஆனதால், எழுதுவதை விட ஆயிரக்கணக்கில் லைக் வாங்குவது என் படங்கள்தான்.
முகத்தையும் தாண்டி நான் பேசத் துவங்கினேன்: முலையைப் பற்றி, யோனியைப் பற்றி, தூமைத்துணியைப் பற்றி, ரதியைப் பற்றி. ஒவ்வொரு சொல்லும் தாக்குதலுக்குள்ளானது.
‘யோனிப் பெருஞ்சுவர்’ (Great wall of vagina), விது வின்செண்டின் லெஸ்பியன் ஓவியங்கள்,
இகோண் ஷீலாவின் சுய இன்ப ஓவியங்கள் இவையெல்லாம் ரிப்போர்ட் செய்யப்பட்டன.
கலைகூட இவர்களுக்கு ஆபாசம்தான். ஒரு பெண் அதையெல்லாம் போஸ்ட் செய்வது சகிக்கவே முடியாதது. அவர்களின் கடின முயற்சியால் பல போஸ்ட்டுகளை ஃபேஸ்புக் வெளியே எறிந்துவிட்டது.

ஃப்யூடல் மனப்பான்மை மிகுந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவள் நான். கல்வியறிவும் நல்ல வேலையும் உள்ள பெண்கள் பாட்ரியார்க்கியை சுமப்பதைப் பார்த்தபடி வளர்ந்தவள் நான். என் வாழ்க்கை அந்த அடிப்படை வாதங்களுக்கு நேரான நிராகரிப்பே. ஃபேஸ்புக்கில் என் பெயருடன் இருக்கிற நாலுகெட்டில்’, என் உறவினர்களின் மனங்களை உலையச் செய்வது இயற்கையே. கலைவிழாக்களில் தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்தபோதும், பட்டப் படிப்பில் ரேங்க் வாங்கியபோதும் பாராட்டாதவர்கள், நான் எழுதுவதை வாசித்துவிட்டு என் எதிர்காலத்தைப் பற்றி (பெண்ணின் எதிர்காலம் என்றால் திருமணம் என்று மட்டுமே பொருள்) வருத்தப்படுகிறார்கள்.

அப்பாவும் அம்மாவும் இதைக் கண்டுகொள்வதில்லை என்று தெரிந்தவுடன் இனிமேல் மகளையும் அழைத்துகொண்டு எங்கள் வீட்டுக்கு வராதே என்று உத்தரவிடுகிறார்கள். வரலாற்றைப் பார்க்கும்போது எல்லா மனிதர்களுக்கும் பரிணாமத்தின் ஒரே குடும்ப மகிமையை மட்டுமே உரிமை கோர முடியும்.
இல்லாத குடும்பத்தின் இல்லாத மகிமையை நினைத்துப் பதட்டப்படும் உறவினர்களை நாம் பரிதாபத்தோடு மட்டுமே பார்க்க முடியும்.

என் அரசியல் இந்துத்துவத்துக்கு எதிரானது. சிறுபான்மை மதச்சார்பை விட பெரும்பான்மை மதச்சார்பைப் பார்த்து நான் பயமடைகிறேன். ஒரு இந்து தேசத்தின், இந்து தேசியத்தின் பாகமாக வாழ என்னால் முடியாது. இப்போதிருக்கும் பிரதமர் மனித உரிமைகளை மதிக்கிற ஒருவர் என்று நான் நினைக்கவில்லை. எதிர்வந்துகொண்டிருக்கும் பாசிசத்தைப் பார்த்து நான் பயப்படுகிறேன். அதனால் முத்தமிடக்கூடாது என்று சொல்லும்போது நான் முத்தமிடுகிறேன். மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்று சொல்லும்போது நான் சாப்பிடுகிறேன். என் ஃபேஸ்புக் ப்ரொஃபைல் எப்போதும் இந்துத்துவ அடிப்படைவாதத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது. ’நாலுகெட்டில்’ இருக்கிற ‘முதுகெலும்பு’ உள்ள இந்து மைந்தர்களை பதட்டமடையச் செய்கிறது. விராட இந்துவாக வீட்டுக்குத் திரும்பிவர அவர்கள் அறிவுரை சொல்கிறார்கள். பயமுறுத்துகிறார்கள். முஸ்லீம் நண்பனோடு நான் நிற்கிற படம் லவ் ஜிகாத் ஆக பொழிப்புரைக்கப்படுகிறது.

எனினும் ஃபேஸ்புக்தான் பெர்சனல் ஈஸ் பொலிட்டிக்கல் என்று முழங்குவதற்கான ஆற்றலைத் தருகிறது. இங்கே வந்துசேர்கிற எல்லோருக்குள்ளும் அவர்கள் அறியாமலேயே அரசியல் நுழைகிறது.
பொதுவாழ்க்கையில் வெளியே சொல்ல முடியாத பலவற்றை ஃபேக் ஐ டி மூலமாக
பெண்ணும் ஆணும் ட்ரான்ஸ்ஜெண்டரும் எல்லோருக்கும் தெரியப்படுத்துவதும் ஃபேஸ்புக்கின் அரசியல்தான்.

சினிமாவிலும் பாடபுத்தகங்களிலும் சமையலறையிலும் நுழைந்து ‘கூடாது’களை ஆணையிடுகிற அரசு எந்திரத்தை, அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை கேள்வி கேட்பதற்கு குடிமகன்களுக்குக் கிடைத்திருக்கும் சுவர்தான் ஃபேஸ்புக். ஒரு நல்ல வாக்கியத்துக்கோ நல்ல படத்துக்கோ வாழ்த்தாக எந்தத் தடையுமின்றி முத்தம் தருகிறார்கள். பால்ரீதியான சிறுபான்மையினருக்கு ஆதரவு தெரிவித்து வானவில் ப்ரொஃபைல் படங்களை உருவாக்குகிறார்கள். ஆண் அதிகாரம் நிலையூன்றியிருக்கும்போதும் எனக்கு ஃபேஸ்புக் பெண் இடம்தான். அவளவளைத் திறந்து வைக்க முடிகிற ஒரே இடம்.

அருந்ததி, செயல்பாட்டாளர். ஹைதரபாத் பல்கலைக் கழக மாணவர்.

ஸ்ரீபதி பத்மநாபா, எழுத்தாளர்.  நடிகர் ஷகிலாவின் சுயசரிதை நூலை தமிழாக்கம் செய்திருக்கிறார். மலையாளக் கரையோரம் நூலின் ஆசிரியர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.