நலங்கிள்ளி
ஸ்டீஃபன் ஆக்கிங் – நானாக அவருடன் ஏற்படுத்திக் கொண்ட அறிவியல் நட்பு என்றும் தொடரும். நான் யாருடனும் ஒளிப்படம் எடுத்துக் கொள்ளும் வழக்கம் இல்லை. அவர் நான் வியக்கும் மனிதராக இருக்க வேண்டும் எனக் கருதுபவன். நான் அப்படி சந்தித்து ஒளிப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைத்தவர்களுள் ஆக்கிங்கும் ஒருவர். யார் நிதியுதவி பெற்றேனும் லண்டன் சென்று அவருடன் ஒரு நிமிடம் பேச வாய்ப்புக் கிடைக்குமா? என ஏங்கியிருக்கிறேன். ஆனால் அதற்கு இனி வாய்ப்பில்லை. ஸ்டீஃபன் ஆக்கிங் என்னை விட்டு, நம்மை விட்டு பிரிந்து விட்டார் என்ற செய்தி இன்று காலை என் செவியில் இடியாய் வந்து இறங்கியது.
நான் 23 அகவையில் A Brief History of Time நூலைப் படித்தேன். அசந்து போனேன். பல இரவுகள் தூக்கமில்லை. அறிவியலை, அண்டவியலை, கடினமான இயற்பியல் விதிகளை இதை விட எளிமையாக, விறுவிறுப்பாக, நகைச்சுவை இழையுடன் எவரும் சொல்ல முடியுமா? என்று வியந்தேன். தமிழ்வழிக் கல்வி ஆதரவாளன் என்ற வகையில், என் மனத்தில் உடனே தோன்றியது, இந்த அருமையான அறிவியல் அழகு தமிழில் வந்தால் எத்தனை எத்தனை தமிழர்கள் அறிவியல் வளம் பெறுவர் என நான் ஏங்கிய நாட்கள் பல. யாரைப் பார்த்தாலும் புலம்புவேன்.
இப்படித்தான் நிழல் திருநாவுக்கரசிடம் ஒரு முறை புலம்பினேன். அவர் உடனே நீங்களே செய்தால் என்ன என்றார். எனக்குத் தலைகால் புரியவில்லை. என்னால் முடியவே முடியாது என்றேன். என்னால் முடியும் என எனக்கு ஊக்கம் கொடுத்தவர் தோழர் தியாகு. என் வாழ்வில் ஏற்பட்ட திருப்புமுனை இது.
உடனடியாகத் தொடங்கினேன் பணியை. தியாகுவின் பதிப்பாசிரியப் பணியுடன் வேலை நிறைவடைந்தது. ஸ்டீஃபன் ஆக்கிங் அழகு தமிழில் பேசினார். காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம் என்ற பெயரில் புத்தகம் வந்தது. அதுவே இன்று வரை எனக்கான அறிமுக அட்டை.
வாழும் ஐன்ஸ்டைன் எனப் போற்றப்பட்டவர் இன்று வாழ்வை இழந்து விட்டார்.
அவருக்கு அகவை 20. அப்போது மருத்துவர் அவருக்கு நரம்பியல் இயக்க நோய் வந்திருப்பதாகவும், அவரால் ஒரு சில ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ முடியாது எனவும் அறிவித்து விட்டனர். அதனையும் மீறி சில ஆண்டுகள் கடந்தன. அவர் உயிர் போகவில்லையே தவிர, உடலின் முழு இயக்கத்தையும் இழந்தார். அப்போது மருத்துவர்களிடம் அவர் கேட்ட கேள்விதான் அவரை என் மனத்தில் மாமனிதராக உயர்த்தி நிறுத்தியது. எனக்கு உடல் செயலிழந்தது விட்டது, சரி, என் மூளை? என மருத்துவரிடம் கேட்டார் ஆக்கிங். மூளைக்கு ஒரு குறையும் இல்லை என மருத்துவர்கள் கூறியதுதான் தாமதம், ஆக்கிங் சொன்னார். அப்பாடி, இனி எனக்கென்ன கவலை. என் உயிர் அறிவுத் தேடல். அறிவுத் தேடலுக்கு உடல் தேவையில்லை, மூளைதானே தேவை, அந்த மூளை சிறப்பாக வேலை செய்கிறது என்பதைத் தவிர எனக்கு வேறென்ன வேண்டும் எனச் சொன்னார் ஆக்கிங்.
என்னைப் பொறுத்த வரை, உடலியக்கம் இழந்து ஊனமுற்றோரின் வரலாற்றில், என்றும் முதலிடம் ஆக்கிங்குக்கு மட்டுமே. அந்த இடத்தை எவராலும் நிரப்ப முடியாது.
இரண்டே ஆண்டுதான் வாழ முடியும் என மருத்துவர் அறிவித்தும் எவருக்கேனும் ஆக்கிங் அளவுக்கு நீண்ட ஆயுள் வாய்த்திருக்குமானால், அது கடவுள் அருள் என நிச்சயம் நம்புவர். ஆனால் ஆக்கிங் தீவிர நாத்திகர். அவருடைய கிண்டலான நாத்திகக் கருத்துகளைக் காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம் புத்தகம் முழுதும் காணலாம்.
அவர் ஓரிடத்தில் சொல்வார், கடவுள் என்று ஒருவர் இந்த அண்டத்தில் இருந்தாலும், அந்தக் கடவுளுமே கூட இயற்பியல் விதிகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் கடவுளாகத்தான் இருக்க முடியும்.
கருந்துளை, காலக் கணை, புழுத்துளைப் பயணம், காலப் பயணம் என அவர் கண்ட அறிவியல் கனவுகள் பல.
அந்த அறிவியல் கனவுகள் உலகத்தினர் மனத்தில் நிறைந்து நிற்கும். அது புதுப் புது அறிவியலர்களைக் கட்டாயம் உருவாக்கிக் காட்டும்.
ஆக்கிங் தூவிய அறிவியல் கண்ணோட்டம் தமிழர்கள் மனத்திலும் ஊன்றி நிற்க வேண்டும் என்பதே அவர் மறைந்த இன்றைய நாளில் எனக்கிருக்கும் கனவு!
நலங்கிள்ளி, ஸ்டீபன் ஆக்கிங்கின் காலம்;சுருக்கமான வரலாறு நூலை தமிழாக்கம் செய்தவர். இந்நூல் எதிர் வெளியீடாக வந்துள்ளது.