கௌசல்யா சங்கர்

சங்கர் நினைவேந்தல் பொது நிகழ்வாக நடக்கக்கூடாது என்று மறுத்து விட்டது காவல்துறை. அரங்குக்குள் வேண்டுமானால் நடத்திக் கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்துகிறார்கள். இதை ஏற்காமல் நாம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அதற்குக் காவல்துறை பாதுகாப்பு அளிக்கமுடியாது, சாதிக் கலவரம் வந்துவிடும் என்று நீதிமன்றத்தில் மறுமொழி தந்துள்ளனர். ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி மறுக்கவில்லை, சாதி சங்கங்கள் நடத்தும் நிகழ்வுகளுக்குத் தடையில்லை, விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை அரசே நடத்தித் தருகிறது; இவையெல்லாம் சமூக ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கெடுக்கும் நோக்கம் கொண்டவை என்பதறிவோம். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு, அம்மா பிறந்த நாள் இவற்றுக்கெல்லாம் பாதுகாப்புக்கு நிற்பவர்தள் காவலர்கள்தானே! அவற்றுக்கெல்லாம் பாதுகாப்பளிக்க முடியும் நமக்கு மட்டும் முடியாதாம். எனக்கு ஒவ்வொரு நிகழ்வும் மக்களைச் சென்றடைய வேண்டும் எனக் கருதுகிறேன்.
சங்கர் இரண்டாம் ஆண்டு நினைவேந்தலும் சங்கர் சமூகநீதி அறக்கட்டளை நிகழ்வை பொதுவெளியில் நடத்த வேண்டும் என்பதில் உறுதியோடு உள்ளேன். சட்டப் போராட்டம் தொடர்கிறது. 12.03.2018 மதியம் உயர்நீதி மன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது. கருத்துரிமை எதன் பேராலும் மறுக்கப்படக் கூடாது. நம்பிக்கையோடு காத்துள்ளேன். இந்தப் போராட்டத்திலும் ஓயமாட்டேன். மக்கள் விடுதலை முன்னணி அமைப்பினர் சங்கர் நினைவுச் சுவரொட்டி ஒட்டுவதைத் தடுத்துள்ளது காவல்துறை. மீறி ஒட்டினால் கிழித்தெறிவோம் என்று மிரட்டியுள்ளனர். போஸ்டர் கிழித்துக் கொண்டிருப்பதை ஒரு வேலையாகவே எடுத்துச் செய்ய முன்வருகிறது காவல்துறை. ஆனால் பாதுகாப்புத் தரமுடியாது என்கிறது. எப்படியானாலும் சுவரொட்டி ஒட்டவிடாமல் தடுத்த அராசகத்தைக் கண்டிக்கிறேன்.
இந்தப் போக்கு தொடரக்கூடாது. சட்டப் போராட்டத்தில் வென்று பொதுவெளியில் நிகழ்வு நடத்துவேன். தவறினாலும் நிகழ்வு நடக்கும். ஆனால் சட்டப் போராட்டம் அதன்பின்னும் தொடரும். சனநாயகம் மீட்பேன். அதுவரை அதன் எல்லை வரை போராடுவேன். இருப்பினும் தீர்ப்பை நம்பிக்கையோடு எதிர்நோக்கியுள்ளேன்.
எதுவாகினும் மார்ச் 13 நிகழ்வுக்கு நீங்கள் அணிதிரண்டு வர வேண்டும். எங்கு நடத்த நேர்ந்தாலும் நாம் ஒன்றுகூடி நிகழ்வை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இப்போதும் மக்களை நம்பிக் களத்தில் உள்ளேன். நீங்கள் எனை ஆரத்தழுவி ஆதரிப்பீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.
12 ஆம் தேதி மதியம் 2 மணியளவில் இதே தளத்தில் தீர்ப்பைப் பதிவிடுகிறேன். அப்படியே உறுதியான இடத்தையும் அறிவிக்கிறேன். சங்கர் நினைவேந்தலை உங்கள் வருகையினால் வெற்றி பெறச் செய்வீர்கள் என நம்புகிறேன்.
நாம் ஒன்றுபடுவது மக்களைப் பிளவுபடுத்த அல்ல; மக்கள் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப….சமத்துச் சமூகம் படைக்க…. உங்கள் வருகை இந்த இலக்கின் வெற்றியைப் பறைசாற்றும். நீங்கள் எதுவாயினும் அங்கே திரண்டு வருவீர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.
கௌசல்யா சங்கர், செயல்பாட்டாளர்; உடுமலைப் பேட்டையில் சாதியவாதிகளால் படுகொலைச் செய்யப்பட்ட சங்கரின் மனைவி.