”என் எழுத்து நிதர்சனத்தின் பேரச்சத்தை வெளிப்படுத்துவது; போர்னோகிராபி அல்ல”: ’த பியானோ டீச்சர்’ நாவலாசிரியர் எல்ஃபீரிட் ஜெலினீக் நேர்காணல்

த பியானோ டீச்சர் திரைப்படம் தமிழ் சிற்றிதழ் வாசகர்கள் அறிவர். த பியானோ டீச்சர் நாவலே, ஆஸ்திரிய மொழியில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. இந்நாவலை எழுதியவர் இடதுசாரி செயல்பாட்டாளரும் ஆஸ்திரிய எழுத்தாளருமான எல்ஃபீரிட் ஜெலினீக் Elfriede Jelinek*. ஆஸ்திரிய எழுத்தாளர்களில் இவரைப் போல் புகழப்பட்டவரும் இல்லை; வெறுக்கப்பட்டவர்களும் இல்லை என்கிறார் பேராசிரியர்.Sture Packalén. 2004-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு எல்ஃபீரிட்டுக்கு வழங்கப்பட்டது.  எல்ஃபீரிட் ஏன் வெறுக்கவும் விரும்பவும் படுகிறார் என்கிற கேள்விக்கான பதிலை இங்கே தமிழாக்கி தந்திருக்கும் இரு நேர்காணல்கள் வாயிலாக பெற முயற்சிக்கலாம்.  (தற்போது அவருக்கு வயது 71).

2004-ஆம் ஆண்டு நவம்வர் 21-ஆம் தேதி நியூயார்க் டைம்ஸில் வந்த நேர்காணல் இது. நேர்கண்டவர் டெபோரா சாலமோன்.

கே: நோபல் பரிசு அறிவிப்பு உங்களுக்கு வியப்பளித்ததா?

எல்ஃபீரிட்: ஆமாம். ஆஸ்திரியாவுக்கு விருது கிடைத்தால் பீட்டர் ஹண்க்(எழுத்தாளர்) பெறுவார் என நான் நம்பினேன்.

கே: நோபல் பரிசு வழங்கும் விழாவிற்கு செல்வதை ஏன் தவிர்க்கிறீர்கள்?

எ: என்னால் முடிந்தால் நிகழ்வில் கலந்துகொள்ள பார்ப்பேன். ஆனால், எதிர்பாராதவிதமாக நான் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறேன், எனக்கு பெரும்திரள் கூட்டத்தைப் பார்த்தால் பயம்; அகோராஃபோபியாவால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். கூட்டங்களில் என்னால் கலந்துகொள்ள முடியாது.

கே: Abu Ghraib சிறைச்சாலையை மையப்படுத்திய ‘பாம்பிலேண்ட்’ (ஈராக் யுத்தத்தின் போது Abu Ghraib என்ற சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் அமெரிக்க படையினரால் பல்வேறு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர்) போன்ற சமூகத்தின் நிகழ்வுகளை சுட்டிக்காட்டிய எழுத்தாளரிடமிருந்து இதை எதிர்ப்பார்ப்பது ஆச்சிரியத்தை அளிக்கிறது.

எ: தற்போதிருக்கும் அதிபராட்சி உலகத்துக்கு மிக தீமையானது என கருதுகிறேன். புஷ்ஷைக் கண்டு பயம் கொள்கிறேன், அவரைக் காட்டிலும் அவர் நிழலில் நிற்கும் அதிகாரிகளின் மீதும் பயம் அதிகமாக உள்ளது. அவர்களுடைய செயல்பாடுகளைப் பார்க்கும்போது, Thomas Pynchon(அமெரிக்க பின்நவீனத்துவ எழுத்தாளர்)னின் மனச்சிதைவு சதி கோட்பாடெல்லாம் குழந்தைகளுக்கான புத்தகங்கள் போலத்தான் தோன்றும்.

எல்ஃபீரிட் ஜெலினீக் (Elfriede Jelinek)

கே: அமெரிக்க எழுத்தாளர்களைக் காட்டிலும் ஐரோப்பிய கலைஞர்கள் ஏன் அரசியல் கண்ணோட்டத்துடன் இருக்கிறீர்கள்?

எ: அமெரிக்க ஐக்கிய நாடு பெரியது. மிகப் பெரியது. அறிவுஜீவிகள் பெரிய நகரங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் பதுங்கியிருக்கிறார்கள். நரியிடமிருந்து தப்பிக்க கோழிகள் கூட்டமாக பதுங்கியிருப்பதைப் போல.

கே: அதிகப்படியான உங்களுடைய விமர்சனங்கள் உங்களுடைய பூர்வீக ஆஸ்திரியாவையும் அதன் நாஜி குற்றப் பின்னணியிலிருந்தும் வருகிறதா?

எ: ஆஸ்திரிய போன்ற கத்தோலிக்க எதேச்சதிகார நாட்டில், சமூகம் மீதான அக்கறை கொள்ளும் பணி வழமையாக கலைஞர்களிடம் சென்றுவிடுகிறது. ஏனெனில் அங்கே சிறந்த அரசியல் சிந்தனையாளர்கள் இருப்பதில்லை.

கே: உங்களுடைய நாவல்களான  ‘Lust’ மற்றும் ‘Women as Lovers’ பாலின அரசியலை முன்னெடுக்கிறது…

எ: ஆணுக்கு பெண்ணுக்குமான உறவை எஜமானனுக்கும் அடிமைக்குமான உறவாக வர்ணித்திருக்கிறேன். ஆண்கள் பாலியல் மதிப்பை தங்கள் வேலை, புகழ், செல்வம் ஆகியவற்றின் மூலம் அதிகரிக்க முடிந்த வரை, பெண்களின் உடல், அழகு மற்றும் இளமை ஆகியவை மட்டுமே சக்திவாய்ந்ததாக இருக்கும், எதுவும் மாறாது.

கே: சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவுஜீவியாக உள்ள நீங்களே வழமையாக உள்ள கருதுகோள்களைப் பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறீர்கள்?

எ:  ஒரு பெண் தன் பணியின் மூலம் பிரபலமாகும்போது, அவளுடைய எரொடிக் மதிப்பு குறைந்துவிடுகிறது. ஒரு பெண் பேசுவதற்கோ அல்லது எழுதுவதற்கோ அனுமதிக்கப்படுகிறாள், ஆனால் பொதுவெளியில் அதிகாரத்துடன் பேசுவது மிகப் பெரும் குற்றமாக உள்ளது.

கே: உங்களுடைய சாதனைகள், உதாரணத்து நோபல் பரிசு வென்றது, உங்களுடைய புறத்தோற்றத்தை திசை திருப்புகிறது என சொல்லவருகிறீர்களா?

எ: ஆமாம்! ஒரு பெண்ணின் கலைத்தன்மையுள்ள வெளிப்பாடு ஆணை பயமுறுத்துகிறது. அவள் தன்னை சிறுமைப்படுத்தியும் ஒரு பொருளாகக் கருதிக்கொள்ளாத பட்சத்திலும் மக்கள் அவளைக்கண்டு பயம் கொள்கிறார்கள்.

கே: வயது முதிர்வின் காரணமாக ஆணை ஒரு பெண் வசீகரிக்க முடியாமல் போவது குறித்து ஏதேனும் சொல்ல முடியுமா?

எ: உண்மைதான். ஆனால், சோகம் என்னவெண்றால் மதிப்பிற்குரிய அந்த முதியவள், ஒரு இளைஞனின் அடிமையாக்கப்படுகிறாள். (கணவன் அல்லது துணைவனுக்குப் பின் மகன்களில் கட்டுப்பாட்டில் அகப்படும் பெண்கள் நிலையைச் சொல்கிறார்)

கே: உங்கள் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட த பியானோ டீச்சர் என்ற நாவலில் இதைத்தான் சொன்னீர்களா? இசைக் கலைஞராக பயிற்சி பெற்ற நீங்கள், எப்போதும் குறைகளைக் கண்டுபிடிக்கும் தாயுடன் வியன்னாவில் வசித்தீர்கள்…

எ: நான் இன்னமும் அந்த வீட்டில்தான் வசிக்கிறேன், என் தாய் நான்காண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். என் கணவர் வசிக்கும் முனிச் நகரிலும் வியான்னாவிலும் மாறிமாறி வசிப்பேன். இப்போது அப்படித்தான். இரண்டு நகரங்களின் கதை.

தன் தாயுடன் எல்ஃபீரிட் ஜெலினீக்

கே: வியான்னாவில் உங்களுடன் வசிக்க உங்கள் கணவர் ஏன் வரவில்லை?

எ: ஏனெனில், வெறொரு நகரத்தில் எனக்கொரு இரண்டாவது வீடு தேவை. விரும்பும் போது வியன்னாவிலிருந்து தப்பிக்க முடிகிறது. என் கணவர் முனிச் நகரத்தில் பிறந்து வளர்ந்தவர். அவர் விரும்புவதைவிட  மேலதிகமாக முனிச்சிலிருக்கும் என்னுடைய வீடு, எனக்கு முக்கியமானது.

கே: அமெரிக்காவில் உங்களுடைய எழுத்துகள் அதிகமாக படிக்கப்படவேண்டும் என விரும்புகிறீர்களா?

எ: ஆமாம், அது உவப்பாக இருக்கும். அமெரிக்கர்கள் என்னுடைய வலியையும் பகடியையும் புரிந்துகொள்வார்கள், ஏனெனில் அங்கே இன்னமும் யூத கலாச்சாரம் வாழ்கிறது. இங்கே, குறிப்பாக ஜெர்மனியில் மக்கள் பிரயத்தனப்பட்டு என்னை புரிந்துகொள்கிறார்கள், ஏனெனில் யூத உலகம் நாசிக்களால் அழிக்கப்பட்டுவிட்டது.  எனவே, இங்கே நான் நம்பிக்கையை இழந்துகொண்டிருக்கிறேன். இங்கிருக்கும் மக்கள் என்னுடைய பகடியை புரிந்துகொள்ளவில்லை. ஆனால், அமெரிக்க மக்களால் நான் எழுதும் மொழியை புரிந்துகொள்ள முடியாது.

கே: நீங்கள் அமெரிக்கா சென்றிருக்கிறீர்களா?

எ: இல்லவே இல்லை. விமானத்தில் செல்வது எனக்கு மிகக் கடினமானது. பதிலாக, நிச்சயம் ஒரு நாள் படகு எடுத்துக்கொண்டாவது நியூயார்க் செல்வேன். வேகமும் சத்தமும் என்னை பயமுறுத்தக்கூடியவை.

 

ஆஸ்திரியன் ஃபிலிம்ஸ் டாட் காமில் வந்த மற்றொரு நேர்காணல் இது. 2001-ஆம் ஆண்டு வெளியானது.

ஆஸ்திரிய இயக்குநர் மிசைல் ஹெனேகே (Michael Hanekek), த பியானோ டீச்சர் நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் இருந்தபோது, எல்ஃபிரீட் ஜெலினிக் கொடுத்த பேட்டி இது.

கே: உங்களுடைய எழுத்து, சினிமாவாக்கப்படுவது இதுதான் முதன்முறை இல்லையா? ஹெனேகே -வை தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

எ: நீண்ட காலமாக அனுமதி கொடுக்க மறுத்து வந்தேன். ஏனெனில் என்னுடைய பிரதிகள், மொழியை அடிப்படையாகக்கொண்டவை. அதாவது மொழிக்கு உள்ளிருந்தும் மொழியாலும் காட்சிகள் பரிமாறப்படுகின்றன. திரைக் காட்சிகள் இதற்கு அத்தியாவசியமானவற்றை சேர்க்கும் என நான் நினைக்கவில்லை. ஆனால், எனக்குத் தெரியும் ஹெனேகே போன்ற இயக்குநர்களுடன் மட்டுமே என்னால் பணியாற்ற முடியும். மனித மனதின் பயங்கர பக்கங்களை, இருண்ட பக்கங்களை ஆராயும் மிசைல் ஹெனகே போல நானும் ஒரு ஆஸ்திரியர் என்பதும் காரணமாக இருக்கலாம்.

கே: வலுவான ஒரு இணைப்பை இதில் காண வேண்டுமா?

எ: இது மிகவும் வழமையானது. உண்மையில் நாங்கள் எளிய தனி மனிதர்கள் அல்ல; இதுவரை பணியாற்றிய விதத்தில் எனக்கு ஹெனகேவைப் பிடித்திருக்கிறது. என்னால் எதிர்மறை கோணத்திலிருந்து சமூகத்தை விமர்சிக்க முடியும் என நம்புகிறேன். துல்லியமாக சொல்ல வேண்டுமெனில்,  நம் நாட்டில் இருக்கும் எதிர்மறை வழமைகள் மூச்சுத் திணற வைக்கின்றன. அதற்கு பெருமைப்படும்படியாக என்ன இருக்கிறதோ அதை எடுக்கிறேன், இசையையும் இசை மேதைமையையும் இதில் சேர்க்கலாம். பிறகு, நூற்றுக்கணக்கான பியானோ ஆசிரியைகளின் மறுக்கப்பட்ட பால் உணர்வு எனும் எதிர்மறையான பக்கத்தையும் சொல்லலாம்.

கே: இது உங்களுடைய  தன்வரலாற்று நாவலா?

எ: நான் இந்த கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை, அதோடு என் நாவலை, இதில் பல தன்வரலாற்று கூறுகள் உள்ளபோதும் தன்வரலாற்று நாவலாக இதைப் பார்ப்பதையும் நான் விரும்பவில்லை. ஆஸ்திரிய கலாச்சாரத்தில் மிக உயர்ந்தது என பெண்களின் மீது ஏற்றிவிடப்படும் மூட்டைகளை இந்தக் கதை அவிழ்க்கிறது என்பது எனக்கு ஆர்வமூட்டுகிறது. வாழ முடியாத ஒரு பாலியல் வாழ்வு, மற்றவர்களுடைய பாலியல் செயல்பாடுகளை பார்ப்பதன் மூலமாக வெளிப்படுகிறது.  பார்ப்பதுகூட ஒரு ஆணுக்கு உள்ள உரிமையாக உள்ளது. பெண்கள் எப்போதும் பார்க்கப்படுபவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரும் பார்ப்பதில்லை. அந்த விதத்தில், உளவியல் பகுப்பாய்வின் மூலம் வெளிப்படுத்தும்போது, ஆணுக்கு உள்ள உரிமையை எடுத்துக்கொள்கிறாள், அதற்கான விலையையும் அவள் கொடுக்க வேண்டியிருக்கிறது.

கே: எரிக்கா(த பியானோ டீச்சர் நாவலின் மைய கதாபாத்திரம்)வின் பைத்தியக்காரத்தனத்தை எப்படி விவரிப்பீர்கள்?

பதில்: அவள் பைத்தியக்காரத்தனமாக இல்லை, இல்லவே இல்லை. அவள், தளர்ந்து போயிருக்கிறாள். நான் என்ன சொல்ல வந்தேன் என்றால், இந்த குரூரமான விளைவுகள் அனைத்தும் உரிமைகள் இருப்பதாகச் சொன்னாலும் பெண் தன் இயல்பில் வாழ அனுமதிக்கப்படுவில்லை என்பதாலே வருகின்றன. ஒரு ஆணை தேர்ந்தெடுக்கும் உரிமை அவளுக்கு இல்லை. உண்மையில் பெண்களுக்கு சகித்துகொள்வதையும் குழந்தைகள் வளர்ப்பதையும் கடந்து அனைத்தும் உத்தேசமாகவே நடக்கின்றன. நீங்கள் பெண்களிடம் இயல்பாக இல்லை. அது என்னுடைய வேலை அல்ல. ஆனால், ஆண்களுடன் சக மனிதராய் உள்ள பெண்களை சீர்குலையாது கூர்ந்து பதிவு செய்ய விரும்புகிறேன்.

கே: இது நூலானபோது, சில ஆஸ்திரிய விமர்சகர்கள் இதை போர்னோகிராபிக் என்றார்கள். இந்த விமர்சனம் உங்களை காயப்படுத்தியதா?

எ: இந்த நாவல் போர்னோகிராப் -க்கு எதிரானது. போர்னோகிராபி என்பது எல்லாவிடத்திலும் எந்த கணத்திலும் விருப்பத்தை வெளிப்படுத்துவது. இந்த நாவல் இது இல்லை என நிரூபிக்கிறது, அதாவது பெண்களின் விருப்பத்தை வெளிப்படுத்துவது. ஏனெனில் பெரும்பாலான பெண்கள் போர்னோகிராபியில் ஒரு பொருள், ஆண்கள் அவர்களை காணமுடியும். ஆனால் நான் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறேன்.  என் எழுத்தில் எதை பகுப்பாய்வு செய்து சொல்ல வந்தேனோ அதற்காகவே நான் குற்றம்சுமத்தப்படுகிறேன். ஏப்போதும் இது நடப்பதுதான், செய்தி சொன்னவர் தாக்கப்படுவார், அவர் என்ன செய்தியை சொன்னார் என்பது பொருட்டில்லை.

கே: இதற்கொரு தீர்வு சாத்தியமில்லையா?

எ: என்னுடைய எழுத்தில் பகுப்பாய்வு செய்வதற்கும் ஏளனப்படுத்துவதற்கும் எதுவும் இல்லை, இது நிதர்சனத்தின் பேரச்சத்தை வெளிப்படுத்துபவை. மற்ற எழுத்தாளர்களுக்கு மீட்பு சாத்தியமாக இருக்கலாம். என்னுடைய எழுத்து, என்னுடைய வழிமுறை, விமர்சனத்தை அடிப்படையாகக் கொண்டது; கற்பனை உலகத்தை அல்ல.

கே: மிசேல் ஹெனகே போன்றே உங்களுடைய இசை தேர்வு ஒத்திருக்கிறதா?

எ: இசை தேர்வு குறித்து இருவரும் விவாதித்தோம்.  பெரும்பாலான இசை தொடர்பான விடயங்கள் எழுத்திலேயே சொல்லிவிட்டேன்.

கே: மிசேல் ஹெனகேவிடம் கேமரா உள்ளதுபோல், உங்களிடன் கத்தியைப் போன்ற பேனா இருக்கிறது. உங்களுடைய பணியிலும் இந்த ஒற்றுமைகள் இருக்கிறதா?

எ: அதனால்தான் மிசேல் ஹெனகே இந்த நாவலை திரையாக்கம் செய்ய சரியான நபராக இருக்கிறார். ஒரு அறிவியலாளர் பூச்சிகள் குறித்து ஆராய்வதைப் போல நாங்கள் இருவரும் பகுப்பாய்ந்தும் நிதானத்துடனும் செயல்படுகிறோம்.  விலகியிருப்பதைக் காட்டிலும் இரண்டிற்கும் மையத்தில் இருப்பதே சிறந்த நுட்பமாக இருக்கும்.

(எல்ஃபீரிட் ஜெலீனிக் ஆங்கில உச்சரிப்பு. ஜெர்மானிய உச்சரிப்பில் எல்ஃபீரிட் எலினீக்)

One thought on “”என் எழுத்து நிதர்சனத்தின் பேரச்சத்தை வெளிப்படுத்துவது; போர்னோகிராபி அல்ல”: ’த பியானோ டீச்சர்’ நாவலாசிரியர் எல்ஃபீரிட் ஜெலினீக் நேர்காணல்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.