மதுவின் கொலைக்கு நீதி பெறுவது எப்படி?

ம. இராதா கிருஷ்ணன்

ம. இராதா கிருஷ்ணன்

கேரள மாநிலம் அட்டப்பாடியில் இளைஞர் மது கொல்லப்பட்டார். இது குறித்த சமூக ஊடகப் பதிவு நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் செல்பி எடுத்துக் கொண்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் அந்தக் காட்சிகள் வலம் வந்தன. அந்தப் பின்னணியில் பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வந்தன.செய்திகளைத் தொகுத்துப் பார்த்தாலே அதில் உள்ள புனைவுகளும்,உண்மையும் அதன் அரசியலும் தெளிவாகும். எல்லா செய்திகளையும் அது குறித்தும் நான் விளக்கப் போவதில்லை. ஆனால் இச்சம்பவம் குறித்து உள்ளூர் அகாலி காவல்துறையினர் இப்படித்தான் சொல்கின்றனர் “அப்பகுதியில் உள்ள கடைகளில் இரவு நேரங்களில் புகுந்து அரிசி திருடியதாக ஏற்கனவே அவர் மீது 3 வழக்குகள் உள்ளன. இரவு நேரங்களில் நகருக்குள் வந்து அரிசியை திருடிக்கொண்டு காட்டுக்கு சென்று விடுவான். இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை கல்கண்டா பகுதியில் உள்ள கடையில் இருந்து அரிசி திருடியுள்ளான். இதையடுத்து ஒரு கும்பல் காட்டுப் பகுதிக்கு சென்று அவனைப் பிடித்து வந்துள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்று அவனை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு காவல் நிலையம் செல்லும் வழியில் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளான். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் செல்லும் வழியிலேயே அவன் சுய நினைவிழந்து காணப்பட்டான். அவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினார் .

ஏன் மதுவுக்கு இப்படி நேர்ந்தது என்று அறிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் சீர்மரபினர் எனப்படும் ஆதிவாசிகளைப் பற்றியும் அவர்களுக்கு இந்தியாவில் என்ன நிகழ்ந்து கொண்டுள்ளது என்பதை அறிந்திருக்க வேண்டும். விடுதலையடைந்த இந்தியாவில் இப்பிரச்சினை குறித்து நன்கறிந்த போராளி மஹா ஸ்வேதா தேவி வார்த்தைகளிலேயே பாப்போம். அவர் “எப்போதாவது நடக்கும் விபத்து நிகழ்வல்ல. நாம் பாதுகாத்து வரும் கொடூரங்களின் தொடர்ச்சிதான் இது” என்கிறார். மேலும் அவர் “சீர் மரபினராக உள்ள ஆதிவாசிகள் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள நிலையில் வாழ்பவர்கள். வறுமை என்பது அவர்களின் அன்றாட வாழ்வின் எதார்த்தம். சமூகத்தில் உள்ள சில நபர்களின் விருபத்திற்கேற்றவாறு பணி புரிவதற்கான எளிய நபர்கள் அவர்கள். வறுமை, பசி, வேலையின்மை, நிலமின்மை, கல்வியின்மை ஆகியவைதான் அவர்களின் அன்றாட வாழ்கையை வடிவமைக்கின்றன. இந்த சமூகங்கள் வன்முறை செலுத்துவதற்கான எளிய இரைகளாய்உள்ளன. தலித்துகள், சாதி இந்துக்கள், முஸ்லீம்கள் யார் நினைத்தாலும் இவர்களைக் கொல்ல முடியும்” . (14.10.2007 தெகல்கா)

2007 ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் 10 பேர் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்டனர் என்ற ஊடகச்செய்திகள் நாடு முழுதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இச்சூழ்நிலையில் தான் மஹா ஸ்வேதா தேவி இவ்வாறு குறிப்பிட்டார். பிஹார் சம்பவத்தில், திருடர்கள் தொல்லை தாங்க முடியாமல் அந்த கிராம மக்கள் காவல் குழுக்களை ஏற்படுத்தி இரவுக் காவலுக்கு வைத்திருந்ததாகவும், அந்தக் கண்காணிப்புக்குழு கொடுத்த நீதிதான் இந்த தண்டனை என்றும் நாடு முழுதும் இருந்த அத்தனை ஊடகங்களும் ஒரே செய்தியைத் தந்தன. ஆனால் குற்றப்பழங்குடிகளாக ஆக்கப்படோர் மற்றும் அலைகுடி, அரைகுறை அலைகுடி பழங்குடிகள் ஆணையம் 2007, செப்டம்பர்-15,16 தேதிகளில் நேரடி ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தந்தது.

அதன்படி, கிராமத்தில் கண்காணிப்பு குழுவினர் கொடுத்த நீதிதான் இந்த தண்டனை என்று ஊடகங்களில் வந்த செய்தி உண்மையில்லை. அந்தக் குறிபிட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்த திருட்டு சம்பவங்களால் வெறுப்புற்று தாங்களே காவல் குழுக்களை வைத்திருந்தனர் என்று ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால் அது போன்ற காவல் குழுக்களே அமர்த்தப்படவில்லை.

இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டு காயம் பட்டு இருந்த ரஞ்சித் குரேரியிடம் பேசினோம். போலீசார் கொடுத்த மிரட்டலின் காரணமாகவே தான் திருடன் என்று வாக்குமூலம் கொடுத்ததாகக் கூறினார். அதிகாரிகள் மட்டுமின்றி ஊடகங்கள் முன்னாலும் திரும்பத்திரும்ப இந்த வாக்கு மூலத்தைக் கொடுத்துள்ளார். ரஞ்சித் குரேரியிடம் போலீசார் திருடன் என்று ஒப்புக் கொண்டால் விடுவித்து விடுவதாக உறுதியளித்து உள்ளனர். செப்டம்பர் 16 அன்று விடுதலையாகிவிடுவோம் என்று ரஞ்சித் நம்பிக்கையோடு இருந்ததையும் நாங்கள் பார்த்தோம்.

இச்சம்பவம் முடிந்தவுடன் குரோரி நாடோடிச் சமூகம் தொடர்பாக ஆரம்பக்கட்ட போலீசார் விசாரணையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அவர்கள் திருடர்களாய் இருப்பதற்கு வாய்ப்பில்லை என எங்களிடம் பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

2015 ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி ஊடகங்களில் காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் அருகே தேவரியம்பாக்கம் கிராமத்தில் விவசாயி ஒருவர் வீட்டில் கொள்ளையடித்து விட்டு தப்ப முயன்ற சகோதரர்களை அப்பகுதி மக்கள் அடித்துக் கொன்றனர். கொள்ளையர்களை விரட்டியபோது அவர்கள் தாக்கியதால் ஒருவருக்கு கை துண்டானது.ஒருவர் படுகாயமடைந்தார். இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முன் வராததால் போலீசார் தங்கள் சொந்த செலவில் அடக்கம் செய்தனர் என்று செய்திகள் வெளிவந்தன.

ஆனால் கொல்லப்பட்ட இருவரும் வாலாஜாபாத்தில் வீட்டில் இருந்து வெளியே போனபோது காவல்துறை வாகனம் பின் தொடர்ந்ததாகவும்; தாக்குதல்களுக்கு ஆளானவர்களை கிராமத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பியதாகவும்; அப்போது ஒருவர் உயிருடன்தான் இருந்தார் என்றும்; காவல்துறையினர் அவர்களது குடும்பத்தினரை கூட்டிபோய் இது குறித்து எந்தப் பெட்டிசனும் போடக்கூடாது என்று மிரட்டியதாகவும்; உறவினர்கள் உடல்களை அடக்கம் செய்ய சொன்னபோதும் காவல்துறையினர் எரிக்க சொன்னதாகவும்; அந்த செலவிற்கு பின்பு ரூ.15000 வாங்கி கொண்டதாகவும் உண்மையறியும் குழுவின் விசாரணையில் தெரிய வந்தது.

மதுரை மாவட்டம் கூடல் நகரில் வீடு புகுந்து திருடிய கொள்ளையனை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். 2009 ஆண்டில் வெளிவந்த செய்தி ஒன்று இப்படிச் சொன்னது. விரட்டிப்பிடித்த பொதுமக்களாக அந்தப் பகுதியின் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் எல்லாம் வழக்கின் சாட்சியாக இருந்தனர். ஆனால் கொள்ளையடிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட நேரத்திலும் அதற்கு முன்பாக 5 நாட்களும் அந்தக் குற்றம்சாட்டப் பட்ட இளைஞர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் சட்ட விரோத காவலில் சித்ரவதைகள் அனுபவித்துக்கொண்டு இருந்தார் என்பது வழக்கில் உறுதிபடுத்தப்பட்டது.

இப்படியாக ஏராளமான செய்திகள் வரலாற்றின் பக்கங்களில் கொட்டிக் கிடக்கின்றன. செய்திகளுக்கும் உண்மைக்கும் தொடர்பில்லாமல் காவல்துறையும், அரசும் ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்வதின் விளைவாக பாதிக்கப்பட்ட மக்கள் எவ்வளவு பேர்? மேலே சொன்ன தேசிய ஆணையத்தின் கணக்குப்படி 2009 ஆம் ஆண்டில் 11 கோடி, இன்று 15 கோடி.

கல்வியறிவு நிறைந்த கேரளாவுமா? என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது. ஆம், கேரளாவிலும் தான். மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இத்தகைய கொடுமைகளை எதிர்த்து மஹா ஸ்வேதா தேவி 70 களில் இருந்து போராடியதால் தான் மேலே சொன்ன ஆணையம் வந்தது. நாட்டில் பல மாநிலங்களில் அமைப்பாகத் திரண்டுள்ளனர். உண்மை தெரிய வேண்டும் என்றால் இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும் உள்ள சிறைகளுக்குச் சென்று பாருங்கள், குற்றப் பழங்குடியாக்கப் பட்டவர்களின் குடியிருப்புகளுக்கு சென்று பாருங்கள்.

ஏன் இப்படி இவர்களுக்கு மட்டும் இது எப்போதாவது நடக்கும் விபத்தாக இல்லாமல் எப்போதும் நடந்து கொண்டே உள்ளது. எப்போதாவது வேறு வழியன்றி ஊடகங்கள் பேசுகின்றன. நாம் அதிர்ச்சியாகின்றோம். இந்தக் கேள்விகளுக்கு 1830 களில் இருந்து விடை தேட வேண்டியுள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு பொது அமைதியை நிலை நாட்டிக் கொண்டிருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி கொள்ளும் தேவை ஏற்பட்டது. அது லேவாதேவிகாரர்களையும், பெரும்தனக் காரர்களையும், வசதி படைத்தவர்களையும் தங்களோடு இணைந்து இருக்கச் செய்ய உதவும் என நம்பினார்கள். அந்த வழியிலேயே குற்றவியல் நீதி முறைகளையும், நீதி நிர்வாகத்தையும் உருவாக்கினார்கள். போக்கிரிகள் ஒழிப்புச் சட்டம் 1830 , தொடர்ந்து தக்குகள் மற்றும் கொள்ளையர் துறை 1835, இந்திய காவல் சட்டம் 1861, குற்றப் பழங்குடிகள் சட்டம் 1871, ஆயுதச் சட்டம் 1878 இப்படியான சட்டங்களை இயற்றினர். அதில் குற்றப் பழங்குடிகள் சட்டம் இம்மக்களை ஒடுக்குவதில் முக்கியப் பங்காற்றியது. விடுதலை பெற்ற இந்தியா அச்சட்டத்தை ரத்து செய்வதாகச் சொல்லி வேறு பெயர்களில் அதே நடை முறைகளை மேற்கொள்ளும் படியான சட்டங்களை உருவாகிக் கொண்டது.

1932-ஆம் வருடம் ஜெனரல் சர்.ஜார்ஜ் மேக் முன் என்பார் ‘இந்தியாவின் நிழல் உலகம்’ நூலில் குற்றப்பழங்குடிகளும், இனங்களும் என்றொரு கட்டுரை எழுதினார். அதில் “அவர்கள் இந்திய வாழ்வில் மிதக்கும் சேதனப் பொருட்கள். தூக்கி வீசப்பட்ட சுமைகள். களத்தில் விலங்குகள் என்பதற்குக் கூடுதலாக எந்த ஒரு மதிப்புக்கும் தகுதியற்றவர்கள்; இந்த மூட்டைத் திருடர்கள் அனைவரும் பயனற்ற உயிரினங்கள்” என்று எழுதினார்.

மதுரை மாவட்டத்தில் இருந்து சில குடும்பங்களை மொத்தமாகக் கூட்டிச்சென்று 70 நாள் வரை அடைத்து வைத்து கன்யாகுமரி மாவட்ட தக்கலை காவல் ஆய்வாளர் விஜயன் வகையறா சித்திரவதைகள் செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்த செய்தியை பார்த்து ஒருவர் டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டிருந்தார். அவர் காவல்துறை உயர் அதிகாரியாக பணியாற்றியவர். அவர் பணியாற்றிய காலத்தில் அவரது நேர்மை குறித்து இந்த நாட்டின் ஊடகங்கள் அனைத்தும் வானளாவப் புகழ்ந்தன. இப்போது அவர் பாண்டிச்சேரி மாநில ஆளுநராக உள்ளார். இவர் 2016 ஆண்டிலும் கூட ஜெனரல் சர்.ஜார்ஜ் மேக் முன் சொன்னதை வேறு வார்த்தைகளில் சொல்லுகிறார்.

மதுவின் கொலைக்கு நீதி வேண்டும் என்றால் மதுவின் நிலையில் உள்ள அந்த 15 கோடி பேருக்கும் நீதி கிடைப்பதுதான் உண்மையான நீதியாக இருக்க முடியும். எய்தவன் இருக்க கருவியான அந்த கொலைகாரர்களை தண்டிப்பதோடு திருப்தியடைந்தால் குற்றவியல் நீதியின் அநீதிகளுக்கு நாமும் உடந்தை. அரசு, காவல்துறை, ஊடகம், அரசின் நிர்வாக எந்திரம், நீதித்துறை இவைகளின் புனைவுகளில் இருந்து சமூகம் விடுபட்டால் மட்டுமே சாத்தியம். இல்லையேல் எப்போதும் எண்ணற்ற மதுக்களை அடித்துக் கொன்றுகொண்டே தான் இருப்பர். எப்போதாவது நாம் இரக்கப்படுவேம். பின்னர் ஒருநாள் நாமும் மதுவாவோம். ஆகவே குற்றவியல் நீதியின் அநீதிகளை வேரறுக்க செயல்புரிவோம்.

ம. இராதா கிருஷ்ணன், அலை குடிமக்கள் நலச் சங்கத்தின் செயல்பாட்டாளர். ’துரத்தப்படும் மனிதர்கள்’ நூலின் ஆசிரியர்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.