யோ. திருவள்ளுவர்
இந்த எழுச்சி தேவை. இது வெறுமனே சிலையை காக்க அல்ல. இழந்த உரிமைகளை மீட்கவும், இருப்பவற்றை இழக்காமல் பாதுகாக்கவும் தேவை. சரியான பாதைக்கு திருப்பினால் இத்தகைய எழுச்சிகள் உரிமைகளை காக்க துவக்கமாக அமையும். ஆனால் கலவரங்கள் உருவாகாமல், பிளவுகளை உருவாக்குவதை கவனமாகத் தடுக்க வேண்டும். ராஜா மட்டுமல்ல தமிழ்மக்களின் உரிமைகளை மோடியின் காலடியில் விற்கிற அதிமுக அரசுக்கும் பொறுப்புண்டு. அதனால் தான் எச்சு.ராஜாக்களால் இப்படி துள்ளமுடிகிறது.
பெரியாரும், அம்பேத்கரும் எந்த மக்களையும் விலக்கம் செய்யவோ, நீக்கம் செய்யவோ, ஒதுக்கி வைத்து புறக்கணிக்கவோ முயற்சித்தவர்கள் அல்ல. சிலருக்காகவோ, சில சாதிகளுக்காகவோ முளைவிட்டவர்களல்ல. ஒட்டுமொத்த மனித சமத்துவத்தை, மானுட விடுதலையை, சமூகநீதியை, விடுதலையை முன்வைத்து அதற்காக பாடுபட்டவர்கள். அதற்காக பார்ப்பனீயத்தை எதிர்த்தவர்கள். இன்றும் மதவெறியைத் தூண்டி துண்டாடுவது அந்த பார்ப்பனீய சங்கிகளின் கூட்டம் தான். நிகழ்காலத்தில் பார்ப்பனீயம் இந்துத்துவம் என்கிற வடிவத்தோடு வருகிறது.
பார்ப்பனர்களின், ஆதிக்க சாதிகளின் சாதிவெறியை, கடவுளை, மதத்தை அந்த ஆதிக்கத்திற்காக பயன்படுத்துவதை கண்டித்தவர்கள். பார்ப்பனீயம் கடவுளையும், மதத்தையும் வைத்து மனிதர்களை இழிவுபடுத்தி, பேதங்களை உருவாக்கி ஒடுக்கியதை எதிர்க்கவே அவர்கள் வைத்த புராணங்களை, இதிகாசங்களை, கடவுள்களை, சடங்குகளை பெரியார் விமர்சித்தார். சங்கிகளையும் அவர்களது வெறிபிடித்த சாமியார்களையும் போல பெரியார் எந்த கோயிலையும் இடிக்கவில்லை. இடிக்க சொல்லவும் இல்லை.
நீங்கள் கொஞ்சம் அசந்தால் “இந்துத்துவப் பெரியார் ஈ.வெ.ரா” என அரவிந்தன் நீலகண்டன்கள் காவி கிழக்கு வழி புளுகுகளை வெளியிடுவார்கள். பெரியாரை ஒரு ஆழ்வாராக மாற்றி கற்பக்கிரகத்திற்கு இடமாற்றம் செய்துவிட்டுவார்கள்.
சாகும்போது நான் இந்துவாக சாகமாட்டேன் என உறுதிபூண்டு இந்துத்துவ பார்ப்பனீயத்திற்கு எதிராக பௌத்தத்தை தழுவிய அம்பேத்கரை “இந்துத்துவ அம்பேத்கர்” என்று கதைகட்டிய வெட்கம் கெட்ட கும்பலது.
வீதிகளிலும், தெருக்களிலும் நிற்பது தான் அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் அழகு. அவர்கள் நம் நாயகர்கள். இந்த எழுச்சி மூலமாவது தமிழ்நாடு சந்திக்கிற இக்கட்டை உணர்ந்து செயலாற்றுவது கடமை. அம்பேத்கர், பெரியார், அயோத்திதாசர், ஜோதிராவ் பூலே எழுத்துக்களை வாசியுங்கள்.
யோ. திருவள்ளுவர், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.