அண்மையில் திரிபுராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் இடதுசாரி கூட்டணி 25 ஆண்டுகால ஆட்சியை பாஜகவிடன் இழந்தது. ஆட்சியைப் பிடித்த ஓரிரு நாட்களிலேயே பாஜகவினர் இடதுசாரி அரசு நிறுவிய இடதுசாரி புரட்சியாளர் லெனின் சிலையை அப்புறப்படுத்தினர். இந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவி கடும் கண்டனங்களுக்கு ஆளானது.
இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தன்னுடைய முகநூல் பக்கத்தில் ’திரிபுராவின் லெனின் சிலை உடைக்கப்பட்டது, நாளை சாதிவெறியர் ஈவெரா சிலை..” என பதிவிட்டிருந்தார்.
இது சமூக வலைதளத்திலும் தமிழக அரசியல் செயல்பாட்டாளர்களிடையேயும் கடும் கண்டனங்களை ஏற்படுத்தியது.
திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின், கலவரங்களைத் தூண்டும் வகையில் பேசிவரும் எச்.ராஜா கைது செய்யப்பட வேண்டும்’ என தெரிவித்திருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், “பெரியார் சிலையைத் தொட ராஜாவின் முப்பாட்டன் வந்தாலும் முடியாது” என எதிர்வினை ஆற்றியிருந்தார்.
கடும் எதிர்ப்பின் காரணமாக, எச். ராஜா தன்னுடைய முகநூல் பதிவை நீக்கியிருக்கிறார்.