செங்கல்பட்டு மாவட்டம் , உத்திரமேரூர் வட்டம், பாலேசுவரம் கிராமத்தில் செயிண்ட் ஜோசப் இறக்கும் தருவாயிலிருக்கும் ஆதரவற்றோருக்கான கருணை இல்லம் ( St..Joseph Hospice for dying destitutes) இருக்கிறது. இது மருத்துவமனை அல்ல; ஒரு Hospice. இதற்கு தமிழக அரசு அரிசி, சர்க்கரை தவிர வேறு எதுவும் தருவதில்லை.
கடைசி காலத்தில் கைவிடப்பட்ட முதியவர்களை அடையாளம் கண்டு மருத்துவ சிகிச்சை கொடுத்து மனித மாண்போடு இறப்பதற்கு வழிவகை செய்வது இவர்கள் பணி. காவல்துறையும், மருத்துவமனைகளும் இறக்கும் தருவாயில் இருக்கும் ஆதரவற்றோரை இந்த இல்லத்தில் சேர்த்து வருகின்றனர். கூட்டுக் குடும்பங்களின் சிதைவிற்கு ஏற்ப தேவைப்படும் நிறுவனங்களை நமது அமைப்புகள் ஏற்படுத்தவில்லை..
எலும்புகள் விற்கப் படுகின்றன, மனித உடல் உறுப்புக்கள் விற்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்தது. அங்கு அனுமதிக்கப்பட்ட முன்னூறுக்கும் மேற்பட்டோரை பல நிலையங்களில் சேர்த்து விட்டது..அதில் 122 பேர் மனநலம் பாதிக்கப்பட்டோர்; 38 பேர் படுத்த படுக்கையோடு இருப்பவர்கள்; இதில் மாற்று திறனாளிகளும் உண்டு. சொந்த பெற்றோர்களையே கவனிக்காத ஒரு சமூகத்தில் இது போன்ற பணிகளைச் செய்பவர்களை நாம் கும்பிட வேண்டும்.
இது பொன்ற நிறுவனங்களை அரசு ஆய்வுக்கு உட்படுத்துவதோ, குறைகளை களையச் சொல்லி உத்தரவிடுதோ தவறல்ல. ஆனால் இப்போது நடப்பது என்னவென்றால் ” மக்களை பிளவுபடுத்துவதையே தனது முழுநேர தொழிலாக கொண்டவர்களின் ” அழுத்தத்தினால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது சிக்கல் வருகிறது.ஊடகங்கள் தனது பொறுப்புணர்ந்து உரிய பார்வையை பதிவு செய்வதிலிருந்து தவறிவிட்டன.இங்கு அடக்கம் செய்யப்படும் கான்கிரீட் முறை பற்றி பேசவில்லை; சாகப்போகிறவன் மதமாற்றத்துனால் பலனுண்டா ? கிட்டத்தட்ட தினமும் விழும் ஒரு பிணத்தை அடக்கம் செய்யும் அளவுக்கு மாவட்ட சமூக நலத்துறை திறன் பெற்றிருக்கிறதா போன்ற கேள்விகளை ஊடகங்கள் எழுப்பவில்லை.உணர்ச்சி அரசியலே போதும் என முடிவெடுத்து விட்டதோ என்னவோ ?
எனவே திங்களன்று (5.3.18) அன்று சேப்பாக்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக கிறிஸ்தவ அமைப்புகள் அறிவித்து உள்ளன.இது குடிமை அமைப்புகளின் தோல்வியாகும். ஒட்டுமொத்த சமூகத்திற்கு பயன்படும் ஒரு நிறுவனத்திற்காக குரல் கொடுக்க வேண்டியது மத அமைப்புகள் அல்ல ; மாறாக அரசியல் அமைப்புகளே !
‘ எனக்கு இதில் எந்த தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லை. அரசு அனுமதித்தால் தொடர்ந்து இந்த பணியை செய்வேன் ” என்கிறார் இந்த கருணை இல்ல பொறுப்பாளர் தாமஸ். என்ன செய்யப்போகிறது மாவட்ட நிர்வாகம்.
– பீட்டர், அகில இந்திய சிறுபான்மை பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு.