நக்கீரன்

காவிரி மேல்முறையீட்டு வழக்கில் தமிழக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நிலத்தடி நீர் 10 டிஎம்சி இருப்பதை நடுவர் மன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்று உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. முன்பு கிருஷ்ணா ஆற்றுநீர் நடுவர் அறிக்கையிலும் நிலத்தடி நீர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லைதானே? விடுதலைக்குப் பின்னர் இந்திய ஒன்றியத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைப்பெற்ற சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தில் அந்தந்த நாட்டில் இருக்கும் நிலத்தடி நீரை அந்தந்த நாடுகளே பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற கொள்கையைத்தானே கடைப்பிடித்திருக்கிறார்கள்? காவிரியில் மட்டும் இந்தக் கணக்கு எப்படித் திடீரென முளைத்தது? சரி இதே நிலத்தடி நீர் கணக்கு கர்நாடகத்திலும் எடுக்கப்பட்டதா?
இன்று நேற்றல்ல பல்லாண்டுகளாகவே தஞ்சை காவிரி வடிநிலப்பகுதியில் நிலத்தடி நீர் மிகையாக இருக்கிறது என்கிற கருத்தே இந்திய பொதுப் புத்தியில் நிலவி வருகிறது. 1972-ல் காவிரி சிக்கல் தொடங்கிய போது டாக்டர் கே.எல்.ராவ் ஏற்பாட்டின்படி காவிரிக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழு உறுப்பினர்களுக்கும் இதே கருத்துதான் இருந்தது. இந்நிலத்தடி நீரை பயன்படுத்தி ஆற்றுநீர் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் கருதினர். அப்போது தஞ்சை வடிநிலத்தில் ஐ.நா. அமைப்பின் வளர்ச்சி திட்ட வல்லுநர்கள் நடத்தி முடித்திருந்த ஆய்வுகளின் முடிவுகளே அதற்குக் காரணமாக இருந்தது. இத்தனைக்கும் அது ஒரு தோராயமான கணக்கே ஆகும். ஐநா குழுவினர் 3000 சதுர மைல் பரப்புள்ள தஞ்சை வடிநிலத்தில் 60 குழாய்கள் மட்டுமே இறக்கி இந்த ஆய்வைச் செய்திருந்தனர்.
ஆனால் மேற்படி ஆய்வின் ஒரு முதன்மையான செய்தியை காவிரிக் குழுவினர் கருத்தில் கொள்ளவில்லை. மேட்டூர் நீரை தஞ்சை நம்பியிருப்பது ஜூனில் இருந்து அக்டோபர் வரையான குறுவை சாகுபடிக் காலத்தில்தான். அக்காலம் இப்பகுதியில் மழை குறைவான காலம். ஜூனில் மேட்டூரிலிருந்து வரும் நீர் வாய்க்கால்களில் ஓடிய 15 நாட்களுக்குள் காவிரி வடிநிலப் பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விடும். வயல்களில் கட்டும் நீர் விரைவில் கீழே மண்ணுக்குள் இறங்காது. ஏனெனில் கீழ்மட்டத்தில் உள்ள மணற்பாங்கான ஊற்று மண்ணுக்கும், மேலேயுள்ள உழுத மண்ணுக்கும் இடையில், கனத்த தகடு விரித்தாற்போலக் களிமண் திரை விரிந்து கிடக்கிறது. இத்திரை வயலில் கட்டிய நீரை, விரைவில் கீழே இறங்காமல் தடுத்துவிடும். பின் எப்படி நிலத்தடி நீர் ஊறும்?
களிமண் திரைக்கு நேர்மாறாக வாய்க்கால்களின் படுகைக்குக் கீழே மணற்பாங்காக இருக்கும்; இதனால் வாய்க்கால் வழியே பாயும் நீர் இங்கு விரைவில் கீழிறங்கிவிடும். வாய்க்கால் பகுதிக்கும், வயல்களுக்கு அடியிலுள்ள ஊற்றுமண் பகுதிக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. இதனால் வாய்க்காலடி நிலத்தடி நீர் களிமண் திரைக்கு அடியிலுள்ள ஊற்றுமண் பகுதிக்கு பாய்ந்து அதை மிக விரைவில் நிறைத்துவிடும். ஆகவேதான் ஜூன் மாத்தில் நீர் வந்தவுடன் இங்கு நிலத்தடி நீர் மட்டம் மேலேறிவிடும்.
அப்போதைய கணக்கின்படி ஜூனில் மேட்டூர் திறந்த நாலரை மாதங்கள் வரை கல்லணையிலிருந்து தஞ்சை வடிநிலப் பாசனத்துக்கு அனுப்பப்படும் நீரின் அளவு சராசரி 20,000 கோடி கன அடியாக இருந்தது. இதில் ஐ.நா. வல்லுநர்களின் ஆய்வின் அடிப்படையில் பயிர்களின் தேவைக்காக வயலில் கட்டப்பட வேண்டிய நீரின் அளவு 11,000 கோடி கன அடி. மீதியுள்ள 9,000 கோடி கன அடி நீர் வாய்க்கால்கள் வழி நிலத்தடி நீராக மாறும். இந்த ஆய்வு சொல்லாமல் சொன்ன செய்தி என்னவெனில் ‘ஆற்றில் நீர் வந்தால்தான் தஞ்சை வடிநிலப் பகுதியில் நிலத்தடி நீர் தங்கும்’ என்பதே. ஆனால் காவிரிக் குழுவினரோ இந்தக் கணக்கை மனதில் கொண்டு 11,000 கோடி கன அடி நீரை மட்டும் மேட்டூருக்கு அனுப்பினால் போதாதா என்று கருதினர்.
காவிரி வடிநில நிலத்தடி நீர் என்பது குறுவை சாகுபடிக்கான நாற்றுகளை மேட்டூர் திறப்புக்கு முன் தயார் செய்யவும், தாளடிப் பருவத்தின் கடைசியில் ஏற்படும் நீர்ப்பற்றாக்குறையைச் சமாளிக்கவும், பருவமழைக் குறைவினால் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் பயன்பட்டது. இத்தனைக்கும் அன்று இன்று போல் 50% நம்பிக்கைத் தரத்தில் அல்லாது 75% நம்பிக்கை தரத்தில் நீர் வந்து கொண்டிருந்த காலம். மேலும் கர்நாடகம் காவிரியின் குறுக்கே கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளைக் கட்டியிராத காலம். ஆனால் இன்றைய காலக்கட்டம் எப்படிப்பட்டது?
காவிரி ஆற்றில் நீர் வராது போனால் தஞ்சைப் படுகையின் நிலத்தடி நீரும் வறண்டுப் போகும் என்கிற உண்மையைக் கடந்த ஆண்டு வறட்சி எடுத்துச் சொன்னது. பசுமை புரட்சியின் வேதியுப்புத் தாகத்தால் நிலத்தடி நீர் ஏற்கனவே வறண்டிருக்கிறது. பல இடங்களில் நீர் உப்பாகிவிட்டது. நிலத்தடி நீரை ஈர்க்கக்கூடிய மணல் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டது. ஐட்ரோகார்பன் திட்டம் வேறு நிலத்தடி நீரை அதிவேகத்தில் உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. பெங்களூர் நகரக் குடிநீரைப் பற்றிக் கவலைப்பட்ட நீதிமன்றம் இதே காவிரியிலிருந்துதான் கொள்ளிடம், வீராணம் திட்டங்கள் வழியாகச் சென்னையும் குடிநீர் பெறுகிறது என்பதை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை?
இந்தத் தீர்ப்பு அன்று காவிரி ஆய்வுக் குழுவினர் கேட்ட ஒரு கேள்வியை நினைவு படுத்துகிறது. காவிரி பாசனத்தில் குறுவை, தாளடி, சம்பா என்கிற மூன்று போகங்கள் உண்டு. ஜூன் மாதம் குறுவை சாகுபடித் தொடங்கும். அதன் அறுவடைக்குப் பின்னர்த் தாளடி சாகுபடி தொடங்கி ஏறக்குறைய பிப்ரவரியில் அறுவடைக்கு வரும். சில இடங்களில் இடையில் ஒரு போகமாக மட்டும் சம்பா பயிரிடப்படும். இப்போது குறுவையே போனதால் அதைத் தொடர்ந்து வரும் தாளடியும் இல்லை என்றாகிவிட்டது. பெரும்பாலான இடங்களில் சம்பா சாகுபடி மட்டுமே. நிலத்தடி நீர் பற்றாக்குறையால் இதுவும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறது..
இத்தீர்ப்பு இல்லாத ஊருக்குப் போகாத வழியைக் காட்டுவது போல் உள்ளது. இது அன்றைய காவிரி ஆய்வுக் குழுவினர் தமிழகக் காவிரிப்படுகையின் நிலவியல் அமைப்பை புரிந்துக் கொள்ளாது தமிழக அதிகாரிகளிடம் எழுப்பிய கேள்வியை ஒத்திருக்கிறது. “நீங்கள் குறுவை சாகுபடியைத் தாளடிக்குப் பின்னால் வைத்துக்கொண்டால் என்ன?”
இத்தீர்ப்பை அடுத்த 15 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாதாம். இக்காலக்கெடு முடிந்து இன்னொரு வழக்கு இன்னொரு தீர்ப்பு என்று வரும்போது அடுத்து நிலத்தடி நீரை மட்டுமல்ல வான் மழையையும் அடுத்திருக்கும் வங்காள விரிகுடா நீரையும் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
நக்கீரன், எழுத்தாளர். சூழலியல் தொடர்பாக பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். சூழலியல் சார்ந்த களப்பணிகளையும் போராட்டங்களிலும் பங்கெடுத்து வருகிறார்.