பண்டிதர் அயோத்திதாசர், புரட்சியாளர் அம்பேத்கர் மற்றும் பெரியார்!!!

பிரபாகரன் அழகர்சாமி

பெரியாருக்கு எதிராகவோ போட்டியாகவோ மாற்றாகவோ, அம்பேத்கரை கொண்டுவந்து நிறுத்துவது, கூடவே இப்போது அயோத்திதாசரை கொண்டுவந்து நிறுத்துவது போன்ற வேலைகளை , அறிவிஜீவிகள் என்று கருதப்படுகிற சிலர் பெரிய கடமையாக செய்துகொண்டிருக்கிறார்கள்!

தமிழக சூழலில் பெரியார் அதிகம் விவாதிக்கப்படுவதும் அதிகம் முன்னிலைப்படுத்தப்படுவதும் மிகவும் இயல்பானதும், தவிர்க்கவே முடியாததும் ஆகும்! பெரியார் ஒரு தனிநபர் ஆளுமையாக மட்டுமே விளங்கியவர் அல்ல. அவர் முழுக்க முழுக்க ஒரு இயக்கவாதி. தன்னுடைய கருத்துகளையும் கொள்கைகளையும் ஊர் ஊராக சுற்றித்திரிந்து பரப்பியவர். அதற்காக இதழ்கள் பலவற்றை நடத்தியவர். ஊர்தோறும் தன் இயக்கத்திற்கு கிளைகள் அமைத்து வலுவாக்கியவர். தன்னுடைய கருத்துகளையும் கொள்கைகளையும் மக்களிடம் கொண்டு சென்று பேசுவதற்கும் எழுதுவதற்கும் வலிமைமிக்க ஆளுமைகளை தன் காலத்திலேயே உருவாக்கி அவர்களை வளர்த்தெடுத்தவர். சமரசமற்ற போராட்டங்களை முன்னெடுத்து அதில் வெற்றிகள் பலவற்றை தன் காலத்திலேயே கண்டவர். அவர் தோற்றுவித்த இயக்கமும், வளர்த்தெடுத்த உணர்வுகளும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது!

இன்னொருபுறம் பண்டிதர் அயோத்திதாசர் பற்றி நமக்கு தெரிந்ததெல்லாம், அவர் சமூக விடுதலைக்கான வழியாக பவுத்த மதத்தை தேர்ந்தெடுத்தார் என்பதுதான். அவரை தீவிரமாக அதரிப்பதாக சொல்பவர்களும், அவர் குறித்து அறிந்து வைத்திருப்பது இதை மட்டும்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், வல்லலார் போல, வைகுண்டர் போல ஒரு ஆன்மீகத் தீர்வை முன்வைத்த பலருள் அயோத்திதாசரும் ஒருவர். அந்த அளவில் அவருக்குறிய முக்கியத்துவத்தை நாம் மதிப்பிடுவதில் தவறெதுவும் இல்லை.

அயோத்திதாசரை பார்த்து உந்துதல் பெற்று பொதுவாழ்க்கைக்கு வந்தவர் அவருடைய உறவினரான இரட்டைமலை சீனிவாசனார். அம்பேத்கருடனும் நெருங்கிப்பழகக்கூடிய வாய்ப்பினையும் பெற்றவர். ஆனாலும் இரட்டைமலை சீனிவாசன் பவுத்த ஆன்மீகப் பாதையை ஏற்கவில்லை. 85 ஆண்டுகாலம் வாழ்ந்தவர், அதிலும் 55 ஆண்டுகாலம் அயோத்திதாசருடன் பழகக்கூடிய வாய்ப்பினை பெற்றவர், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக பல தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். ஆனாலும், அயோத்திதாசர் பற்றிய எந்தவொரு குறிப்பிடத்தகுந்த பதிவினையும் இரட்டமலை சீனிவாசன் செய்யவும் இல்லை, தன்னை அவருடைய கொள்கை வாரிசாகவும் அறிவித்துக்கொள்ளவும் இல்லை!

அயோத்திதாசராக இருந்தாலும் சரி, அம்பேத்கராக இருந்தாலும் சரி, அவர்கள் தங்கள் வாழ்நாளில் நம்முடைய சமூகத்திற்காக உழைத்த உழைப்பு, செய்த சாதனைகள் போன்றவை ஒருபுறம் இருந்தாலும், இவர்களை பின்பற்றுபவர்களாக சொல்கிறவர்கள் இப்போது இவர்களை முன்னெடுப்பது பவுத்த மதத்தை முன்னிட்டு என்று நாம் எடுத்துக்கொள்ளலாம்.

பெரியாரிய இயக்கங்கள், பவுத்த மதத்திற்கு மாறும் செயலை தவறான ஒன்றாக இப்பவும் சொல்லவில்லை. ஆனாலும், நாம் என்னதான் பவுத்தம் ஒரு பகுத்தறிவு மார்க்கம் என்று சொன்னாலும், நடைமுறையில் பவுத்தம் இன்னொரு பலவீனமான மதமாகதான் இருக்கிறது என்பதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்து மதத்தை வீழ்த்தக்கூடிய வலிமையை அது பெற்றிருக்கவில்லை, அதனாலேயே அது சனாதன/பார்ப்பன இந்துமதத்திடம் பலமுறை தோற்றிருப்பதை நாம் வரலாறு நெடுகிலும் பார்க்க முடிகிறது! இவ்வளவையும் மீறி, பவுத்த மதத்தை மீட்டெடுத்துவிட முடியும் என்று யாராவது முயற்சித்தால், அவர்களுக்கும் நாம் முடிந்தவரை ஒரு அரணாக இருந்து ஆதரிக்கவே கடந்தக்காலத்திலும் முயன்றிருக்கிறோம்.

இந்து / இந்திய சமூகச் சிக்கலுக்கு ஆன்மிக வழியிலான தீர்வு என்பது ஒன்றும் புதிய செய்தியல்ல. மாறாக அதுதான் காலந்தோறும் நடந்துவந்திருக்கிறது. பண்டைய காலத்தில் தோன்றிய பவுத்தமும், சமணமும் ஆனாலும் சரி, சிலநூற்றாண்டுகளுக்கு முன்பு வடநாட்டில் தோன்றிய சீக்கியம் ஆனாலும் சரி, தென்னிந்தியாவில் தோன்றிய வல்லளார், வைகுண்டர், நாராயணகுரு போன்றவர்களும் சரி, அந்த வரிசையிலேயே அயோத்திதாசரும் அம்பேத்கரும்கூட, ஆன்மீக வழியிலான தீர்வினைதான் முன்வைத்தார்கள்.

ஆனால், இவர்கள் எல்லோரிடம் இருந்தும் பெரியார் அந்த புள்ளியில்தான் மாறுபடுகிறார். அவர் நாம் இழந்த பழைய ஏதோ ஒன்றை மீட்டெடுக்கும் வேலையை ஒருகாலத்திலும் செய்தவரில்லை! அவர் முழுக்க முழுக்க புதுமைவிரும்பியாக இருந்தார்! பார்ப்பன / ஜாதிய / ஆணாதிக்க சமூகத்தை முற்றிலும் ஒழித்து அறிவின்பாற்பட்ட புதுமை சமூகத்தை படைக்கவே அவர் விரும்பினார். நம்பிக்கையின்பாற்பட்ட ஆன்மீக சமூகம் குறித்த திட்டம் எதுவும் அவரிடம் இருக்கவில்லை! தன்னுடைய கருத்துகளுக்கும் தேவையில்லாத ஒரு காலம் உருவாகும், அதைதான் தானும் விரும்புவதாக சொன்னவர் அவர்! இந்த அறிவியல்பூர்வமான அனுமுறையால்தான் பெரியார் இன்றும் விவாதிக்கப்படுகிறார், முன்னெடுக்கப்படுகிறார். அவருடைய கொள்கைகளின் தேவைகள் உணரப்படுகின்றன. இதே காரணத்தால்தான், மற்றவர்கள் அதிகம் விவாதிக்கப்படுவதும் இல்லை!!!

பிரபாகரன் அழகர்சாமி, கருத்தாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.