பீட்டர் துரைராஜ்

பட்டேல் அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் மட்டுமே மதிக்கப்படுகிறார்; போஸ் வங்காளத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் நினைவு கூறப்படுகிறார் என்று சொல்ல முடியாது; ஆசாத் முஸ்லிம்களாலும், முஸ்லிம் அல்லாதவர்களாலும் மறக்கப்பட்டு விட்டார். வலதுசாரிகளாலும், இடது சாரிகளாலும் நேரு விமர்சிக்கப் படுகிறார்; காந்தி குறிப்பிடத்தக்க அளவுக்கு மக்களால் மதிக்கப்படுகிறார் என்றாலும் பெரும்பாலானவர்கள் மீது அவர் தாக்கத்ததை தருகிறார் என்று சொல்ல முடியாது. இன்றைக்கு அம்பேத்கர் மட்டுமே நாடெங்கிலும் கொண்டாடப்படும் தலைவராக இருக்கிறார். அவரது பிறந்த நாளை மக்கள் செலவழித்து இந்தியா முழுமையும், சிறு கிராமங்களில் கூட கொண்டாடி வருகிறார்கள் ” என்கிறார் வரலாற்று ஆய்வாளர் இராமச்சந்திர குஹா.
“அம்பேத்கரை படிக்க, படிக்க எனக்கு அவர் மீதான ‘விருப்பமும்”விமர்சனமும்’ ஒருங்கே வளரத் தொடங்கியது” என்று கூறும் ரங்கநாயகம்மா எழுதிய நூல் “சாதிப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது,அம்பேத்கரும் போதாது, மார்க்ஸ் அவசியம் தேவை”. 2000-ம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளிவந்துள்ள இந்நூல் இதுவரை 10 பதிப்புகளை கண்டுள்ளது. இதனை ஆங்கிலம் வழியாக தமிழில் மொழி பெயர்த்துள்ளார் கொற்றவை. தமிழில் வெளியான ஆண்டே (2016) இரண்டாம் பதிப்பை கண்டுள்ளது. பாட்டாளி படிப்பு வட்டம் சென்னையில் இதற்கு ஒரு கூட்டத்தை நடத்தியது. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த நூலைப் படித்தேன். பக்கங்கள் அதிகமென்றாலும்(416), அனைவரையும் சென்று சேரும் வகையில் மலிவாக (ரூ.80) கிடைக்கிறது. அம்பேத்கரை அனைவரும் வியந்தோதும் இந்தக் காலகட்டத்தில் அவர் பற்றிய விமர்சன பார்வையை இந்நூல் முன் வைக்கிறது. இது படிக்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய நூல் என்பதில் சந்தேகம் இல்லை.
சாதி பிரச்சினைப் பற்றி அம்பேத்கர் நிறைய பேசியுள்ளார்; எழுதியுள்ளார்.” அம்பேத்கரின் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்ட ‘தலித்’ பிரச்சினை தொடர்பான விவாதம் இது’ என்று சரியாகவே இந்நூல் பற்றி அதன் முன்னுரையில் கூறுகிறார் ஆசிரியர்.அம்பேத்கர் சாதி குறித்து என்னவெல்லாம் பேசியுள்ளாரோ அதை அனைத்தையும் நூல் ஆராய்கிறது. அவருடைய வார்த்தைகளே மேற்கோள் காட்டப் படுகின்றன. இது ஒரு சிரமமான பணி . மொழிபெயர்ப்பாளர் கொற்றவை உண்மையிலேயே பாராட்டத்தக்கவர்.
மார்க்சியம் குறித்து அம்பேத்கர், அம்பேத்கரின் பொருளாதாரம், அரசியலமைப்புச் சட்ட உருவாக்கத்தில் அம்பேத்கரின் பாத்திரம், அம்பேத்கரை பொறுத்தவரை சாதிகள் எப்படி தோன்றின போன்ற இருபது தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
பல செய்திகளை வெகு கூர்மையாக முன் வைக்கிறார்; நம்மை யோசிக்க வைக்கிறார். தருக்கப் பூர்வமான வாதங்களை வைக்கிறார். கடுமையான மொழியில், மிகக் கடுமையான மொழியில் பேசுகிறார் ரங்கநாயகம்மா.
1936 ல் ஜாத் – பத்- தோடக் மாநாட்டில் (1936) அம்பேத்கர் பேச இருந்த ” சாதி ஒழிப்பு ” கட்டுரை புகழ் பெற்றது. இது குறித்து ரங்கநாயகம்மா சொல்கிறார் “அவர்கள் (மண்டல்) சாதி ஒழிப்பிற்கு மட்டுமே ஒரு அமைப்பை தொடங்கி இருந்தார்கள். மத ஒழிப்பு அவர்களின் நோக்கம் இல்லை. அந்தக் கால கட்டத்தில் மதம் மாறும் அவசியம் ஏதும் அம்பேத்கருக்கு இல்லை. அதன்பிறகு 20 ஆண்டுகள் வரை மதமாறவில்லை. மதம் மாற வேண்டும் என்று முடிவு செய்தால் அதை பத்திரிக்கை வாயிலாக அறிவித்து இருக்கலாம். அந்த மண்டலில் அறிவிக்காவிட்டால் தலித் மக்களுக்கு நேரவிருக்கும் இழப்பு என்ன?”
சமூக மாற்றம் வேண்டும், சாதி ஒழிய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் ரங்கநாயகம்மா எழுதும் விமர்சனங்களை நேர்மறையாக பார்க்க வேண்டும் என்றே தோன்றுகிறது.
“பொருளாதாரச் சுரண்டல் என்றால் என்னவென்று அம்பேத்கர் விளக்கவில்லை; சொத்துறவு தொடர்பான விஷயத்தில் அம்பேத்கரும், காந்தியும் ஒன்று போல சிந்திக்கின்றனர். இரண்டு பெரும் சொத்துள்ள வர்க்கத்திற்கு ஆதரவானவர்கள் ” என்கிறார் ஆசிரியர். “மார்க்சியம் என்றும் மனிதர்களை பன்றிகளாக மாற்றுகிறது என்று சொல்லும் அளவுக்கு அம்பேத்கரின் மார்க்சிய எதிர்ப்பு சென்றது” “மார்க்சியத்தைப் பற்றி பேசியுள்ள எந்த சந்தர்ப்பத்திலும் அவர் அதுகுறித்த அறிவோடு பேசி இருக்கிறார் என்று சொல்லுவதற்கில்லை” என்கிறார். மார்க்சியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வது அவரது வாழ்நாள் குறிக்கோளில் ஒன்றாக இருந்திருக்கிறது” என்கிறார்.
அம்பேத்கருக்கு புத்தர் மேல் மிகுந்த மரியாதை இருக்கிறது. அது குறித்து நிறைய எழுதியிருக்கிறார் இந்நூலாசிரியர் “புத்தர் சொத்து படைத்த வர்க்கத்திற்கு ஆதரவாக இருந்தார்” என்று சொல்லுகிறார். இதனை பல பக்கங்களில் அம்பேத்கரின் தொகுப்புகள் வழியே பேசுகிறார்.
‘அரசியலமைப்புச் சட்டத்தை வரைவதில் அம்பேத்கர் பாத்திரம்’ என்ற தலைப்பில் “தன்னுடைய வாயைத் திறக்கும் போதெல்லாம் ஜனநாயகம் பற்றிப் பேசிய இந்தப் பெருமகனார் இந்த அரசியல் நிர்ணய சபையின் ஜனநாயகமின்மைப் பற்றி கவலைப் படவில்லை என்கிறார். ‘நிலப்பிரபுக்கள், முதலாளிகள் மற்றும் அம்பேத்கரின் பார்வைகள் ஒன்றாக இருக்கலாமா’ என்கிறார். அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான விமர்சனத்தை அம்பேத்கர் கடுமையாக எதிர்த்ததை கேள்வி கேட்கிறார். ‘ஒரு சாதாரண குமாஸ்தா கூட இந்த வேலையை செய்துவிட முடியும்’ என தடாலடியாக கூறுகிறார். பம்பாயில் காங்கிரஸ் ஆதரவு இல்லாததால் முஸ்லிம் லீக் உதவியுடன் வங்காளத்தில் நின்று அம்பேத்கர் வெற்றி பெற்றார். பின்னர் காங்கிரசுக்கு ஆதரவாக எப்படி நண்பரானார் என்று வியக்கிறார். இரண்டு தரப்பு சித்தாந்தங்களும் (காங்கிரசு, அம்பேத்கர்) ஒன்றானது எப்படி என வியக்கிறார்.
தலித்துகளின் பிரதிநிதியான ஒருவருக்கு எப்படி மார்க்சியம் அத்தனை பகைமைக்குரியதாக மாறியது? அவருடைய பாதைகள் தலீத்துகளின் நலனோடு ஒன்றியவை அல்ல. முதலாளித்துவ பார்வையே அவரைக் கவர்ந்தது என்கிறார்.
‘அம்பேத்கர் மதச் சடங்குகளை விளக்குகையில் ஒரு பரவச நிலையை அடைகிறார். அவருடைய ஆய்வுக்கே கூட இது உகந்ததாக இல்லை; ஒரு இடத்தில் கூட மத சடங்குகளின் பால் விமர்சன பார்வையை வெளிப்படுத்தவில்லை. பிராமணர்கள் விளக்கும் அத்தகைய சடங்குகள் மீது அம்பேத்கருக்கு மிகுந்த ஆர்வமும், ஈர்ப்பும் இருக்கிறது ‘என்று ‘பிராமண இலக்கியமா ? நிலப்பிரபுத்துவ இலக்கியமா?’ என்ற அத்தியாயத்தில் கூறுகிறார்.
பூனா ஒப்பந்தம், காந்தியின் கோவில் துழைவு போராட்டம், தலித் இயக்கங்கள் நடத்திய பல்வேறு போராட்டங்கள் என பல விவரங்கள் இந்நூலில் பேசப்படுகின்றன. வாடகை, வட்டி, இலாபம் மூலம் சுரண்டல் நடைபெறுகின்றது; இது குறித்து அம்பேத்கரின் பார்வை குறையுடையது என்கிறார். புத்தரைப் பொறுத்தவரை வறுமை, செல்வமுடைமை ஆகியவை இருள், ஒளி போன்று இயற்கையானவை என்று அம்பேத்கர் சொல்வது பற்றி விமர்சிக்கிறார்.
மொத்தத்தில் இந்த நூல் அம்பேத்கரைப் பற்றி (அவரது வார்த்தைகள் மூலமாகவே) பேசுகிறது. சமூக மாற்றம் வேண்டுவோர் இந்த நூலைப் பற்றி பேசுவதும், விவாதிப்பதும் அவசியம். அம்பேத்கர் எழுத்துக்களை படித்தவர்களுக்கு இந்த நூல் ஒரு புதிய வெளிச்சத்தை கொடுக்கும் என்பது உறுதி.
நூல் 416 பக்கம்/ரூ.80/குறளி பதிப்பகம்(9500150047), kotravaiwrier@gmail.com.
பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.
அவசியம் படித்தாக வேண்டிய நூல் என்கிற தூண்டலை இந்த அறிமுகம் உண்டாக்குகிறது.
LikeLike