ஒடியன் லட்சுமணன்

மற்ற பொழுதுகளைவிட, பனிபடர்ந்த அதிகாலைநேரங்கள் வாசிப்புக்கு உகந்ததாக இருக்கிறது .
இந்தநேரத்தில் நிகழும் வாசிப்பு பாந்தமாக மனதோடு ஒட்டிக்கொள்வதை, அந்த கதாபத்திரங்கள் விருந்தினர்போல் நம்மோடே சிலகாலம் தங்கியிருப்பதை பலமுறை உணர்ந்திருக்கிறேன்
அப்படிவாசிக்கப்படுகிற சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர் உங்கள் பிரபலப் பட்டியல்களில் இருக்கவேண்டிய அவசியமில்லை. அவர்கள் உங்களுக்கு அனுக்கமானவராக இருக்க வேண்டியதில்லை.
ஏதுமற்ற மக்களோடு நெருங்கி நிற்பவராக , அன்றாடம் அவர்களை உள்வாங்குபவர்களாக, அவர்கள் வாழ்வின்மீது 50 சதமானம் கரிசனம் உள்ளவர்களாக இருந்தால் போதுமானது.
தன்னியல்பான அவர்களின் எழுத்துக்கள் இந்த உலகைப்பார்ப்பதற்கு புதிதாக ஒரு ஜோடிக்கண்களை வழங்கிவிட்டுப் போய்விடுகிறது
மேலும் மூன்று சூரியன்களையும் சிலநிலவுகளையும் 7 நட்சத்திரங்களையும் உங்கள் வாசற்படியில் நிறுத்திவிட்டுப்போய்விடுகிறது.
அப்படித்தான் இன்றைய காலையை நாணற்கடனின் Saravanan Naanal ‘அப்பாவின் விசில் சத்தம்’ எழுப்பிவிட்டிருக்கிறது,
குமரியில் இயங்கும் கீற்று வெளியிட்டிருக்கிற அப்பாவின் விசில்சத்தம் ஒரு அணுக்கமான குறுங்கதைத் தொகுப்பு
இதில் வருகிற ஒவ்வொரு கதையும் ஏதாவதொரு வகையில் முக்கியத்துவம்வாய்ந்தவைகளாக இருக்கிறது
அப்பா நோய்தாக்கி படுத்த படுக்கையாகிவிடுகிறார். எப்போதும் ஓடிக்கொண்டிருந்த அவருக்கு இப்படியொரு நிலைவரும் என்று யாரும் கனவிலும்கூட நினைத்ததில்லை. தன் சின்ன சின்ன தேவைகளுக்குக்கூட ,முற்றத்திலோ அடுத்த அறையிலோ இருக்கும் முருகேசனையோ மனைவி சாத்தியம்மாளையோதான் அவர் அழைக்கவேண்டும் ஆனால் அவரால் அழைக்கமுடியாதாபடிக்கு வாய்க்கோணல் சிரமப்படுத்துகிறது. நாக்கு குழறிக்குழறிப்போகிறது. மாமாவின் யோசனையில் இப்போது கயிறோடு கட்டப்பட்டு கழுத்தில் போட்டுக்கொள்ள ஒரு விசில் தரப்பட்டிருக்கிறது.
அப்பா அவ்வப்போது விசில் ஊதுகிறார்
ஊதும் விசிலின் சத்தம் மகனுக்கு எப்போதும் ஒன்றுபோலவே கேட்கிறது ஆனால்.அம்மா.அதன் லயம் ஏற்றம் இறக்கம் ஆகியவற்றைக்கொண்டு அது எதற்கான விசில்சத்தம் என்பதை பிரித்து அறிவதில் தொடங்கும் இந்தச்சிறுகதை அதியற்புதமான உணர்வலைகளையெழுப்பவிட்டுப் போகிறது. கவிச்சி வீசும் அந்த அறையை விவரணைகள் அதிகமின்றி எளிதாக மூளைக்குள் கொண்டு நிறுத்திவிடுவதில் நாணல்காடன் வெற்றிபெற்றுவிடுகிறார் அவருடைய தனித்துவமாய், இதை, நான்,அவரின் பிற கதைகளிலும் பார்க்கிறேன்.
கதையின் போக்கிற்கு ஏற்ப வேகமும் தேவைப்பட்ட இடங்களில் நிற்கவும் செய்யும் நாணலின் நடையானது அலாதியாகவும் மிகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது.
.
மேசனாக இருந்த நடேசன் விபத்து ஒன்றில் மரணமடைந்துவிடுகிறார்.பார்வதி இனி குழந்தைகளைக் கரை சேர்க்க வேண்டும். அவர் இறக்கும்வரை வேலைக்குப் போகாத பார்வதி மலைமேல்உள்ள பழையகோட்டை ஒன்றின் மராமத்துப்பணிக்கு தினக்கூலியாக வேலைக்குப்போக ஆரம்பிக்கிறாள்.
இப்படியான பார்வதிகளை நானும் நீங்களும் ஏதாவது ஒரு சந்தர்பத்தில் எங்காவது சில இடங்களில் கட்டாயம் நாம் சந்தித்திருக்கக்கூடும் அவளோடு நமக்கு ஏதாவதொரு பந்தம் இருக்கவேண்டும் இல்லையென்றால் வாசிப்பதை விட்டுவிட்டு இரண்டாம் மண்டபம்வரை கலவையைக்கொண்டுபோய் ஒரு நடைபோட்டுவிட்டு வரமுடிந்திருக்காது
பெண்ணிற்கான பிரத்யேக உடல் வலியை இரக்கம் கோராமல், வார்த்தைகளைப்போட்டு செடிசெடியென்று செடியாமல், ஒரு வெடிப்பை நமக்குள் கடத்திவிடுகிறார்.
வலிமிகுந்த ஒரு வாழ்வை மிகக்குறுகிய பக்கங்களில் எழுதும் வல்லமை வாய்த்திருக்கிறது நணலுக்கு.
2.2.2018 லிருந்து எல்லா எழுத்துகள் மறைந்துபோனால் எப்படி இருக்கும்? அப்படி ஓர் ஊரை இதில் காட்சிப்படுத்துகிறார்.
ஊருக்கு வந்து சேர்ந்த தினத்தந்தியை பிரிக்கிறான் சின்ராசு.
அப்படியே கொத்துக்கொத்தாய் எல்லா வார்த்தைகளும். புகைபட்டுக்கருகிய தேனீபோல் கருகி கீழே விழுந்துவிடுகிறது.
சிறுவர்மலர் இணைப்புடன் வந்த தந்தி இப்போது முழு நீள வெள்ளைத்தாளாய் கைகளில் நிற்கிறது. இப்படி போர்டில் எழுதப்பட்ட எழுத்து வீட்டுப்பாடம் எழுதிவந்த நோட்டு ஏன் 2000 ரூவ தாளில் உள்ள எழுத்துகளும்கூட. மாயமாகி வெள்ளை பேப்பராய் கைகளில் கிடக்கிறது.
கொண்டாட்டமான மேஜிக்கல் ரியலிச கதையான இந்த ஊர், தீவிரமான அரசியல்சிறுகதை ஒன்றையும் உள்ளே ஒளித்துவைத்திருக்கிறது.
தன்னை ஒரிஜனல் பெயர் சொல்லிஅழைக்க யாருமில்லாமல் அழைத்துக்கொண்டிருந்த அம்மாவும் இறந்துபோன பின், எல்லோரும் போகும்வரை காத்திருந்து அதையே சொல்லி அழும் கோழி….
ஒரு நாய் துரத்தும் கனவில் தொடங்கி இறுதியில் தன்னைதானே துரத்திக்கொள்ளும்பாலா, என இப்படி ஒவ்வொரு காதாபத்திரங்களையும் மரணத்திலிருந்தும் பிரிவிலிருந்தும் உருவாக்கும் நாணல் அதை கச்சிதமாகவும். பின்னி உலவவிடுகிறார்
நேரடியானகதைசொல்லலுக்கும் இருண்மையான கதைசொல்லலுக்கும் இடையே..ஒரு இடத்தை நாணல் தேர்வு செய்கிறார். அதனால் அவரே எல்லவற்றையும் இறங்கி அடிக்காமால்,ஒவ்வொரு கதையிலும் வாசிப்பவனுக்கும் ஆட வாய்ப்பளிக்கிறார். அது சிறப்பானதாக இருக்கிறது.
ஓடிவந்தநாட்களை இறகுபந்து தயாரிப்பவனைப்போல் பொறுக்கொண்டுபோய் அடுக்கிவைக்கிறேன்
தன்னைவிட நிழல் குறுகிப்போய் காலடியில் விழுந்துகிடப்பதைப்பார்த்து கலங்கிபோனான்..
கதை அற்புதமாக போய்க்கொண்டுக்கும்போது நாணல் இப்படி கவித்துவ நடைக்கு திடீரென மாறிவிடுகிறார். சில இடங்களில் சின்னதாக ஒரு பிரேக் விழுகிறது ஆனால் பல இடங்களில் அது கற்பனைக்குமெட்டாத. மாயாஜாலங்களை நிகழ்த்துகிறது (சில இடங்களில் தவிர்க்கலாம்)
உபயோகமற்ற கிணற்றுமேடொன்றின்மீதுஉட்கார்ந்திருக்கும் பாலு, கையில்வைத்திருக்கும்காலிபாட்டிலை கிணற்றுக்குள் வீசியெறிவான்.
‘உள்ளே இருந்த நிலா உடைந்து சிதறி சில நிமிடங்களில் மீண்டும் சேர்ந்தது ,பறவைகள் அலறி அடங்கியது ‘ என்று எழுதியிருப்பார்.. அதே வரிகளை இறுதில் அந்தக் கதையை முடிக்கவும் ப்யன்படுத்தியிருப்பார் கொள்ளை அழகான கவிதை அது
உயர்கல்வி கற்ற பாலு தான் நடத்திவந்த சலூனை மூடீவிட்டு மனைவி வானதியின் வற்புறுத்தலால் ‘அரைகாசுன்னாலும்.அரசாங்க காசென்று டாஸ்மாக் வேலைக்கு போயிருப்பான்..ஆனால் அவனால் அங்கே நிம்மதியாக இருக்க முடியவில்லை அந்த வருமானமும் போதவில்லை அதற்க்குள் ஊருக்குள் இன்னொரு சலூன் வந்துவிடும் அடிக்கடி கிணற்றடியில் உட்கார்ந்து குடிக்க ஆரம்பித்திருப்பான்
அப்படி ஒரு நாள் அதீதபோதையில் கிணற்றுமேட்டிலேயே உறங்கிபோவான். நிலா மேலே வந்துவிட்டது அது அப்படியே கிணற்றுத்தண்ணீரில் பிரதிபலித்துக்கிடக்கிறது. அவன் ஒருக்களித்துப் படுத்தான். வெகு நேரத்துக்கு பின் கிணற்றுக்குள் அந்த அரை நிலா உடைந்து சிதறியது. அது மீண்டும் ஒன்றுகூடி முழுமையடைய வெகுநேரமானது என்று முடித்திருப்பார்.
காப்பியத்தின் இறுதிவரிபோல் அடர்த்தியானது இது.
கடைசியாக நாணலுக்குசொல்ல ஒன்று இருக்கிறது, கதைத்தலைப்புகளை தேர்ந்தெடுப்பதில் இவ்வளவு அலட்சியம் கூடாது என்பதுதான் அது.
ஒடியன் லட்சுமணன், எழுத்தாளர்; செயல்பாட்டாளர்.