சுற்றுச்சூழல் நிர்வாகம்: இந்தியாவின் மாறும் சூழ்நிலை

இந்தியாவின் சுற்றுச்சூழல் நிர்வாகம் என்பது சுதந்திரம் கிடைத்து 25 வருடங்களுக்கு பிறகுதான் முறையாகத் தொடங்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோம்மில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த ஐக்கிய நாடுகள் மாநாட்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கலந்துகொண்டு இந்தியா திரும்பிய பிறகு சுற்றுச்சூழல் நிர்வாகம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

தேசிய சுற்றுச்சூழல் மற்றும் ஒருங்கிணைப்பு குழு இந்திராகாந்தி தலைமையில் தொடங்கப்பட்டது. 1972 இல் மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் தொடங்கப்பட்டது. அதன் பிறகு மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. சுற்றுச்சூழலுக்கான தனித் துறையானது 1980 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாநிலங்களிலும் தொடங்கப்பட்டது. 1974 இல் நீர் குறித்த சுற்றுச்சூழல் சட்டங்களும் 1981 இல் காற்று குறித்த சுற்றுச்சூழல் சட்டங்களும் அதே 1981 இல் வனப் பாதுகாப்புச் சட்டங்களும் அமலுக்கு வந்தன. சுற்றுச்சூழல் பாதுகாப்பை முழுமையாக உள்ளடக்கிய சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986 இல் அமலுக்கு வந்தது. சுற்றுச்சூழல் மேம்பாடு பற்றி 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மாநாட்டில் சுற்றுச்சூழலுக்கான கொள்கை மற்றும் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. 1992 ஆம் ஆண்டு வெளியான அறிவிப்பின்படி 32 துறைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க மதீப்பாடானது (Environmental Impact Assessment) கட்டாயமாக்கப்பட்டது. சுற்றுச்சூழல் தொடர்பாக அனுமதியளிக்கும் குழுக்கள் ஒவ்வொரு துறைக்கும் அமைக்கப்பட்டு, அவற்றை நிர்வாகம் செய்யும் அனைத்து அதிகாரமும் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டது. கடற்கரைப் பகுதி மேலாண்மை, மலைப் பகுதி பாதுகாப்பு, கழிவு மேலாண்மை (பயோ மெடிக்கல், பிளாஸ்டிக், அபாயகர கழிவுகள்) உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாட்டு வாரியங்கள் கொண்ட சுற்றுச்சூழல் நிர்வாக அமைப்பைக் கடைபிடிக்கும் நாடாக இந்தியா 1996 ஆம் ஆண்டு உருவானது. உச்ச நீதி மன்றம் மூலமும் உயர் நீதி மன்றங்கள் மூலமும் பொது நலன் வழக்குகள் விசாரிக்கப்பட்டு முறையான தீர்ப்புகள் வழியாக நீதி வழங்கப்பட்டன.

Photo credit: Leonard J Matthews on Visual hunt / CC BY-ND

எனினும், தற்போது அனைத்தும் பின்னோக்கிச் செல்கின்றன. முதல் முறையாக சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான (Ministery for Environment, Forest and Climate Change (MoEFCC)) தனியான மத்திய அமைச்சர் இல்லை. அடுத்ததாக, இந்தத் துறைக்கு மத்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து 25 சதவீதம் குறைக்கப்பட்டது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மேம்பாடுகளை உறுதிசெய்யும் பொறுப்புகளில் இந்திய அரசு தனது முக்கியத்துவத்தைக் குறைத்து கொண்டது. வனப் பாதுகாப்பு, ஆரோக்கியமான உணவு, 100 நாள் வேலைத் திட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமை பற்றிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டபோது அவற்றின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கின. ஆனால் அவை அனைத்தும் மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளன.

2006 இல் அறிமுகப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டில் திருத்தங்களை ஏற்படுத்த வரைவு அறிக்கையை 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் அரசு அறிவித்தது. அதன்படி சுரங்கம் மற்றும் நதிக்கரைப் பகுதிகள் உள்ளிட்ட சிக்கலான துறைகள் உள்ளிட்ட மேம்பாட்டுத் திட்டங்களில் சுற்றுச்சூழல் குறித்து அனுமதியளிக்கும் கூடுதல் அதிகாரங்களை மாநில அரசுகளுக்கு வழங்கியது. 2016 ஆம் அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட திருத்தம் மூலம் மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் குறித்து அனுமதியளிக்கும் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2000-10,000 ஹெக்டேர் அளவிலான நதிக்கரைப் பகுதி திட்டங்களுக்கு அனுமதியளிக்கும் மாநில அரசுகளின் அதிகாரம் தற்போது 5000-50,000 ஹெக்டேர் அளவு வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது எழும் கேள்வி என்னவெனில் எவ்வளவு சிறப்பாக, ஆய்வு நடத்தி இத்தகைய குழுக்கள் எல்லா மாநிலங்களிலும் செயல்படுகின்றன என்பதே. ஆளும் தரப்பின் அரசியல் குறுக்கீடுகள் இன்றி சுதந்திரமாக செயல்படுகின்றவா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்டமிட்டது என்னவெனில் சுற்றுச்சூழல் சட்டங்களிலிருந்து ரியல் எஸ்டேட் துறைக்கு விலக்கு அளித்து உச்சநீதிமன்றத்தில் பசுமை தீர்ப்பாயம் முறையிடக்கூடாத வகையில் சட்ட திருத்தங்களை உருவாக்குதல். டிசம்பர் 9, 2016 அன்று சுற்றுச்சூழலுக்கான அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் மூலம் தளர்த்தப்பட்ட விதிகள் காரணமாக 1,50,000 சதுர மீட்டர்கள் வரை கட்டிடங்கள் கட்டிக்கொள்ள ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு விலக்கு அளித்தது. சுற்றுச்சூழல் மதிப்பீடு குறித்து கட்டுப்பாடுகளையும் கண்காணிப்புகளையும் தவிர்க்கும் சூழ்ச்சியே இந்த சட்ட திருத்தம். ஓராண்டிற்கான இந்தியாவின் மொத்த கார்பன் டைஆக்சைடு மாசு அளவில் 22 சதவீதத்தை கட்டுமானத் துறை மட்டுமே வெளியேற்றுகிறது என பசுமை தீர்ப்பாயம் குறிப்பிடுகிறது. கார்பன் டைஆக்சைடு மாசு அளவைக் குறைப்பதாக பாரிஸ் மாநாட்டில் இந்தியா உத்தரவாதம் அளித்துள்ள நிலையில் ஒரு துறை மூலமாக வெளியேறும் இந்த 22 சதவீத அளவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், உள்ளூர் நகராட்சிகளும் பஞ்சாயத்து அமைப்புகளும் சுற்றுச்சூழல் குழுக்களை அமைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டன. கட்டப்படும் கட்டிடங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் திட்டங்களை மேற்பார்வையிடவே இந்தக் குழுக்கள். ஆளும் தரப்பின் எவ்வித தலையீடுமின்றி இவை தன்னிச்சையாக இயங்குமா என்பது விவாதிக்கப்பட வேண்டியது.

பாதுகாக்கப்படும் இடங்களை உள்ளடக்கிய வனப்பகுதிகளை கையகப்படுத்த சில முயற்சிகள் நடந்தபோது மக்கள் போராடி அவற்றிற்கு தடை வாங்கிய காலத்திலிருந்தே ஒன்று தெளிவாகப் புரிய தொடங்கியது – இயற்கை வளங்களை அழித்து வளர்ச்சியடைதல் என்பதே அரசின் நோக்கம் என்று. ஐக்கிய நாடுகள் அறிவிப்பில் நிலையான வளர்ச்சி இலக்குகளை நிறைவேற்றுவதற்காக இந்தியா கௌரவிக்கப்பட உள்ளது. இதன்மூலம் இந்தியாவின் அசல் செயல்பாடுகளுக்கும் உலக அரங்கில் அதன் செயல்பாடுகளுக்கும் பெரும் வித்தியாசங்கள் உள்ளன என்பது தெளிவாகிறது.

(சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக இயங்கி வரும் ஏ. கே. கோஷ்ஷின் Down to Earth இணையதள கட்டுரையின் தமிழாக்கம்)

தமிழில்: கோ. முருகராஜ்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.