அருண் நெடுஞ்செழியன்

ஆர்.எஸ். எஸ். இன் அரசியல் முன்னணி அமைப்பான பாஜகவின் ஜனநாயக விரோத செயல்பாடுகளை நேற்றைய நீதிபதிகளின் பத்திரிக்கையாளர் சந்திப்பு அம்பலப்படுத்தியுள்ளது.
இந்திய பாராளுமன்ற ஆட்சி முறையின் தலைமையை கைப்பற்றியுள்ள ஆர். எஸ். எஸ். (பாஜக), இந்திய லிபரல் ஜனநாயக நிறுவனங்களின் ஒழுங்கிற்குள் இயங்க இயலாத பண்பை கொண்டதாகும். ஜனநாயக நிறுவனங்களை பலாத்காரத்தின் மூலமாக கட்டுப்படுத்துகிற பண்பை கொண்டவையாகும். குஜராத் படுகொலை தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் பந்தாடப்படுவது, தூக்கி அடிக்கப்படுவது இதன் புறநிலை வெளிப்பாடாகும். சென்ற ஆண்டின் இறுதியில் கர்நாடக உயர் நீதிபதி ஜெயந்த் பட்டேல் ராஜினாமா விவகாரம் முதலாக நேற்றைய பத்திர்க்கையாளர் சந்திப்பு வரை இதை வெளிப்படுத்துகிறது.
எமெர்ஜென்சிகாலத்திற்கு பின்பாக நாட்டில் மீண்டுமொரு அசாதாரண சூழல் நிலவி வருவதை அவதானிக்க மிகச சிறந்த அறிவு தேவையில்லை. நவீன சமுதாயத்திற்கு சற்றும் பொருந்தாத ஆர்.எஸ். எஸ். அமைப்பின் வெகுஜனக் கட்சியான பாஜக அசுர பலத்துடன் நூற்றி இருபது கோடி மக்களின் தலையில் ஏறிஅமர்ந்துள்ளது.
நகர்ப்புற நடுத்தர வர்க்கம்,கிராமப்புற விவசாயிகள், இந்திய தரகு முதலாளிகள், ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன் ஜனநாயகம் பெயரிலான சட்டபூர்வ சர்வாதிகார ஆட்சியை பாஜக நடத்திவருகிறது. முந்தைய முதலாளியக் கட்சிகளுக்கும் பாஜகவிற்குமான வித்தியாசத்தில் முக்கியமானது இந்திய ஜனநாயக நிறுவனங்கள் மீதான பாஜகவின் வன்முறைத் தாக்குதல்.
கம்யூனிஸ்ட் கட்சியோ, காங்கிரஸ் கட்சியோ எந்த கட்சி பாராளுமன்ற தேர்தல் வழியே ஆட்சிக்கு வந்தாலும், இந்திய ஜனநாயக நிறுவனங்களின் கட்டமைப்பிற்கு உட்பட்டே ஆட்சி அதிகாரத்தை செலுத்த முடியும். இந்திய லிபரல் ஜனநாயகவாதிகள்,இந்த ஜனநாயக நிறுவனங்களைத்தான் இந்தியாவின் ஆன்மாவாக கருதுகிறார்கள். தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, நீதிமன்றம் போன்ற இந்திய ஜனநாயக நிறுவனங்கள் இந்திய பாராளுமன்ற ஜனநாயகத்தில் தாங்கு தூண்களாக கருதப்படுபவை.
முதல் முறையாக இந்திராகாந்தியின் எமர்ஜென்சி காலத்தில் இந்திய ஜனநாயக நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. அன்றைய சூழலின் பொருளாதார நெருக்கடிகள் அரசியல் நெருக்கடியாக எதிரொலிக்க, இந்திரா காந்தி கொண்டு வந்த எமெர்ஜென்சி பிரகடனம் நாட்டின் லிபரல் ஜனநாயக நிறுவனங்களை தாக்கியது.
எமெர்ஜென்சி காலத்தில், மூத்த நீதிபதிகளை புறக்கணித்து, தனக்கு சாதகமான நீதிபதியான A.N ரேயை இந்திரா காந்தி நேரடியாக நியமித்தார். இதற்கு பின்பான நாற்பது ஆண்டுகால இந்திய வரலாற்றில் இந்திய ஜனநாயக நிறுவனங்களினம் மீதான தாக்குதலை ஆர்.எஸ்.எஸ். (பாஜக) அமைப்பு தீவிரப்படுத்தி வருகிறது. ஆனால் வேறொரு நோக்கத்திற்காக!
பல்கலைக்கழகங்கள், நீதிமன்றங்கள், கலாச்சார நிறுவனங்கள், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி போன்ற நிறுவனங்களின் சுயாதீன செயல்பாடுகளை தனது நேரடி கட்டுப்பாட்டை கொண்டுவருகிறது. அதில் அரை குறையாக வெற்றியும் பெற்று வருகிறது.
ஆர் எஸ் எஸ் அமைப்பின் பிற்போக்கு இந்திய கலாச்சார தேசியமானது,ஜனநாயகத்திற்கு விரோதமானது. பிரஞ்சு புரட்சி யின் ஜனநாயக முழக்கமான சுதந்திரம்,சமத்துவம்,சகோதரத்திற்கு நேர் எதிரானது.தனது பிற்போக்கு கருத்தியலுக்கும்,நடைமுறைக்கும் தடையாக உள்ள அனைத்து ஜனநாயக நிறுவனங்களை நொறுக்கி வருகிறது.
ஆர் எஸ் அமைப்பின் தொண்ணூறு ஆண்டுகால செயல்பாடுகள், அவசரமற்ற நிதானத் தன்மையுடவை.இந்திய துணைக்கண்ட மக்களை கலாச்சார ரீதியாக இந்து கருத்தியலில் கீழ் உடன்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டால், இந்திய அரசியல் அதிகார கேள்வி எளிதாகும் என்பதே அதன் கணக்கு. சமுதாய உடன்பாட்டுடன் நீண்ட காலத்திற்கு ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு தனது பிற்போக்கு கருத்தியலை நடைமுறை சாத்திமாக்குவது அதன் இறுதி லட்சியம். அது நவீனத்திற்கு பொருந்துமா பொருந்தாத என்பதை பற்றி அதற்கு கவலையில்லை.ஆன்மாவற்ற மனிதர்களின் கூடாரத்தில் பகுத்தறிவிற்கு இடமில்லை…
இஸ்லாம் வெறுப்பு, பெண்ணடிமை, வர்ணக் கருத்தியல் போன்ற ஜனநாயக விரோத கருத்துகளை இறுதி லட்சியமாக கொண்டுள்ள ஆர் எஸ் எஸ் அதன் முன்னணி அரசியல்,
கலாச்சார அமைப்புகளின் எழுச்சிக்கு இந்திய சமுதாயத்தின் தேங்கிய வளர்ச்சியும், பின்தங்கிய சமுதாய உற்பத்தி உறவும் துணையாக நிற்கின்றன.
பழைய கெட்டித் தட்டிப்போன உற்பத்தி உறவுகள், இந்துதத்துவ பிற்போக்கு சக்திகளின் ஜனநாயக விரோத கற்கால கருத்தியலுக்கான ஒத்திசைவை வழங்குகின்றன.
அருண் நெடுஞ்செழியன், அரசியல் செயல்பாட்டாளர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல், அணுசக்தி அரசியல் ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.