வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் நாவல் விமர்சனம்!

முனைவர் ராஜேஸ்வரி செல்லையா

தமிழ் மொழியின் வரலாறு என்பது மனித சமுதாயத்தின் வரலாறு என்பதை இந்நாவல் வலியுறுத்துகிறது. தமிழ் என்பது ஒரு மாநில மொழியாக இல்லாமல் ஒரு உலகளாவிய கருப்பொருளாக இடம்பெறுவதால் இந்நாவல் சிறந்த மொழிபெயர்ப்பு அந்தஸ்தை பெறுகிறது. இதை பிற மொழிகளில் பெயர்த்து சமூக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் வாசிக்க உதவினால் நிச்சயமாக தமிழின் தொன்மையை நிறுவும் தமிழ்மகனின் முயற்சியில் நாமும் பங்கு பெறுவோம். தமிழின் தொன்மையை குறைத்து மதிப்பிடும் ஆரிய சதியை முறியடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தும் தேவையும் தமிழ் வாசகர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மொழி வரலாறு இன வரலாறு மற்றும் சமூக வரலாறு என்ற முக்கோண ஆராய்ச்சி நோக்கில் எழுதப்பட்டுள்ள சமூகப் பொறுப்புணர்ச்சி மிக்க இந்நாவலுக்கு இந்த ஆண்டின் பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெறும் தகுதி இருக்கிறது.
2037ஆம் ஆண்டில் வாழும் ஒரு மலேசிய தமிழனான தேவ் சுனாமியை சந்தித்த அதிர்ச்சியின் அவன் மனம் பின்னோக்கி பயணித்து ராஜேந்திர சோழனின் உணர்வை பெறுகிறது. அவர் அவசரமாக பல உயிர் அச்சுறுத்தலுக்கு இடையே சுவர்ணத்தீவு நோக்கி பயணிக்கிறார். அங்கு வெண்ணி குயத்தியார் என்ற பெண்பாற்புலவர் எழுதிய தமிழ் வரலாறு சுவடியை அவர் பெற வேண்டும் ஆனால அந்த சுவடி யை புலவர் ஒரு நங்கூரத்தினுள் பாதுகாத்து வைக்கிறார். அந்த நங்கூரம் உடைந்ததில் அதன் ஒரு பகுதி சுவப்னா என்ற குஜராத் மாடல் அழகியின் தந்தையிடம் கிடைக்கிறது அவர் அதை வெகு நாட்களாக பாதுகாத்து வைத்திருந்தார். ஒரு நாள் ஒரு ஜெர்மானியன் வந்து அதை வாங்கிகொண்டு போய்விடுகிறான். இதை தேடி சென்ற சரவணன் என்ற பத்திரிகையாளன் தமிழ் விரோதிகளால் கொல்லப்படுகிறான். தேவின் மந்துக்குள் இருந்த ராஜெந்திர சோழனின் மனம் அந்த சுவடி இருக்குமிடத்தை கண்டுபிடிக்க முனைந்து தீவிரமாக செயல்படுகிறது. இத்துடன் நாவல் நிறைவு பெறுகிறது.

நாவலில் தமிழ் என் உயிர் என்று தமிழர்கள் சொல்வதற்கு காரணம் மொழிக்கூறு என்பது வேறு எந்த மொழியினருக்கும் இல்லாதவகையில் தமிழரின் மரபுக்கூறில் இடம்பெற்றுள்ளதே ஆகும் என்பதை தமிழ்மகன் நிறுவ முயல்கிறார். இதற்கு என்ன காரனம் என்றால் மனித இனத்தின் வரலாறு தமிழினத்தின் வரலாறாகவே தொடங்குகிறது. கடல்கோள்களால் இரண்டு முறை பேரழிவைச் சந்தித்த தமிழினம் வடக்கு நோக்கி நகர்ந்த போது தான் சென்று குடியேறிய இடங்களில் எல்லாம் தான் வாழ்ந்த ஊரின் பெயரையும் தன் மொழியையும் தக்க வைத்துக்கொண்டது. நியலத்தை பண்படுத்தி ஆற்று நீரை அணை கட்டி விவசாயம் செய்தும் சுட்ட செங்கற்களால் காவல்மிகுந்த மனைகளை கட்டி நகர வாழ்க்கை நடத்திய தமிழர்கள் பண்பாடும் நாகரிகமும் மிக்கவர்களாக திகழ்ந்தனர். இக்கருத்தை உலகுக்கு உணர்த்திய சிந்து சமவெளி நாகரீகத்தின் ஆராய்ச்சி விவரங்கள் இந்தியா என்ற தனி நாடு தோன்றிய பிறகு தன் நாட்டு மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. இந்தியாவின் வட நாட்டினர் தமிழ் திராவிட நாகரிகமே உலகின் முதல் நாகரிகம் என்று சொல்வதை வெறுத்து நாடோடியாக திரிந்த ஆரிய நாகரிகமே தலை சிறந்த நாகரிகம் என்று பலரறிய நூல்களில் திரித்து கூறினர். சரவணன் என்ற பத்திரிகையாளர் தமிழ் மொழிக்கு ஆதரவாக நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட வரலாற்றைக் குறித்த ஓர் ஆவனப் படம் எடுத்த போது நன்கூரத்தின் ரகசியத்தை தெரிந்துகொண்டு அதைத் தேடும் போது தாய்தமிழுக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்கிறார். அவரது கொலை பற்றி கடைசி வரை யாருக்கும் எதுவும் தெரியவில்லை.

தேவின் மனநிலையை மாற்ற சிகிச்சை அளிக்கும் டாக்டர் மாறன், வங்காளத்தை சேர்ந்த ஜவஹர், தேவை மணக்க முன்வரும் வள்ளி, சரவனனுடன் வேலை பார்க்கும் தாமரை, சொப்னா, ஆரியப்பெண் அஸ்வினி, மற்றும் ஜெனெடிக் இஞ்சினியர்கள் நரம்பியல் வலுனர்கள் என கதை முழுக்க பல கதை மாந்தர் வந்தாலும் நம் மனதில் மாறாமல் மறையாமல் நிற்பவர் வன்கொலையால் மாண்ட சரவணன் எனலாம். அடுத்தபடியா எந்நேரமும் ஆல்டேபின் உதவியுடன் பின்னோக்கிய காலக்கப்பலில் பயணிக்கும் தேவ் அவனுடைய உண்மையறியும் மன உறுதியை பாராட்டலாம். கதை அறிவியல் புதினமாக இருப்பதால் சில விஞ்ஞான ரீதியான விஷயங்கள் ஆங்காங்கே தலை காட்டுகின்றன, ஆனால் வாசகரை மிரட்டவில்லை. தமிழ் பற்றிய விஷயங்களை ஆசிரியர் கட்டுரையாக எழுதாமல் நாவலுக்குள் வைத்து எழுதியிருப்பது வாசிக்க சுவாரஸ்யமாகவும் அதே சமயம் விஷயப்பூர்வமாகவும் இருக்கிறது.

இராஜேந்திர சோழனின் தேடல் பயணத்துடன் தொடங்கும் இந்நாவல் தமிழினத்துக்கு அவமானத்தை உருவாக்கும் முயற்சியாக சந்திரா சாமியும் அவரை தொடர்ந்து சுப்பிரமனியன் சுவாமியும் ராஜீவ் காந்தியை கொலை செய்தவர் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று பொய்யாகக் குற்றம் சுமத்திய தகவலை ஜெயின் கமிஷன் அறிக்கையின் ஆதாரங்களோடு எடுத்துவைத்தது நாவலின் இறுதிப்பகுதியை வலுப்படுத்துகின்றது. சந்திராசாமியை விசாரணைக்கு அழைக்காததும் வெடிபொருள் தமிழ் ஈழ புலிகள் பயன்படுத்திய ஆர் பி எக்சாக இல்லாமல் இந்தியாவில் புழங்கும் டி.என்.டி. அயனிகள் கொண்டதாக இருந்ததும் வாசிப்பில் ஆர்வத்தை தூண்டுகின்றன. ஆக ஆங்கிலேயர் காலத்தில் வேகமாக நடந்த ஆராய்ச்சி தமிழர் நாகரீகமே வரலாற்றில் முந்தியது என்ற உண்மையை உரக்க கூறியதும் விடுதலை இந்தியா அதன் குரல்வளையை நெறித்துவிட்டது. செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டபோதும் அதனை தொடர்ந்து வேறு மொழிகளுக்கு கொடுத்து தமிழின் தனி பெருமையை குலைத்தது. இறுதியில் தமிழன் தன் பிரதமரை கொன்றான் என குற்றம் சுமத்தி தமிழரின் சீர்மையை குறைத்தது என்ற முத்தாய்ப்பு நாம் நமக்கான கடமைகளை மறந்து வாழ்கிறோம் என்பதை உணர்த்துகிறது.

தமிழினம் முதன் முதலில் ஓரிடத்தில் தங்கி நிலத்தை பண்படுத்தி வேளாண்மை செய்தது. நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியது. அகல் வீதிகளை சமைத்து வரிசையாக வீடுகளை கட்டியது. அங்கிருந்து கழிவு நீரை முறையாக வெளியேற்றியது. பருத்தி நூல் நெய்து ஆடை தயாரித்தது. இந்த ஆடை ஜூலியஸ் சீசர் போன்ற ரோமப் பேரரசர்களில் தோளாடையாக மேலாடையாக அரச உடையாகும் சிறப்பு தகுதியைப் பெற்றது. தமிழர் கடலை கடக்க பழகியிருந்தனர். காற்றின் போக்கை அறிந்திருந்தனர்.தென்மேற்கு காற்று காலத்தில் நாவாய் ஓட்டி மேலை நாடுகளுக்கு சென்று ஏற்றுமதி தொழில் செய்து வட கிழக்கு காற்று வீசும் காலத்தில் தாய்நாடு திரும்பினர். சுமார் நானூறு பேர் பயணிக்கும் பெரிய கப்பல்களை கட்டினர். அதில் மயில் தோகை அரிசி மற்றும் முத்துக்களை கொண்டு சென்றனர். திரும்பி வரும்போது தங்கத்தை ஏற்றிக்கொண்டு வந்தனர். அவ்வாறு பயணம் செய்த கப்பலில் இருந்த ஒரு தமிழ் பெண்ணை கிரேக்கன் ஒருவன் திருமணம் செய்துகொள்கிறான் அவனது வாரிசு ஒருவன் இக்கதையில் வலுவான கதாபாத்திரமாகி இருக்கிறான். அவன் சோழ நாட்டில் நடக்கும் கோழிச் சண்டையின் பெருமை அறிந்தவன் அதனால் அது குறித்து விலங்குகளை பறவைகளை வதை செய்யக்கூடாது என்ற அமைப்பு வைத்திருப்பவனிடம் விளக்க முயலிகிறான். புரியாமல் எதிர்ப்பவனைக் கொலை செய்கிறான். அவனை காப்பாற்ற முருகேசன் என்ற முர்கோஷ் முயற்சி செய்து வெற்றி பெறுகிறான். கதையின் கருத்தும் அதை விளக்கும் கதாபாத்திரங்களும் பிண்ணி பிணைந்துள்ளனர்.
தமிழினம் இந்தியா முழுக்க பரவிய தகவலை ஊர்ப்பெயராய்வு மூலம் வலியுறுத்தி வரும் பாலகிருஷ்ணன் ஐ ஏ எஸ் ஆராய்ச்சி தகவல்கள் நூலெங்கும் விரவி கிடக்கின்றன. இது குறித்து மேலும் கற்றறிய விரும்புவோர் டாக்டர் ஜான் சாமுவேல் எழுதிய திராவிட மொழிகளின் பகுப்பாய்வு நூலை வாங்கி படிக்கலாம். இந்நூல் வட திராவிட மொழிகள் நடுத்திராவிட மொழிகள் மற்றும் தென் திராவிட மொழிகளின் ஒப்பியல் தன்மையை விளக்கும். இந்தியா முழுக்க பேசப்படும் மொழிகள் திராவிட மொழிகளே என்பதை தெளியலாம். ஆனால் இந்நூலை தற்போது இளங்கலை தமிழ் பாடத்திட்டத்தில் இருந்து விலக்கிவிட்டனர். இந்நாவலில் சிந்து சமவெளியில் ஆதி தமிழினம் வாழ்ந்த நிலப்பரப்பு உத்தரகாண்ட், பாகிஸ்தான், குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய நகரங்களுக்கு இடையே பரவியிருந்த நகர்ப்பகுதிகள் ஆகும் என்று விளக்கப்பட்டுள்ளது.

சோழர் காலத்தில் தமிழ் பண்பாடு பர்மா ஜாவா சுமத்ரா இந்தோனேசியா தாய்லாந்து போன்ற தீவுகளில் செழித்து வளர்ந்தது. தாய்லாந்தில் பாவை பாடல்கள் என்ற நூல் அங்கு திருப்பாவை திருவெம்பாவை பாடப்படும் வழக்கத்தை விவரிக்கிறது. அநூலை வாசிப்பதற்கு பதில இநூலை வாசித்தால் இது போன்ற பல அரும்பெரும் தமிழ் நூல்களை வாசித்த பலன் கிடைக்கும். அங்கு பேசப்படும் தாய் [THAI} மொழியில் காணப்படும் தமிழ் வேர்ச் சொற்கள் மற்றும் பண்பாடு குறித்து சுட்டிச் செல்கிறார்.

உலக மொழிகள் அனைத்தும் தமிழில் இருந்து தோன்றியவை என்று கால்டுவெல் விளக்கியபோது இங்கிருந்த பல ஆய்வறிஞர்கள் அவர் கிறிஸ்தவக் கருத்தியலை தம் ஆய்வில் புகுத்துவதாக குற்றம் சாட்டினர். பைபிளில் முதலில் மனிதர் அனைவரும் ஒரே மொழி பேசினர்; பின்னர் பாபேல் கோபுரம் கட்டப்பட்ட போது ஆண்டவர் அவர்களை மொழியால பிரித்துப்போட்டார் என்று சொல்லப்பட்டிருக்கும். இந்தக் கருத்தை மையமாக கொண்டு கால்டுவெல் கூறுவதாக அவர் ஆய்வுக்கு மதச் சாயம் பூசினர். செமிட்டிக் மொழியான ஹீப்ரூவுக்கும் தமிழுக்கும் இருக்கும் பத்து ஒற்றுமைகள் குறித்து நான் மதுரை காமராசர் பல்கலைக்கழக்த்தின் தமிழியல் துறையில் பேசினேன். அதுபோல ஹீப்ரு கற்று தரப்படும் இறையியல் கல்லூரியில் ஆங்கிலத்தை விட தமிழில் ஹீப்ரூ மொழியை படிப்பது எளிது என்று தமிழில் ஹீப்ரு இலக்கணத்தை பாடமாக நடத்திக் காட்டினேன். அவர்கள் வியந்து போனார்கள். எடுத்தக்காட்டாக இரண்டை மட்டும் இங்கு சொல்கிறேன்; தமிழில் இருக்கும் ஐகாரக்குறுக்கம் ஔகாரக்குறுக்கம் போல ஹீப்ரூவில் உயிர் ஒலிகள் அகரகுறுக்க, இகரக் குறுக்கம் என குறுக்கமாக ஒலிப்பதுண்டு. உட்பெறு புள்ளி பெற்று மென்மையாக ஒலிக்கும் முறை தமிழில் முற்காலத்தில் இருந்தது போல [ப>ம] ஹீப்ரூவிலும் உண்டு.

சுமேரிய நாகரிகம் தமிழர் நாகரிகமே என்பதை கில்காமேஷ் புராணத்தின் மூலமாக விளக்கியதோடு நில்லாமல் கிளியோபாத்ராவும் தமிழ்பெண்ணே என்று நிறுவும் முயற்சியிலும் ஆசிரியர் இறங்கியுள்ளார். கில்காமேஷ் புராணத்தை பற்றி சுப்பிரமனியம் அவர்கள் எழுதிய நூலையும் சுட்டிக்காட்டுகிறார். அந்த வகையில் நாவல் ஆசிரியரின் நேர்மை பாராட்டுக்குரியது.

தமிழ் அனைத்து உலக மொழிகளுக்கும் தாய் மொழியாக இருப்பதால் தான் அதற்கு சற்றும் தொடர்பில்லாத மொழியாக நமக்குத் தோன்றும் ஜப்பானிய மொழியுடனும் பண்பாட்டுடனும் அதற்கு நிறைய ஒற்றுமைகள் இருப்பதை சுசுமோ ஓனோ முதலான அறிஞர்கள் நிறுவியுள்ளனர். நான் ஆசியவில் ஆய்வியல் நிறுவனத்தில் பணியாற்றியபோது தமிழ் வழியே ஜப்பானிய மொழி கற்பது எளிது என்பதை நிறுவி இரண்டு நூல்களும் தயாரித்து வெளியிட்டோம்.

எமெனோ மற்றும் பரோ அவர்கள் உருவாக்கிய DED எனப்படும் DRAVIDIAN ETYMOLOGICAL DICTIONARY தமிழ், சமஸ்கிருதம், இரண்டுக்கும் இடையிலான 2000க்கும் மேற்பட்ட பொது சொற்களை கூறுகிறது. நாம் இவ்வளவுசுமார் பத்திருபது நூல்களை படித்து சிரமப்படாமல் இருக்க தமிழின் தொன்மை குறித்த ஆராய்ச்சிகளின் சாராம்சத்தை நமக்கு தமிழ்மகன் இநாவலைல் கொடுத்திருக்கிறார். இதற்காகவே தமிழ் மாணவி என்ற முறையில் என் தனிப்பட்ட நன்றி உரித்தாகுக. இந்நூலை இளங்கலை தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு பாட நூலாக வைக்க வேண்டும். இந்நூலை நன்கு கற்று தெளிந்த தமிழாசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும். தமிழ் விரோதிகள் கையில் கிடைத்தால் அவர்கள் முறையாகப் பாடம் நடத்த மாட்டார்கள். இன்றைக்கு கல்லூரிகளில் தமிழ் வகுப்புகள் கதை பேசும் வகுப்புகளாகவும அல்ல்து மற்ற ஆசிரியருக்கு கடன் கொடுக்கும் வகுப்புகளாகவும் உள்ளன. எனவே தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் இந்நூலை தமிழாய்ந்த பெருமக்களை கொண்டு இளைஞர்களை கொண்டு கலந்துரையாடல் மற்றும் விவாதங்கள் நடத்தினால் சமூகத்தொண்டாக அமையும். தமிழ் தேசியவாதிகளுக்கு இது ஒரு வழிகாட்டி நூல், வேத நூல், விளக்க நூல்.

வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்
ஆசிரியர்: தமிழ்மகன்
உயிர்மை பதிப்பகம் வெளியீடு,
விலை ரூ. 190

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.