செகா
சாதியப் புறக்கணிப்பால் அவமானத்திற்குள்ளாகி , வேற்றூருக்கு அமைதியான வாழ்க்கைக்காக குடும்பத்தோடு புலம்பெயர இருக்கும் இடைச்சாதியைச் சார்ந்த நபராகவோ அல்லது அந்த நண்பர்களை உடைய நபராகவே இருப்பவர்களா?
பத்து பேர் சேர்ந்து இருக்கும் கூட்டம்,”மாப்பிள்ளை மச்சான் ” என்கிற சாதிய விளிச்சொற்களால் ஒரு தனிக்குழுவாகி உங்களை அம்போவென விடுகிற அவல நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறீர்களா?
அம்பேத்கரைத் தவிர வேறு யாருடைய நூல்களை வேண்டுமானாலும் படி என்கிற வழிகாட்டல் உங்களுக்கு கிடைக்கப்பட்டிருக்கிறதா ?
கற்பித்தல் சூழலில் சாதியை மட்டுமே பிரதான மூலதனமாகக் கொண்டு, பிழைப்பிற்காக கல்விச் சேவை புரியும் சிறுபான்மை ஆசிரியர் வர்க்கங்களின் அசைவுகளில் உங்கள் மனநலத்தைப் பறிகொடுத்தவர்களா?
காலங்காலமாக இங்கே டிசைன் இப்படிதான் என்கிற பழம்பெருமை பேசுகிற,அதனைப் பொத்திப் பாதுகாக்கிற உங்களது சாதியின் கலாச்சார,பாரம்பரியக் காவலர்களிடம் உங்களது சுயத்தை அடகுவைத்த அனுபவங்கள் உண்டா?
ஒடுக்கப்பட்ட பிரிவினரோடு உறவு பாராட்டியதால் நீங்கள் உங்களது சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட அனுபவமும் உள்ளதா?
இவையாவுமோ அல்லது இவற்றில் ஏதேனும் ஒன்றிரண்டோ உங்களுக்கு கிட்டியிருந்தால்,உங்களது வலிகளுக்கான தற்காலிக சர்வரோக நிவாரணியாக #செம்புலம்# நாவலை வாசித்து விடுங்கள். கொஞ்சமாக பெருமூச்சு விட ஏதுவாக இருக்கும்.
இந்நாவலை எழுதுவதை விட, இதற்கு விமர்சனம் எழுதுவது மிக சவாலான பணி. எழுத்தாளர் மறைபொருளில், குறியீடாக சொல்வதையெல்லாம் ஒரு விமர்சனத்தில் நேரிடையாக சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளுவதிலேயே இந்நாவல் பெரும் வெற்றி பெற்றுவிடுகிறது.
ஆணவக்கொலைதான். ஆனால், நீங்கள் நினைத்திராத காரணத்திற்காக.
அதனை புலனாய்வு செய்யும் காவல்துறையின் விரிவான விசாரணைகளின் துல்லியங்களை, முதல் பாகத்தில் ஒரு தேநீர்க் கோப்பை காலியாகிற வேகத்திற்குள் கொடுத்துவிடுகிறார் எழுத்தாளர்.
ஒரு தலைவரை எப்படி ஒரு குடும்பம் உருவாக்குகிறது? உருவாக்கிய தலைவர் எப்படி தனது வர்க்க நலனுக்காக செயல்படுகிறார்? அந்த தலைவருக்குள் இருக்கும் மென்மையான பக்கங்கள், ஒரு வலுவான மனோதிடம் உள்ள இல்லாளின் தகவமைவுப் போக்குகள்,அந்தப் போக்குகளோடே தனது சுயமான மதிப்பீட்டை வெளிப்படுத்த இயலாமல் அதனோடே கரைந்து போகிற இயல்பு , என ஆதிக்கம் என்கிற சமூக நோயிற்குப் பின் இருக்கிற நோய் முதல் நாடியை நன்கு பிடித்து அதற்கான காரண காரியங்களை தெளிவாக எடுத்துக் கூறுகிறது இரண்டாவது பாகம்.
குற்றவாளியை முதல் பாகத்திலேயே அடையாளங்கண்டுவிட்டாலும்,அவனை உறுதிப்படுத்துகிற விசாரணைகளை, கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறையைத் தாண்டி சமூக மனித உரிமை அமைப்புகளின் கள செயல்பாடுகள் & விசாரணைகளின் பங்களிப்பினை மூன்றாவது பாகம் அலசுகிறது. சட்டத்தில் உள்ள ஓட்டைகள் எப்படியெல்லாம் ஒட்டகங்களின் கூடாரமாக இருக்கிறது என்பதையும் தனக்கே உரித்தான அலுவல் பின்புலத்தில் இருந்து தரவுகளை முன்வைத்து (கா)சாட்சிகளை நகர்த்துகிறார்.
ஒடுக்கப்பட்டவர்களுக்கான அபினாக மதம் எப்படி இருக்கிறதோ, அதுபோல முறையற்ற குடும்ப உறவுகளால் சிதைக்கப்பட்ட பின்தங்கிய எளிய கூலிப் பெண்களுக்கு காதலும் ஒரு அபினாக இருக்கிறது என்கிற எனது அனுபவ வாதத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது நான்காவதும் இறுதியுமான பாகம். மேலும் வீழ்ச்சி என்பதை, மாபெரும் எழுச்சியை நோக்கி நகர்த்துகின்ற இயக்க ஆற்றல் என்பதை, சொல்லப்படாத இன்னொரு புரட்சிகர நாவலுக்கான துவக்கப்புள்ளியோடு நாவலை முடித்தும் விடுகிறார்.
ஆக, ஒட்டுமொத்தமாக பச்சைப் பசேலெனக் காட்சியளிக்கும் விரிந்த நிலப்பரப்பிற்குள் தனது பச்சை மனசைத் தொலைத்துவிட்ட மனுவின் மூத்த அடிமைகளின் வறண்ட மனதை துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறது.
இந்த மனவறட்சிக்குப் பின்னர் உள்ள பொருளாதாரச் சுரண்டல்களையும், அது உருவாக்குகிற மாயமானிற்குப் பின்னால் ஓடிக்கொண்டே இருக்கிற ஒரு பெருங்கூட்டத்தையும், அதன் காலடியில் மிதிபட்டுக் கவனிப்பாரற்று கிடக்கும் மற்றொரு சிறுபான்மைக்கூட்டத்தின் அவல நிலையையும் அப்பட்டமாகப்படம் பிடித்துக் காட்டுகிறது இந்நாவல்.
தனித்து விடப்பட்ட எந்த உயிரினத்திடமும் அன்பு பெருக்கெடுத்து ஓடும். அங்கே அன்பு என்பது தன்னை தற்காத்துக் கொள்கிற பெருங்கேடயம்.
அதுவே குழுவாகத் திரியும் மந்தைகளிடத்தே எப்பொழுதும் ஒரு சாகசமனப்பான்மையும் அசட்டுத் துணிச்சலும் குடிகொண்டிருக்கும். அதன் போக்கில் அந்த மந்தைகள் தனது ஏதேச்சதிகாரத்தை, அன்பைக் கேடயமாக கொண்டோரிடத்தே செலுத்திக் கொண்டேதான் இருக்கும்.
எளியோனின் பேரன்பை மட்டுமல்ல, வலியோனின் மனசாட்சியையும் உரக்க கேள்வி கேட்கிறது இந்நாவல்.
பரிணாமத்தில் பல்வேறு பொருத்தமின்மை நோய்களால் அதிக வாழ்நாளுக்கு ஆசைப்பட்டு வாழ்வதற்காக ஆகக் கூடிய நோய்ச்செலவுகளுக்காக, தனது பெரும்பான்மையான வருமானத்தை இழந்து கொண்டிருக்கும் ஹோமோ சேபியன் சேபியன்ஸ் எனும் பாலூட்டி விலங்கினத்தில் நடக்கும் இருத்தலுக்கான இப்போராட்டத்தில் எது வெல்லும்?
சேயோனின் தலைமுறைக்கும் சேர்த்துப் பயன்படும்.