சத்வா
சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி, யோகா, மலர் மருத்துவம், தொடு மருத்துவம், அமுக்கு சிகிச்சை மற்றும் பிற மாற்று மருத்துவங்கள் தன்னிச்சையாக செயல்பட கூடியது என்றும் இவ்வகை மருத்துவங்கள் உடலில் ‘வேறு பல வித அமானுசிய’ முறைகளில் இயங்கி உலகில் உள்ள அனைத்து நோய்களையும் அழித்தொழித்து விட கூடியது என்றும், அரசின் ஆதரவு இல்லாமை மற்றுப் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் இலுமினாட்டி சதியின் காரணமாக தான் மேற்சொன்ன மாற்று மருத்துவங்கள் பின்னடைவை தழுவி விட்டதாகவும் ஒரு மூட நம்பிக்கை மக்களிடையே உள்ளது. அதே மூட நம்பிக்கை சமூகத்தில் பல்வேறு குழுக்களால் தொடர்ந்து பரப்பவும் படுகிறது.
எந்த வகை குழு என்ன விதமான மூடநம்பிக்கையை பரப்புகிறது என்பது அவர்களின் அரசியல் சார்பு/இன வாதம் ஆகியவற்றை சார்ந்தது.
ஆரிய சிந்தனை கொண்டோர் அதாவது வேத கால பண்டைய இந்துக்களுக்கு வாட்ஸ் அப்பில் புத்தாண்டு வாழ்த்து சொல்வது முதல் விடியோ டவுன்லோடு அப்லோடு செய்வது வரை எல்லாம் தெரிந்து இருந்தது என்று நிரூபிக்க முயல்வோர் ஆயுர்வேதத்தையும் ,யோகாவையும் உயர்த்தி பிடிக்கின்றனர்.
பண்டைய தமிழர்களுக்கு எல்லாம் தெரியும் என்று நிறுவ முனைவோர் சித்தாவை உயர்த்தி பிடிக்கின்றனர். இவ்வாறே சீனாவில் உள்ள இனவாதிகள் அக்குபஞ்சரை உலகம் முழுவதும் பரப்ப தொடர்ந்து முனைகின்றனர்.
ஆனால் இவர்களின் உண்மை நிலை இவர்களின் பிரச்சாரத்துக்கு எதிர் நிலையில் உள்ளது. அதாவது மாற்று மருத்துவம் எல்லா நோய்களையும் குணப்படுத்தும் என்று பொது வெளியில் பேசும் இவர்கள் உண்மையில் விஞ்ஞான மருத்துவத்தை தாங்களும் பயன்படுத்துவோம் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர்.
சில ஆண்டுக்களுக்கு முன்பு அரசு சித்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் இதற்காக போராட்டமும் நடத்தினார்கள். மாற்று மருத்துவர்களை விஞ்ஞான மருத்துவ மருந்துகளை, மருத்துவ முறைகளை பின்பற்ற அனுமதிக்க வேண்டும் என்று கூறி ஒரு முறை சாலை மறியல் கூட நடத்தினார்கள்.
இந்த மாற்று மருத்துவர்களை கட்டுபடுத்தும் சட்டம் ஒன்றில் உள்ள சிறு ஓட்டை ஒன்றை கண்டறிந்து அதனையே ஆதாராமாக கொண்டு நாங்களும் விஞ்ஞான மருத்துவத்தை பின்பற்றுவோம் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். சமீபத்தில் பராளமன்றத்தில் நிறைவேற்றபட்ட தேசிய மருத்துவ கவுமிஷன் தொடர்பான சட்டம் மாற்று மருத்துவர்கள் ஒரு இணைப்பு படிப்பை (bridge course) முடித்து விட்டு விஞ்ஞான மருத்துவத்தை பின்பற்ற அனுமதி அளிக்கின்றது.
இப்போது நமது கவலை/கோரிக்கை யாதெனில்
1. அனைத்து நோய்களையும் தீர்க்கும் பயங்கரமான திறன் உடைய மாற்று மருத்துவர்கள் அவர்களது மருத்துவ முறையை மக்களின் நம்பிக்கை பெறும் வகையில் அதை மட்டும் முன்னெடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு நாங்களும் விஞ்ஞான மருத்துவத்தை பின்பற்றுவோம் என்று மல்லு கட்ட கூடாது
2. அல்லது எல்லா மாற்று மருத்துவக்கல்லூரிகளையும் அல்லோபதி பயிற்றுவிக்கும் கல்லூரிகளாக மாற்ற வேண்டும்.
இதற்கு இடையில் நின்று கொண்டு அரை குறை விஞ்ஞான அறிவோடு அல்லோபதியை பின்பற்ற கோருவது மக்களின் உயிருக்கு ஆபத்தாக முடியும்.
இது போட்டி மனப்பாண்மையில் எழுதப்பட்டதல்ல. ஏனெனில் ஒவ்வொரு வருடமும் புதிய மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்பட்டு கொண்டு தான் உள்ளது. வியாபார போட்டியினை குறைக்க இதை தடுக்க வேண்டும் நாம் என்றோ புதிய மருத்துவக்கல்லூரிகளை ஆரம்பிக்க கூடாது என்றோ யாரும் கூறவில்லை. மாறாக இனவாதமும் வேண்டும். தமிழனின் பெருமை மிகு மருத்துவமும் வேண்டும். அந்த மாற்று மருத்துவம் எல்லா நோய்களையும் குணப்படுத்தும் என்று வெற்று பிரச்சாரமும் வேண்டும். அதே சமயத்தில் விஞ்ஞான மருத்துவத்தை பின்பற்ற லைசென்சும் வேண்டும் என்று கூறுவது வேடிக்கையானது மற்றும் மோசடியானது ஆகும்.