அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அக்கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“2017 ஆம் ஆண்டு நம்மிடமிருந்து விடைபெறும் போது, துயரங்களையும், படிப்பினைகளையும் தந்துவிட்டு சென்றுள்ளது.
மாநிலத்தின் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின்னர் கடந்த ஓராண்டு காலத்தில் மாநில ஆட்சி மக்களின் நம்பிக்கையை இழந்த நிலையில் உள்ளது. மாநில உரிமைகள், நலன்கள் முற்றாக புறக்கணிக்கப்படுகின்றது. மாநிலத்தின் ஆளுநர் மாநில சுயாட்சி கொள்கைக்கு விரோதமான கொள்கையை தொடர்ந்து பின்பற்றி வருவது தமிழக சட்டமன்றத்தையும், அமைச்சரவையினையும் அலட்சியப் படுத்தும் செயலாகும்.
நீட்நுழைவுத் தேர்வில் விலக்கு கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டது. இதன் விளைவாக மருத்துவர் ஆக வேண்டும் என்கிற கனவு மாணவர்களுக்கு பகற்கனவானது. பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த போதும், நீட் தேர்வில் மருத்துவக் கல்லூரிக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டு, தன்னைப் போன்ற மூட்டைத் தூக்கும் கூலி தொழிலாளர்கள் வீட்டு பிள்ளைகள் மருத்துவர் ஆக வாய்ப்பில்லை என்ற நிலையில் நிகழ்ந்த அரியலூர் அனிதாவின் மரணம் பேரதிர்ச்சியாகும்.
இயற்கை சீற்றத்தால் தமிழக விவசாயிகள் – விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலைக்கு தள்ளப்பட்டதும், அவர்கள் மேற்கொண்ட இயக்கங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மதிப்பளிக்காமல், அவர்களது உணர்வுகளை மதிக்காமல் அலட்சியப் படுத்தியதும், நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது.
தமிழ்நாட்டு மீனவர்கள் உயிருக்கும், உடமைக்கும், தொழிலுக்கும் பாதுகாப்பற்ற நிலை தொடர்கின்றது. ஓகி புயலால் மீனவர்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியது மட்டுமல்ல. 400 மீனவர்கள் என்ன ஆனார்கள் என்பது இந்நாள் வரை அறிய முடியாதது மிகுந்த சோகமாகும்.
உயர்மதிப்பு நோட்டு செல்லாது, ஜிஎஸ்டி வரி போன்ற பிரச்சனைகளால் தொழில், விவசாயம், வேலைவாய்ப்பு ஆகியவை பெரும் பாதிப்பிலிருந்தது இன்றுவரை மீள முடியாத துயரம் தொடர்கின்றது.
தமிழகத்தில் சாதியின் பெயரால் தொடரும் காட்டுமிராண்டித் தனமான ஆணவக் படுகொலைகள் தொடர்வது அருவருக்கத் தக்கது.
மதத்தின்; பெயரால், சாதியின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முயல்வது நாட்டின் அடிப்படை கொள்கைகளுக்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் புறம்பான முறையில் செயல்படுவது நம்மை பின்னோக்கி இழுக்கும் முயற்சியாகும்.
மக்கள் ஒற்றுமை காக்க அனைவருக்கும் மகிச்சியான வாழ்க்கை அமைந்திட அனைவரும் உறுதிபூண்டிட வேண்டுகிறோம்” என தெரிவித்துள்ளார்.