#நிகழ்வுகள்: கோத்தகிரியில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய கொண்டாட்டம்!

இனியன்

சமீபகாலமாகப் பல உரையாடல்களில் நண்பர்களிடம் ஒரு கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன். சராசரியாக குழந்தைகளுக்கு கிடைக்கப்பெறும் அடிப்படை உரிமைகளில் இருந்து அதிகளவு புறக்கணிக்கப்படும் குழந்தைகள் யார்?

நூற்றுக்கு 95% சதவிகித நபர்கள் உடனடியாக கிராமத்து குழந்தைகள் எனப் பதில் சொல்கின்றனர். அப்பதிலைச் சொல்லும் அவர்களிடம் இவ்வாறு கூறி வருகிறேன்.

“உங்கள் பதில் மிகவும் தவறு. பன்முகத்தன்மைக் கொண்ட நமது நிலவமைப்பு மற்றும் வாழ்க்கை முறைகளில் அதிகளவு அடிப்படை உரிமைகளுக்காக புறக்கணிக்கப்படுவதில் முதலில் இருப்பவர்கள் அனைத்து தரப்பான மாற்றுத்திறன் குழந்தைகள்.

இரண்டாவதாக நெய்தல் நிலக் குழந்தைகள். அதாவது கடற்புரத்தில் கடல் சார்ந்து அன்றாட வாழ்வைப் போக்கிக் கொண்டிருக்கும் மக்களின் குழந்தைகள்.

மூன்றாவதாக குறிஞ்சி நிலக் குழந்தைகள். அதாவது மலைகளையும் மலைக்காடுகளையும் மட்டுமே மையமாக கொண்டு வாழும் பழங்குடியின மக்களின் குழந்தைகள் மற்றும் மலைகளில் உருவாக்கப்பட்டப் பணபயிர் தொழில்களில் ஈடுபட இடப்பெயர்வுகளுக்கு ஆளான மக்களின் குழந்தைகள்.

நான்காவதாக பெருநகரங்களின் பொதுப் புத்தியிலிருந்து சேரி என அழைக்கப் படுகின்ற நிலத்தில் வாழ்கின்ற மக்களின் குழந்தைகள்.

இந்த குழந்தைகளுக்கு பிறகுதான் கிராமத்துக் குழந்தைகள் மற்றும் நகரத்து குழந்தைகள்.

இந்தப் பதில் எனது பயணங்களில் நான் கண்டுணர்ந்தவை.” எனச் சொல்லிவருக்கிறேன்.

இந்த ஒவ்வொரு பகுதியில் இருக்கின்ற குழந்தைகளும் பல வகைகளிலும் அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை இழந்தோ அல்லது அவை என்னவென்றுத் தெரியாத வாழ்வியல் சூழலில் தான் இருக்கின்றனர் அல்லது பழக்கப் படுத்துகிறோம்.

என்னளவில் குழந்தைகளுக்கு கிடைக்கவேண்டிய அடிப்படை உரிமைகளில் இறுதியில் இருப்பது கலைக்கான அறிமுகங்கள். கலைகளிலும் கூட பன்முகத்தன்மைதான் என்றாலும், மக்கள் மனங்களில் சுருங்கடிக்கப்பட்டுவிட்டச் சில கலைகளையும் மீறிய பல கலைகளில் சிலவற்றையாவது தொடர்ந்து அவர்களுக்கு அறிமுகப் படுத்தவேண்டியக் காலக்கட்டத்தில் இருக்கிறோம்.

அப்படி நாம் அறிமுகப்படுத்த வேண்டிய கலைகளில் முதன்மையானது வாசிப்பு கலை. அதனை வெவ்வேறான வடிவங்களில் பலத்தரப்பட்டச் சூழலிகளில் அவர்களுக்கு நாம் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

இனியன் குழந்தைகளுடன்

சென்னையில் நகரத்தின் மையப்பகுதியில் நடந்து முடிந்த முதல் “குழந்தைகளுக்கான கலை இலக்கிய கொண்டாட்டம்” நிகழ்வுக்கு பிறகு வேறெங்கு இப்படியான நிகழ்வை அமைக்கலாம் என யோசித்தப் போது நினைவில் வந்தது “கோத்தகிரி”தான்.

காரணம் கோத்தகிரியில் பலப் பள்ளிகளுக்கு சென்று வந்திருக்கேன். அவற்றில் சில பழங்குடியின குழந்தைகளுக்கான பள்ளிகள். அங்கெல்லாம் கிடைத்த அனுபவங்கள் தான் இம்முடிவை எடுக்க வைத்தது.

மேலே சொல்லியிருப்பது போல் புறக்கணிக்கப்படும் அனைத்து குழந்தைகளுக்கும் அனைத்தும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆவல்தான் என்றாலும் படிப்படியாகத் தான் செல்லவேண்டும். செல்லவும் முடியும்.

அதன் துவக்கமாக மலைவாழ் குழந்தைகளிடம் வாசிப்பையும், அப்பகுதிகளுக்கு உரித்தானச் சில இசை சார்ந்த கலைகளையும் அவர்களிடம் அறிமுகப் படுத்தலாம் என்ற திட்டத்துடன் களமிறங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நிச்சயம் சென்னை நிகழ்வை விட இம்முறைப் புதிய அனுபவங்களாக இருக்கும். இம்முறை எடுக்கப்பட்டிருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை 15. அதில் 8 பழங்குடியினக் குழந்தைகள், 6 மலைசார் தொழிலாளர்கள் வீட்டுக் குழந்தைகள், ஒரு மருத்துவர் வீட்டுக் குழந்தைகள் மற்றும் பாடல்களுக்கென்று 4 குழந்தைகள். மேலும் நீலகிரி மாவட்ட பழங்குடியின மக்களின் இசை மற்றும் உலகின் ஆதியிசை கருவியின் இசை மற்றும் கல்லூரி மாணவர்களின் சிறார் நாடகம் எனப் புதியக் கலவையில் அரங்கு தயாராகிறது. அனுபவிக்கத் தயாராகுங்கள்.

17-12-2017 அன்று நிகழும் இந்த நிகழ்வில் எழுத்தாளர்கள் யெஸ். பாலபாரதி, விஜய்பாஸ்கர் விஜய்,  உதயசங்கர் ஆகியோர் கதைசொல்கிறார்கள்.

இனியன், பல்லாங்குழி அமைப்பின் நிறுவனர். 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.