மீனவர்களை இந்திய அரசு திட்டமிட்டு கைவிட்டதா?

சிரில் அலெக்ஸ்

ஒரே ஒரு மீனவர் கடலில் காணாமல் போய்விட்டார் என்றாலே ஊர் முழுவதும் சோகத்தில் மூழ்கிவிடும். அந்தக் கணம்வரை சண்டையிட்டுக் கொண்டிருந்த அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களும் துக்கத்தில் ஆழ்ந்துவிடுவார்கள். மெல்ல அந்தத் துக்கம் பக்கத்து கிராமங்க‌ளுக்குப் பரவும். இந்தியாவின் வேறெந்த கிராமங்களைப்போலத்தான் நம் மீனவ கிராமங்களும். இன்று ஒருவரல்ல ஓராயிரம்பேர் காணாமல் போயுள்ளனர். காத்திருந்து, துக்கம் அனுசரித்து, பிராத்தனைகளும் கண்ணீரும் தீர்ந்தபின்னரே அம்மக்கள் போராடத் துவங்கியுள்ளனர்.

தங்கள் மக்கள் மட்டுமல்ல வெளியூர்க்காரர்கள் கடலில் தத்தளித்தாலும் அதை சொந்த இழப்பாக, மீட்க முடியாமல் போனால் அதைத் தங்களின் தோல்வியாகவேகூடக் கருதுபவர்கள் மீனவர்கள். முட்டத்திற்கு சுற்றுலா வந்த ஒரு குழுவில் மூன்றுபேர் கடலில் விழுந்து காணாமல் போயினர். மூன்று நாட்கள் இரவு பகலாய்ப் போராடி அந்த உடல்களை மீட்டனர் மீனவர்கள். அலைகள் ஓய்வதில்லை படப்பிடிப்பின்போது கடலில் மிக ஆபத்தான பகுதிக்குள் தவறி விழுந்த வெளியூர் சிறுவனை தன் உயிரைப் பொருட்படுத்தாது கடலுக்குள் குதித்து காப்பாற்றிய நிகழ்வு என் கண்முன்னே தெரிகிறது. கடலில் தத்தளிப்பவர் எந்த மதம், எந்த இனம், எந்த க‌ட்சி என யாரும் கேட்பதில்லை.

மீட்புப் பணிக்கு போய்வந்த ஒரு கட்லோரப்படை கப்பலைக்குறித்து ஒரு மீனவர் நல்லமுறையில் பதிவு செய்திருந்தார். அவர்கள் முடிந்தவரைத் தேடியதாகச் சொன்னார். நான்கூட அந்த வீடியோவை இங்கே பதிந்தேன். ஆனால் அவர்கள் சொன்ன ஒரு விஷயம் இந்தத் தேடல் எப்படி சுரத்தற்ற, பயனற்ற முறையில், ‘தன் நாட்டு மக்கள்’ என்கிற உணர்வற்ற முறையில் நடைபெறுகிறது என்பதை பின்னர் எனக்கு உணர்த்தியது. அவர் சொன்னார். ரேடார் மூலம் பல மைல்களுக்கு ஸ்கேன் செய்தோம் என்று. ரேடார்களைக்கொண்டு மிதந்துகொண்டிருக்கும் ஒரு நபரை கண்டுபிடிக்கவே முடியாது. கப்பலோ, பெரிய படகோ நகர்ந்துகொண்டிருந்தால் அதை ரேடார் சரியாகக் கணிக்கும். அப்படியென்றால் இந்தத் தேடல் நாடகம் என்று சந்தேகிக்க இடமிருக்கிறதா இல்லையா?

பாதிரியார்கள் தூண்டிவிட்டு இந்தப் போராட்டம் நடக்கிறது என்கிறார்கள். பாதிரியார்கள்தான் கடலில் மிதக்கும் மீனவர்களின் உடல்களையும் போட்டுவிட்டனரா? பாதிரியார்கள் மட்டுமே கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை கட்சி சார்பற்று, சாதி சார்பற்று ஒருங்கிணைக்க முடியும். போராட்டம் வன்முறைக்குத் திசைதிரும்பாமல் இருக்கச் செய்ய முடியும்.

கத்தோலிக்க பாதிரியார்கள் இந்நாட்டின் குடிம‌க்கள். அவர்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியானவர்கள் அல்ல. அவர்களில் பாதிபேர் மீனவ கிராமங்களிலிருந்த வந்தவர்களாயிருப்பர். அவர்கள் மதத் தலைவர்கள் மட்டுமல்ல சமூகத் தலைவர்களும்கூட. கிறீத்துவம் மதச் சடங்குகளை மட்டும் முன்வைக்கும் மதம் அல்ல. சமூகப் பங்களிப்பு முக்கியக் குணங்களில் ஒன்று. இல்லையென்றால் வெறும் சர்ச் மட்டுமே கட்டிக்கொண்டு சும்மாயிருப்பார்களே ஏன் கல்விக்கூடங்களும், சேவைமையங்களும் கட்டி மேய்க்க வேண்டும். இதையெல்லாம் விட இரண்டாம் வத்திக்கானுக்கு பிந்தைய கத்தோலிக்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, அது கிறீத்துவர்களாக இருந்தாலும் வேறு எவராக இருந்தாலும் சரி, வீதியில் இறங்கிப் போராட எல்லா கிறீத்துவர்களையும் அழைக்கிறது.

இந்திய கிராமங்கள் தங்களை பல்வேறு வழிகளில் ஒருங்கிணைத்துள்ளன. அவை அனைத்துமே அர்சு சார்ந்த அமைப்புகள் அல்ல. பல கோவில்களைச் சார்ந்த அமைப்புகளும் ஊர்க்காரியங்களை ஒருங்கிணைக்கின்றன உரிமைகளுக்குப் போராடுகின்றன. கிறீத்துவர்கள் செய்வது மட்டும் விதிவிலக்கல்ல.

நம் நாட்டின் எல்லையில் நம் நாட்டு மக்கள் 600 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை மீட்க நம்மால் முடியவில்லை. இது தேசிய அவமானமில்லாமல் வேறென்ன? நம் அண்டை நாடுகள் இதை கவனித்துக்கொண்டிருக்காதா?

வெளிநாடுகளில் பேரிடர்கள் வரவில்லையா என்று ஒரு கேள்வியை அரசே முன்வைக்கிறது. எந்த வெளிநாட்டில் 2000 பேர் காணாமல் போன பேரிடருக்கு 7 நாட்கள் கழித்து மீட்புப்பணியை முடுக்கிவிடுகிறார்கள் என்றும் கேட்டு வைத்துக்கொள்ளலாம்.

இப்படி ஒரு இயற்கைப் பேரிடர் நடந்ததும் அரசு உடனடியாக களத்தில் இறங்கியிருக்க வேண்டும். அண்டை மாநிலங்களுக்குத் தகவல்சென்றிருக்க வேண்டும். எங்கள் மீனவர்கள் கரை சேர்ந்தால் அவர்களை கவனித்துக்கொள்ளுங்கள் எங்களுக்குத் தகவல் தாருங்கள் என்று. அண்டை நாட்டினருக்குத் தகவல் சொல்லியிருக்க வேண்டும். நம் படைகள் எல்லைகளைத் தாண்டித் தேடத் தேவையான அனுமதிகளை அண்டை நாடினரிடம் கேட்டுப் பெற வேண்டும், இல்லையேல் அவர்களை தேடும் பணியில் ஈடுபடச் செய்ய வேண்டும். பிற மாநிலங்களில் கரை சேர்ந்த மீனவர்களையே மீட்டுக் கொண்டுவர இத்தனை பாடுபடும் அரசு நடுக்கடலில் மீட்புப்பணி நடத்தியது என்பதை நம்ப முடிகிறதா?

விரக்தியே மிஞ்சுகிறது.

இது திட்டமிடப்பட்ட சதி என்பதையெல்லாம் நம்பமுடியவில்லை. ஆனால் எந்தத் திட்டமும் இல்லாமல் தன் மக்களை இந்த நாடு கைவிட்டுள்ளது என்பதை நம்பாமல் இருக்கமுடியவில்லை.

சிரில் அலெக்ஸ், வலைப்பதிவர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.