அன்புள்ள திரு ராகுல்காந்தி…
வரும் 16ம்தேதி நீங்கள் காங்கிரஸ் தலைவராக பதவியேற்பீர்கள் என அறிந்தேன்.. இதில்எனக்கு புதிதாக ஏதுமில்லை. கடந்த 2007ம் ஆண்டு குஜராத் சட்டமன்றத்தேர்தல் பிரச்சாரத்தில் அன்பின் அரசியலைப்பற்றி பேசினீர்கள். அன்றே உங்களுடன் மனப்பூர்வமாக உடன்பட்டு விட்டதால் இது எனக்கு சடங்குதான்..
ஆனால் ஒரு கட்சியாக மட்டுமின்றி நூற்றிமுப்பது ஆண்டுகளாக நவீன இந்தியாவின் உருவாக்கத்திலும் அதன் சாதனைகளிலும் போதாமைகளிலும் பங்குபற்றிய ஓர் இயக்கமாக காங்கிரஸை கருதும் எனக்கு அன்றாட வாக்கரசியலுக்கு அப்பால் பேச சில விசயங்கள் உண்டு..
அதில் முதன்மையான ஒன்றைப்பற்றி இந்த தருணத்தில் பேசியாக வேண்டும். பாரதீய ஜனதா கட்சியினர் டிசம்பர் மாதமானால் பாபர்மசூதி இந்தியாவின் அவமானச்சின்னம் என உளறுவார்கள்.. அப்போது எனக்கு 1901ல் காந்தி பேசியது நினைவுக்கு வரும். அவர் மனிதக்கழிவுகளை மனிதன் அள்ளும் சூழலையே தேசிய அவமானம் எனக் கூறினார். தனது வாழ்நாள்முழுவதும் கழிவறைகளைப்பற்றி பேசியும் சிந்தித்தும் வந்த அரசியல் ஆளுமை அவரே. ஆனால் அவர் தேசியஅவமானம் எனக் கருதிய ஒரு விசயத்தை இன்னும் ஒழிக்காமல் நாம் அடைந்து விட்டதாகக் கருதும் வளர்ச்சிக்கு எந்த வித உள்ளீடும் இல்லை..
2011ம்ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 7.50 லட்சம் பேர் இந்தப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மகசேசே விருதாளர் திரு. பெஜவாடா வில்சனின் “சபாயி கர்மச்சாரி அந்தோலன்”சுமார் 10.3லட்சம் பேர் ஈடுபட்டுள்ளதாக சொல்கிறது. 2016ல் மட்டும் 1370 பேர் கழிவகற்றும் பணியில் இறந்துள்ளதாகவும் இந்த அமைப்பு பதிவு செய்துள்ளது. இவர்களை இப்பணியில் ஈடுபடுத்தியவை இந்திய ரயில்வே மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள். இவை அரசமைப்புகளே நிகழ்திய சட்ட மற்றும் மனித உரிமை மீறல்கள் மட்டுமல்ல. நாம் இணைந்து நிகழ்த்திய பச்சைப் படுகொலைகள்.
எப்படியிருப்பினும் இந்த தேசிய அவமானம் நம் ஒவ்வொருவர் முகத்திலும் அப்பிக்கொண்டுள்ளது. காந்திக்கு மட்டுமல்ல சமூக அநீதிகளுக்கெதிரான மானுட சாசனமாக இந்திய அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியளித்த அம்பேத்கருக்கும், நவீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்கள் வழியே இந்தியாவின் துயரங்களை களைய உறுதிபூண்ட நேருவிற்கும், கூட நாம் நியாயம் செய்யவில்லை.
1993ல் உலர்கழிவறை கட்டுமானத்தடைச் சட்டத்தை திரு.நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு கொண்டுவந்தது. 2013ல் மனிதக்கழிவுகளை மனிதர் அகற்றுதல் தடை மற்றும் துப்புரவு தொழிலாளர் மறுவாழ்வு சட்டத்தை திரு.மன்மோகன்சிங் அரசு நிறைவேற்றியது. இச்சட்டங்கள் முக்கியமானவை என்பதில் ஐயமில்லை. ஆனால் அமுலாக்கங்களில் பெரிய அக்கறை காட்டப்படவில்லை என்பதே நிதர்சனம்.. அதிலும் இந்த அவலத்தை களைய 2014-15ம் நிதியாண்டில் ஐ.மு.கூ அரசு ஒதுக்கிய 439.70 கோடி மனதக்கழிவகற்றுதலை “கர்மயோகம்” என வரையறை செய்த மகான் மோடியின் ஆட்சியில அதில் பத்தில் ஒரு பங்காக குறைக்கப்பட்டு விட்டது.
இந்த அவமானம் தேசத்திற்கே பொதுவானது என்றாலும் கூட தமிழகத்தை சேர்ந்த எங்களுக்கு இதைப்பற்றிபேச ஆறுதலான கூடுதல் தகுதி ஒன்றுண்டு. தமிழக்திலுள்ள கோபிசெட்டிபாளையத்தில் இரு முறை நகர்மன்ற தலைவராக (1951-56,1981-86) விளங்கிய காந்தியவாதியும்;
சுதந்திர போராளியுமான திரு.ஜி.எஸ்.லட்சுமண ஐயர் அவர்கள் கோபிசெட்டிபாளையத்தில் அனைத்து வீடுகளிலும் உலர்கழிப்பிடங்களை அகற்றி நீரடிக்கழிவறைகளை அமைத்து தனது முதல் பதவிக் காலத்திலேயே மனிதக்கழிவுகளை மனிதர் அள்ளும் இழிவை நீக்கிய முதல் நகராட்சியாக கோபியை மாற்றினார். அவரின் நிழல்தந்த ஆசுவாசத்தில் அமர்ந்தே இக்கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுகிறேன்.. நீங்கள் இந்தியாவின் அதிகாரத்தின் மையசக்தியாக மாறும் நாளில் இருந்து மிக்குறுகிய கால வரையறைக்குள் இந்த அவலத்தை துடைத்தகற்ற வேண்டும் என்பதே இந்த தருணத்தில் எனது வேண்டுகோள்..
ஒரு குற்றவுணர்வற்ற இந்தியனாக நான் உணரும் நாள் அதுவாகவே இருக்கும். எனது தலைவராக உங்களுக்கும் கூட.
அன்புடன்,
இரா.முருகானந்தம்
என்று தணியும் எங்கள் நீரடிக் கழிவறைத் தாகம், என்று மடியும் எங்கள் சாத்ய உயர்தாழ்வுப் பேதம்.
LikeLike