நிழலழகி 19: மதிவதினியின் ஆழமான அறப்போர்!

Aramm | Gopi Nainar | Tamil | 2017

கே. ஏ. பத்மஜா

நயன்தாரா என்றால் ஆண்களுக்கு மட்டும் அல்ல; பெண்களுக்கும் ஒருவித ஈர்ப்பு உண்டு. அதுவும் ‘ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்’ என்று ஆடிய நயன், ‘ஊரெல்லாம் உன்னை பார்த்து வியந்தாரா’ என்று தன்னை செதுக்கிய விதம் சினிமாவுக்கான அர்ப்பணிப்பு. அழகையும் கவர்ச்சியையும் தாண்டி, தமிழ்த் திரையுலகம் அவரிடம் நடிப்பை வாங்காமல் இருந்தபோதும், தனக்கான இடத்தை தனித்துவத்துடன் ஏற்படுத்திய நயன்தாராவிற்கு நடிப்பை வெளிப்படுத்தி தனது திறமைக்கான அங்கீகாரத்தை தந்த படம் ‘அறம்’.

2017 ஆம் ஆண்டு கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் பல நல்ல விமர்சனங்களை அள்ளி கொண்டிருக்கும் படம் “அறம்”. ஒரு நல்ல கதையை கோர்வையாய் நேர்த்தியாய் ஒரு இயக்குனர் திரையில் காட்ட விரும்பும்போது, ஒரு நல்ல கலைஞன் அதை சிதையாமல் சுமந்து செல்ல தேவைப்படுகிறான். அந்த வகையில் சிறிதும் அறத்தை குறைக்காமல் தன்னுடைய கம்பீர நடிப்பால் அறம் சேர்த்து உள்ளார் கலெக்டர் மதிவதனியாக வந்த நயன்தாரா.

நான் நடத்தும் ஒரு சிறு மழலைப் பள்ளிக்கு சுகாதார சான்று, அங்கீகாரம் என்று ஒவ்வொரு சான்றும் வாங்கப் போகும்போது அரசு அலுவலகங்களில் பெருகிக் கிடைக்கும் ஊழலை, அதற்குக் காரணமாய் இருக்கும் அதிகாரிகளின் முகத்தில் காரி உமிழத் தோணும். பல அதிகாரிகள் சோம்பேறிகளாய் தங்கள் நாற்காலியை தேய்த்துவிட்டுப் போவதற்கு என்றே சட்டம் எல்லாம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறதோ என்றும் தோணும். ஒவ்வோர் அலட்சியத்திற்கும் ஒன்று அல்லது பல உயிரை விலையாய்க் கொடுத்து நாம் பாடம் கற்கிறோம். நாயகி என்றால் அவள் கவர்ச்சியான உடையில் வந்து போகவேண்டும் என்ற தமிழ் வர்த்தக சினிமாவின் எழுதப்படாத விதியை மாற்றி வெறும் மூன்றே புடவையில் முழுப்படத்தையும் நடித்தும் தன்னுடைய ரசிகர்களை ஏமாற்றாத நயன்தாரா சிறந்த நடிகை என நிரூபித்து உள்ளார்.

மதிவதனிக்கு பதில் ஓர் ஆண் கலெக்டர் என்று இருந்தாலும் கதைக் கரு சிதைந்து இருக்காது. ஆனால், ஒரு பெண்ணை முன்னிறுத்தி ஒரு சமூக பிரச்சினையை எதிர்கொண்ட விதம் வியப்பு. முதல் காட்சியிலேயே தன்னை ஒரு நேர்மையான அதிகாரி என்பதால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதை தைரியமாய் தன் தரப்பு வாதத்தை வெளிப்படுத்துகிறார் மதிவதனி. இன்று பல மேல் அதிகாரியிடம் தேவையான நேரத்தில் வாயை திறக்காததும், விளக்கம் கொடுக்காததும்தான் பல குழப்பங்களுக்குக் காரணம். பதவிக்கு வருவது மக்களின் பாதுகாப்பிற்கும் நலனிற்குமே அன்றி, அரசியல்வாதிகளுக்கு அடிமை சேவை செய்ய இல்லை என்ற தெளிவை மதிவதனியிடம் இருந்து அடிமட்ட அரசு ஊழியர்கூட படித்துக்கொள்ள வேண்டும். களத்தில் இறங்கி பார்க்கும்போது மட்டுமே நடைமுறை சிக்கல்களை புரிந்துகொள்ள முடியும். வெறும் குளுகுளு அறைக்குள் இருந்துகொண்டு காகிதத்தில் சட்டம் இயற்றும்போது மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் எப்போதும் விரிசல் இருந்துகொண்டேதான் இருக்கும் என்பதை மதிவதனி புரியவைத்தார்.

நான் பலமுறை பார்த்தது உண்டு: அதிகாரிகளுக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியும். ஆனாலும் ‘எதுக்கு சார் வம்பு’ என்று கை கழுவவே நினைப்பர். ‘பேசாம வந்தோமா, கையெழுத்து போட்டு சம்பளத்தை வாங்கினோமா, கடைசி காலத்துல பென்சன வாங்கி பேர பிள்ளைகளோட நிம்மதியா இருந்தோமா’ என்ற மனபோக்கிலேயே தங்கள் வேலையை தக்கவைப்பதில் கவனமாய் இருப்பர். ஆனால் ஓர் அவசர சூழலில் துரிதமாய் முடிவெடுப்பதும், தைரியமாய் செயல்படுவதும்தான் அதிகாரத்திற்கு அழகு. அந்த அழகிற்கு அழகு சேர்த்து இருப்பார் மதிவதனி. ஓர் அதிகாரியாய் அதிகாரவர்க்கத்தோடும், அரசியல் வியாதிகளோடும் போராடுவது என்பது, வேறு ஒரு பெண் அதிகாரியாய் இருந்து இவர்களை எதிர்த்துப் போராடுவது என்பது இன்னும் கடினமானது என்பதை தனது அழுத்தமான வசனத்தில் புரியவைத்து இருப்பார் மதிவதனி.

ஆம், நமக்காய் வீதியில் இறங்கி போராட துணிந்த பல பெண் போராளிகள் கதியை நாம் கண்முன்னே காணத்தானே செய்கிறோம். குழந்தை பத்திரமாய் காப்பாற்றப்பட்டவுடன் தான் அடக்கிவைத்த அத்தனை உணர்வுகளையும், அழுத்தங்களையும் அழுகையாய் கொட்டித் தீர்ப்பாள் மதிவதனி. அந்த அழுகையில் எத்தனை அர்த்தம் வாய்ந்தது! பொதுவாக, பெண்கள் என்றால் எதற்கெடுத்தாலும் கண்ணை கசக்கிக்கிட்டு நிற்பார்கள் என்ற நிலையை உடைத்து எறிந்த மதிவதினியின் அறப்போர் இன்னும் மனதில் ஆழத்தில் பதிந்து இருக்கிறது. என்றும் மதிவதனி என்மனத்தில் கெத்தாய் நடப்பாள் நிழலழகியாக.

காலம் காலமாய் காதல் மட்டுமே தமிழ் சினிமாவின் சிலபஸ் என்ற வைகையில் நாயகன், நாயகி என்று கதையை வடிவமைத்து கல்லா கட்ட காசு பார்க்கும் பெரும்பாலான இயக்குனர்களுக்கு மத்தியில், நாம் வாழும் சமூகத்தின் மீது அக்கறை கொண்டு, அதன் தேவை எது என அரசாங்கத்திற்கு மட்டும் இல்லாமல் பொதுமக்களும் புரிந்துகொள்ளும் வகையில் நிஜ சம்பவங்களை திரையில் விரித்து, அதை அப்படியே நம் மனதிற்குள் கடத்திய இயக்குனர் கோபி தன்னை மட்டும் நிரூபிக்கவில்லை… நயன்தாராவை சரியாய் தமிழ்த் திரையுலகம் பயன்படுத்தவில்லை என்பதையும் நிரூபித்துள்ளார்.

(தொடர்வோம்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.