அருண் நெடுஞ்செழியன்

முதலாளித்துவ குடியரசு ஆட்சியில், தொழிலாளர்களின் வேலை நேர வரம்பு ,கூலி விகிதம் தொடர்பான அனைத்து கோரிக்கைகளும் சட்டப்பூர்வமாக்கப்பட்டது வர்க்கப் போரட்டத்தின் விளைவாகும்.
முதலாளித்துவ பாராளுமன்றங்களின் மந்திர கோளால் இவ்வுரிமைகள் திடுமென தரப்பட்டவை அல்ல. வேலை நேர வரம்பு,பணியிடப் பாதுகாப்பு, விலைவாசிக்கு ஏற்ப கூலி விகிதம் உள்ளிட்ட கோரிக்கைகள் ஒவ்வொன்றிக்கும் வர்க்கப் போராட்ட வரலாறு உண்டு.
பாராளுமன்றகளில் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் சட்டப்பூர்வமக்கப்பட்டாலும் ,அதை அமலாக்குவதில் முதலாளித்துவ அரசுகள் அரை நூற்றாண்டு காலம் தாமதம் செய்தன,ஓட்டைகளை பயன்படுத்தின.
இவ்வாறாக போராடிப் பெற்ற உரிமைகளை அமலாக்காமல் இழுத்தடிப்பது,காலம் தாழ்த்துவது என்பது முதலாளித்துவ அரசுகளின் இயற்கை குணாம்சமாகவேஉள்ளன.இவ்வாறாக தனது சொந்த சட்டபூர்வ ஒப்புதலுக்கு கூட எதிராக முரண்படுகிறது. சட்டத்தின் பெயரிலான ஆட்சி என சமூகத்திற்கு எஜமானாகிற முதலாளித்துவ வர்க்கமானது தனது சொந்த சட்டத்தையே அதன் சொந்த நலன்களுக்காக மீறுகிறது.
முதலாளித்துவ குடியரசின் வளர்சிப் போக்கில் இப்பணியானது ஆளும்வர்க்கத்தின் பொறியமைவான நீதிமன்றங்களின் கைகளுக்கு மாறிச் செல்கிறது.
கூலி உயர்வுக்கான போராட்டம், வேலை நிறுத்தங்களை சட்டவிரோதம் என அறிவிப்பதன் வழியாக , அக்கோரிக்கை தொடர்பாக கடந்த கால சட்டங்கள், நீதிமன்ற தீர்ப்புகளில் இருந்து முரண்படுகிறது.
ஒப்பந்த தொழிலாளர்களின் உரிமைகள் குறித்த சட்டங்கள், இடைக்கால தீர்ப்புகளை அமலாக்கம் செய்ய உத்தரவிடாமல்,போராடுவதை சட்டவிரோதம் என உத்தரவிடுகிறது!
சமூக அடித்தளத்தை, தொழிலாளர்கள் நம்பிக்கைகளை இழக்கிற அரசாங்களுக்கு இந்த நீதிமன்ற நடைமுறை முரண்பாடுகள் தாங்கு தூண்களாகிறது.
மூன்று நாட்களாக உறுதியுடன் நடைபெற்ற செவிலியர்கள் போராட்டம் இவ்வகையிலேயே நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பில் பலாத்தகாரமான வகையில் முடித்துவைக்கப்பட்டது.
கடந்த காலத்தில் ஆசிரியர்கள் போராட்டம் ஆகட்டும்(ஜாக்டோ ஜியோ),போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் ஆகட்டும் செவிலியர்கள் போராட்டம் ஆகட்டும் நீதிமன்றங்கள் திடீர் சமூக எஜமானர்கள் ஆவது தொடர்கதையாகி வருகிறது.
தமிழ்நாடு மின்சாரத் துறையில் 11 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து,பணிக்காலத்தில் இறந்து போன தொழிலாளருக்கு நிரந்தர பணியாலாருக்கான உரிமைகளை வழங்க வேண்டும் என அவரது மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழ்நாடு தொழில்துறை சட்டம் 1981 இன் படி 480 நாட்களுக்கு மேலாக,இரண்டு ஆண்டு காலமாக வேலை பார்ப்பவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற சட்டத்தை மேற்கோள் காட்டி, தொழிலாளர் மனைவிக்கு ஆதரவாக கடந்த 2012 ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கினார்கள். (பார்க்க https://timesofindia.indiatimes.com/…/articles…/15357000.cms) ஆனால் இந்த தீர்ப்பு நடைமுறைப் படுத்தப் பட்டதா, அதற்கு அந்த தொழிலாளர் மனைவி எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பது தனிக்கதை!
ஆக, மேற்கூரிய தீர்ப்பிற்கும் நேற்றைய தீர்ப்பிற்குமான முரண்பாடு, தொழில்துறை சிக்கல் தொடர்பான சட்டத்திற்கும் நீதிமன்றத்திற்குமான முரண்பாட்டிற்கு பொறுப்பேற்கபோவது யார் என்பதே கேள்வி..
ஒப்பந்த பணியாளராக கடந்த இரண்டு வருடங்களாக மாதம் 7700 ருபாய் சம்பளத்திற்கு நாளுக்கு 12 மணி நேரம் வேலை செய்கிற செவிலியர்களின் நியாயமான கோரிக்கையும் போராட்டமும் பலாத்காரமான வகையில் உத்தரவிட்டு முடித்து வைப்பது என்ற விவகாரத்தை தொழில்சங்கங்கள் எவ்வாறு அணுகப் போகிறது?
அருண் நெடுஞ்செழியன், அரசியல் செயல்பாட்டாளர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல், அணுசக்தி அரசியல் ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.