சென்னை மாநகர  உழைக்கும் மக்களின் குடியிருப்பு பிரச்சனை: அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

1

சென்னை மாநகர வளர்ச்சியும் தொழிலாளர் வர்க்கத்தின் உருவாக்கமும்

சென்னை பெருநகர உழைக்கும் வர்க்கத்தின் வரலாறானது,19 ஆம் நூற்றாண்டின் பின்பாதியில் வளர்ச்சியுற்ற கிழக்கிந்திய நிறுவனங்களின் தொழில்துறை எழுச்சியோடு தொடங்குகிறது.

துறைமுகம், மின்சார உற்பத்தி நிலையம்,ரயில்வே போக்குவரத்து, பஞ்சாலைகள், எண்ணெய்-பெட்ரோல் நிறுவனம், தீப்பெட்டி தொழிற்சாலை,ட்ராம் வே,தோல் பதனிடும் ஆலைகள், அச்சுக்கூடம்  போன்ற ஆலைத் தொழில்களும் போக்குவரத்து சாதானங்களும்  19 ஆம் நூற்றாண்டின் பின்பாதியிலும, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தோற்றம் பெற்று  பாய்ச்சல் வேகத்தில் விரிவாக்கம் பெற்றன. நகர்ப்புற மூலதன விரிவாக்கமானது, நிர்வாகம், கல்வி, நீதித்துறை கட்டமைப்புக்களை அவசியமாக்கியது. இவ்வாறாக கிழக்கிந்திய நிறுவனங்கள் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களின் மூலதன விரிவாக்கம், சந்தை தேவைகள் சென்னை மாநகரை உருவாக்கியது. கூடவே சென்னை நகரின் தொழிலாளர் வர்க்கத்தையும் உருவாக்கியது.

கிராமப்புறத்தில் விவசாயக் கூலிகளாக கிராமங்களில்  உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளானவர்கள், நகரங்களுக்கு புலம்பெயர்ந்து, ஆலைகளில் முதலாளிகளுக்கு உழைப்பை விற்கிற கூலித் தொழிலாளியாக மாறினர். இந்நகர வளர்ச்சியின் ஒவ்வொரு செங்கல்லிலும் இத்தொழிலாளர்களின் உழைப்பு  பெயர்க்கப்பட்டது.

காலனியாதிக்க காலகட்டத்தில் ஐரோப்பிய மூலதன அடித்தளத்தில் உருவாகிய நகர கட்டமைப்பானது, நவீன இந்தியாவின் ஆட்சியாளார்கள் கட்டத்தில் மேலும் வளர்ச்சியடைந்தது. ரயில் பெட்டி தொழில்சாலை, கனரக டாங்கர் தொழில்சாலை, வேதியல் தொழில்சாலைகள் என மாநகரத்தின் தொழில்துறை வளர்ச்சியும் கூடவே தொழிலாளர் குவிப்பும் அதிகரித்தது.

இந்தியாவில் 90களில் நடைமுறைக்கு வந்த உலகமயாக்கல், சென்னையின் வளர்ச்சியை பன்மடங்காக்கியது,பன்னாட்டு தொழில்துறை நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப  நிறுவனங்கள், வங்கி நிறுவன முதலீடுகள் நகரில் குவிந்தன. கூடவே நகர விரிவாக்கமும், நடுத்தர வர்க்க உருவாக்கமும்,செல்வந்தர்களின் எண்ணிக்கையும் பெருகின.

வானளவ கட்டிடங்கள், கேளிக்கை கூடங்கள், கண்கவர் கண்ணாடி மாளிகைகள், விளையாட்டு மைதானங்கள், உயர்ரக மதுபானக் கடைகள், ஆடம்பர விடுதிகள்  என நவீன இந்தியாவின் செல்வந்தர்களின் சொர்க்கமாக சென்னை ஒளிரத் தொடங்கியது.

ஆனால் மாய மந்திர வித்தைகள் போல இரு நூற்றாண்டுகளில் இந்நகரின் நிகழ்த்தப்பட்ட  மாற்றங்களுக்கு அடித்தளமாக இருந்த  இத்தொழிலாளர் வர்க்கத்தின்  வேலை நிலையும்  வாழ்நிலையும் கடந்த இருநூறு ஆண்டுகளாக மேலும் மேலும் மோசமாகியே வருகிறது.

2

சென்னை மாநகர தொழிலாளர் வர்க்கத்தின் நிலை

பெருமுதலாளிகள்,அந்நிய முதலாளிகளின் மூலதனக் குவியலும் விரிவாக்கமும் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் இயற்கையான முரண்பாட்டை வெளிப்படுத்தியது. தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டியே, முதலாளிகள் செல்வந்தர்களாக வளம் வந்தனர். பணக்கார்கள் ஆடம்பர கார்களில் பவனி வர, தொழிலாளர்களோ அரை வயிறும் கால் வயிறுமாக கஞ்சிக்கே அல்லலுற்றனர்.

காலனியாதிக்க ஆட்சிகாலம்  முதலாக  தற்போதைய காலம்  வரையிலுமான  சுமார் 200  ஆண்டுகளாக,மாநகரின் தொழிலாளர் வர்க்கமானது மோசமான உழைப்புச்சுரண்டலோடும், சுகாதாரக் கேடுகளோடும், நெருக்கடியான இருப்பிடங்களிலும், தெருவோரங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.

1931 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் மற்றும்  ராயல் கமிஷன் அறிக்கைகள், சென்னை நகர்ப்புற தொழிலாளர்களின்  வசிப்பிட நிலைமை குறித்த விவரங்களை நமக்கு அளிக்கின்றன. “சென்னை பெரு நகர தொழிற்சங்க வரலாறு” நூலில் தோழர் வீரராகவன் இவ்விவரங்களை மேற்கோள் காட்டியுள்ளார். இக்கணக்கின்படி, சென்னை நகரத்தின் மக்கள் தொகையில் கால் பங்கு மக்கள், அதாவது சுமார் 1,50,000 பேர் (அப்போதையே மக்கள் தொகையின்படி) ஓரறை இருப்பிடங்களில் வாழ்ந்தனர். பலநூறு தொழிலாளர்கள் சாலை ஓரங்களில் படுத்துறங்கினர்.

ஒரு ஓரறை வீட்டில் சுமார் நான்கு குடும்பங்களை சேர்ந்த 15-20 பேர்கள் வசித்தனர்.இவை  அதிகபட்சமாக பத்து அடி அகலமும் பத்து அடி நீளமும் கொண்டவை. காற்றும் ஒளியும் புக முடியாத இருப்பிடங்கள்..

சென்னை நகரின் தொழிலாளர் வர்க்கத்தினர் அதாவது மாநகரின் சுமார் 33% மக்கள் இவ்வாறு நெருக்கடியான வசிப்பிடங்களில் வாழ்ந்து வந்தனர். கழிப்பிட வசதிகள் இல்லை, குடிநீர் வசதிகள் இல்லை. குகையை விட மோசமான வாழிடத்தில் வாழ்கிற இம்மக்கள் உண்ணுகிற உணவோ, சிறைக் கைதியின் உணவை விட சத்து குறைவானவை.1927 ஆம் ஆண்டில் சென்னை நகரின் மரண வீதம் அதிகரித்து வருவதை ஆராய்ந்து அறிக்கை அளித்து குழுவொன்று, மிகை நெருக்கடி சூழலில் வாழ்வதால், காச நோய் பரவி, மரண வீதம் அதிகரித்தது  என்றது.

மேற்குறிப்பிட்ட நிலைமைகள் எல்லாம் என்பது தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை மாநகரில் தொழிலாளர் வர்க்கம் எதிர்கொண்டவை, தற்போது எல்லாம் மாறிவிட்டது என எண்ணவேண்டாம். இன்றைய நகர்ப்புற தொழிலாளர் நிலையோ மேலும் மோசமாகியுள்ளது என்பதுதான் எதார்த்த உண்மையாக உள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் இன்றைய நிலையை கூறுகிறது. அவை வருமாறு  .

·         தமிழகத்தில்  சுமார் 14.8 லட்சம் குடும்பங்கள் குடிசைப் பகுதிகளில் வசிக்கிறார்கள்.

·         சென்னை மக்கள் தொகையான  86,53,521 இல் சுமார் 29 % மக்கள்(சுமார் 29,09,521) நகர்ப்புற குடிசைகளில் வசிக்கிறார்கள்

·         2001 ஆம் ஆண்டில் சென்னை மக்கள் தொகையில் 25 %  இருந்த நகர குடிசைப் பகுதி மக்கள் தொகை, அடுத்த பத்தாண்டுகளில்  29 % உயர்ந்துள்ளது.

இந்தியாவில் வேகமாக நகர்மயமாகிவருகிற மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதாவது தமிழகமானது 42 விழுக்காடு நகர்மயமாகியுள்ளது என 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு கூறுகிறது தமிழகத்தின் வேளாண்மைக்குப் பிராதனமாக உள்ள நிலப் பயன்பாடும்,நீர் மேலாண்மையும் நகர்மயம் சார்ந்த தொழில்மயமாக்கப் பொருளாதாரத்தால் கேள்விக்குட்படுத்தப்பட்டன. தொழில்துறை முதலீடுகள்,சேவைத் துறை முதலீடுகள் போன்ற நகரப்புற சார் மூலதன விரிவாக்கமானது, ரியல் எஸ்ட்டேட் கட்டுமானங்கள், சாலை, போக்குவரத்து என பல துணை நிலை விரிவாக்கங்களை நகரில் உருவாக்கியது. கிராமப் பொருளாதாரம் புறக்கணிப்பட்டது. இந்த நகர்ப்புற முதலீடுகள், பெரும் அளவில் கிராமத்தில் இருந்தும் துணை நகரங்களில் இருந்தும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் ஏழை கூலி விவசாயிகளை நகருக்கு இழுத்து வந்தது. இவர்கள் நகர்ப்புறத்தில் உதிரித் தொழிலாளர்களாக பெருகினர்.

கட்டுமான கூலித் தொழிலாளர்கள், பெயின்ட் அடிப்போர்கள், துப்புரவு பணியாளர்கள், ஓட்டுனர்கள் என பல உதிரித் தொழிலாளர் வர்க்கமானது உலகமய கட்டத்தில் வளர்சியடைந்தது. அன்றாட உணவு, குடும்ப பராமரிப்பு, குழந்தைகளின் கல்விசெலவுகளுக்கு கூலிகள் போதுமானவையாக இல்லாத சூழலில், குடியிருப்பு வாடகை என்பது பெரும் சுமையாகிறது.

இதன் காரணமாக மாநகரின் பொறம்போக்கு நிலங்கள், சாலை ஓரங்கள்  மற்றும் கூவம், அடையாறு பக்கிங்காம் கால்வாய் போன்ற நீர் வழித்தடங்களில் ஒலைக்குடிசைகளை வேய்ந்து கொண்டு, நெருக்கடியான தடுப்பறைகளை அமைத்துக்கொண்டு சுகாதாரக் கேடோடும், கழிவு, குடிநீர் வசதிகள் அற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். சென்னைப் பெருநகரில் மட்டும் சுமார் இரண்டாயிரம் குடிசைப் பகுதி குடியிருப்புகள் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெருவிக்கின்றன. பெரும்பாலும் இக்குடிசைப் பகுதிகளுக்கு  மனைப் பட்டா வழங்கப்படவில்லை. மனைப்பட்டா வழங்கப்படுவதாக அரசால் வழங்கப்பட்ட அறிவிப்புகளும், அரசு ஆணைகளும் காலாவதி ஆகிவிட்டன.!

3

ஆக்கிரமிப்பு அரசியல்

நகரின் தோற்றத்திற்கும் இயக்கத்திற்கும் அடித்தள ஆதாரமாக உள்ள இந்த தொழிலாளர் வர்க்கத்தின் வசிப்பிட சிக்கலை இந்த ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளவில்லை. தொழிலாளர்களின் மலிவான உழைப்பை பெற்றுக் கொள்கிறவர்கள் அவர்களின் வாழ்நிலை கேடுகள் குறித்து கிஞ்சித்தும் அக்கறை கொள்ளவில்லை. மாறாக சென்னையை உருவாக்கிய தொழிலாளர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என முத்திரையிட்டு நகரை விட்டு வெளியேற்றுகிற கேவலமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

வடகிழக்கு பருவமநிலை சூழலில், ஆறுகளில் வெள்ள ஆபத்தையும் எதிர்கொண்டே ஆண்டு ஆண்டு காலமாக இம்மக்கள் மோசமான வாழ்நிலையில் வாழ்வதற்கு தகுதியற்ற இடங்களில் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டு வாழ்ந்துவருகின்றனர். இத்தொழிலாளர்கள் பெரும்பாலும் உழைக்கும்  வர்க்கமான தலித் மக்களாகவே உள்ளனர்.

இந்த சூழலில்தான், 1970 ஆம் ஆண்டில் தமிழகத்தில் குடிசை மாற்று வாரியம் அமைக்கப்பட்டு, மாற்று வீடுகள் கட்டி கொடுக்கிற திட்டம் தொடங்கப்பட்டது. குடிசை இருக்கிற பகுதிகளிலோ அல்லது அக்கம் பக்கமாகவோ  மாற்று வீடுகளை கட்டிக் கொடுக்காமல் புறநகரங்களில் சடங்குப் பூர்வமான வகையில் வீடுகள் வழங்கப்பட்டன.

கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் போன்ற புறநகர்ப்பகுதிகளில் நகர்ப்புற குடிசை வாழ்  மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிகொடுக்கப்பட்டது. நகரகத்திற்குள் நில மனையின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற காரணத்தால் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புற இடங்களில் குப்பைகளை வீசி எறிவது போல அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நகர்ப்புற தொழிலாளர்கள் வீசியெறியப்பட்டு வருகிறார்கள். அன்றாட வாழ்க்கைக்கே கூலி பற்றாக்குறையாக உள்ளவர்கள், நகரத்திற்கு உள்ளே வேலை செய்வதற்கு வந்து போகிற செலவுக்கே பெரும் விலை கொடுக்க நேரிடுகிறது. மேலும் குழந்தைகளின் கல்வி, மருத்துவ வசதிகளும் பறி போகிறது. மலிவான உழைப்பை சுரண்டிக் கொழுத்தவர்கள் அவர்களின் இருப்பிடத்தை மட்டும் நகரத்திற்கு வெளியே அமைத்துக் கொடுக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் கடந்த  2015ஆம் ஆண்டு சென்னை பெரு வெள்ள பாதிப்பிற்கு பின்பாக ஆக்கிரமிப்பு எனச் சொல்லி, ஆற்றங்கரையோரம் வாழ்ந்து வருகிற மக்களை அப்புறப் படுத்துகிற வேலைகளை தமிழக அரசு தீவரப்படுத்தியது.

அதற்கு பன்னாட்டு மூலதன  நிதி ஆதாரங்களையும் மத்திய அரசின் நிதி ஆதரங்களையும் பெற்றுக்கொண்டது. அடையாறு கூவம் ஆற்றங்கரைகளை அழகு படுத்துவது, கழிவுகளை அப்புறப்படுத்துவது, தூய்மையான நகரை உருவாக்குவது, குடிசையில்லா நகரை உருவாக்குவது என்ற பற்பல திட்டங்களுக்கு பொது ஆவணமாக “தொலைநோக்கு 2023” என்ற இலக்கை  நடைமுறைப் படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது.

4

குடிசையற்ற நகரம் எனும் நவீன தீண்டாமை

சென்னை சுற்றுவட்டார நீர்நிலைகளை பாதுகாப்புதான் பொருட்டு 2006 ஆம் ஆண்டில் அடையார் ஆறு மறு கட்டமைப்பு நிறுவனத்தை(Adayar river restoration trust) தமிழக அரசு உருவாக்கியது.பின்னர் சென்னை ரிவர் ரிச்டோரசன் Chennai river restoration trust) என  பெயர் மாற்றப் பட்டது.இந்த CRRT இன் மூலமாக சென்னை நகர ஆறுகளை தூய்மை செய்கிற திட்டம் முடிக்கிவிடப்பட்டது. CRRT இன் கீழ் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம், குடிசை மாற்று வாரியம், சென்னை மாநகராட்சி போன்ற ஏழு துறைகள் ஒருங்கிணைக்கப்படுகிறது.

ஆற்றங்கரையோரம் உள்ள குப்பைகளை அகற்றுவது நகராட்சி பணியென்றால், ஆற்றில் உள்ள கழிவுகளை அகற்றுவது சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீர் துறையின் பணியாகும். அதேபோல ஆற்றங்கரையோர குடிசைகளை அகற்றுவது குடிசை மாற்று வாரியத்தின் பணியாகும்.

தற்போது CRRT இன் திட்டமாக கூவம் நதி மறுக்கடமைப்பு பணிகளை முடிக்கிவிடப்படுள்ளது. நாம் மேற்குறிப்பிட்டது போல சுமார் ஏழு அரசு துறைகள் சேர்ந்து, நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.சில இடங்களில் மேற்கொண்டு வருகிறது..கடந்த 2014-15ஆம் ஆண்டில்  தமிழக சட்டமன்றத்திலும் இத்திட்டத்தை அறிவித்தது.

இத்திட்டத்தின் பகுதியாக  தற்போது பருத்திப் பட்டு முதலாக நேப்பியர் பாலம் அருகில் கூவம் கடலில் கலக்கிற வரையிலான கூவம் கரையோர பகுதிகளில் வாழ்கிற சுமார் 60 நகர்ப்புற குடிசைப் பகுதிவாழ் மக்களை அப்புறப் படுத்துகிற வேலைகளை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கையில் எடுத்துள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கிரீம்ஸ் சாலையில் கூவம் கரையோரம் அமைந்திருக்கும் திடீர் நகர் குடிசைப்பகுதி அதற்கு முதல் பலியாகியுள்ளது. இந்நகரில் வாசித்த சுமார்  3000 குடும்பங்கள் வீசி எறியப்பட்டுள்ளனர். திடீர் நகரை தொடர்ந்து மகீஸ் தோட்டம், ரங்கூன் தோட்டம் போன்ற பகுதிகள் வரிசையில் உள்ளது .

ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களுக்கு அவர்களின் வசிப்பிட பகுதியிலோ அல்லது அருகாமையிலேயே  பாதுகாப்பான வீடு வழங்கவேண்டும் என்ற நமது கருத்திற்கும், வெள்ள பாதிப்பைக் காரணம் காட்டியும் குடிசையில்லா நகரமெனும் குறிக்கோளை எட்டவும், கூவம் அடையாறு அழகுபடுத்தல் திட்டம் போன்ற காரணத்திற்குக்காகவும். தொலைதூர அகதி  முகாம்களுக்கு அம்மக்களை அப்புறப்படுத்த முனைகிற அரசின் அராஜக நடவடிக்கைக்கும் அடிப்படையிலேயே வேறுபாடு உள்ளது.

நகர்ப்புற குடிசைப்பகுதிகள் வெளியேற்ற நடவடிக்கைகளுக்கு ஆக்கிரமிப்பு என்றதொரு பொய்யான விளக்கத்தை அரசு அளிக்கிறது. ஆளும்வர்க்கத்தின் ஆக்கிரமிப்பு கூப்பாடனது கல்வித் தந்தைகளின் நீர்நிலை ஆக்கிரமிப்புகளின்போதோ  மருத்துவ நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளின்போதோ  மௌனத்துதிவிடுகிறது.

ஆக்கிரமிப்பு அரசியலின் பிதாமகர்களை நாம் அடையாளம் கண்டுள்ள அதேவேளையில், ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்வதற்கு இடமின்றி “ஒன்டியுள்ள” ஓலைக் குடிசைகளை மட்டும் இவ்வரசு  ஆக்கிரமிப்பு என்று சொல்வதுதான் எவ்வளவு பெரிய முரண்.

பட்டா நிலமற்ற இம்மக்களின் உழைப்பை சுரண்டத்தெரிகிற ஆளும்வர்க்கத்திற்கு அவர்களுக்கான மாற்று வீடுகளை இருக்கும் இடத்திலோ அல்லது ஐந்து கிமீ சுற்றளவில் கட்டித்தர முன்வர மட்டும்  மறுப்பதேன்? நகர்ப்புற மனை விலையை மக்கள் நல அரசு கணக்கில் கொள்கையில்,மக்களும் மாக்களாக அரசுக்கு தெரிகிறது!

சைதாப்பேட்டை, அடையாற்றின் கரையோரத்திலுள்ள திடீர் நகர், அன்னை நகர், கோதா மேடு  பகுதிகளுக்கு அருகாமையிலேயே கோல்ப் மைதானமொன்று, இருநூறு ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது. மக்கள் வீடிழந்து, உடமையிழந்து தவித்து நிற்க, அருகாமையில் ஐம்பது பணக்கார்கள் கோல்ப் விளையாடுவதுதான் சிங்கார சென்னையா?

சென்னை மாநகரின் 25 லட்ச தொழிலாளர்களின் குடியிருப்பு சிக்கலை கண்டுகொள்ளாத ஆட்சியாளர்களுக்கு அறமே கூற்றாகும்!

அருண் நெடுஞ்செழியன், அரசியல் செயல்பாட்டாளர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.