யமுனா ராஜேந்திரன்

பன்மைத்துவம் என்பது நிலைபாடு எடுக்காமல் ஒன்றிலிருந்து விலகுவது அல்ல. பன்மைத்துவம் என்பது பன்முக அடையாளங்கள். ஒரு வகையில் இது தன்னை உணர்தல், நிலைநாட்டுதல் என்பதோடு பரந்துபட்ட சமூகத்திலும் அது என்ன விளைவைக் கொண்டிருக்கிறது எனப் பார்க்க வேண்டும்.
படுக்கைக்கு மட்டுமே நான் பெண்களைப் ‘பயன்படுத்துவேன்’ அவர்களுக்கு அதற்கு மேல் ‘பயன்பாடில்லை’ என வெளிப்படையாக அறிவித்த ராம்கோபால் வர்மா ‘நான் சன்னி லியோன் ஆகப் போகிறேன் (அதாவது போன் நடிகை ஆகப் போகிறேன்)’ என்பதை பெண்ணியக் கோருதலாக ஒரு குறும்படத்தில் முன்வைத்தார்.
குழந்தைப் பருவப் பெண்ணின் பாலியல் முகிழ்ப்பை முன்வைப்பதாகக் கோரிக் கொண்ட பெங்களுர் மலையாளிப் பெண் எடுத்த படத்தில், அவர் ஒரு பீடபைலை சம்பந்தப்பட்ட வளர்ந்த பெண் கருணையுடன் கடந்து போவதாக எடுத்திருந்தார். இப்போது லக்ஷ்மி. இந்த மூன்று படங்களும் வைரல்தான். ஒரு வகையில் தனிநபர் தேர்வு-சுதந்திரம் என்பதாகவும் இந்தப்படங்கள் தோன்றும்.
போர்ன் நடிகைகள் பாலியல் பண்டங்கள். மனமும் உடலும் காதலும் இயைந்த சம்போகமே உன்னதம். இது திருமணத்திற்கு உள்ளும் இருக்கலாம் வெளியிலும் இருக்கலாம். இதற்கு இரண்டு மனிதர்களும் ‘சுதந்திரமாக’ இருத்தல் வேண்டும். இது ஒரு வகை இலட்சிய வாழ்வு. போர்ன் நடிகையின் வாழ்வு இத்தகையது இல்லை. போலவே பீடபைல் மனநிலை என்பது குழந்தைமையின் அறியாமையை குறுகுறுப்பைச் சுரண்டும் ஒரு அயோக்கியனின் மனநிலை. ஆகவேதான் குழந்தைகளைக் கொண்டாடும் சமூகங்களில் இவர்கள் கிரிமினல்கள் எனக் கருதப்படுகிறார்கள்.
லக்ஷ்மி படத்திற்கு வருவோம். படத்தின் கறுப்பு வெள்ளைப் பகுதி வண்ணப்படத்திற்காக, அது சொல்லும் செய்திக்காக பார்வையாளனைத் தயார்ப்படுத்துகிறது. அந்தக் கறுப்பு வெள்ளைப் பகுதி தம்பதிகளின் பாலுறவு வாழ்வை, இயந்திரமயமான அன்றாடத்தை, அவர்தம் உடலுழைப்பு வாழ்வைச் சொல்கிறது.
சம்போகத்திற்கென அவர்களுக்குத் தனியறை இல்லை. உடலுறவு தரும் சுகத்தை அனத்தி அல்லது முனகி அல்லது குரலால் வெளிப்படுத்தி அனுபவிக்க முடியவில்லை. இந்த இயந்நதிரமயமான வாழ்வு, இந்த சலிப்பு, வெளியேற்றமின்மை எதனது விளைவு? இதனை யார் இவர்கள் மீது சுமத்தியது? இந்த இருவரதும் அடல்ட்ரியின் காணரங்கள் என்ன? இதனை வெறுமனே எதிகல் பிரச்சினையாகப் பார்க்க அவசியமில்லை.
அந்தக் கணவனுக்கும் கூட சம்போகத்திற்குத் தனியறை வேண்டும். முனகும் அனத்தும் சுகத்தைக் குரலில் அழற்றும் பெண் வேண்டும். அவன் தன் மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல் இருக்கிறானா? இல்லை. அவளை வெறுக்கத்தான் செய்கிறானா?
இப்படியெல்லாம் ஆதாரமான பிரச்சினைகள் இருக்க இருவருக்கும் இடையிலான முரணாகப் படம் முன்வைப்பது என்ன? அவன் இங்கிதமாக இல்லை. அவன் அன்பாகப் பேசுவது இல்லை. அவன் சுயநலவாதி. இப்படித்தான் அந்தப் பாத்திரம் கட்டமைக்கப்படுகிறது. அவளது மீறலுக்கான காரணங்களாக எவையெவை இருக்கக் கூடும்? குடும்ப வேலையில் பகிர்வு (குறிப்பாகச் சமைத்தலில், குழந்தை வளர்ப்பில்), தனியறைச் சம்போகம், வாரநாட்களின் இயந்திரவயமான வாழ்விலிருந்து வெளியேற்றம். இதுதானே?
இது இருவருக்கும் தானே தேவை? பின் எதற்காக ஆண் மட்டும் வில்லன் ,பெண் கதாநாயகி? இங்கு உத்தம குணங்கள் கொண்ட கதாநாயகன் யார்? பாரதியார் படித்த, மைக்கலாஞ்சலோ தெரிந்த, செடக்ஷன் கலை தெரிந்த, சமையல் தெரிந்த ஒரு என்லைட்டன்ட், வெளிநாட்டுக் கனவுகள் காண்கிற மத்தியதரவர்க்க ஜென்டில் மேன். வெல் பிளான்ட் செட்யூஷர். இவரது அல்ட்டிமேட்டம் பாரதி அறியாத பெண்களை படுக்கையில் சாய்ப்பதுதான்.
இதுதான் இயந்திரமயமான வாழ்விலிருந்து உடலுழைப்புச் செய்யும் ஆண் பெண்ணுக்கான மீட்சியா? பாரதி கூடத் தெரியாத, மைக்கலாஞ்சலோ கூடத் தெரியாத, இயந்திரவய வாழ்வில் உழலும், சம்போக இன்பத்தை வெளிப்படையாக அனுபவிக்க முடியாத, உடலுழைப்புப் பெண்களின் உடலைக் ‘கலை’ காட்டி மேயலாம் என்கிற கலாச்சார மேட்டுக்குடி இன்டலக்சவல்களுக்கான, அவர்களது பார்வையிலான படம் லக்ஷ்மி. இட் ஈஸ் அனதர் கைன்ட ஆப் எக்ஸ்ப்ளாயிட்டேஷன்.
காவல்துறையினரால் மிரட்டப்பட்டு காவல் நிலையத்திறகு அழைத்துச் செல்லப்படும் ஜெயகாந்தனின் தம்பதியர்தான் உழைப்பு வர்க்கத்தின் உன்னதம்..
எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த பதிவு.