அருண் நெடுஞ்செழியன்

ஜனநாயக அரசு அதன் சமூக அடித்தளத்தை இழக்கிற நிலையில், போலீஸ் ராணுவ தயவில் ஆட்சி அதிகார மேலாண்மையை தக்க வைக்க முயல்வது “ஜனநாயக”அரசின் குணாம்சமாக மாறுகிறது.
தமிழக ஆட்சியாளர்கள் மக்கள் மன்றத்தில் கேலிக்குரியவர்களாகிவிட்டார்கள். இந்த ஆட்சியை திரும்ப பெறுவதற்கு அரசியல் சாசனத்தில், எந்த வாய்ப்பு வசதியும் இல்லை. ஆட்சியாளர்களின் பதவி அதிகாரத்திற்கான கேலிக்குரிய சண்டைகளில் தாமாகவே கவிழ்ந்துபோவதை, மோடி அரசே காப்பாற்றுகிறது. ஆளுநர்களின் சார்பு நிலையால் பட்டென அறுந்து போக வேண்டிய நூல், மெல்லிய நூல் இழையில் காபந்து செய்யப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வரோ, மக்கள் மன்றத்தில் இழந்துவிட்ட செல்வாக்கை தக்கவைப்பதற்கும், அரசை விமர்சனங்களில் இருந்து காப்பதற்கும் போலீஸ் அதிகாரத்தின் தயவை நாடுகிறார்.
குட்கா ஊழல் புகாருக்கு உள்ளான போலீஸ் அதிகாரிக்கு பணி நீட்டிப்பு வழங்கி, அந்த ஊழலை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வருகிற அறப்போர் இயக்கத்தினரை, பொய் வழக்குகளை புனைந்து சிறைக்கு அனுப்பி பயம் காட்ட முயல்கின்றனர்.
கிரானைட் ஊழல் முறைகேடுகளை விசாரித்து ஆய்வு முடிவை முன்வைத்த சகாயத்தின் ஆய்வை குறை கூறி நீதிமன்றங்களில் வாதாடி, ஆய்வுக்கு துணை நின்ற தோழர் முகிலனை சிறையில் அடைத்துள்ளனர்.
கூடங்குளம் போராட்ட வழக்குகளை நடத்தி வருகிற தோழர் செம்மணியை அராஜகமாக கைது செய்துகடுமையாக தாக்கியுள்ளது போலீஸ்.
தற்போது நெல்லை கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தை காப்பற்ற வக்கற்ற அரசு அதிகாரிகளை, முதல்வரின் செயலற்ற போக்கை படம் வரைந்த கார்டூனிஸ்ட் பாலாவை அரஜாகமான வகையில் கைது செய்தது போலீஸ்.
மிக குறைவான கால இடைவெளிகளில் தோழர் திருமுருகன் காந்தி, தோழர் வளர்மதி, தோழர் முகிலன், தோழர் நக்கீரன், தோழர் செம்மணி தற்போது தோழர் கார்டூனிஸ்ட் பாலா என தமிழக அரசின் போலீஸ் கைது அடக்குமுறைகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்றதுபோல தெரிந்தாலும், ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையதாகவும் தொடர்சியானதாகவும் உள்ளது.
அடுத்து வரும் நாட்களின் அரசின் செயல்பாடுகளையும் செயல்பாடற்ற போக்கையும் அம்பலப்படுத்துபவர்களுக்கு அரசு தரப்பில் இருந்து கொடுக்கப்படும் எச்சரிக்கை சமிஞ்சையாகவும் இந்த கைது நடவடிக்கைகளை காண வேண்டியுள்ளது. இந்திய ஆட்சியாளர்கள் சிந்தனையில் நிலப்பிரரபுத்துவ மன்னர் கால மனோபாவம் அமுக்குப் பேய் போல செல்வாக்கு செலுத்தி வருவதையும் இதோடு தொடர்புடைய அம்சமாக உள்ளது.
இந்திய ஆளும்வர்க்கமனது,பாராளுமன்ற சட்டமன்ற முறை என நவீன முதலாளித்துவ ஜனநாயக வடிவங்களை கொண்டிருந்தாலும், உற்பத்தி உறவு மட்டத்தில் வளர்ச்சியடையாத பின்தங்கிய பழைய சமூகப் பழக்க வழக்கங்களில், ஆட்சி சிந்தனை முறைகளில் இறுக்கம் கொண்டவையாகவே உள்ளது.
மற்ற கிழக்காசிய நாடுகளான தைவான், தென் கொரியா போன்ற நாடுகளின் உற்பத்தி சக்தி வளர்ச்சியும் அதன் காரணமாக உற்பத்தி உறவில் ஏற்பட்ட மாற்றங்கள் போல இந்தியாவில் நடைபெறவே இல்லை!
இந்திய பதிப்பில் முதலாளியத்தின் இயற்கை விதியான வளர்ச்சிப் போக்கு தடைபட்டு, கோணல் மாணலாக, மந்தமாக பின்தங்கிவிட்டது. நீண்டு செல்லக்கூடிய இந்த ஆய்வுக்குள் நாம் இங்கு செல்லப் போவதில்லை.
விஷயமென்னவென்றால் இந்திய நிலப்பரப்பில் எழுபதாண்டு கால முதலாளித்துவ ஜனநாயக ஆட்சிமுறையானது(உற்பத்தி ), திடமானது யாவற்றையும் காற்றில் கரைக்கவில்லை.
பழைய மன்னர் கால, காலனி கால பண்புகள் சமூகத்திற்கு இடையிலும் சமூகத்தை மேலாதிக்கம் செய்கிற அரசு அதிகார வர்க்கத்திடமும் இன்னமும் செல்வாக்கு செலுத்தி வருகிறது!
இவ்வாறான, விதிவிலக்கான இந்திய நிலைமைகளில் நாம் இருக்கிற முதலாளித்துவ உற்பத்தி முறையின் அராஜகதிற்கு எதிராக போராடுவதை போல மாண்டுபோன காலனிய கால மன்னார் கால சிந்தனை, ஆட்சிமுறை செல்வாக்கிற்கு எதிராகவும் போராடுகிறோம். இருப்பவற்றோடு கூடவே மாண்டவற்றோடும் போராடுகிறோம். மிகை வளர்ச்சியால் மேற்குலக மக்கள் துன்புறுகையில் நாமோ குறை வளர்ச்சியால் துன்புறுகிறோம்!
இந்த பின்புலத்திலேயே நாம் தமிழக அரசின் காட்டுமிராண்டித்தனத்தையும் அதற்கு முட்டுக் கொடுக்கிற மத்திய அரசின் நடவடிக்கைகளையும் காண வேண்டும். இங்கே பாலாவின் கார்ட்டூன் மீதும் அவர் தேர்ந்துகொண்டுள்ள அரசியல் நிலைப்பாடு மீதும் மாற்றுக் கருத்து கொண்டோர் உள்ளனர். அவரது கைது சூழலில் அதை பகிரங்கமாக வெளிப்படுத்தவும் செய்கின்றனர்.
போலவே, தோழர்கள் முகிலன், நக்கீரன், செம்மணி என கைது செய்யப்பட்டவர்கள், அவர்கள் இயக்கங்கள் தேர்ந்துகொண்ட அரசியல் நிலைப்பாடு மீதான மாற்றுக் கருத்து கொண்டோர் உள்ளார்கள். விஷயம் என்னவென்றால் இவர்கள் அரசின் மக்கள் விரோத போக்கை ஏதோவொரு வகையில் ஏதோவொரு வடிவில் அம்பலப்படுத்துகிற சமூக ஜனநாயக கடமையை ஆற்றுக்கின்றனர். அவ்வகையில் அரசின் வர்க்க சார்பு நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஓரடி முன்னோக்கி போக முயல்பவர்கள்.
மக்களுக்கும் ஆளும்வர்க்கத்திற்குமான முரண்பாட்டில், இவர்களின் அரசியல் சித்தாந்த நிலைப்பாடு மீதான மாற்றுக் கருத்து என்பது நட்பு முரண்பாட்டின் வகைப் பட்டதே. கைது சூழலில் முன்னதை பின்னுக்கு இழுத்து, பின்னதை முன்னுக்கு நகர்த்துகிற வேலைகளை, தூய விமர்சனங்கள் என்பது அரசுக்கு வால் பிடிப்பது செய்கையே!
வரக்கூடிய நாட்களை மக்களுக்கு மென்மேலும் துன்பத்தை வழங்குகிற நாட்களாக அமையவுள்ளன. வேலை வாய்ப்பற்ற போக்கு, விவசாய வீழ்ச்சி, கல்வி சுகாதாரத்தில் அரசின் பாத்திரம் சுருங்கிச் செல்லுதல் என சங்கிலித் தொடர் நிகழ்வுகள் ஒரு மையப் புள்ளியில் குவிவதை நோக்கி செல்கின்றன. முன்னணி சக்திகளின் நமது போரட்டத்திற்கு வலு சேர்க்கும்.
அருண் நெடுஞ்செழியன், அரசியல் செயல்பாட்டாளர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல், அணுசக்தி அரசியல் ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.