தமிழ் சாதியும் ஆங்கில நீதியும்

ஜெ. பாலசுப்ரமணியம்

ஜெ. பாலசுப்ரமணியன்

ஒரே நிறுவனத்திலிருந்து வெளியாகும் இரு செய்தித்தாள்கள் ஒரு சம்பவத்தை எப்படி பார்க்கின்றன என்பதற்கு ஒரு சான்று. தமிழ் ‘தி இந்து’வும் ஆங்கில ‘தி இந்து’வும் சாதிய விசயங்களை பார்ப்பதில் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது. மதுரை மாவட்டம் பன்னியான் கிராமத்தில் கடந்த 30.10.2017 அன்று மாலை 5 மணி அளவில் தலித் குடியிருப்புகளை அடித்து நொறுக்கியும், பைக்குகள், ஆட்டோக்கள், சுமோ வாகனங்கள் அடித்து தாக்கப்பட்டன. இதை பதிவு செய்த ஆங்கில தி இந்து நாளிதழ் 2ஆம் பக்கத்தில் 3 பத்தி இடம் ஒதுக்கி “Temple row lead to attack on Dalit houses at Panniyan: Police bring the situation under control, arrest six” என்று தலைப்பிட்டு அடித்து நொறுக்கப்பட்ட ஆட்டோ, பைக் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டது. ஆனால் தமிழ் ‘தி இந்து’ 4ஆம் பக்கத்தில் ஒரே ஒரு பத்தியில் “மதுரை அருகே கோஷ்டி மோதலில் வீடுகள் சேதம் 5 பேர் கைது” என்று தலைப்பிட்டு புகைப்படம் ஏதும் இல்லாமல் செய்தி வெளியிட்டுள்ளது. சாதி இந்துக்கள் தலித்துகளை தாக்கியதை எப்படி கோஷ்டி மோதலாக பார்க்க முடிகிறது என்று தெரியவில்லை.

தலித்துகள் மீதான தாக்குதல்களை ஒரு ஆங்கில நாளிதழ் எப்படி பார்க்கிறது தமிழ் நாளிதழ் எப்படி பார்க்கிறது என்பதற்கு தினந்தோறும் உதாரணங்களை தந்துகொண்டே இருக்க முடியும். ஒரே வெளியீட்டு நிறுவனமாக இருந்தாலும் ‘தி இந்து’ தமிழ் தனது எல்லைக்குள்ளே செயல்படுவதை நம்மால் உணரமுடிகிறது. கடந்த ஆண்டு நாகை மாவட்டம் கள்ளிமேட்டிலே தலித்துகளுக்கு பத்திரகாளியம்மன் கோவில் ஆடிவிழாவில் உரிமை மறுக்கப் பட்டதைத் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பான செய்திகளை ஆங்கில ‘தி இந்து’ நாளிதழ் தொடர்ந்து வெளியிட்டு வந்தபோதும், தமிழ் ‘தி இந்து’ இது சம்பந்தமாக எந்த செய்தியும் வெளியிடவில்லை. ஆனால் ஆங்கில ‘தி இந்து’வில் நடுப்பக்க கட்டுரையை எனது ஆசிரியர் சலபதியும் நானும் சேர்ந்து எழுதிய பின்பு அதை மொழி பெயர்த்து வெளியிட வேண்டிய கட்டாயம் தமிழ் ‘தி இந்து’வுக்கு ஏற்பட்டது.

காலனிய காலங்களிலும் சாதிய விசயங்களை ஆங்கில மொழி நாளிதழ்கள் சுதந்திரத்துடனும் இந்திய மொழிப் பத்திரிகைகள் பிற்போக்குத்தனத்துடனும் விவாதித்து வந்தன. பாபா சாகேப் அம்பேத்கர் ஒரு முறை தனது பிபிசி வானொலி பேட்டியில் காந்தி குறித்து பேசும்போது இப்படி கூறுவார். “காந்தி ஆங்கிலத்தில் வெளியிட்ட ‘ஹரிஜன்’ இதழில் சாதிக்கு எதிராகவும் குஜராத்தியில் வெளியிட்ட ‘ஹரிஜன் பந்து’வில் சாதிக்கு ஆதரவாகவும் எழுதி வந்தார். ஆங்கில நாளிதழ்களை வாசிக்கும் பிரிட்டீஷ் வெள்ளைக்காரர்கள் மத்தியில் தன்னை சாதிக்கு எதிரான ஆளாகவும். இந்திய தனது மொழி பேசும் குஜராத்தி மக்கள் மத்தியில் வர்ணாசிரமத்தை ஆதரிப்பவராகவும் காட்டிக்கொண்டார்” என்றார். வெறும் மொழி மட்டுமல்ல, ஒரு செய்தித்தாளின் புழங்குவெளியும் அது எவ்வாறு ஒரு விசயத்தை பார்க்கிறது என்பதற்கு காரணமாக உள்ளது. தமிழ் என்பது மாநில எல்லை கொண்டது. ஆங்கிலம் என்பது அப்படி அல்ல, அதற்கு தேசிய, இந்த இணைய யுகத்தில் சர்வதேச வெளி உருவாகியுள்ளது. தமிழ் செய்திதாளை வாசிப்பவர்கள் சாதாரணமானவர்கள், கிராமத்தவர்கள், வாங்குதிறன் குறைவாக உள்ளவர்கள். ஆங்கில செய்த்தித்தாள் வாசிப்பவர்கள் கற்றவர்கள், பணக்காரர்கள், வாங்குதிறன் கொண்டவர்கள், இவையெல்லாம்தான் அதன் பேசு பொருளை தீர்மானிக்கிறது.

ஜெ. சுப்ரமணியம், பேராசிரியர். ‘சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை 1869-1943 தலித் இதழ்கள்’ நூலின் ஆசிரியர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.