அருண் நெடுஞ்செழியன்

கடந்த மூன்று காலாண்டுகளாக இந்தியாவின் வளர்ச்சி வீதம் வேகமாக சரிந்துவருவது குறித்த செய்திகள் அண்மைக்காலங்களில் தீவிர விவாத பொருளாகியுள்ளது. சொந்த கட்சியை சேர்ந்த அருண் சோரி, யஸ்வந்த சின்ஹா போன்றவர்களே அருண் ஜெட்லி, மோடி மற்றும் அமித்ஷா கும்பலாட்சியின் போதாமைகள் குறித்து பொது வெளியில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்திய பொருளாதாரத்தின் சரிவிற்கு பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மற்றும் சரக்கு உற்பத்தி வரி விதிப்பு நடவடிக்கைகள் ஒரு காரணமாக கூறப்படுகிறது. நமது விவாதத்தின் மையமாக இருக்க வேண்டியது ஜிடிபி என்ற எண் கணகக்கின் சரிவை தாண்டி, கடந்த பத்தாண்டுகளாக அதிகரிக்கிற வேலையில்லா திண்டாட்டம், வேலையற்ற வளர்ச்சி மாதிரியை ஆய்வு செய்வதாக அமைய வேண்டும்.
ஏனெனில், கடந்த காலங்களில் 6%, 7% மற்றும் 8% ஜிடிபி வளர்ச்சி வீதம் இருந்தும் வேலைவாய்ப்புகள் பெருகவில்லை. வேலையில்லா பட்டாளம் ஆண்டுக்கு ஆண்டுக்கு அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சிகாலத்தில்தான் வேலையில்லா வளர்ச்சி நிலைமை அதிகரித்தது என தனது தேர்தல் அறிக்கையில் விமர்சித்த பாஜக, ஆட்சிக்கு வந்தால் ஒரு கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என முழங்கிய மோடி, இன்று நான் பொருளாதார மேதையல்ல என தனது பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளார். வேலையற்ற பட்டாளத்தின் வளர்ச்சி வீதமானது 4.10% இருந்து 5% விழுக்காடாக அதிகரித்திள்ளது. எதிர்காலத்தில் இது மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது.
ஆக, கோளாறின் மையம் என்ன?
இந்தியாவின் வளர்ச்சி வீத ஜிடிபி சரிவும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பும் திடுமென சில மாதங்களில் நடைபெற்றது அல்ல. இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிப் போக்கில் வைத்துப் பேசினோம் என்றால் 1990களில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களுக்கு பிந்தைய நிலைமையின், விளைவுகளின் புறனிலை வெளிப்பாடாக தற்போதைய நெருக்கடி வெளிப்பட்டுள்ளது.
1947 முதலாக 1980 கள் வரையிலான காலகட்டதில், அரசின் கட்டுப்பாட்டில் பெரும் மூலதன முதலீட்டில் கனரக தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. நிலக்கரி சுரங்கங்கள், எண்ணெய் எரிவாய் எடுப்பு, ரயில் தயாரிப்பு, உருக்காலைகள், அனல் மின் நிலையங்கள் என பெரும் முதலீடுகளும் வேலைவாய்ப்புகளும் வழங்குகிற துறைகள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன. பெரும் மூலதன முதலீடுகளில் மேற்கொள்ளப்படுகிற இந்த பெருவீத கனரக தொழிற்சாலைகளே பெரும் எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகளை வழங்கின. இவை போக தொலைத்தொடர்பு, வங்கி, காப்பீடு, போக்குவரத்து, மருத்துவ சுகாதாரம், கல்வித்துறை போன்ற சேவைத் துறையும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன.
இவையாவும் பெரிய எண்ணிக்கையில் தொழில்துறை வேலை வாய்ப்புகளை உருவாக்கி தக்க வைத்துக்கொண்டன. கிராமத்திலோ நிலைமை மோசமாகிக் கொண்டே சென்றது.
இந்தச் சூழலில் 80களில் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, இந்திய சந்தையை தீவிர உலகமயத்திற்கு திறந்துவிட்டது. சேவைத் துறைகளில் தனியார்மயம் ஊக்குவிக்கப்பட்டது. தொலைத்தொடர்பு, வங்கி, காப்பீடுகள் தனியார்மயம் ஆகின. கணினி மென்பொருள், நிதி சேவை போன்ற சேவைத் துறைகள் வளர்ந்தன. 80 முன்பாக 25% இருந்த சேவை துறை வளர்ச்சி 80 களுக்கு பிறகு 4.5 %விழுக்காடாக வளர்ச்சி பெற்றது. மாறாக கனரக தொழிற்துறையோ 11 விழுக்காட்டில் நங்கூரம் பாய்ச்சினால் போல நின்றுவிட்டது. அரசோ சேவைத் துறையால் உந்தப்பட்ட ஜிடிபி பிம்பத்தை காட்டி, வேகமாக வளர்ச்சியடைந்து வருகிற பொருளாதாரம் என செயற்கையாக தம்பம் அடித்துக் கொண்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன் போன்றவர்கள் இதன் உண்மைத்தன்மை தெரிந்தே ஜிடிபி வளர்ச்சி வீதத்தின் அடிப்படையிலான வளர்ச்சி வீதத்திற்கு பெரிதும் அழுத்தம் கொடுக்காமல் நழுவிச் சென்றனர்.
இந்த சேவைத் துறை வளர்சிப்போக்கு, பெரும் தொழிலாளர்களை உள் இழுப்பதில்லை. நிபுணத்துவம் சார் வளர்ச்சியாக இருந்தது. ஒட்டுமொத்த ஜிடிபியில் கால் பங்கிற்கும் மேலாக பங்களிப்பு செய்தது. மாறாக அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குகிற கனரக தொழிற் துறை முதலீடுகள் தேக்கம் பெற்ற நிலையிலேயே நீடித்து வருகிறது.
பெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை வழங்குகிற நிறுவனங்களாக பல சிறு குறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவை பெரும் மூலதனத்தில் முதலீடு செய்து,கனரக தொழிலில் ஈடுபடுவதற்கு அந்நிய மூலதனங்கலும், தொழில்நுட்ப சார்புத்தன்மையும் பெரும் தடையாக உள்ளன. எனவே, அன்னிய மூலதனத்திற்கு வாலாக சுருங்கிவிட்டன.
கிராமத்திலோ, விவசாயப் பொருள் உற்பத்தி வீதத்தை அதிகரிக்க இயலாமல் உற்பத்தி குறைந்து வருகிறது. நிலைமை மேலும் மோசமாகி வருகிறது. விவசாய உற்பத்திப் பொருட்கள் சரிந்துகொண்டே வருகின்றன. பருவமழை தவறினால் நிலைமை மேலும் மோசமாகிறது. ஆக, அடிப்படையில் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிற தொழிற்துறை மூலதனத்தின் சரிவு, அந்நிய மூலதனம், தொழில்நுட்பம் சார்புத்தன்மை வேகமாக வேலையற்ற வளர்ச்சியை அதிகரிக்க வைத்து வருகிறது.
இந்திய ஆளும்வர்க்க அறிவிஜீவிகளோ, தொழிலாளர் நலப் பாதுகாப்பு சட்டங்களே (தொழில்துறை முதலீடுகளுக்கு)இதற்கு தடையாக உள்ளது எனக் கூறி,போராடிப் பெற்ற தொழிலாளர் நலச் சட்டங்களை பறிப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.அந்நிய மூலதனம் நுழைந்தால் சரியாகி வருமென கருதி நிலத்தையும், நீரையும் மலிவாக விற்க வருகிறது. மேக் இன் இந்தியா முதல் ஸ்டர்ட் அப் இந்தியா அனைத்தும் வெற்றுச் சொல் ஜால முழக்கங்களே என நடைமுறை நிரூபணம் செய்கின்றது.
“முதலாளித்துவ பொருளுற்பத்தியின் வளர்ச்சியால் மட்டுமின்றி,அந்த வளர்ச்சியின் அரைகுறை நிலையினாலும் அவதிப்படுகிறோம்….”என 150 வருடத்திற்கு முன்பாக தனது மூலதன முன்னுரையில் (முதலாம் ஜெர்மன் பதிப்பு) மார்க்ஸ் எழுதியது இன்றைய இந்தியச் சூழலை விவரிப்பதாக உள்ளது.
பெரும் எண்ணிக்கையில் மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில், கடந்த எழுபது ஆண்டு காலமாக இந்த குறைவளர்ச்சியால் நாம் அவதிப் பட்டு வருகிறோம். கடந்த எழுபது ஆண்டு காலமாக ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்து வருகிறதே தவிர சமுதாயம் வளர்ச்சி பெறவே இல்லை!
தற்போது ஆட்சியில் உள்ள ஆர் எஸ் எஸ் அமைப்பின் வெகுஜன கட்சியான பாஜகவோ, உத்திர பிரதேசத்தில் முந்நூறு அடியில் ராமர் சிலை, ஹஜ் மானியம் ரத்து, காஷ்மீரில் ஒடுக்குமுறை என காட்டுமிராண்டித்தன வகுப்புவாத அரசியலை முன்னெடுத்து, தனது அரசியல் தோல்வியை மூடி மறைக்க முயல்கிறது.
நம்முன் இன்று இரு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன, ஒன்று இந்த காட்டுமிராண்டித் தனத்தை ஏற்றுக் கொள்வது அல்லது இதை தகர்த்தெறிந்து சோசலிச சமூகத்தை கட்டமைப்பது…முதலாளித்துவ காட்டுமிராண்டிதனமா அல்லது சோசலிசமா?
அருண் நெடுஞ்செழியன், அரசியல் செயல்பாட்டாளர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல், அணுசக்தி அரசியல் ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.