இயக்குநர் மீரா கதிரவனின் ‘அவள் பெயர் தமிழரசி’ தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவு செய்யாத படமாக இருந்தாலும், அந்தப் படம் தனித்துவமாக இருந்தது. அழிவின் விளிம்பில் இருக்கிற தோல் பாவை கூத்தை ஆவணப்படுத்துவதாகவும் தமிழ் நிலத்தை பதிவு செய்யும் முயற்சியும் ‘அவள் பெயர் தமிழரசி’யின் தனித்துவத்துக்குக் காரணங்கள். இயக்குநர் மீரா கதிரவனுக்கு ‘அவள் பெயர் தமிழரசி’ குறித்து பல கசப்புகள் சுவடுகளாக தேங்கியிருக்கின்றன. ஆனாலும் அந்தப் படம் அவருக்கொரு அடையாளத்தை உருவாக்கியிருப்பதையும் அவர் மறுக்கவில்லை. தமிழ் சினிமா முதலில் வரும் குதிரையின் பின்னால் ஓடக்கூடியது. எல்லாவித சமரசங்களுக்கு ஆட்பட்டே பலர் சினிமா எடுக்க வேண்டியிருக்கிறது. அடுத்தடுத்து இயங்குவதற்கு இதையெல்லாம் செய்தே ஆக வேண்டும். தான் செய்துகொண்ட சமரசங்கள், கற்ற பாடங்கள், இனி செய்யவிருப்பது என நம்முடன் வெளிப்படையாக பல கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார் மீரா கதிரவன். சினிமா ரசிகர்களுக்கும் சினிமாவில் காலூன்ற நினைக்கிறவர்களுக்கும் மீராவின் அனுபவ பகிர்வு உதவியாக இருக்கும். தன்னுடைய எழுத்து அனுபவங்கள், இலக்கியங்களை நாவலாக்குவது குறித்து பேசுகிறார். இந்த நேர்காணல் மீராவின் இல்லத்தில் பதிவு செய்யப்பட்டது.
உங்களுடைய பின்புலம் பற்றி பகிர்ந்துகொள்ளுங்களேன்…
“திருநெல்வேலி மாவட்டம் தென்காசி தாலுகாவில் உள்ள திருகூடபுரம் என்னுடைய ஊர். என் அப்பா அப்துல் ஹமீது, தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். அம்மா நல்ல மீரா. இஸ்லாமிய குடும்பத்திலிருந்து வந்தாலும் பொது அடையாளத்தோடு சினிமாவில் இயங்க வேண்டும் என்பதற்காக அம்மா பெயரான மீராவையும் சின்ன வயதிலிருந்தே எனக்கு ஆதர்சமான பெயரான கதிரவனையும் சேர்த்து மீரா கதிரவன் என வைத்துக்கொண்டேன். 1998 வருடத்தின் கடைசியில் சினிமா கனவோடு சென்னை வந்தேன். 2003-வருடத்திலிருந்து உதவி இயக்குநராக தங்கபச்சான், லோகிததாஸ் ஆகியோரின் உதவி இயக்குநராக இருந்தேன். 2007ஆம் வருடம் ‘அவள் பெயர் தமிழரசி’ என்னுடைய முதல் படமாக வந்தது.”
சினிமா ஆர்வம் எப்படி வந்தது?
“மேற்கொண்டு படிக்க முடியாத சூழலில் தோன்றியதுதான் சினிமா ஆர்வம். சினிமா சார்ந்து எங்கள் குடும்பத்துக்கு எந்த பின்புலமும் இல்லை. தெரிந்தவர்கள் மூலமாக சினிமாவில் சேரலாம் என்று என்னுடைய 17 வயதில் சென்னைக்கு வந்தேன்”.

சினிமா இயக்குநராகவது எளிதானதாக இருந்ததா?
“சினிமா இயக்குநராக நான் பட்ட பாடுகளை ஒரு நாவலாகவே எழுதலாம். இப்போது உள்ளதுபோன்ற சூழல் அப்போது இல்லை. ஒரு இயக்குநரை பார்த்து பேசுவதற்கே பல வருடங்கள் ஆகும். முதலில் அவருடைய ஆஃபிஸ் பாயிடம் பேச வேண்டும். பிறகு உதவி இயக்குநரை பார்க்க வேண்டும். அடுத்து இணை இயக்குநர். அவர் மனது வைத்தால் மட்டுமே இயக்குநரை சந்திக்க முடியும்.
இரவு நேரங்களில் சின்ன சின்ன வேலைகள் செய்வேன்; பகலில் உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டு அலைவேன். அந்த நேரத்தில், 2001-ல் நண்பர் மூலம் புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தேன். அது எனக்கு புதிய வழியை காண்பித்தது. எழுத ஆரம்பித்தேன். உதவி இயக்குநராக வாய்ப்பு தேடி வரும் 10 பேரில் நாம் தனித்து தெரியவேண்டுமென்றால், நம் எழுத்து நம்மை தனித்து காட்ட வேண்டும் என தீர்மானித்தேன். ‘காலக்குறி’ இதழில் ‘வதை’ என்ற என்னுடைய முதல் சிறுகதை வெளியானது. கவிஞர் யுகபாரதி ஆசிரியராக இருந்த ‘கணையாழி’இதழில் அடுத்த சிறுகதை வந்தது. ‘அழகி’ படத்துக்கு ஒரு விமர்சனமும் எழுதியிருந்தேன். என்னை தனித்துவமாக பார்க்க ஆரம்பித்தார்கள். இயக்குநர் தங்கர்பச்சானிடம் வா. கௌதமன் என்னை அறிமுகப்படுத்தினார். தங்கர்பச்சானின் ‘தென்றல்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன்.
இடையிடையே மலையாளத்திலிருந்து புகழ்பெற்ற சில படைப்புகளை மொழிபெயர்த்துக்கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் கல்கி இதழில் ‘மழைவாசம்’ என்ற சிறுகதை வெளியானது. அந்த சிறுகதையை சீனு ராமசாமி, இயக்குநர் பாலு மகேந்திராவின் மனைவி அகிலாம்மாவிடம் கொடுத்திருக்கிறார். அவருக்கு அந்தக் கதை பிடித்துவிட்டது. பாலு மகேந்திரா அந்தக் கதையை படித்துவிட்டு பாலு மகேந்திரா, என்னை சந்திக்க விரும்புவதாக, ஆட்டோ சிவதாணுவிடம் சொல்லி அனுப்பினார். எனக்கு அளவில்லா மகிழ்ச்சி. பாலு மகேந்திரா என்ற மிகப்பெரிய இயக்குநரை சந்திக்கப் போகிறோம் என்கிற பிரமிப்பும் பயமும் இருந்தது. நேரில் சந்தித்தபோது, என்னுடைய சிறுகதையை குறும்படமாக எடுக்கப்போவதாக சொன்னார். அதைவிட எனக்கு பெரிய சந்தோஷம் இல்லை சார் என்று அவரிடம் சொன்னேன்.
பாலு மகேந்திராவின் அறிமுகம் என் வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயமாகப் பார்க்கிறேன். உலக சினிமாக்கள், புத்தகங்கள் பற்றி அவர் பேசியது பயனுள்ளதாக இருந்தது. அதோடு அவருடைய அனுபவங்களை கேட்பதும். மகேந்திரன், மணிரத்னம், பரதன் போன்ற பிரபலமான பல இயக்குநர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவாக இருந்தவர் பாலு மகேந்திரா. அத்தகையவரோடு ஏற்பட்ட அறிமுகம் பல விஷயங்களைக் கற்றுத்தந்தது.
அந்த நேரத்தில் எனக்கு மலையாளம் தெரியும் என்ற காரணத்தால் இயக்குநர் லோகிததாஸின் கஸ்தூரிமான் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. எனக்குக் கிடைத்த இரண்டு இயக்குநர்களும் சினிமாவின் அனைத்து வேலைகளையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைத் தந்தார்கள். குறைவான படங்களில் பணியாற்றியிருந்தாலும் நிறைவான அனுபவம் கிடைத்தது. எனவே, தனியாக படம் செய்யலாம் என்று முடிவு செய்தேன். இயக்குநர் மணிரத்னம் சகோதரர் ஜி. ஸ்ரீனிவாசனிடம் ‘அவள் பெயர் தமிழரசி’ திரைக்கதையை கொடுத்தேன். அதைப் படித்த அவர், ஐந்து நிமிடங்கள் ப்ரீ ட்ரெய்லர் செய்து காட்டுங்கள் என்று சொன்னார். இப்போது படங்களுக்கு இணையாக குறும்படங்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. அப்போது ப்ரீ ட்ரெய்லர், குறும்படம் எடுத்து காண்பிப்பது போன்ற நடைமுறை அறிமுகமாகியிருக்கவில்லை. நண்பர்களிடன் ஆயிரம், ஐநூறு வாங்கி ‘அவள் பெயர் தமிழரசி’ ப்ரீ ட்ரெய்லர் எடுக்க ஆரம்பித்தேன். படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஷ்ரதா தாஸ், ஒளிப்பதிவாளராக சுஜித்துடன் இணைந்து ட்ரெய்லர் ஷுட்டிங் போனேன்.
ஷுட்டிங்கின் இரண்டாவது நாள். பெரிய படத்துக்கு முன் தயாரிப்புகளை செய்வது போல, இரவு பகலாக பணியாற்றியதாலோ என்னவோ, லோகேஷன் போன இடத்தில் விபத்து நேர்ந்தது. அதிகாலை 2 மணிக்கு நடந்த விபத்து, கிட்டத்தட்ட 3 மணிநேரம் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்திருக்கிறேன். அதிகாலையில் வாக்கிங் செல்ல வந்த ஒருவர், விபத்தாகி நான் இறந்துகிடப்பதாக நினைத்து போலீஸை அழைத்திருக்கிறார். அவர்கள் உயிர் இருப்பதை அறிந்து திருநெல்வேலி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். 13 தையல்களுடன் மூன்று நாட்கள் கழித்து கண் விழித்து பார்த்தேன். அருகில் நண்பர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். நடிகர் ராமச்சந்திரன், ராமகோபால் ஆகியோர் அந்த சமயத்தில் ஆதரவாக நின்றார்கள். மருத்துவர்கள் உடல் நிலை தேறிவர ஆறுமாதம் ஆகும் என சொல்லிவிட்டார்கள். மெட்ராஸ் டாக்கீஸில் 10 நாட்களில் ட்ரெய்லர் தருவதாக சொல்லியிருக்கிறோமே..எப்படி தருவது என ஒரே யோசனை. இந்த சந்தர்ப்பம் மீண்டும் வருமா என்கிற கேள்வியுடன் மருத்துவரின் ஆலோசனையையும் மீறி சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஷுட்டிங் வேலைகளில் இறங்கிவிட்டேன். இன்று யோசித்தால் இந்த விபத்து நடக்காமல் இருந்திருக்கலாமே எனத் தோன்றும். இந்த விபத்து நடந்தது நல்லதற்கா? கெட்டதுக்கா என இதுவரை தெரியவில்லை.
ஷுட்டிங் போனபோது முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த ஷ்ரதா தாஸ், மலையாள படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகிவிட்டார். அதுபோல சுஜித்துக்கும் ஒளிப்பதிவு வாய்ப்பு வந்துவிட்டது. பின்நாளில் ‘பாபநாசம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர் இவர். இவர்களுக்குப் பதிலாக வேறு ஆட்களைத் தேடியபோது, ‘கஸ்தூரிமான்’ படத்தில் மீரா ஜாஸ்மீனின் உதவியாளராக இருந்தவர், காஞ்சிபுரத்தில் பெண் இருக்கிறார் என மனோசித்ரா பற்றி சொன்னார். கதாநாயகனாக நடித்துக்கொடுத்தவர் பாபி சிம்ஹா. பர்சனலாகவும் என்னுடைய கஷ்டங்களில் பங்கெடுத்தவர் பாபி சிம்ஹா. முத்தையா ஒளிப்பதிவு செய்தார். ட்ரெய்லர் முடித்து, என்டீடிவியில் பணியாற்றிய முருகேசன் உதவியுடன் எடிட்டிங் வேலையை ஆரம்பித்தேன். எடிட்டிங் செய்த இடத்துக்கு மணிரத்னம் வீட்டைக் கடந்துதான் போகவேண்டும். அப்போது வீட்டு வாசலில் ஸ்ட்ரெக்சர் இறக்கிக்கொண்டிருந்தார்கள். அந்த வீட்டில் யாரோ பெரியவர்கள் இறந்திருப்பார்கள் போல என நினைத்துக்கொண்டேன். எடிட் செய்ய ஆரம்பித்தபோது, அதைப் பார்த்த நண்பர் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என சொன்னார். இப்படி பணிகள் போய்க்கொண்டிருக்கும்போது, எனக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்பு வந்துக்கொண்டே இருக்கிறது. அதை எடுத்து பேசாமல் வேலை கெட்டுவிடும் என தவிர்க்கிறேன். இறுதியாக குறுஞ்செய்தி வருகிறது, மணிரத்னம் சகோதரர் ஸ்ரீனிவாசன் இறந்துவிட்டார் என! நானும் பாலு மகேந்திரா சாரும் இறுதி சடங்கில் கலந்துகொண்டோம். பெசண்ட் நகர் மயானத்தில் வைத்து பாலு மகேந்திரா, “நிச்சயம் இந்த திரைக்கதைக்கு நல்ல தயாரிப்பாளர்கள் கிடைப்பார்கள்” என. அந்த வார்த்தைகள் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கின்றன.

அதன் பிறகு, இயக்குநர் ஷங்கர் ட்ரெய்லர் பார்த்துவிட்டு கதை கேட்க அழைத்தார். அப்போது அவருடைய உதவி இயக்குநரும் என்னுடைய நண்பருமான அறிவழகனும் ‘ஈரம்’ கதை சொல்லியிருந்தார். ‘அவள் பெயர் தமிழரசி’ டாகுமெண்ட்ரி போல இருக்கும் என்பதாலோ அல்லது தன்னுடைய உதவி இயக்குநருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பதாலோ எனக்கு படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் வெவ்வேறு இடங்களில் முயற்சித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது ‘குங்குமம்’ இதழில் திரு. தனஞ்செயனின் பேட்டியைப் படித்தேன். அதில் அவர், திரைக்கதையை மட்டும் நம்பி படம் இயக்க நினைக்கிறவர்கள் என்னை அணுகலாம் என பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். எனக்கு நம்பிக்கை வந்தது. என்னுடைய நண்பர் எழுத்தாளர் ஷாஜி, தனஞ்செயனின் தொடர்பு எண்ணைக் கொடுத்தார். அவரைத் தொடர்பு கொண்டபோது திரைக்கதையையும் ட்ரெய்லரையும் அனுப்பச் சொன்னார். மோசர்பேயர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தேன். 316 பக்கங்கள் கொண்ட திரைக்கதை ஒரே நாளில் படித்துவிட்டு, ஓகே சொன்னார். 2007-ஆம் ஆண்டு கமிண்ட் ஆன படம். ஆனால் 2010-ஆம் ஆண்டுதான் வெளியானது. தனஞ்செயன், கலை ரசனையுள்ள தயாரிப்பாளர். சமரசம் செய்துகொள்ளாத ஆட்களுக்கு வாய்ப்பளிக்கிறோம் என்று சொன்னவர்களே பல சமரசங்களை செய்ய வைத்தார்கள். ஜெய்யின் ‘சுப்ரமணிய புரம்’ படத்துக்குப் பிறகு ரிலீஸாக வேண்டிய படம். அந்த நேரம் வெளியாகியிருந்தால் சுமாரான வெற்றியைக் கண்டிருக்கும். ஜெய்யின் மூன்று தொடர் தோல்விகளுக்குப் பிறகு வெளியானது. அப்பாவுக்கு நிகராக நான் பாலு மகேந்திராவை நினைக்கிறேன். இப்போதும் அப்படித்தான். திரைக்கதையில் இருப்பது போலவே, படம் எடுத்துவிட்டால் இந்திய அளவில் பேசப்பட்டுவிடும் என அவர் சொன்னார். மனோசித்ராவை இன்னொரு ஷோபாவாக வருவார் என்று சொன்னார். அவர் சொன்னதாலேயே ட்ரெய்லரில் நடித்த மனோசித்ராவை படத்திலும் ஒப்பந்தம் செய்தேன். ஆனால் அந்த கேரக்டரின் அழுத்தத்தை தாங்கி அவரால் நடிக்க முடியவில்லை. ‘அவள் பெயர் தமிழரசி’யின் தோல்வி எனக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய அடியாக இருந்தது”
‘அவள் பெயர் தமிழரசி’க்குப் பிறகு ஏன் இத்தனை இடைவெளி…
“தோல்வியின் உச்சமாக ‘அவள் பெயர் தமிழரசி’ நிறைய விஷயங்களை கத்துக்கொடுத்தது. நடிக்கலாம் என கொஞ்ச நாள் ஜிம்முக்கு போய் உடம்பை முயற்சி பண்ணேன். நமக்கு என்ன தெரிகிறதோ அதை நன்றாக செய்தால் போதும் என நடிக்கும் யோசனையை கைவிட்டுவிட்டேன். தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம். அதுவும் என்னைப் புரட்டிப் போட்டது. அதன் பிறகுதான் நான்காண்டுகளுக்குப் பிறகு 2014 ஆம் ஆண்டில் ‘விழித்திரு’ ஆரம்பித்தேன்”.

‘விழித்திரு’ என்னமாதிரியான படம்..?
“ ‘விழித்திரு’ ஒரு இரவில் நடக்கும் கதை. நான்கு ஆண்டு இடைவெளியில் நான்கு கதைகளை படமாக்கியிருக்கலாமே என்ற குறையை ‘விழித்திரு’ ஒரே படமாக தீர்த்து வைத்திருக்கிறது. நான்கு நபர்களை மையப்படுத்திய நான்கு கதைகள் அவர்களை ஓர் இரவு எப்படி ஒரு புள்ளிக்கு நகர்த்துகிறது என்பதே ‘விழித்திரு’. பரப்பரப்பான சென்னையின் இரவு வாழ்க்கையை படமாக்கியிருக்கிறோம். இரவில் படமாக்க வேண்டியிருந்ததால், நான்கு இரவுகள் கண்விழித்திருந்தால் நான்கு நாட்கள் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. படத்தின் உருவாக்கத்துக்கு இந்த தாமதம் தேவைப்பட்டது.
படத்தை இயக்கியிருப்பதோடு நானே தயாரித்திருக்கிறேன். முந்தைய அனுபவங்கள் கற்றுக்கொடுத்த பாடம்தான் இந்த நிலைப்பாட்டுக்குக் காரணம். அதோடு, நான் ஒரேமாதிரியான படங்களை எடுக்க வேண்டும் என நினைப்பவனும் அல்ல. வேறு, வேறு ஜானரில் எடுக்க வேண்டிய படத்தை, புது ஜானரில் ஒரே படமாக எடுத்திருக்கிறேன். இதுவரைக்கும் படம் பார்த்தவர்கள் இது புது ஃபார்முலாவாக இருக்கிறது என்று சொல்லிருக்கிறார்கள். பரபரவென்று நகரும் திரைக்கதையில் எனக்குள்ள சமூக அக்கறையையும் வெளிப்படுத்தியுள்ளேன். எளிய மனிதர்களின் மீதான ஒடுக்குமுறையை, சாதி, மதத்தின் பெயரில் நடத்தப்படும் வன்முறைகளை ஆங்காங்கே பேசியிருக்கிறேன். கமர்ஷியலான படத்திற்குள் இதைச் செய்திருக்கிறேன்.
சென்னையின் இன்னொரு பக்கத்தை இந்தப் படம் காட்டும். பகல் வேளைகளில் பரபரப்பாக இயங்கும் சென்னையின் சாலைகள், இரவு நேரத்தில் இன்னொரு எக்ஸ்ட்ரீமான நிலையில் இருக்கும். அதை பதிவு செய்திருக்கிறது ‘விழித்திரு’. ஜியோகிராபிக்கலாகவும் சென்னையை பதிவு செய்திருக்கிறோம். இரவில் நடப்பது என்பதால் இருட்டாக இருக்கும் என நினைக்க வேண்டாம். இது கார்த்திகை தீபத்தில் நடக்கும் கதை என்பதால், அகல் விளக்கின் ஒளியையும் மின் விளக்கின் ஒளியையும் விஷுவல் ட்ரிட்டாக மாற்றியிருக்கிறோம். ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனும் சரணும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இரவில் நடக்கும் கதைகள் ஒன்றிரண்டு வந்திருக்கின்றன. ‘விழித்திரு’ தனித்ததொரு படமாக தெரியும்.
‘விழித்திரு’ படத்தில் நடிகர்கள் தேர்வு சிறப்பாக அமைந்துள்ளதா?
“பத்து படங்கள் செய்துவிட்டு பனிரெண்டாவது படமாக இயக்கியிருக்க வேண்டிய படம் ‘அவள் பெயர் தமிழரசி’. 23 வயதில் எழுதி 26 வயதில் இந்தப் படத்தை இயக்கினேன். ஆனால், ஆழமான அந்தக் கதைக்கு அந்த வயதும் அனுபவமும் போதாது. நான் செய்த முக்கியமான தவறு நடிகர்கள் தேர்வு. ட்ரெய்லரில் நடித்த பெண், பாலு மகேந்திராவே சொல்லிவிட்டார் என்பதற்காக நாயகியை தேர்வு செய்தேன். ஆனால் அவரால் அந்த கேரக்டரை தூக்கி சுமக்க முடியவில்லை.
‘விழித்திரு’ படத்திற்கு நடிகர்கள் தேர்வை கவனமாக செய்தேன். ‘கழுகு’ படம் பார்த்த பிறகு கிருஷ்ணாவின் நிறமும் பக்கத்துவிட்டு பையன் போன்ற தோற்றமும் என்னை ஈர்த்தது. அவரை நடிக்க வைக்க அணுகியபோது, கதையே கேட்காமல் ஒப்புக்கொண்டார். விதார்த்துக்கு இந்தப் படம் முக்கியமான படமாக இருக்கும். வெங்கர் பிரபுவின் நடிப்பு எனக்குப் பிடிக்கும். அவர் நல்லதொரு கேரக்டர் ஆர்டிஸ்ட். அவரிடம் அணுகியபோது இப்போது நடிப்பதில்லையே என்றார். கதையைக் கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார். தன்ஷிகாவின் கேரக்டர் இதுவரை போர்ட்ரெயிட் பண்ணப்படாத ஒன்று. அவருடைய சினிமா வாழ்க்கையில் இது முக்கியமான படமாக இருக்கும். எஸ். பி. பி. சரண், சிரஞ்சிவியின் சகோதரர் நாகபாபி, வில்லனாக நடித்திருக்கிறார். அவர் தயாரிப்பாளர், நடிகர். ஆனால், வில்லனாக நடித்ததில்லை. கதையைக் கேட்டு ஒப்புக்கொண்டோர்.

மொழியாக்க தொடர் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமான எரிகா பெர்னாண்டஸ், நடித்திருக்கிறார். அபிநயாவுக்கு ஆர்.ஜே கதாபாத்திரம், ரொம்ப சாதாரணமாக நடித்திருக்கிறார். தம்பி ராமையா நடித்திருக்கிறார். ராகுல் பாஸ்கர், ‘அலைபாயுதே’ மாதவன் போல ஒரு கிரேஸ் அவர் மீது உருவாகும். டி. ஆர். ஒரு பாடலை அவரே எழுதி, டான்ஸ் செய்திருக்கிறார். ‘பெரிய, பெரிய டைரக்டர் கேட்டே நான் செய்யவில்லை’ என்று முதலில் மறுத்தார். திரும்ப திரும்ப பேசிய பிறகு ஒப்புக்கொண்டார். முக்கியமாக கிளைமேக்ஸில் வரும் ஒரு வசனம், தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் இந்த வசனம் பேசப்படும். இதைக் கேட்டு ஒப்புக்கொண்டார்.
படத்தின் எடிட்டர் பிரவீன். இசையமைப்பாளராக சத்யன் அறிமுகமாகியிருக்கிறார். ‘கலக்கப்போவது யாரு’ பாடலை பாடியவர். பாடகர், இசையமைப்பாளராக அறிமுகமானதால், இசையமைப்பாளர்களை பாடகர்களாக்கிவிட்டார். ஆறு இசையமைப்பாளர்கள் பாடியிருக்கிறார்கள். சந்தோஷ் சாராயணன் பாடிய டைட்டில் பாடல், இசைக்கருவிகள் இல்லாமல் பதிவு செய்யப்பட்ட பாடல். புது அனுபவமாக இருக்கும்.
2015ல் தயாரான படம். அப்போது வெள்ளம் வந்தது. மக்கள் தியேட்டருக்கு வருவதே குறைந்திருந்தது. அடுத்து தேர்தல், கபாலி ரிலீஸ், அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது – இறந்தது என ஏதாவது ஒரு விஷயம் ‘விழித்திரு’ படம் வெளியாவதில் தடையை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது. இப்போது அதற்கான நேரம் வந்துள்ளது”.
எது நல்ல சினிமா என்கிற விவாதத்தில் உங்களுடைய கருத்தென்ன?
“சினிமா தொடங்கிய காலத்தில் இருந்தே இந்த விவாதம் வந்துகொண்டிருக்கிறது. சினிமா ஒரு கலை வடிவம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அது வணிகம் தொடர்புடையதும்கூட. நான்கு ஃபார்முலா படங்கள் வெளியாகும்போது, இரண்டு நல்ல படங்களும் வெளியாகின்றன. ஃபார்முலா படம் என்பது அதீத கற்பனைகள், அதீத உணர்ச்சிகளைக் கொண்ட படம். ஏன் இப்படியான படங்கள் எடுக்கப்படுகின்றன? இன்று தியேட்டருக்கும் வருகிறவர்களின் 18- 22 வயதுள்ளவர்கள் தான். தேர்ந்த சினிமா ரசிகர்கள் படத்தைப் பற்றிய மதிப்பீடுகளுக்குப் பிறகே தியேட்டருக்கு வருகிறார்கள். சினிமா என்பது வெள்ளி, சனி, ஞாயிறு என்று சுருங்கும்போது, இந்த விசிலடிச்சான் குஞ்சுகளுக்காகத்தான் சினிமா எடுக்க வேண்டியிருக்கிறது. இவர்களுடைய வயதுக்கு ஆழமான விஷயங்களை சொல்ல முடியாது. கேட்காத காதுகளுக்காக எப்படி பேச முடியும் ?
நல்ல சினிமா எடுப்பது மட்டுமல்ல, எது நல்ல சினிமா என்பதை சொல்லித் தரவேண்டும். கல்வி நிறுவனங்கள்தான் அடிப்படை ரசனையை வளர்த்தெடுக்க வேண்டும். பாலு மகேந்திரா சொன்னார் பள்ளிக்கூடங்களில் சினிமாவை பாடமாக வையுங்கள் என்றார். அது சரியானதாக இருக்கும் என நினைக்கிறேன்”.
தமிழ் சினிமாவில் இலக்கியத்தை படமாக்குவது மிகவும் அரிதாகத்தான் நிகழும். எழுத்தாளர் இரா. முருகவேளின் ‘மிளிர்கல்’ நாவலை படமாக்குவதாக அறியமுடிந்தது.
“மேற்கத்திய நாடுகளில் இலக்கியத்தை தழுவி சினிமா எடுப்பது இயல்பாக நடக்கக்கூடிய ஒன்று. வங்காளத்திலும்கூட அப்படியான நடைமுறை உள்ளது. அங்கெல்லாம் திரைக்கதாசிரியர்கள் இருக்கிறார்கள். தமிழில் அப்படியானதொரு நிலை வரவேண்டும். படமாக்கப்பட எத்தனையோ படைப்புகள் இங்கே உள்ளன. ‘மிளிர்கல்’ எனக்குப் பிடித்த நாவல்.
தமிழ் வரலாற்றை பெரும்பாலும் யாரும் பேசுவதில்லை. அப்படி அரிதாக பேசினாலும் உண்மைத்தன்மை இருப்பதில்லை. சிலப்பதிகாரம் எனக்குப் பிடித்த காப்பியம். பெண்கள் மீதான ஒடுக்குமுறை இந்த காலத்திலும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. கண்ணகி கோபம் எனக்குப் பிடிக்கும். அந்தக் கோபம் எல்லா பெண்களுக்கும் இருக்க வேண்டும். அரசனையே கேள்வி கேட்ட கோபம் அது. அவர் அரசவை கூடத்தில் பேசிய வசனங்கள் முக்கியமானவை. இன்றைக்கு வரைக்கும் அரசன் அரசனாகவும் எளியவர்கள் எளியவர்களாக உள்ள நிலையில் அந்த வசனங்களின் முக்கியத்துவம் கூடியிருக்கிறது.
தோல்பாவை பற்றி எழுதியபோது, நேரில் தோல்பாவை கூத்து பார்த்தது கிடையாது. ஆனால் அதைப் பதிவு செய்ய வேண்டும் என்கிற உந்துதல் இருந்தது. இன்னும் பத்து வருடங்கள் கழித்து யாரோ ஒருவர், ‘தமிழ் சினிமாவில் நாட்டுப்புறக் கலைகள்’ என ஆய்வு செய்தால், நிச்சயம் அந்த ஆய்வில் ‘அவள் பெயர் தமிழரசி’யும் இருக்கும். தோல்பாவை இன்று பரவலாக அறியப்படுகிறது. நாட்டுப்புறக் கலைகளை நிலப்பரப்பை வரலாற்றை பதிவு செய்வதை கடமையாகவே நினைக்கிறேன்.
‘மிளிர்கல்’ பூம்புகாரில் ஆரம்பித்து, கேரள கொடுங்கையூர் வரைக்கும் நடக்கிற பயணம். விலைமதிப்புள்ள ‘கல்’ மீதான வர்த்தகம்தான் கதை. சாதாரண சிலம்பெனில் கோவலன் கொள்ளப்பட்டிருக்க மாட்டான். வரலாற்றை நிகழ்காலத்தோடு பொறுத்தி போகிற கதை. ரசித்து செய்திருக்கிறோம். இந்தியாவின் முக்கியமான சினிமாவாக ‘மிளிர்கல்’ இருக்கும்!”.
சிறுகதை எழுதியிருப்பதாக சொன்னீர்கள். முழு நேர எழுத்தாளராகும் எண்ணமிருக்கிறதா?
“ஞானபீடம், சாகித்ய அகாதமி வாங்குவதற்காக எழுதவில்லை. சினிமா இயக்குநராகத்தான் எழுதினேன். என்னை ஆக்கிரமித்த எழுத்தாளர்களின் நடையில் எழுதினேன். எனக்கென்ற பிரத்யேக நடையை உருவாக்கவில்லை. சினிமாவில் நூறுவிதமான சமரசங்களுக்கு ஆட்பட்டு செயல்பட வேண்டியிருக்கிறது. சினிமாவில் செய்ய முடியாத நிலையில் எழுதுகிறேன். இப்போதுகூட பலர் சிறுகதை தொகுப்பு போட கேட்கிறார்கள். தொகுப்புக்குரிய கதைகளை இன்னும் எழுதவில்லை என்பதால் மறுத்துவருகிறேன்.”
தமிழ் சினிமாவை எடுத்துக்கொண்டேமேயானால் தொடக்க கட்டத்தில் மேல்சாதியினரின் ஆதிக்கத்திலும் அடுத்து இடைச்சாதியினரின் ஆதிக்கத்திலும் இருந்தது; இருக்கிறது. ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையினருக்கான சினிமாவுக்கான களம் தற்போது தமிழ் சினிமாவில் உருவாகியிருப்பதாக பேசப்படுகிறது. அது பற்றி உங்கள் கருத்தென்ன?
“தமிழ் சினிமாவின் அடுத்த கட்டம் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையினரை பேசுவதாகத்தான் இருக்கும் என பேசும்போதே புறக்கணிப்பட வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. நூறு சதவீதம் அது தலித் சினிமாவாகவோ, சிறுபான்மையினர் சினிமாவாகவோ இருக்கக்கூடாது. நம்முடைய ஐடியாலஜியை மக்களிடம் சொல்லலாம். அவர்களிடம் திணிப்பது வன்முறை. அடுத்து இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். ஒரு சாதிக்காரனுடன் சேர்ந்திருப்பது, ஒரு சாதிக்காரனுடன் மட்டும் செயல்படுவது எவராக இருப்பினும் முன்னுதாரண செய்கை அல்ல. என் படத்துக்கு ட்ராலி ஓட்டுகிறவரிலிருந்து படம் பார்க்கிறவர் வரை எல்லோரும் ஒரே சாதியாக இருக்க முடியுமா?
இந்திய அளவில் ஒடுக்கப்பட்டவர்களின் சினிமாவாக சாய்ரத், ஃபாண்ட்ரி போன்ற படங்கள், மோடி ஆட்சி காலத்தில் வருகின்றன, கருத்துக்களை பேசுகின்றன. அடுத்த தலைமுறையினர் இதை வலிமையாகவே செய்வார்கள்!”.
இயக்குநர் மீரா கதிரவனின் நேர்காணல் வீடியோவாக...