கார்ப்பரேட் விகடனின் ஹைடெக் அரசியல்!

ரபீக் ராஜா

ரபீக் ராஜா

முதல்வர், துணைமுதல்வர், வனத்துறை அமைச்சர் ஆகியோர், தலைகீழாகத் தரை, ‘நக்கி’ அரசியல் செய்வதாக ஒரு கார்ட்டூன். ‘லங்கா கட்டை உருட்டுவது’ போலவும், “எடப்பாடி ஆட்சியின் கேவலங்கள்” எனவும் ஒரு கட்டுரை, இந்தவார விகடனில்.

கட்டுரையல்ல அது; வெறுப்பரசியலின்
வெளிப்பாடு; மறைபொருளாக இருப்பதை மேலும் திசைதிருப்புவது; நிலவுடைமை மதிப்பீட்டுடன் கார்ப்பரேட் ஊடகம் எழுதிய வசவு மொழிகள்.

“ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் இருக்கின்றன”, என்று யாவரும் அறிந்த ஒன்றை, ஒரு வருடமாக ஒட்டுமொத்த ஊடகங்களும் “அசலாக” அலசி அம்பலப்படுத்தவில்லை. “வராது வந்த மாமணியாகிய வனிதாமணியின்” ஆட்சி, ‘பன்னீர், பழனிச்சாமி’ கைகளுக்குப் போனதை, ‘பஞ்சகட்ச மாமா’ விகடன் தாத்தாவால் ஏற்க முடியவில்லை என்பதை, விகடன் பலமுறை வெளிப்படுத்தியே வந்திருக்கிறது.

திமுக ஆதரவென அடையாளப்படும் விகடன், கார்ப்பரேட் ஊடகம் தான். “அலைகள்” தொடங்கி, “பிரியமானவள்” வரை , ப்ரைம் டைம் சீரியலாக, சன் டிவியில் வருபவை விகடன் தயாரிப்புகள். அச்சு, காட்சி ஊடகங்களில் முதலீடு செய்திருக்கும் விகடன் குழுமம், நிலவுடைமை பார்ப்பனீய வேடத்துடன் அடையாளப்படுவதே, அதன வியாபாரத்துக்கு நல்லது என அதற்கு நன்றாகவே தெரியும். ஜெயலலிதாவை எதிர்ப்பதாக எப்போதும் தன்னைக் காட்டிக்கொள்வதில் விகடன் முனைப்புடன் இருக்கும். 2015 குமாரசாமி தீர்ப்பால், ஜெ விடுதலையான போது, வெளிவந்த கட்டுரையில் “பன்னீரால் ஆட்சி சரிவர நடத்தமுடியவில்லை, வருக ஜெயலலிதா” என எழுதியது. அதன் உட்பொருள் என்ன? ஜெ வீட்டிற்குள் முடங்கியிருந்தாலும், பன்னீர் ஆட்சியில் இருந்தாலும் முதல்வர் ஜெ தான் என்பதை நாடறியும். இதில் என்ன வேறுபாட்டை விகடன் கண்டுபிடித்து, “ஜெயலலிதாவை வாருங்கள்”, என வரவேற்று அழைக்கிறது? ஜெ மரணத்தைத் தொடர்ந்து சசிகலா எதிர்ப்புச் சித்திரம் வரைந்து, கட்டுரை எழுதியது விகடன். இப்போதும், “பொய் புரட்டு பித்தலாட்டம்” என்று வர்ணித்ததோடு மட்டுமல்லாமல் “மூணுசீட்டு ரௌடி” ரேஞ்சில் முதல்வரைச் சித்தரிக்கும் அட்டைப்படத்துடன் இந்த வார விகடன் வந்திருக்கிறது.

எடப்பாடி ஆட்சியைச் சனநாயக சக்திகள் ஆதரிக்காததற்குக் காரணங்கள்
“இது ஓர் அடிமை அரசு;எடுபிடி அரசு; ஊழல்மய அரசு;
மாநில உரிமைகள் பற்றிய அக்கறை/அறிவில்லாத அரசு” என்பதால். இவற்றைப் பற்றிப் பேசினால், அது, “அடிமைப்படுத்தும் மத்திய அரசு; ஏவிவிடும் புறக்கடை பாஜக அரசு; மாநில உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசு”, என நீளும்.
இது வேறு அரசியல். ஆனால் விகடனின் அரசியல், “எடப்பாடி ஆட்சியின் கேவலங்கள்” என்று சுருக்குவதாக இருக்கிறது.

ஜெ மரணத்தின் மர்மங்களை விடுவிக்கும் சூத்திரதாரிகள் ஆளுநரும், ‘பிரதமர்’ மோடியும் ஆவார்கள். அப்பலோ நிறுவனத்தின் ‘லகான்’ யாரிடம் இருக்கிறது? எங்கிருந்து கண்காணிப்பு கேமராக்களை அகற்ற (அ) காட்சிகளை மறைக்க உத்தரவு வந்தது? ஆளுநரை யாரும் திருப்பி அனுப்ப முடியாது என அனைவருக்கும் தெரிந்த கேள்வியை விவாதத்துக்குள்ளாக்காமல், “தமிழக முதல்வரும், அமைச்சர்களும் பொய்யர்கள்” என்ற ஊரறிந்த ரகசியத்தை எழுதி யாரைக் காப்பாற்ற மடைமாற்றுகிறது விகடன்?

தந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத உன்னதப் பொய்யர்களின் கூடாரமான பாஜகவை, அதன் புறக்கடை அரசியலை எந்த விவாதத்துக்கும் உட்படுத்தாமல், மொத்தப் பழியையும் மாநில ஆளும்கட்சி அரசியல்வாதிகள் மீது சுமத்தி அரசு எந்திரத்தைப் பக்குவமாகப் பாதுகாக்கிறது பம்மாத்து விகடன்.

முதல்வரின் உடல் காமராஜர் அரங்கில் கிடத்தப்பட்டிருந்த போது, அத்தனை புரொட்டொகாலையும் மீறி, சசிகலா குடும்பம் சுற்றி நின்றது. சசிகலா குடும்பம் நின்றதை மட்டும் விவாதித்துவிட்டு, புரொட்டகாலை மீறிய அரசு நிர்வாகத்தை ஊடகங்கள் தப்பவிடுவது யாருக்காக?

“பாப்பாத்தி”யாகத் தன்னை அறிவித்துக்கொண்ட “ஆர்த்தடாக்ஸ்” திராவிடத் தலைவியை, குலவழக்கப்படி எரித்து, எள்ளும் தண்ணீரும் இறைக்காமல், மெரினாவில் புதைப்பதென யார் முடிவெடுத்தது? அதுகுறித்து “அங்கவஸ்திர விகடன்” தாத்தா கேள்வி எழுப்பினாரா?

பழனிச்சாமியும், பன்னீரும், சீனிவாசனும் தரை நக்கி அரசியல் செய்வதாகச் சித்திரம் தீட்டும் பவித்ர விகடன் யார் கால்களை நக்கி அரசியல் செய்கிறது?

அடுத்த வார இதழ் 50 ரூபாயாம்! வார இதழின் விலையேற்றம் அன்றாடம் பெட்ரோல் விலையேற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு இணையாக இருக்கிறது.

கார்ப்பரேட் விகடனின் வியாபாரம் இந்திய அளவில் இருப்பதால் அது இந்திய தேசிய அரசியல் கட்சிகளை அண்டி அரசியலை நகர்த்துவது அதன் தேவை. 1998 லிருந்து 2013 வரையிலும் மத்திய அமைச்சரவையில் நீண்ட வருடங்கள் நீடித்த திமுகவை ஆதரித்ததன் பின்னனி அதன் வணிகரசியல் என்றவாறு அணுகினால், “அதிமுக எதிர்ப்பு ஏன்”, என்று விளங்கிக்கொள்ள முடியும்.

“புனிதர் மோடியை”, 2014லிலேயே வரிந்துகட்டி ஆதரவளித்து, வரவேற்ற விகடன், ஜெ மரணத்தின் மர்ம முடிச்சுகளை, சசிகலா உள்ளிட்ட அதிமுகவோடு சுருக்குவதில் ஆச்சரியம் இல்லை.

ரபீக் ராஜா, சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

முகப்புப் படம்: முகநூலிலிருந்து எடுக்கப்பட்டது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.