
கே. ஏ. பத்மஜா
Tharamani | Ram| Tamil | 2017
திரைப்படங்கள் குறித்து விவாதிப்பதும், நண்பர்களுடன் பேசுவதும் எனக்கு சமீபகாலமாக மிகவும் பிடித்துப்போன ஒரு விஷயமாக மாறிவிட்டது. ஒருநாள் தோழி ஒருத்தி என்னிடம் “இப்போதெல்லாம் எழுதும் நோக்கத்தோடு மட்டும் படம் பார்க்க ஆரம்பித்துவிட்டாயா?” என்று கேட்டாள். நான் எந்தப் படத்தையும் எழுதும் நோக்கோடு பார்ப்பதில்லை. ஒரு நல்ல படம் எனக்குள் ஏற்படுத்தும் தாக்கத்தை தாங்கிக்கொள்ள முடியாமல், அதை எழுத்தாக வெளியேற்றுகிறேன் என்பதுதான் உண்மை. அப்படி வேண்டா வெறுப்பாகப் பார்த்துவிட்டு இன்று வரை என்னோடு பேசிக்கொண்டே இருக்கும் படம் ‘தரமணி’.
இந்தப் படத்தை ஒரு கூட்டம் கழுவியூற்றவும், இன்னொரு கூட்டம் தூக்கிப் பிடிக்கவுமாக ஒரு மாதமாக போஸ்ட்மார்டம் செய்து பாடை ஏற்றப் பார்த்தனர். ஆனால், ‘தரமணி’ போன்ற படங்கள் நம்மை நின்று கொல்லும் என்பதுதான் நிதர்சனம். என்னுடைய மென்டர் ஏஞ்சலோ அண்ணா அடிக்கடி சொல்லும ஒரு விஷயம்: ‘கடந்த இருபது வருடங்களில் பெண்கள் அதிகம் முன்னேறிவிட்டனர். ஆனால், அதை ஆண்கள் ஏற்றுக்கொள்ளவும், புரிந்துகொள்ளவும் மறுக்கின்றனர். பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று ஓர் ஆணிற்கு அவன் பெற்றோர்தான் முதலில் சொல்லிக் கொடுக்கவேண்டும்’ என்று சொல்வார். அப்படிச் சொல்லிக் கொடுக்காமல் வளர்ந்து நிற்கும் ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில், இன்றைய பெண்களின் நிலையை எடுத்துச் சொன்னது ‘தரமணி’.
‘தரமணி’ 2017-ம் ஆண்டு இயக்குனர் ராம் படைப்பில் ஆண்ட்ரியா, அஞ்சலி, வசந்த் ரவி, அழகம் பெருமாள் உள்ளிட்டோர் நடிப்பில், யுவன் இசையில், ராம் வர்ணனையில் வெளிவந்த படம். சௌம்யாவை (அஞ்சலி) காதலிக்கும் பிரபுநாத் (வசந்த் ரவி), அவள் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்கு தேவையான பணத்தை திருடித் தர, அந்தப் பணத்தில் வெளிநாடு சென்ற சௌம்யாவோ பிரபுவை நிராகரிக்கிறாள். குற்ற உணர்வும், காதல் ஏமாற்றமும் நிறைந்த வசந்தை சந்திக்கும் ஆல்தியா (ஆண்ட்ரியா)… இவர்களைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் உளவியல் தாக்கம், சமூகத் தாக்கம் என ஒவ்வொரு நிலையிலும் பயணிக்கிறது இப்படம்.
ஆண்ட்ரியாவின் குரலிலும், பாடல்களிலும் ஒருவித கெத்து இருக்கும். அது அவர் திரையில் எடுத்து நடிக்கும் கதாபாத்திரத்திற்குள்ளும் சர்வசாதாரணமாய் நிரப்புவார். அந்த கெத்து நடிப்பில் இருக்கும் ஒருவித தெளிவு, ஈர்ப்பு போன்ற விஷயங்கள் அவரை ஆல்தியாவாக ‘தரமணி’யில் வாழவைத்துள்ளது.
பெண்கள் படிக்க வேண்டுமா வேண்டாமா? வேலைக்குப் போகவேண்டுமா வேண்டாமா? என்ன மாதிரியான வேலைகளுக்கெல்லாம் போகலாம்? என ஆண்கள் கைகளில் முடிவுகள் விடப்பட்ட நிலையில் இருந்து நழுவி, இன்று அநேக பெண்கள் என்ன படிக்க வேண்டும், என்ன வேலைப் பார்க்க வேண்டும் என்று சுயமாய் உலகைச் கற்றுவர ஆரம்பித்துவிட்டனர். உண்மையில், இன்றைய நிலையில் பெண்களுக்குத் தேவை பாதுகாப்பு இல்லை; நல்ல இணையே.
‘கணவன் எப்படிப்பட்டவனாய் இருந்தாலும் அவனைச் சகித்து வாழவேண்டும், அவனைத் திருத்தவேண்டும்; அவனாக திருந்தும் வரை உன் சந்தோஷத்தையும், கனவுகளையும் கைவிட வேண்டும்’ என்றெல்லாம் தியாக வாழ்க்கை வாழவேண்டிய அவசியமில்லை என்று பெண்கள் உணர்ந்துவிட்டதன் விளைவுதான் பெருகிவரும் விவாகரத்து வழக்குகள். ‘என் வாழ்க்கையை வாழ எனக்கும் சம உரிமை உண்டு’ என்று உணர்த்த பெண்களை இன்று சமூகம் ‘திமிரு பிடித்தவள்’, ‘அடங்காதவள்’ என பட்டம் கட்டுகிறது.
தனது கணவன் ஒரு தன்பாலின ஈர்ப்பாளன் எனத் தெரிந்ததும், ‘யாருக்கும் பயப்பட வேண்டாம். உனக்குப் பிடித்ததை நீ சந்தோஷமாய் செய்’ என்று விலகிக்கொள்ளும் ஆல்தியா மட்டும் அல்ல; எந்தப் பெண்ணும் தன்னை ஓர் ஆண் காதல் இல்லாமல் கடமைக்குச் சந்தோஷப்படுத்துவதை விரும்பமாட்டாள். உண்மை தெரியவரும்போது அவளால் அந்த ஆணை ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையில் அவன் தன்பாலின ஈர்ப்பாளன் என்பதை விட, தன்னிடம் அவன் முழு ஈடுபாடுடன் உறவு கொள்ளவில்லை என்ற வெறுப்புதான் அவனை விட்டு வெளியே வர முடிவெடுக்கச் செய்தது.
‘தனித்து வாழும் பெண்களுக்குப் பாதுகாப்பு கிடையாது. அவர்களை இந்தச் சமூகம் ஒழுக்கமாய் இருக்க விடமாட்டார்கள்’ என்ற மட்டமான எண்ணங்களுக்குச் சிறப்பாய் ஆல்தியா பதில் தந்திருப்பார். நிறுவனத்தில் தன்னை சீண்ட நினைக்கும் மேலதிகாரிக்கு கொடுக்கும் பதிலடி சாட்டையடி. பிரபுநாத் உடன் மழையில் நடக்கும் முதல் சந்திப்பில், தனிமையில் அவன் நடந்துகொண்ட கண்ணியம்தான் அவனிடம் தொடர்ந்து பழக ஆல்தியாவிற்கு வழிவகுக்கும்.
திருமண பந்தத்தை முறித்து வந்த மகளின் செயல்களில் வெறுப்படையும் தாயின் வசைச் சொல்லில் ரோஷப்பட்டு வீட்டைவிட்டு வெளியேறி தனி வீட்டில் வாழ முடிவெடுக்கும் ஆல்தியா உடன் பிரபுநாத் தங்கிக்கொள்ளலாமா எனக் கேட்பான். ஒரு கட்டத்தில் தனக்கு கணவன் தேவை இல்லை என்றாலும், தன் மகனிற்கு தந்தை தேவை என உணரும் ஆல்தியா, பிரபுநாத் காட்டும் நெருக்கத்தை ஏற்றுக்கொள்வாள். ‘ஏதாவது வேலைக்கு போகட்டா?’ என்று ஆல்தியாவிடம் கேட்கும் பிரபுவிடம், ‘ஏதோ ஒரு வேலை எல்லாம் வேண்டாம்; நல்ல வேலைன்னா போகலாம்’ என்ற விதத்தில் பதில் சொல்லுவாள். ஆம், ஆண்களிடம் பெண்கள் நேரத்தையும், பாசத்தையும் கேட்கும்போது, வேலைக்குப் போக வேண்டாமா? நாலு காசு சம்பாதித்து குடும்பத்தைப் பார்க்க வேண்டாமா?’ என வீம்பு பேசும் ஆண்களிடம், பெண்கள் இனி தைரியமாய் சொல்லலாம்: “காசெல்லாம் நான் சம்பாதிக்கிறேன்; இப்போது கொஞ்சம் நேரமும், பாசத்தையும் கொடு”.
பிரபுநாத் அதீத அன்பில் அவள் நடத்தைமேல் சந்தேகப்பட்டு சண்டை போடும்போது அவனை வீட்டை விட்டு துரத்துவாள். ஆம், ஆல்தியா தன்னுடைய நடத்தைகான அங்கீகாரத்தை எந்த ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ எதிர்பார்க்கவில்லை. தன்னளவில் அவள் மேல் அவளுக்கு இருந்த நம்பிக்கையே அவளுக்கு போதுமானதாய் இருந்தது. ஆண்களுக்குப் பிரச்சினை என்றால் குடி, புகை முதலானவை துக்கத்தை மறைக்க தேவை என்று லைசென்ஸ் கொடுத்த சமூகம், பெண் அதைச் செய்யும்போது ‘கேவலம்’ என்று வசைபாட மட்டும்தான் செய்யும். அவளுக்கு பிரச்சினையை கேட்கவோ, ஆறுதல்படுத்தவோ, அவளை மீட்கவோ முன்வராமல், நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிக்கொள்ளும்.
ஆல்தியாவிடம் அவள் மகன் “உன்னை ஏன் எல்லாரும் பிட்ச்னு சொல்லறாங்க? அப்படின்னா என்ன?” என்று கேட்பான். உண்மையில் அந்த சிறுபிள்ளை மனதில் பதியும்படி அப்படி வார்த்தையைச் சொன்னவர்கள், அந்த வார்த்தையை விட கேவலமானவர்கள். ஒரு பெண்ணை திட்ட வேண்டும் என்றால், அவள் நடத்தையை பற்றிப் பேசுவது அல்லது அவள் உடல் உறுப்புகளை ஆபாச வார்த்தையில் சொல்வது, ஏன் ஓர் ஆணைத் திட்ட வேண்டும் என்றால்கூட அதற்கும் அவன் வீட்டுப் பெண்களின் உடல் உறுப்புகள்தான் தெரிந்த ஒரே வசைமொழிகள். பெண்கள் வாயை மூட வைப்பதற்கும், அவர்களை அடங்க வைப்பதற்கும் பலர் உபயோகிக்கும் கேவலமான ஆயுதம் இந்த மாதிரி வார்த்தைகள். உண்மையில் ஆல்தியா இந்த உளவியல் மிரட்டலுக்குள் அடைபடவில்லை.
ஆல்தியா போன்று வசதியும் தெளிவும் மிக்க பெண்கள் மட்டுமே அன்பை எதிர்பார்த்து ஆண்களிடம் தஞ்சம் புகும்போது, வெறும் உடல் வேட்கையை முடித்துக்கொண்டு நழுவிச் செல்லும் ஆண்கள் கையில் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்து, ஒரு நிலையான இணையைப் பெறுகின்றனர்.
ஆல்தியா போன்ற பெண்கள் புத்திசாலிகள். மற்றவர்களை எளிதில் புரிந்துகொள்வர். தைரியமானவர்கள். அவர்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது சுகத்தையோ, சொத்தையோ இல்லை. ஆல்தியாக்களுக்கு தேவை, அதீத அன்பும் மட்டுமே. அவர்கள் ஆண்களிடம் அதை மட்டுமே எதிர்பார்க்கின்றனர்.
இப்படி ஆல்தியாவின் போராட்டங்களை புரிந்துகொள்ளவும், அவள் மேன்மையை உணர்த்தவும் நிழலழகியாக அவள் என்னோடு பயணித்துக் கொண்டிருக்கிறாள்.