பூ.கொ. சரவணன்

தன் சாதிப்பற்றை விடாமல், வெறுப்போடு மட்டும் ஆளுமைகளை அணுகுகிறவர்களுக்கு மகத்தான தலைவர்கள், மக்கள் சேவகர்கள், அடையாளங்களைத் தாண்டி அயராது இயங்கியவர்கள் ஒற்றைப்படையாகவே தெரிவார்கள்.
பெரியாரை ஹிட்லரோடு ஒப்பிட்டு எழுதியிருக்கும் பி.ஏ.கிருஷ்ணன் ஆரிய இனவாதம் பேசிய அன்னிபெசண்ட், தயானந்தர், திலகர் எனும் பெரும் குழுவிற்கு எதிர்வினையாகவே திராவிட இயக்கம் திராவிட இனவாதம் பேசியது என மூச்சு கூட விடமாட்டார். திராவிட நிலப்பரப்பில் அறிவுஜீவிகளே இல்லை என்றும் அதில் முளைத்த கள்ளிச்செடியே பெரியார் என்றும் ஒரு முத்தை உதிர்த்திருக்கிறார். இது தமிழ் அறிவுப்பரப்பை முற்றாகத் தட்டையாக அணுகும் மேட்டிமைப்பார்வை.
பெரியாரின் நாத்திகவாதம் தட்டையானது என்கிற பி.ஏ.கிருஷ்ணன் இந்துவாக நம்பிக்கை அதன் மீது நம்பிக்கை இல்லாதவரும் இருக்கலாம் என்று எழுதிய முத்துக்கள் நினைவுக்கு வருகிறது. நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்கிற பகத்சிங் நூலையும், ரஸ்ஸல் அவர்களின் கிறிஸ்தவ மதம் மீதான விமர்சன நூலை தமிழிற்கு கொண்டு வந்தவரும் பெரியார் என்பதோ மறந்து போயிருக்கும்.
சவார்க்கர் மகத்தான தேசபக்தர். அவர் மன்னிப்பு கேட்டதும், வெறுப்பரசியல் செய்ததும் பி.ஏ.கிருஷ்ணன் பார்வையில் தனி அத்தியாயம். சவார்க்கர் காந்தி கொலை பற்றி உங்கள் கருத்து எனச் ‘சவார்க்கர் தேசபக்தர்’ என்கிற பதிவில் கேட்டதற்கு ‘அது தனிக்கதை’ என்ற நடுநிலையாளர் அவர். அம்பேத்கர்-பெரியார் வாசிப்பு வட்ட சிக்கலின் போது இந்து மதத்தை விமர்சிக்கும் வரிகளை அம்பேத்கரின் வரிகளை விநியோகித்ததற்கு ‘இஸ்லாம் மதத்தைப் பற்றி விமர்சித்தது எல்லாம் சொன்னால் என்ன ஆகும்’ என முத்தை உதிர்த்தார். நேரில் பார்த்து உரையாடிய போது, ‘தேசியக்கட்சிகள் ஆட்சி செய்திருந்தால்
தமிழ்நாடு இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்’ என்றீர்களே பி.ஏ.கிருஷ்ணன். எப்படி என்று இன்றுவரை வியந்து கொண்டேயிருக்கிறேன். தமிழ் பரப்பின் அறிவுஜீவியாக ராஜாஜி மட்டுமே உங்கள் கண்ணுக்குத் தெரியக்கூடும். மகிழ்ச்சி.
பெரியார் இட ஒதுக்கீட்டை காப்பாற்ற அயராது போராடினார் என ஆதாரங்களோடு அடுக்கிய போது நீங்கள் உடனே க்ரான்வில் ஆஸ்டினே சொல்லிவிட்டார் என ஒரு வாதத்தை முன்வைத்தீர்கள். காங்கிரசே சுயமாக இட ஒதுக்கீடு தந்தது, ‘பாவம் பெரியார் ஓரமாகப் போராடினார்’ எனத் தட்டி கழித்தீர்கள். க்ரான்வில் ஆஸ்டினின் ஆய்வுகளிலும் இடைவெளிகள் உண்டு, போதாமைகள் உண்டு என விக்ரம் ராகவன் முதலிய அறிஞர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். சுனில் கில்நானி முதல் சட்டத்திருத்தத்திற்குப் பெரியார் முக்கியக் காரணம் என்கிறார். வேறு பல அரசியல் அறிஞர்களும் அதையே வழிமொழிவதை ஆதாரத்தோடு அடுக்கினாலும் பெரியார் மீதான வெறுப்பால் ‘ஆஸ்டினே அத்தாரிட்டி’ என்றீர்கள். இட ஒதுக்கீட்டை தாராளமாகத் தந்த நேரு ஏன் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்கான வாய்ப்பை 1953-ல் இழுத்து மூடினார் எனத் தெரிந்து கொள்ளலாமா? திறமைக்கு இட ஒதுக்கீடு தடை என உறுதியாகக் கருதிய நேரு மனம் உவந்து தானாகவே தமிழகத்திற்கு இட ஒதுக்கீட்டை ஈந்தார் எனக் கதை சொல்லுங்கள். கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம். எதேனும் கேள்விகள் கேட்டால், ‘பெரியாரிய நாஜி’ என முத்திரை குத்திவிட்டே உரையாடுவீர்கள். இனவாதம் பேசினார் பெரியார் என்கிற நீங்கள் அவர் இடைநிலை சாதிகளைக் கண்டித்துப் பேசியது குறித்து மூச்சு விடாதீர்கள். முதுகுளத்தூர், நீடாமங்கலம் ஆகியவற்றில் பெரியார் எதிர்த்தது பிராமணர்களையா?
ராமாயணத்தை மிக மட்டமாக அணுகினார் என்கிற நீங்கள் அவர் புராணங்கள், தமிழிலக்கியங்களின் பெண்ணடிமைத்தனத்தையும் சாடினார் என மறந்தும் மூச்சுவிடாதீர்கள். புராணங்கள் புனிதப்படுத்தப்படுவதை மட்டுமல்ல கண்ணகியை புனிதப்படுத்தியதையும் பெரியார் கேள்வி கேட்டார். உங்களுக்கு வசதியானது தான் கண்ணில் படும். எனக்கென்ன தோன்றுகிறது என்றால் பெரியார் சவார்க்கரை போலப் பிராமணராக இருந்தால் கொண்டாடி இருப்பீர்கள். பெரியாரின் பிராமண வெறுப்பு மட்டுமே உங்கள் கண்முன் பெரிதாய் உறுத்துகிறது. ஆதிக்கங்களை, பிராமணியத்தை, மொழிவெறியை, ஆணாதிக்கத்தைக் கேள்விக்கு உட்படுத்திய பெரியார் கள்ளிச்செடி தான். அவரின் முற்கள் ஆதிக்கத்தைக் குத்திக்கொண்டே இருக்கும். அவரின் உழைப்பின் கனிகளாகவே நாங்கள் இருந்து விட்டுப்போகிறோம்.
பூ. கொ.சரவணன், ஊடகவியலாளர்; எழுத்தாளர்.