இந்தியா எதிர்கொண்டிருக்கும் பொருளாதார மந்தநிலை குறித்து நிதியமைச்சர் அருண்ஜேட்லி நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வணிக அமைச்சர் சுரேஷ் பிரபு மற்றும் பொருளாதார நிபுணர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், தனியார் முதலீடுகளை புதுப்பித்தல் போன்ற விவகாரங்கள் பேசப்பட உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நடப்பு காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (GDP growth) கடந்த மூன்று ஆண்டுகளில் மிக குறைந்த அளவுவாக 5.7 சதவிகிதமாக பதிவாகியுள்ளது. சென்ற ஆண்டு இதே காலாண்டில் 7.9 சதவிகிதமாக ஜிடிபி இருந்தது. ஏற்றுமதி அளவும் தொழில் வளர்ச்சியும் கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கியதில் ஏற்பட்ட பிரச்னைகளும் பொருளாதார மந்தநிலைக்குக் காரணங்கள் என நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.
பணவீக்க அழுத்தம் காரணமாக உற்பத்தி வளர்ச்சி 1.2 சதவிகிதம் குறைந்துள்ள நிலையில், வரவிருக்கும் பருவமழை காலம், விவசாய உற்பத்தியை பாதிக்கக்கூடும். அதுகுறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
முன்னதாக இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதாக இருந்து, இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.