ரபீக் ராஜா

சாதி ஒழிப்பு, சூழலியல், இயற்கை வளம் போன்ற பிரச்சினைகளை “தேசியம்” ஏற்கும் இடதுசாரிகள் சரியான திசைவழியில் முன்னெடுக்கிறார்கள்.
‘இனவாத, தமிழ்ப் பெருமுதலாளியவாத’ குழுக்களை, ‘தமிழ்த் தேசிய வாதி’களாகப் பலரும் கருதிக்கொண்டு பேசுவது, அது பற்றிய அறிவு,வாசிப்பு இல்லாததால் மட்டுமல்ல, அப்படி எல்லோரையும் ஒன்றாக்கி, “தேசியம்” என்ற கோட்பாட்டையே மறுக்கும் அரசியல் இது.
கிருஷ்ணசாமி அவர்கள் தற்போது தொடர்ந்து விமரிசிக்கப்படுகிறார். தலித் அரசியல் தலைவர்கள் எல்லோரும் இப்படித்தான் என்று பலரும் சொல்லவில்லை. தனியாக அவர் மட்டும் விமரிசிக்கப்படுகிறார்.
‘நவபார்ப்பனீயம்’, ‘தலித் பிராமணர்கள்’ என்று சில ‘தலித் அறிவுசீவிகளை’, தலித் செயற்பாட்டாளர்கள் கூட பிரித்துக்காட்டி விமரிசனம் வைக்கிறார்கள்.
பொலிட் பீரோக்களில், தலித் பிரதிநிதித்துவம் உண்டா? என்று சிபிஐ, சிபிஎம் கட்சிகளைத் தாண்டி கம்யூனிஸ்ட் கட்சிகள் இருப்பதை அறியாமலா பலரும் கேட்கிறார்கள்?
இதேபோலவே, தேசிய அரசியல் என்ற வகைமைக்குள்ளேயே வராத, சீமான், குணா போன்றோரை ஏதோ அவர்கள் தான் தமிழ்த் தேசியத்தின் மொத்தப் பிரதிநிதிகளாக எண்ணிக்கொண்டு, ‘தேசியம்’ என்கிற அரசியல் விடுதலைக் கோட்பாட்டையே நிராகரிப்பதும், தூசிப்பதும் எப்படிச் சரி?
சாதி ஒழிப்பு தமிழ்த்தேசியத்தின் வேலைத் திட்டம். தோழர் தமிழரசன், தோழர் லெனின் ஆகியோரைப் படித்தால் புரியும்.
இனவாதக் குழுக்களை, அவர்களின் அடிப்படைவாதத் தன்மையை, பாசிசப் போக்குகளை, ‘தேசியம்’ என்று பொத்தாம்பொதுவாகப் பார்ப்பது “தேசிய இனங்களின் விடுதலை”யை ஏற்காத நிலைப்பாடு.
காஷ்மீர், ஈழம் என்று ஆதரிப்பவர்கள் பலரும் தமிழ்த் தேசியத்தை எதிர்ப்பது, ‘தேசியம்’ என்கிற கருத்தாக்கத்தைப் புரிந்துகொள்ளாததால் தான். ஈழம், காஷ்மீர் விடுதலையை ஏற்காத சிபிஎம், சிபிஐஎம்எல் (விடுதலை), மகஇக போன்ற இடதுசாரிக் அமைப்புகள், பௌத்த ஆதரவு தலித் கட்சிகள், கட்சி சாரா செயற்பாட்டாளர்கள், ‘தமிழ்த் தேசிய அரசியலை’ எதிர்ப்பது அவர்களின் அரசியல் நிலைப்பாடு. ஆனால் இவர்கள் இதனைப் பல நேரங்களில் வெளிப்படையாகச் செய்யும் சூழல் இல்லாததாலும், ஓட்டரசியலில் (மக இக இல்லை) அதன் விளைவுகளைப் புரிந்துகொண்டதாலும், இனவாதிகளை வழியப் பேசுபொருளாக்கி, ‘அரசியல்’ செய்கின்றனர். அதனால் தான் ‘சல்லிக்கட்டு’ போன்ற தேசிய இனச் சிக்கலில், இக்கட்சிகள் ஆதரவு, எதிர்ப்பு என்ற இரண்டையுமே வெளிப்படுத்தின. நீட் விவகாரத்தில் எந்த ஓட்டரசியல் கட்சி தேர்தல் அறிக்கையாக இதனை வைத்தது? பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதில் எவை எதிர்த்தன?
ஆக, ‘இந்தியப் பெருந்தேசவாதக் கண்ணோட்டம்’ கொண்ட கட்சிகள், ‘தேசிய இன விடுதலை’ என்ற கோட் பாட்டை, கொள்கை அளவில் ஏற்கமாட்டா. ஆனால் அவர்கள் நிலைப்பாடுகளுக்கேற்ப, அரசியல் நகராது! எனவே எதிர்கொள்வதில் தடுமாற்றமும், பதட்டமும் கொண்டு எதையெதையோ வைத்து முட்டுக்கொடுக்கிறார்கள்.
“தங்கள் அரசியலை வெளிப்படையாக முன்வையுங்கள்”, என்கிறார் மாவோ!
ஆனால் அவ்வாறு முடியாதவர்கள் குறைந்தபட்சம் கட்சி நிலைப்பாட்டில் நின்று கூட பேசுவதில்லை. மாறாக திசை திருப்புதல், பிரச்சினையின் தீவிரத்தைச் சுருக்குதலைச் செய்கின்றனர்.
முதலாளிய ஆதரவுக் கட்சிகளே பிரச்சனையின் அடிப்படையில் இடத்துக்கு இடம் வேறுவேறு முடிவுகளை எடுக்கும். கெய்ல், கூடங்குள விவகாரத்தில் திமுக -அதிமுக இத்தகைய நிலைப்பாடுகளை எடுத்தன. நீட் பிரச்சனையில் இடதுசாரிக் கட்சிகள் இவ்வாறான முடிவை எடுத்தது முதலாளியச் சனநாயகச் சிக்கல், அதனை வெளிப்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கலால், அடையாள அரசியலின் குரலை முட்டுக்கொடுத்துத் தப்பிக்கின்றன.
ஆக, தேசியம் என்ற அரசியலை எதிர்க்கும் நடைமுறை அரசியலாக இதனைப் புரிந்துகொள்ளலாம்.
தேசியம் என்பது,
*அரசியல் வகையிலான கோட்பாடு. நிலவுடைமை போன்று சமூக வகைப்பட்டதல்ல.
*சனநாயகத் தன்மை உடையது. சமூக முரண்களைச் சனநாயகப் பூர்வமாக விவாதிப்பது.
*மக்களை முரண் களைந்து ஒன்றுபடுத்த விழைவது.
*சாதி ஒழிப்பு உள்ளிட்ட சமூக நீதி கோட்பாடுகளை வேலைத் திட்டமாகக் கொண்டது
*சுயநிர்ணய உரிமை கோரும் தேசியம், இறையாண்மை கொண்டது. அது வெறும் தனித்தமிழ்நாடு, மாநில சுயாட்சி என்று சுருங்குவதில்லை.
*தேசியம் என்பதன் எதிரி “தேசிய இனங்களின் சிறைக்கூடமான” இந்தியாவே அன்றி, சக தேசிய இனங்கள் இல்லை.
*சாதியக் கொடுமைகளுக்கு உள்ளாகும், மதவாதத்தை எதிர்கொள்ளும் சிறுபான்மையினர் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் விடுதலையைக் கோரி நிற்பது தேசியம். அவர்களுக்கு எதிரானது இல்லை. “எதிரானது” என்று மறுக்கும் அரசியலைப் புரிந்துகொள்வோம்.
ரபீக் ராஜா, சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.