மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டியது என்ன?

பிரபாகரன் அழகர்சாமி

தோழர் கீற்று நந்தன், மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டியது என்ன என்று ஒரு பட்டியல் போட்டிருக்கிறார். எனக்கு அந்த பட்டியலில் பெரிதாக உடன்பாடு இல்லை.

முதலில் நாம் இந்த நீட் சிக்கலில் எப்படி தோற்றோம் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். அதிலிருந்துதான் நாம் எப்படி இதிலிருந்து மீண்டு வெற்றிபெரும் வழியை கண்டறிய முடியும்!

ஒப்பீட்டளவில், இந்த நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவதென்பது, சாதாரணமாக நடந்து முடிந்திருக்க வேண்டிய ஒரு விசயம். மாநில அரசுக்கு இது ஒரு பிரச்சனையாகவே இருந்திருக்கக் கூடாது!

கல்வி என்பது concurrent பட்டியலில் இருக்கிறது. அதாவது மாநில அரசுக்கு, கல்வி சம்பந்தமான முடிவு எடுப்பதில், சம உரிமை இருக்கிறது. மத்திய் அரசுக்கு முழு அதிகாரம் கிடையாது. அந்த அடிப்படையில்தான், மாநில சட்டமன்றத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஒருமனதான ஆதரவுடன் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக அரசின் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.

நிறைவேற்றப்பட்ட அந்த சட்டத்தை மத்திய அரசிடம் கொடுத்து, ஒப்புதல் பெற வேண்டியது மாநில அரசின் கடமை. ஒரு நாள் , இரண்டு நாள் அல்ல, ஏழு மாதங்கள் மாநில அரசுக்கு அவகாசம் இருந்தது அந்த ஒப்புதலை பெற. ஆனால் மாநில அரசு அதற்கான எந்த முயற்சியையும் எடுத்ததுபோல தெரியவில்லை!

சிபிஎம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஜனாதிபதி அலுவலகத்திற்கு கடிதம் எழுதி, அந்த சட்டம் என்ன ஆனது என்று கேள்வி எழுப்பிய பிறகுதான், மாநில அரசு விழித்துக்கொண்டு டெல்லிக்கு சென்று மோடி காலில் விழுந்து கெஞ்ச ஆரம்பித்தது!

தமிழக வரலாற்றில் எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு, ஒரு கட்சிக்கு 51 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பது இப்போது மட்டும்தான். இது ஒரு மிகப்பெரிய பலம்.

இந்திய வரலாற்றில், எப்போதும் இல்லாத அளவுக்கு, நாடாளுமன்ற மக்களவையில், மூன்றாவது பெரிய கட்சியாக தமிழகத்தை சேர்ந்த ஒரு மாநில கட்சி இருப்பது இப்போது மட்டும்தான்!

நாடாளுமன்ற மக்களவையின் துணை சபாநாயகராக அதிமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர் இருக்கிறார்!

நாடாளுமன்றத்தின் பல்வேறு குழுக்களில் அதிகாரம் செலுத்தக்கூடிய இடத்தில், அதிமுகவின் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்!

தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஓரணியில் இந்த பிரச்சனையில் இருக்கிறார்கள். பிரதான எதிர்கட்சி முழு ஒத்துழைப்பு கொடுக்கிறது. (ஜெயலலிதா எதிர்கட்சியாக இருந்த காலங்களில், எந்த பொதுப்பிரச்சனைக்காகவும் திமுகவுடன் கரம் கோர்த்திருக்கிறாரா என்றால், நம் நினைவுக்கு தெரிந்து எதுவும் இல்லை! )

ஜெயலலிதா காலத்தில் இருந்தே, மத்தியில் ஆட்சி செய்கிற பாஜகவுடன் தோழமை சக்தியாகதான் அதிமுக இருந்திருக்கிறது!

இத்தனை இருந்தும், அதிமுக அரசால், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெறமுடியவில்லை என்றால், மாநில அரசு எதற்கும் கையாலாகாத அரசு என்பதுதான் காரணம். மத்திய பாஜக, பார்ப்பன அராஜகத்துடன் தான் நடந்துக்கொள்ளும் என்பது ஒன்றும் புதிய செய்தி அல்ல.

குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் தேர்தல்களில் , அதிமுகவின் ஆதரவு எந்த நிபந்தனையும் இல்லாமல் பாஜவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது!!!

மத்திய அரசின் நயவஞ்சக துரோகமும், முழுக்க தோற்றுப்போய்விட்ட மாநில அரசின் கையாலாகதத்தனமும் தான் நாம் இப்போது அம்பலப்படுத்தவேண்டிய முதன்மையான பணி!!!

மு.க.ஸ்டாலின் அதைதான் செய்கிறார். மிக முக்கியமாக, இந்த விசயத்தில் ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்துக்கொண்டு தன் காரியங்களை முன்னெடுக்கிறார்.

உண்மையில், வேறு எந்த கட்சியைவிடவும், திமுகவிற்கு இந்த சிக்கலை தீர்ப்பதில் அதிக உரிமையும் கடமையும் இருக்கிறது.

தமிழகத்தில் இருக்கும், மொத்த அரசு மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை 24. அதில் பாதிக்குபாதி, 12 கல்லூரிகள், வெறும் 18 ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்த கலைஞரால் கொண்டுவரப்பட்டவை. ஏற்கனவே நடைமுறையில் இருந்த நுழைவுத்தேர்வு முறையை கைவிட்டது திமுக ஆட்சி. கடந்த ஆண்டு +2 மாணவர்கள் இம்ப்ரூவ்மன்ட் எழுதி, நடப்பாண்டு மாணவர்களின் இடங்களை தட்டிப்பறிக்கும் முறையை கைவிட்டது திமுக அரசு. கிராமப்புற மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளித்தது திமுக அரசு. முதல் தலைமுறை மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கும் முறையை கொண்டுவந்தது திமுக அரசு. பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 33% இடஒதுக்கீட்டினை கொண்டுவந்தது திமுக அரசு. தமிழகத்தின் கல்வி வளர்ச்சியில், ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கும் எண்ணற்ற திட்டங்களை கொண்டுவந்து, திமுக ஒரு மவுன புரட்சியை நடத்தியிருக்கிறது. அதன் விளைவாகதான், தாங்களும் மருத்துவர் ஆகலாம் என்கிற லட்சியத்தை அனிதா போன்றவர்கள் பெற முடிந்தது.

எனவே, மீண்டும் திமுகவை ஆட்சியில் அமர்த்துவதுதான், நீட் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு சமூகநீதி சிக்கல்களை நாம் எதிர்கொண்டு வெற்றிபெறுவதற்கான உடனடி வழி!

தற்போதைய அடிமை அதிமுக அரசை ஆட்சியில் இருந்து ஆகற்றுவதற்கு ஆன வழிகளை நாம் பார்க்க வேண்டும். அதற்கான போராட்டங்களை மக்கள் முன்னெடுத்து, மு.க.ஸ்டாலினுடன் துணை நிற்க வேண்டும்!

பிரபாகரன் அழகர்சாமி, சமூக-அரசியல் விமர்சகர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.